Saturday 16 November 2013

மண் சட்டி

எனக்குக் கன  நாளா மண் சட்டியில் கறி சமைக்க வேணும்
எண்டு ஆசை. இந்தியா இலங்கை என்று போன நாட்களில வாங்கிக் கொண்டு வருவமெண்டு நினைச்சாலும், சட்டி வாங்கும் பலன் இருக்கேல்ல.

உந்த யாழில மைதிரேயியின் சமையல் குறிப்பைப் பாத்திட்டு, கன நாளா அடங்கியிருந்த ஆசை திரும்பவும் மனதை நிரப்ப, போகும் கடைகளில எல்லாம் சட்டி இருக்கோ என்று கேட்டு சலிப்படைஞ்சு,  சரி எனக்கு இன்னும் சட்டி யோகம் வரவில்லையாக்கும் என்று மனதைத் தேற்றியும் விட்டன்.

ஒரு கிழமைக்கு  முதல் எனது அரையல் இயந்திரம் பழுதாப் போனதால், மீண்டும் அதைத் தேடி கடை கடையாய் ஏறி இறங்கினன். ஒரு கடையில பாத்தால் ஒரு தட்டு முழுக்க சட்டியள் அடுக்கி  வச்சிருக்கு. எனக்கு முகமெல்லாம் சந்தோசத்தில பூரிச்சுப் போச்சு. ஒரு சட்டி £5.99. எனக்கு எப்பவும் ஒண்டுக்கு இரண்டா மூண்டா வாங்கினாத்தான் பொச்சம்  தீரும். சரி எதுக்கும் இருக்கட்டும் எண்டு இரண்டு சட்டியை வாங்கினன்.

சட்டி வாங்கின சந்தோசத்தில மற்ற எல்லாம் மறந்து, காரில வரேக்கையே எந்தக் கறியை முதல் சட்டியில சமைக்கிறது எண்டு மாறிமாறி கற்பனை செய்து கொண்டு வீட்டை வந்தால், பிள்ளையள் அன்று பார்த்து அம்மா இண்டைக்கு ஒண்டும் சமைக்காதைங்கோ புதிசா சாப்பாட்டுக் கடை திறந்திருக்கு அங்க போய் சாப்பிடுவம் என்றாச்சு.

சரி என்ன செய்யிறது பிள்ளையளின்ட ஆசையை நிறைவேற்றுவம் எண்டு சட்டியில கறி காச்சிற ஆசையை அங்கால வச்சிட்டு சட்டி இரண்டையும் தூக்கி சாப்பாட்டு
மேசையில நடுவில வச்சன். வேலையால வந்த மனிசன் சட்டியைப் பாத்துப் போட்டு,
இன்னுமொரு குப்பையை வாங்கிக் கொண்டு வந்திட்டியோ எண்டு நக்கல். சட்டியில்
மீன் குழம்பு வச்சால் எவ்வளவு ருசி தெரியுமே என்று மனிசனை ஒருமாதிரிச்
சமாளிச்சாச்சு.

பிறகு வந்த ஒரு வாரமும் சட்டியை மறக்குமளவு வேலைப் பளு. மனிசன் அடுத்தநாள் உந்தச் சட்டியை மேசையில இருந்து எடு. உதில கிடந்துதோ சட்டிக்கு நான் பொறுப்பில்லை எண்டு சொல்லிப் போட்டார். வேறை வழியில்லை. நாளைக்கு எப்பிடியும் மீன்குளம்பு  வச்சே தீருவது என்று முடிவெடுத்து மீனும் போய் வாங்கியாச்சு.

சட்டியைத் தூக்கி மணந்து பாத்தன். மண் மணம் ஒரு மாதிரி இருந்துது. சரி இரண்டு தரம்  தண்ணி விட்டுக் கொதிக்கச் செய்தால் மணம் போவிடும் என்றுவிட்டு இரண்டு சட்டிகளிலும் தண்ணீரை விட்டு அடுப்பை எரியவிட்டன். நல்ல காலம் இங்க காஸ் அடுப்பு எண்டபடியா என்ர  நீண்டநாள் சட்டி ஆசை நிறைவேறப் போகுது எண்டு மனசுக்குள்ள நினைச்சுக் கொண்டு மிச்ச வேலையளைப் பாத்துக் கொண்டு இருந்தன்.

இருந்தாப்போல டும் டும் எண்டு சத்தம். எனக்கு சத்தம் எங்க நிண்டு வருகுது எண்டு விளங்கேல்ல. உடனே ச்ச்ஸ்ஸ்ஸ் எண்ட சத்தத்தோட அடுப்பு முழுக்கத் தண்ணி. அதுக்குப் பிறகுதான் எட்டிப் பாத்தா சட்டி  இரண்டும் வெடிச்சு அதில இருந்த தண்ணி
முழுதும் அடுப்பில. நல்ல காலம மீன் குழம்பைக் கூட்டி அடுப்பில வச்சிருந்தா
அதைக் கழுவித் துடைக்கவே நேரம் போயிருக்கும்.

£ 12 பவுன்ஸ் நட்டம். கடைக் காரனையும் கேக்க ஏலாது. அதுகூடப் பறவாயில்ல உந்தப் பன்னிரண்டு பவுண்ஸ்  வீணாப்போச்செண்டு மனிசன் பதினைச்சு நாளைக்குச் சொல்லிக் காட்டும். அதுதான் கொடுமை. ம்....... பிறகென்ன சட்டி ஆசையும் போய் ............

ஆராவது தெரிஞ்சாச் சொல்லுங்கோ ஏன் சட்டி வெடிச்சது எண்டு.

 

No comments:

Post a Comment