Saturday 16 November 2013

முகம் தொலைத்த நாள்

முள்ளிவாய்க்காலுடன் முடிந்தது ஆண்டுகள் நான்கு
மனிதம் தொலைந்து மானுடத்தின் மரணவீடானது.
கொத்தணிக் குண்டுகள் கொட்டிய மழையில்
கொத்துக் கொத்தாய் உடல்கள் மட்டுமா வீழ்ந்தது ?

முற்று முழுதாய்த்  தமிழினம் முகம் தொலைத்த நாளது
மூடர்கள் மூட்டிய தீயினில் முழுவதும் எரிந்து போனது
மொத்தமும் இழந்து மூளிகளாக்கி முழுதும் அழித்து மீண்டது
சொத்து சுகங்கள் சொந்தம் எல்லாம் எதிரிக்கென்றானது

ஊர் இழந்து உறவுகள் இழந்து உடைமைகளும் தானிழந்து
ஒப்பாரி ஒன்றே ஊர்முழுதும் கேட்கும் ஒலியானது
சிங்களன்  மூட்டிய சிதையின் நடுவே சித்தம் கலங்க
சிதைந்து  அன்றோ போனது சீருடன் வாழ்ந்த வாழ்வு

வீடிழந்து வீதி இழந்து வேர்களுடன் விழுதுகள் இழந்து
ஓடிவிளையாடிய ஊரிழந்து கூடிக் களித்த உறவுகள் இழந்து
கொட்டும் மழையிலும் குளிரிலும் குடிக்க ஒருவாய் நீர் இன்றி
பசித்த வயிற்றுக்கு உணவின்றி பரிதவித்திறந்தனர்  பாதித்தமிழர்

மானமிழந்து மனைவி இழந்து கட்டிய கணவன் பிள்ளை இழந்து
தானம் பெற்று வாழும் நிலையில் தமிழன் நின்ற நாளது
கவரி மானாய் வாழ்ந்த தமிழினம் கசக்கி எறிய வீழ்ந்த நாளது
கொல்லும் கயவனை, கோடரிக் காம்புகளை, காட்டிக் கொடுத்தவனை

கொடும்வாள் கொண்டு கொட்ட முடியாது குறுகி நின்ற நாளது
பிணங்கள் தாண்டி பிணத்தின் மேலே உயிர் கொண்டு ஒடிய நாளது
பெற்ற பிள்ளையை பெண்டிரை விட்டுப் பித்தராய் ஆன நாளது
ஊர்களை எல்லாம் உழுது தமிழன் உயிர் விதைத்த நாளது 

எல்லை தாண்டி நாம் வந்ததனால் எல்லாம் எமக்காய் உள்ளது
எத்தனை உனக்காய் எங்கிருப்பினும் தேசம் தாண்டிய நீயோ
தேசம் தொலைத்த மானமிழந்த மடைத் தமிழனே
கூடு தொலைத்த குருவிபோன்ற குருட்டுத் தமிழனே

குற்றம் எல்லாம் முற்றும் கொண்ட கொடிய தமிழனே
கோளைகளாய் ஓடிவந்த கேடுகெட்ட கேணைத் தமிழனே
இலக்கம் இலக்கமாய் உயிர் கொடுத்தும் இலக்குகள் இன்றி
எச்சில் இலைகளாய் எங்கும் வாழும் எளிய தமிழனே

இன்னும் என்ன வேண்டும் உனக்கு இலக்கு ஏதடா ??
ஈழ தேசம் பிறந்த உனக்கு எந்த நாடும் சொந்தம்  இல்லை
எதிரி போடும் எச்சில் இலைக்கு இரண்டு கையும் ஏந்தி நின்று
குட்டக் குட்டக் குனிந்தது போதும் கேடுகெட்ட தமிழனே

எட்டுத் திக்கும் வாழ்ந்தும் என்ன நாடிழந்த அகதி நீ
ஈழ நாட்டில் இனம் அழிய எங்குமிருக்கும் நீயும் அழிய
தமிழன் வாழ்ந்த தரவு இன்றி தமிழும் அழிந்து போகுமே
தரணி வாழ்ந்தான் தமிழன் என்னும் தகவல்அழிந்து போகுமே

தடக்கி விழுந்தும் தமிழன் தடைகள் தாண்டி வருவான்
தன்னினம் காக்க ஒன்றாய்க் கூடித் தன்னினம் காக்க வருவான்
கொட்டம் அடக்கி கயவர் தலைகள் குன்றாய்க் குவிக்க வருவான்
கோடை இடியாய் கயவர் கூட்டம் குலை நடுங்க வைப்பான்
கொன்று பின் வென்று குல மானம் குறையின்றிக் காப்பான்

என்றெல்லாம் கற்பனைக் கோட்டைகள்  கட்டினோம்
அத்தனை கற்களும் உதிர்ந்து இன்று மணல்களாகி நிற்குதே
மீண்டும் கட்டலாம் கோட்டைகள் நாமெலாம் மனது சேர்ந்தால்
அத்தனையும் உள்ளது எம்மிடம் அண்டை அயலார் வேண்டாம்
ஆசை கொண்டு நீ அறிவாய் எழுந்திடு அடைந்திடுவாய் தமிழா
தேசம் எங்கள் ஈழம் கண்டே தலை நிமிர்ந்திடுவாய் தமிழா


No comments:

Post a Comment