Saturday 16 November 2013

மனம் என்னும் மாயம்

இரவு முழுவதும் அவள் தூங்கினாளா என்று அவளுக்கே தெரியவில்லை. ம் ..... கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு மூன்று மணி நேரம் தூங் கியிருப்பாளா??? நீண்ட நாட்களின் பின் மனவருத்தம், மட்டற்ற மகிழ்ச்சி,எல்லையில்லா நின்மதி என மாறி மாறி அவளை அலைக்களித்தபடிதான் அந்த இரவு நகர்ந்தது. ஆனாலும் அவளின் மனம் இத்தனை சீக்கிரம் இவ்வளவு தெளிவடையும்  என்று அவளே நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த காலங்களை எண்ணிப்பார்த்தபோது வரிசையாய் எல்லாம் வந்து போயின.

என்னிடம் என்னதான் இல்லை என்று இவ்வளவு  நாட்கள் இத்தனை கேவலப்பட்டேன்  என்று எண்ணியபோது பெருமூச்சு ஒன்றும் நீண்டதாய் வந்தது. எல்லாம் விதியின் செயல்தான் அன்றி வேறென்ன என்று மனம் நின்மதி அடைந்தது. அவனுக்கும் அவளுக்குமான நெருக்கம், இல்லை நெருக்கம் என்று சொல்வதை விட இருவருக்குமான ஒரு தேவை, மனப் பகிர்வு இருவருக்குமே தேவைப்பட்டதாகவே அவள் எண்ணினாள். அவளது பயித்தியக்காரத்தனமான ஆசைகளை தானே தனக்குள் நியாயப்படுத்தியும் இருக்கிறாள். எனக்கு என் கணவன் மேல் அன்பு இருக்குத்தானே. அதனால் இது துரோகமாகாது என்றுகூட எண்ணியிருக்கிறாள். அவனின் வார்த்தைகளில் மயங்கி வார்த்தைகளுக்காகவே அவனுடன் கதைக்கும் நேரங்களுக்காக மணிக்கணக்காக காத்திருந்து தான் வீணாக்கிய நேரங்களை எண்ணினால் இப்பொழுது சிரிப்பாகவே இருக்கிறது.

நேற்று நடந்ததை எண்ண ஒருகணம் உடல் அதிர்ந்து மீண்டும் சமநிலை கொள்கிறது. கடந்த நாட்களாக அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு இல்லாமல் இவள் தூக்கம் தொலைத்து பயித்தியக்காரிபோல் தான் ஆகிப் போனாள். தொலைபேசி கூட வேண்டாம். ஒரு செய்தியை எழுதி அவளை சமாதானப் படுத்தக்கூட அவன் முயலாதது அவளை எதை எதையோ எண்ண வைத்தது.

அவன் மட்டும் என்னை இப்படியே விட்டுவிட்டால் நிட்சயமாக நான் இறந்து விடுவேன் என அவள் மனம் உறுதியாக நம்பியது. மற்ற எதைப்பற்றியும் எண்ணிப்பார்க்காத அவளின் சுயநலம் கண்டு அவளுக்கே வெறுப்பும் ஏற்பட்டது. காலையில் எல்லாம் அவனுடன்  இரண்டு நிமிடமாவது பேசி அவன் முகத்தைப் பார்த்த பின்னர்தான் அவளுக்கு வேலையே ஓடும். அப்படிபட்டவன் மூன்று நாட்களாக இவளுடன் பேசாது எதுவும் எழுதாது இவளை அசட்டை செய்வது இவளால் தாங்க முடியாததாகி, எத்தனை தரம் அழுதிருப்பாள் என்று எண்ண முடியாது அழுகையில் கழித்தாள்.

இவள் தன் தொலைபேசியில் செய்திகளை மன்றாட்டமாக அனுப்பிக்கொண்டே இருந்தாள் அவனை ஒருமுறை தன்னும் தன்னுடன் கதைக்கும் படி. இனி எழுதி என்ன செய்வது. என்னை இப்படி வெறுக்கும்படி என்ன செய்தேன் என்று தானே தன்னைக் கேட்டும் பதில் கிடைக்கவில்லை. நேற்று கணவன் இவளை அவதானித்துவிட்டான். உனக்கு என்ன பிரச்சனை என்றான் முதல்லில். இவளுக்கு நெஞ்சு பயத்தில் திடுக்கிட்டதுதான் எனினும் அவனுக்கு முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் எனக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது என்று அடித்து அமர்த்திவிட்டாள். அவனும் விடவில்லை. உன்னுடன் இத்தனை நாள் வாழ்கிறேன். எதையோ பறிகொடுத்தது போல் இருக்கிறாய். முகம் எல்லாம் வீங்கின மாதிரி இருக்கு.  என்ன என்று சொல்லு என்றான். ஒரு நிமிடம் எல்லாவற்றையும் கணவனிடம் கூறிவிடுவோமா என்று எழுந்த சுய பட்சாதாபத்துடன் கூடிய எண்ணத்தை  மறுகணமே அடக்கிக் கொண்டாள்.

பாவம் கணவன். இப்ப எதோ சாதாரண விடயம் என்று கூறச் சொல்கிறான். நான் கூறினால் அவனால் தாங்க முடியுமா ??? ஒரேயடியாய் என்னை விட்டுவிட்டுப் போய் விடுவான். அதன் பின் அவளின் நிலை???? ஊரெல்லாம் விடயம் தெரிந்து, அவளைப் போற்றுபவர்கள் எல்லோருமே காறித் துப்புவார்கள் என்று எண்ணியபோதே மனம் நடுங்கியதுதான். ஆனாலும் மற்றவனைத் தூக்கிப் போட மனம் இடங்கொடுக்கவே இல்லை. இப்படியான உறவுகள் கட்டு இல்லாத கிணற்றின் கரையில் நடப்பது போன்றது என்பதை அவள் உணரவே இல்லை. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். எங்கு பார்த்தாலும் இப்படியான விடயங்கள் கடைசியில் இரு பக்கத்திலும் பலத்த சேதாரத்தைத்தான் கொண்டுவர முடியும் என்பது தெரிந்தும் அவள் மனம் அவனிடமிருந்து மீளவே இல்லை.

அடிக்கடி தொலைபேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். வேலை முடிய என்னுடன் கதைத்துவிட்டுப் போகிறீர்களா என்று இவள் அனுப்பியிருந்த செய்திக்கு, அவன் போட்ட பதில் வெறும் M என்ற வார்த்தை தான். அது அவளை அந்தரத்தில் பறக்க வைத்தது. மூன்று நாட்களின் தவிப்பு அடங்கப் போகிறது. அவனுக்கு என்மேல் கோபம் எதுவும் இல்லை என்று தன்னுக்குள் மகிழ்வடைந்தவளாக நேரத்தைப் பார்த்தாள். இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. அவளின் வேலை நேரம் முடிவடைந்து விட்டது. அவள் பேருந்து எடுத்து வீட்டுக்குப் போய்ச் சேர ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். அவன் இவளுடன் பேசப்போவது வெறும் பத்தோ பதினைந்தோ நிமிடங்கள் தான். ஆனாலும் அதுவே அவளுக்கு நாள்முழுவதும் என்ன அடுத்தடுத்த நாட்களுக்கும் போதுமானதாக இருந்திருக்கிறது.

வாகன நெரிசலும் பேருந்தின் நெரிசலிலும் அவனுடன் நின்மதியாகக் கதைக்க முடியாது எனத் தோன்ற பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் புகுந்து அத்தனை துணிகளையும் ஒன்றும் விடாது புரட்டிப் பார்த்தாள். பெரிய கடை என்றதனால் யாரும் இவளை அசட்டை செய்யவில்லை. நேரம் குறைந்துகொண்டுவர மனம் அவன் குரல் கேட்கத் தயாரானது. இதோ அவன் அழைக்கிறான். ஸ்கைப்பில் ஹெட்போன் பொருத்தி தயாராக இருந்தவள் பதட்டமானாள். அவளுக்கு அவன் குரல் கேட்கவில்லை. மீண்டும் அவன் அடித்தபோதும் அதே நிலை தான். ஸ்கைப் வேலை செய்யாவிட்டால் போன் செய்யவென்று இன்னொரு தொலைபேசியும் தயாராவே வைத்திருந்தாள். அதில் அவனுக்கு போன்செய்ய அவனின் தொலைபேசி பிசி என்று கூறி இவள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தது. நான் எடுக்கிறன் என்று பதில் அனுப்பினாள். அவனிடமிருந்து திங்கள் மாலை எடுக்கிறேன் என்ற வரிகளோடு செய்தி வந்தது. இன்று வெள்ளிக் கிழமை. திங்கள் என்றால் இன்னும் மூன்று நாட்களா??? என்னும் பரிதவிப்பு ஏற்பட மீண்டும் மீண்டும் அவனுடன் தொடர்பு கொண்டாள். அவன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை தொலைபேசியின் செய்தி சொல்லியது. மாறி மாறி இரு தொலை பேசிகளிலும் அடித்தும் எந்தப் பயனும் இல்லை.

என்னை வேண்டுமென்றே இவன் தவிர்கிறானா??? ஒரேயடியாக என்னை கைவிட்டுவிடப் போகிறானா ??? அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டதா ??? ஏன் என்னைத் தவிர்க்க வேண்டும். இத்தனை நாட்களில் இப்படி அவன் செய்ததே இல்லையே. அவனுடன் கதைக்காது எப்படி உயிர் வாழப்போகிறேன் என்றெல்லாம் மனம் ஏதேதோவெல்லாம்  எண்ணி ஓலமிட்டுப் பேதலித்தது.

இவளுக்கு ஏமாற்றம் கோபம் எல்லாம் சேர்ந்து அழுகையை வரவழைத்தன. பொது இடம் என்றுகூடப் பார்க்காது பலத்து அழ ஆரம்பித்தாள். எங்கு நிற்கிறோம்  என்ன செய்கிறோம் என்றெல்லாம் அவளுக்குப் புரியவே இல்லை. கடைச் சிப்பந்திப் பெண் வந்து இவள் தோளைத் தொட்டு உனக்கு ஏதும் வருத்தமா என்று கேட்டபோதுதான் இவளுக்குச் சுய நினைவு வந்தது. கடகடவென கடையை விட்டு வெளியே வந்தவளுக்கு மூளை மரத்துப்போனது போல் உணர்வு ஏற்பட்டது. எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வீதியில் இறங்கினாள்.

காது கிழியும் கோர்ண் சத்தங்கள். இவள் சுய நினைவு வரப்பெற்றவளாக தலையைத் திருப்பினால், பயத்தில் இதயம் வேகமாக அடிக்க மனதில் உறை நிலை அதிர்வுகள் ஏற்பட்டது. கையிலிருந்த பை அதிர்ச்சியில் கீழே விழ இன்னும் வினாடி நேரத்தில் நான் இறந்துவிடுவேன் என குரல் ஒன்று காதில் நாராசமாக ஒழிக்க அப்படியே அசைவற்று  நின்றாள் அவள்.

அவளை அப்படியே பற்றி இழுத்தது ஒரு கை. அதன் பின்னரே சுய நினைவு வரப்பெற்று பார்த்தாள் அவள். ஒரு கறுப்பினப் பெண்மணி இவளை இழுத்து வீதி ஓரத்தில் விட்டுவிட்டு வீதியில் விழுந்த இவளது  கைப்பையை எடுத்துவந்து இவள் கைகளில் கொடுத்து என்ன மை சயில்ட். என்ன பிரச்சனை உனக்கு என்று இவளை கைகளை பிடித்து கூட்டிப் போய் அண்மையில் இருந்த பஸ்தரிப்பு நிலையத்தில் அமரவைத்தாள். அதன் பின் தான் இவள் திரும்பிப் பார்த்தாள். அரை அடி தூரத்தில் இருந்த விளக்குக் கடவையில் அந்த ஜீப் மோதி நிற்க பின்னால் வந்த இரு கார்கள் அடுக்கடுக்காய் ஒன்றுடன் ஒன்று மோதி வாகனங்கள் மூன்று இவளின் கண்மூடித்தனத்தால் நாசமாகி இருந்தன.

ஜீப் காரன் கூட அதிர்ந்துபோய் இருந்ததாகவே இவளுக்குப் பட்டது. அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லையா என்று இவள் அந்தக் கிழவியைக் கேட்டாள். நல்ல காலம் யாருக்கும் ஒன்றும் நடக்கவில்லைப் போல் தெரிகிறது. எதோ உன் அதிட்டம் உயிர் தப்பினாய் என்றுவிட்டு டேக் கேர் என்று கூறியபடி வந்த பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டாள்  அவள். அவர்களில் மூன்றாவது கார்க்காரன் மாடும் இவளைப் பார்த்து எதோ எல்லாம் திட்டினான். இவள் எந்த உணர்வுமின்றிப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அடுத்த பஸ் வர இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றது என எண்ணியபடி பார்வையைத் திருப்பியவள் தனக்குப் பக்கத்தில் அந்தக் கிழவி இருந்த இடத்தில் ஒரு SCRATCH CARD இருப்பதைக் கண்டதும் கைகளில் எடுத்துப் பார்த்தாள். அது இன்னும் சுரண்டிப் பார்க்கப்படாமல் புதிதாகவே இருந்தது. பாவம் அந்தப் கிழவியினுடையதாய்த்தான்  இருக்க வேண்டும். என்னுடன் கதைத்துவிட்டுக்  கைதடுமாறி வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.  நாளை வரும் போது கண்டால் கொடுப்போம் என எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டாள். அவள் இருந்த மனநிலையில் அவளுக்கு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்றே இருந்தது.

வீட்டுக்கு வந்தபின் மனம் அவனால் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்தும் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தும் முற்றாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் சமநிலை அடைந்திருந்தது. அவன் திங்கள் போன் செய்கிறேன் என்றுதானே எழுதினான். நான் ஏன் என்னிலை மறந்து வீதிஎன்றும் பாராது அழுது என்னை நானே கேவலப்படுத்திக் கொண்டேன் என வெட்கமும் வந்தது. தொலைபேசி அடிக்க, எடுப்பதற்கு முன்னர் நின்றும் விட்டது. யார் என்று பார்ப்பதற்காக தொலைபேசியை எடுக்க, அந்த ஸ்க்ராட்ச் காட்டும் சேர்ந்து விழுந்து இவளைப் பார்த்துச் சிரித்தது. சரி வீதியில் கிடைத்தது. யாரும் உரிமை கொண்டாடலாம் தானே. அந்தக் கிழவியின் காட் தான் என்று என்ன நிட்சயம் என்று எண்ணியபடி காட்டை சில்லறைக் காசை எடுத்து சுரண்டியவளுக்கு மயக்கம் வராத குறை.

என்ன செய்வது எது செய்வது என்று மனம் படபடக்கத் தொடங்க, அவனின் இலக்கங்களைத்தான் கைகள் முதலில் அழுத்தின. அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராது போக, அவள் மனம் கொந்தளிப்புக்களின் வீரியத்தைத் தாங்க முடியாது தனக்கிருக்கும் ஒரே நம்பிக்கையானவன் கணவன் மட்டுமே என எண்ணி மனம் தெளிவடைய, யாரோ ஒருவனுக்காக இறந்து போயிருந்தால் என் குடும்பம் அனாதையாகி நடுத்தெருவில் நின்றிருக்குமே என எண்ணி மனதைத் துடைத்தவளாக கணவனுக்கு போன் எடுத்து தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டதுமன்றி மனதுள் ஒரு தெளிவான தீர்மானத்தையும் எடுத்துக்கொண்டாள்.


யாவும் கற்பனை

23 March 2014         

No comments:

Post a Comment