Saturday 16 November 2013

மாமரத்துப் பூனை

நாங்கள் சிறியவர்களாக இருந்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பை வரவழைக்கும். காட்சியைக் காணாது கதையை மட்டும் நீங்கள் வாசிப்பதனால் உங்களுக்கு சிலவேளை சாதாரணமாக இருக்கலாம்.

அயலில் உள்ளவர்கள் நாங்கள் வயது வித்தியாசமின்றி விளையாட்டு நண்பர்களாக இருந்த காலம். எனக்கு ஒரு பத்து வயது இருக்கும். எங்கள் அயலில் ஒரு குடும்பம் இருந்தது. அதில் இருந்த மூத்த மகளுக்கு ஒருவருடன் காதல். அயலட்டை எல்லாம் ஒரே இது பற்றித்தான் கதை. எமக்குப் பெரிதாக விவரம் இல்லாவிட்டாலும் எதோ கொஞ்சமாவது விளங்கும்தானே.

அவர்கள் வீட்டுக்குப் பின்புறமாக என் பெரியம்மாவின் வீடு இருந்தது. பெரியம்மா வீட்டுக்கு சாதாரணமாகச் செல்வதானால் சுற்றுப் பாதையில் செல்லவேண்டும். இவர்களின் வீட்டின் குறுக்குப் பாதையால் சென்றால் உடனே சென்றுவிடலாம் என எல்லோரும் இவர்கள் வீட்டையே பாவிப்பர். அரைவாசி சுற்றிப் போகும்போது பனங்காடு. பேய் ,கீய், முனி என்றெல்லாம் கதைகள் உலாவியபடியால் எனக்கு சுற்றிப் போக சரியான பயம்.

அனேகமாக இரவு ஏழு மணியின் பின்னர் அவர்கள் வீட்டுப் படலையைப் பூட்டிப் போடுவார்கள் . நாங்கள் சிறியவர்கள் மட்டும் படலையைத் தட்டினால் வந்து திறந்துவிடுவர். எமக்கு இருட்டுக்குள் சுற்றிப் போகப் பயம் என்று அவர்களுக்குத் தெரியும்.

அவர்களின் படலைக்குப் பக்கத்தில் மாமரம் ஒன்று இப்பவும் இருக்கிறது. நான் தனியே செல்லும்போது பாத்திருக்கிறேன். எனக்குக் கதவு திறப்பது அந்த அக்கா தான். இரவில என்னத்துக்குத் தனிய வாறாய். வெள்ளன வந்திட்டுப் போறதுதானே என அவர் கூறும்போதெல்லாம் சரி அக்கா என்று கூறுவேன். அப்போது எனக்கு நல்ல பிள்ளை என்ற பெயர் அயலில் இருந்ததால்  திருப்பி கதைப்பதில்லை. சிலநேரம் திரும்பிப் பார்க்கும்போது மாமரத்தின் பின்னே ஒரு உருவம் மறைந்து நிற்கும். ஆனால் அந்த மம்மல் பொழுதில் யார் என்று தெரியாது. யாரிடமாவது கேட்போம் என்றாலும் பயம்.

எனது வயதுடைய ஆனால் என்னிலும் விவரமான இருவர் சாந்தி, மாலினி என்று என் பக்கத்துவீடு. அன்று என்னை வாடி உங்கள் பெரியம்மா வீட்டுக்கு போட்டு வருவம் என்றார்கள். படிக்கச் சொல்லும் அம்மாவின் கொடுமையிலிருந்து கொஞ்ச நேரம் விடுதலை என மகிழ்ந்தபடி அவர்களுடன் சென்றேன்.

அவர்களின் வீடு வந்ததும் படலையைத் தட்டும்படி என்னையே கூறியதால் நானும் தட்டினேன். யார் என்று அந்த அக்காவின் குரல் கேட்டது. நான்தான் என்று என் பெயரைக் கூறினேன். உடனே கதவு திறந்தது. மூவருமாக அவர்களின் வளவு எல்லை வரை சென்றவுடன், நில்லுங்கோடி இண்டைக்கு அது யார் என்று பாக்கவேணும் என்றாள் சாந்தி. வேண்டாமடி என்று உடனே நான் மறுத்தேன். உனக்குப் பயமெண்டால் நீ பெரியம்மா வீட்டை போ என்றாள் மாலினி. எனக்கும் கன  நாட்களாக அது யார் என்று பார்க்கவேணும் என்ற ஆசை அடிமனத்தில இருந்ததுதானே. அதனால நானும் வாறன் எண்டன்.

ஆவலை அடக்க முடியாது அவர்களின் பின்னே செல்ல திடுதிப்பென்று ஓடிப்போய் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள் இருவரும். அவர்கள் ஓடுவார்கள் என நான் எதிர்பார்க்காததால் நான் கொஞ்சத் தூரத்திலேயே நின்றேன். பாவம் இருவரும் கையும் களவுமாகப் பிடிபட்டதில் என்ன செய்வது எனத் திகைத்து நின்றனர்.

உடனே அந்த அக்கா, என்ன திரும்ப வீட்டை போறியளோ என்றார். ஓம் என்றுவிட்டு படலையைத் திறக்க, வீட்டை போகாமல் மீண்டும் பெரியம்மா வீட்டுப் பக்கம் ஓட எனக்குத்தான் குழப்பம். அவர்கள் பெரியம்மா வீட்டு மணல் கும்பியில் போய் விழுந்து சிரிக்க, பெரியம்மாவும் மாமியும் என்ன சிரிக்கிறியள்  என்று கேட்க, நான் சொல்ல வேண்டாம் என்று  கண்ணைக் காட்டியதைக் கவனிக்காததுபோல் எல்லாத்தையும் சொல்ல, அதுக்குப் பிறகு எனக்குத்தான் பெரியம்மா வீட்டுக்கு சுற்றிப் போகும் தண்டனை.

சாந்தியினதும் மாலினியினதும் ஓட்டை வாய் சும்மா கிடைக்காமல் கதை எல்லா இடமும் பரவிவிட்டது. அதன்பின் அவர்கள் இருவரும் மாமரத்தடியில் சந்திக்கிறார்களோ இல்லையோ வீதியால் போகும் இளம் பெடியள் கள்ளப் பூனை மாமரத்தைச் சுத்துது என்று பாடிக்கொண்டு போவது வழக்கமாகிப் போனது.
 

No comments:

Post a Comment