Saturday 16 November 2013

பதினைந்து வயது வாலைக் குமரியடி

பதினைந்து வயது வாலைக் குமரியடி
பார்ப்போரை மயக்கும் பருவ மங்கையடி
அதனாலோ அத்தனை பேர் உன் அழகில்
கண்மயங்கி உனைக் காண
உச்சிப் பொழுதிலும்
உனைத்தேடி வருகின்றார்????

ஒரு முறை உனைக் கண்டார்
உன்மத்தம் கொண்டு உன்
பின்னே வருகின்றார்
ஊனின்றி உறக்கமின்றி
உன்னில் மதிமயங்கி
உன்னைப் பார்த்திருப்பார்
உள்ளத்தெழும் உணர்வை
உரைத்திட அனைவரும்
முத்தமிழால் உனக்கு
முத்தாரம் சூட்டிடுவார்

சொக்குப் பொடிபோட்டு
சொக்க வைப்பதில் நீ சுந்தரி
சொல்லாடல் செய்து
சூரர்களைக் கூட
சுணங்க வைப்பதில் சூத்திரி

சோலை மலர்விழியாள் உன்
சோபை கண்டதனால்
சொற்களால் உனைச்
செம்மையாக்கிச் சுற்றி வருகின்றோம்
கதைக்கள், கட்டுரைகள், கவிதைகளாக்கி
கண்குளிரக் காண்கின்றோம்

பதினைந்து ஆண்டுகள் முன்
உன்னைப் பிரசவிக்க
மோகன் அண்ணா பட்ட துன்பம்
நானறியேன்.
அண்ணா நீர் வாழி

ஆடைபுனைந்து அணைத்துனை
ஆளாக்கி எம்முன்னே
அழகுறச் செய்தோர்
அத்தனை பேர் நீர் வாழி

கோலமயில் யாழ்மகளை
கோலத் தமிழாலே கொடை தந்து
குலமகளாய்க் காத்திடும்
அனைவரும்  வாழி வாழி

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அழகுடன் நீயிருக்க
அத்தனை பேரும் உனை
அரவணைத்துக் காத்து நிற்பர்
யாழ் களமே நீவாழி

No comments:

Post a Comment