Saturday 16 November 2013

அன்று நாம் பொங்கிடுவோம்

தை பிறந்தால் வழிபிறந்தது அன்று
எத்தனை தை பிறந்தும்
தமிழனுக்கு மட்டும்
வழி பிறக்க வில்லையே

ஏர்  கொண்டு உழுது
பயிர்கள்  தான்  செய்தோம்
ஊரெங்கும் பச்சை வயல்
பசுமைகள் கண்டோம்
எவரையும் நம்பாது
நாம் விழைத்து நம் மண்ணில்
தன்னிறைவு கொண்டோம்

செம்பாட்டு மண்ணில்
செழித்து வளர்ந்திடும்
செவ்விளநீரொடு
மா பலா வாழை என
வாயினிக்க நாமணக்க
வகை வகையாய்
வாழையிலை மஞ்சள்
வானுயர்ந்த கருப்பு கட்டிப்
பொங்கி மகிழ்ந்திட்டோம்

யார் கண்ணோ பட்டதனால்
நாமிருந்த பூமியெல்லாம்
நாசமாய் போனதனால்
நாள் கூட நமக்கின்றி
நாதியற்றுப் போனோம்
ஏர்கொண்டு ஏற்றமுடன்
எமைக் காத்தோம்  இன்று
ஏழைகளாகி எதிர்பார்த்து
ஏந்தி எம் கைகளை
எல்லோரை நோக்கி
ஏளனப் பொருளாகி
எதுமற்ரோராகி
எச்சில் இலைகளாய்
எங்கும் கிடக்கிறோம்

எது கொண்டு மறைப்பதற்கும்
எதுமின்றி நாதியின்றி
எங்களினம் வாடுகையில்
எண்ணம் ஏதுமன்றி
ஏட்டுக் கல்வியின்றி
ஏக்கம் மட்டும் இன்னும்
எல்லோரின் சொந்தமாய்
எதிலிகளாகி எழமுடியாது
எங்கும் இருக்கையில்
ஒருநேர உணவுக்கு
ஊரார் கைபார்த்து
ஏங்கித் தவிக்கையில்
எமக்கெதற்குப் பொங்கல்

எப்பதவி கொண்டு நீ
எங்கிருந்தாலும்
நாடற்றவன் நீ
நாடற்றவன்
ஏதுமற்ற தமிழா
எண்ணித் துணிந்துவிடு
எம்மினம் காக்க
ஏழைகளின்றி
ஏக்கங்களின்றி
எமக்கொரு தேசம்
என்றோ விடிந்தால்
அன்று நாம் பொங்கிடுவோம்
புதுப் பானைப் பொங்கல்

No comments:

Post a Comment