Saturday, 16 November 2013

அக்கா எனக்கொரு கலியாணம் பேசுங்கோ

அருணாவுக்கு தம்பியாரை நினைக்கப் பாவமாக் கிடக்குதுதான். ஆனால் அவளும்தான் என்ன செய்யிறது. முப்பத்தஞ்சு வயதுதான் எண்டாலும் இப்பத்தே பெட்டையளுமெல்லே வடிவு, வயது எல்லாம் பாக்கிதுகள். என்ன தம்பிக்குக் கொஞ்சம் முன் மண்டை வழுக்கை. அதுக்காக எத்தின பெட்டையள் வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டாளவை. ஊரில அம்மாவைப் பாக்கச் சொன்னால் அவவும் என்ன காரணத்துக்கோ தெரியேல்ல இந்தா அந்தா எண்டு இழுத்தடிக்கிறா. கடைசீல என்ர  தலை தான் உருளுது என சலித்துக்கொண்டாள்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் போகிறது சந்திரனுக்கு பெண் பார்க்கத் தொடக்கி. இன்னும் பலன் தான் வரவில்லை. உள்ள கோயில் குருக்கள், புரோக்கர்களிடம் எல்லாம் சாதகத்தைக் குடுத்துத்தான் அருணா வைத்திருக்கிறாள். அவர்களும் பெண்களை புதிதாக உற்பத்தியா செய்ய முடியும். யாராவது பெண்களின் சாதகத்தைக் கொண்டுவந்தால்த்தானே அவர்களும் பொருத்தம் பாக்கலாம். நல்ல படித்த மாப்பிள்ளை எண்டாலும் பரவாயில்லை.

பாவம் தம்பியும் வீட்டுக்கு உழைச்சு உழைச்சே அவன்ர வயதும் போட்டுது. எப்பிடியும் இந்த வருசத்துக்குள்ளையாவது கலியாணத்தைக் கட்டி வச்சிட வேணும். எங்கட சனங்களும் லேசுப்பட்டதுகள் இல்லை. எதோ நான் தம்பியைக் கலியாணம் செய்விக்காமல் வச்சு அவன்ர காசையெல்லாம் எடுக்கிறன் எண்டு அங்க இஞ்ச கதைக்குதுகள். ஆனாக் கடவுளுக்குத் தெரியும் தானே நான் அவன்ர காசுக்கு ஆசைப்பட மாட்டன் எண்டு. தனக்குத்தானே மனதில் எண்ணியபடி அருணா சமையலில் ஈடுபட்டாள். இன்னும் ஆறு மாதத்துக்குள்ள அவனுக்குக் கலியாணத்தை நடக்கப் பண்ணு அம்மா. உனக்கு அவனைக்கொண்டு அபிசேகம் செய்விக்கிறன் எண்டு மனதுள் வேண்டியும் கொண்டாள்.

அவளின் பிரார்த்தனை வீண்போகவில்லையோ அல்லது அம்மனுக்கு அபிசேகம் தேவைப்பட்டுதோ ஒரு சம்மந்தம் வந்தது. அந்தப் பெண் தாயுடன் இந்தியாவில் இருக்கிறாள். தமக்கை பாரிஸில் இருக்கிறார். தமக்கைதான் தங்கைக்கு மாப்பிளை பார்த்தது. கோயிலில் ஐயர் அந்தப் பெண்ணின் சாதகத்தைக் கொடுத்தபோது. கடவுளே இந்தச் சாதகம் நல்லாப் பொருந்தி தம்பிக்கு கலியாணம் நடக்கவேணும்  எண்டு வேண்டிக்கொண்டுதான் சாதகத்தை வாங்கினாள் அருணா.

சாதகம் நல்ல பொருத்தம். உடனேயே கோயில் ஐயருக்கு அடித்து விசயத்தைக் கூறினாள். ஐயரும் தனக்குக் கொமிசன் வருமென்ற சந்தோசத்தோடு பரிசிலிருக்கும் தமக்கையின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். அருணா தொலைபேசி எண்ணை வாங்கினாள்தான் ஆனாலும் அவர்களை முதலில் அடிக்கும்படி ஐயரிடம் கூறினாள். என்ன இருந்தாலும்  நாங்கள் மாப்பிளை வீட்டுக்காரர். அவையிட்ட வலியப் போகக் கூடாது என்பது அருணாவின் எண்ணம்.

பரிசிலிருந்து தமக்கை போன் செய்தபோது பெண்ணின் படத்தை அனுப்பிவிடும்படி கூறி ஒரு வாரத்துக்குள்ளேயே படமும் வந்துவிட்டது. பெண்ணைப் பார்க்க அழகாகத்தான் இருந்தது. தம்பிக்குக் காட்டியபோது தம்பிக்கு முகமெல்லாம் பல்லாகிவிட தம்பியாரின் படத்தை பெண் பார்க்கட்டும் எனத்  தமக்கைக்கு அனுப்பி வைத்தனர். தமக்கை இரு வாரங்களிலேயே பெண்ணுக்கும் சந்திரனைப் பிடித்துவிட்டது எனக் கூறிய போது அருணாவுக்கு உடனே அம்மனுக்கு அபிசேகம் செய்விக்க வேணும் என்ற ஆசை எழுந்தது. சந்திரன் தான் அக்கா கலியாணம் நடக்கட்டும். நானும் மனிசியும் சேர்ந்து அபிசேகம் செய்வம் அக்கா என கேட்டதை மறுக்க முடியவில்லை.

கலியாணத்தை இந்தியாவிலேயே இன்னும் ஒரு மாதத்தில் நடத்துவதென இருபக்கமும் தீர்மானம் செய்து தம்பியாரும் எல்லா அலுவலும் பாக்கவும் தொடங்கியாச்சு. அக்காவையும் அத்தானையும் கூட தன் திருமணத்துக்கு இந்தியாவுக்கு தானே டிக்கட் போட்டுக் கூட்டிக்கொண்டு போகப்போறான் சந்திரன். அருணாவுக்கு தம்பியாரின் திருமணத்துக்குப் போவதிலும் இந்தியா போற மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. இப்பவே என்ன சேலை வாங்குவது, திருமணத்துக்கு என்ன நகை அணிவது எனக் குழம்பிப் போனாள்.

பெண்ணின் தமக்கையும் எத்தினையோதரம் போன் எடுத்துக் கதைச்சுப்போட்டா. தம்பியாரை மட்டும் அருணா அவர்கள் ஒருவரிடமும் கதைக்க விடவில்லை. ஏற்கனவே தம்பியாரிடம் கூறிவிட்டாள். அங்க போன பிறகு கதைக்கலாம் சந்திரன். இப்ப கதைச்சியெண்டால் எங்களில ஒரு இளக்காரமாப் போவிடும் எண்டு. சந்திரன் தமக்கை சொன்ன எல்லாத்துக்கும் தலையை ஆட்டிக்கொண்டான். ஏனெனில் ஏதாவது தான் எதிர்த்துக் கதைச்சு கலியாணம் அதால குளம்பினால் என்ன செய்வது என்ற பயம்.

அருணா குடும்பமும்  சந்திரனும் இந்தியா வந்து சேர்ந்தாச்சு. பெண்ணின்  தமக்கையும்  குடும்பத்துடன் ஏற்கனவே வந்துவிட்டார். தங்களோடு வந்து நிற்கும்படி அவர்கள் கேட்டும் அருணா மறுத்துவிட்டாள். நாங்கள் தங்கு விடுதியிலேயே நிற்பதாகக் கூறிவிட்டாள். அன்று மாலையிலேயே தாங்கள் அவர்கள் வீட்டுக்கு வருவதாகக் கூறியதும் சந்திரன் ஒரு வெட்கத்தோடு சிரித்தான். எப்ப விஜியைப் பார்ப்போம் என்று இருந்தது சந்திரனுக்கு.

மாலையில் ஒரு வாடகைக் காரை ஒழுங்குபடுத்திக்கொண்டு அவர்களின் வீட்டுக்குச் சென்றனர். முதலில் வரவேற்றது பரிசிலிருந்து வந்த தமக்கைதான். தமக்கையும் சரியா விஜிபோலத்தான் என சந்திரன் மட்டுமல்ல அருணாவும் எண்ணினர். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளவில்லை.  பெண்ணின் தாயாரும் வந்து வாங்கோ எப்பிடி இருக்கிறியள் என்று விசாரிக்க எங்க பொம்பிளை. முதலில விஜியை கூப்பிடுங்கோ. அல்லது தம்பி என்னை கடிக்கத் தொடங்கிவிடுவான் என அருணா பகிடியாகக் கூற, விஜி வெக்கப்பட்டுக்கொண்டு உள்ளுக்கை நிக்குது என கூறியபடி தமக்கை விஜியின் கையைப் பிடித்து இழுத்தார். வெளியே வந்த விஜியைப் பார்த்து அருணா, கணவன், சந்திரன் உட்பட அனைவரும் அதிர்ந்து போயினர்.

படத்தில் பார்த்த பெண்ண இல்லை இது. இது வேறை என்று தம்பியின் காதில் குசுகுசுத்தாள் அருணா. அவளுக்கு வந்த கோபத்தில் என்ன அடுத்துச் செய்ய வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. கணவனைத் திரும்பிப் பார்க்க அவன் ஒரு சிரிப்புடன் அமர்ந்திருந்தான். என்ன நாம் படத்தில் பார்த்தது போல் இல்லையே விஜி என அருணா கேட்டேவிட்டாள். படம் ஆக முதல்ல எடுத்தது என தமக்கை கூற, நீங்கள் மாறி உங்கட படத்தை அனுப்பின்னியளோ  என்று வேண்டுமென்றே கேட்டுவிட்டு தமக்கையைப் பார்த்தாள் அருணா. தம்பி இப்ப போவம் பிறகு வருவம் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே சந்திரனும் எழுந்துவிட்டான். தான் சொன்னவுடனேயே தம்பியார் எழுந்ததில் அருணாவுக்குச் சந்தோசம். பெருமிதத்தோடு கணவனைத் திரும்பிப் பார்த்தாள். மீண்டும் சந்திரனின் பக்கம் திரும்ப அவன் விஜியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அவளுக்கு அருகில் சென்றவன் ஏன் விஜி வெக்கப்படுறீர் வாரும் வெளியில என விஜியின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான். சப்த நாடிகளும் ஒடுங்க அருணா தம்பியின் செய்கையை செய்வதறியாது பாத்துக்கொண்டே நின்றாள்.

No comments:

Post a Comment