எனக்கு லண்டன் நிலக்கீழ்த்தொடருந்தில் பயணம் செய்வதுதான் பிடிக்கவே
பிடிக்காத விடயம். ஆனாலும் சிலவேளைகளில் பயணம் செய்தே தீரவேண்டிய
நிர்ப்பந்தம். ஏறிக் கொஞ்ச நேரத்திலேயே பார்த்தவற்றை மீண்டும் மீண்டும்
பார்ப்பதனால் தூக்கமும் விரைவில் வந்துவிடும்.
இதற்கு முன்னொருமுறை பயணம் செய்தபோது தூக்கம் எப்படித்தான் என்னைத்
தழுவியதோ கண்விழித்துப் பார்த்தபோது நான் இறங்கவேண்டிய இடம் கடந்து
பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பிறகென்ன அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி
மற்றத் தொடருந்து பிடித்து வீடுவந்து சேர ஒரு மணிநேரம் தாமதம்.
இன்று தூங்காது எப்பிடியாவது சரியான நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டும்
என்று மனதுள் தீர்மானித்தபடி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பலர்
செய்தித்தாள்களில் மூழ்கிப்போய் உள்ளனர். ஒரு சீனப் பெண் தலையை
எவ்விதத்திலும் சரிக்காமல் நேராக இருந்து தூங்கிக் கொண்டு இருக்கிறார்.
அவரைப் பார்த்ததும் எனக்கும் கொஞ்சநேரம் தூங்கினால் என்ன என்ற ஆசை
எழுகிறது. மனதை அடக்கியபடி மீண்டும் மற்றவர்களில் பார்வையைப் பதிக்கிறேன்.
அடுத்த தரிப்பிடத்தில் பலரும் இறங்க இருக்கைகளில் பல வெறுமையாக, ஒரு
தந்தையுன் மகனும் வந்து எனக்கு முன்னால் அமர்கின்றனர். தந்தை மொட்டைத்
தலையுடன் பார்க்கும் போதே அவரில் ஒரு கள்ளப் பார்வை தெரிவதுபோல் என்மனம்
உணர்கிறது. மகனுக்கு ஒரூ பத்து வயதாவது இருக்கும். ஆனால் கால்களைத் தூக்கி
தந்தையின் கால்களில் போட்டபடி சூப்பிப் போத்தலில் பாலை அருந்தியவாறு
இருக்கிறான். அவன் பாலை அருத்துகிறானா அல்லது சும்மா வாயுள் அதை
வைத்திருக்கிறானா என்பதில் எனக்குச் சந்தேகம்.
நான் childcare படிக்கும்போது பலவிதமான சிறுவர் பாலியல்த் துர்ப்பிரயோகம்
பற்றி ஆசிரியை கூறியவை எல்லாம் என் கண் முன்னால் வந்து என் நின்மதியைக்
கெடுக்கின்றன.
இவர்கள் உண்மையிலேயே தந்தையும் மகனும்தானா??? அல்லது இந்தப் பையனை
எங்கிருந்தாவது கடத்திவந்து இவன் வைத்திருக்கிறானோ ?? அப்படியாயின் அதைப்
பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட்டுப் போவது தவறு என்று உள்மனம் கூற
இவர்களைப் பற்றி அறியவே வேண்டும் என என்மனம் ஆசை கொள்கிறது. தெரியாத ஒரு
அந்நிய ஆணிடம் அதுகும் எந்தவித அழகோ அன்றி நல்ல மனிதனுக்குள்ள உருவ அமைப்போ
இல்லாத அவனிடம் எப்படிக் கதைப்பது என என்மனம் சண்டித்தனம் செய்கிறது.
பெரிய பெடியனாக இருக்கிறான். பாடசாலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பது
சட்டப்படி குற்றம் என்று எண்ணியபடி அந்தப் பையனைப் பார்த்து நீ
பாடசாலைக்குப் போகவில்லையா என்று கேட்கிறேன். அவன் எனக்கு எந்தப் பதிலும்
சொல்லாது சூப்பிப் போத்தலை வாயில் வைத்திருக்கிறான். தந்தையைப் பார்த்தால்
அவர் விளங் காததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். மீண்டும்
தந்தையைப் பார்த்தே கேள்வியைக் கேட்கிறேன்.
அவனோ நான் கேட்டது விளங்காததுபோல் என்ன என்கிறான் மீண்டும். உன் பிள்ளை
பள்ளிக்குச் செல்வதில்லையா என்று பொறுமையை வரவழைத்துக்கொண்டு மீண்டும்
கேட்கிறேன். அந்தச் சிறுவன் நேராக இருப்பதற்கு முயற்சி செய்கிறான். அவனோ
அப்பையனை அப்படி இருக்க விடாது கால்களை தன் கால்களின் மேல் இழுத்து
வைப்பதுமாக சிறுவன் மீண்டும் முயல்வதுமாக சிறுவன் என்ன விடு விடு என்று
கூறியபடி கால்களை இழுக்கிறான். அவனோ விட்டபாடு இல்லை. பார்த்துக்கொண்டு
இருந்த எனக்கு என்கால்களை அவன் இழுத்து வைப்பதுபோல் இருக்க, ஏன் அவனைத்
தடுக்கிறாய். நேராக இருக்க விடு என்கிறேன்.
அவன் கோபத்துடன் புரியாத மொழியில் எதோ சொல்கிறான். அவனுக்கு ஆங்கிலம்
தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் சிறுவன் என்னை விடு என்று
ஆங்கிலத்தில்த்தான் கூறினான். இவன் ஏன் வேறு மொழி பேசுகிறான் என்று
எண்ணியவாறே உனக்கு ஆங்கிலம் தெரியாதா என்கிறேன். அவன் மீண்டும் அந்த
மொழியிலேயே எதோ சொல்ல எனக்குக் கோவம் வருகிறது.
இப்பொழுது அந்தப் பெட்டியில் நானும் அவர்களும்தான். அவன் சிறுவனிடம்
குனிந்து காதுக்குள் குசுகுசுக்கிறான். எனக்கு இவன் என்ன சொல்கிறான். பாவம்
அந்தப் பையனை இவன் தவறாகத்தான் பயன்படுத்துகிரான்போல என்று எண்ணியபடி இவன்
உன் மகனா என்று அவனைக் கேட்கிறேன். அவன் எந்தப் பதிலும் கூறாது எங்கோ
பார்க்கிறான். நான் சிறுவனைப் பார்த்து இவர் உன் அப்பாவா என்று கேட்கிறேன்.
சிறுவன் இல்லை என்று தலை ஆட்டியவன் அவன் எதோ உறுக்க மீண்டும் ஓம் என்று
மேலும் கீழுமாய்த் தலையை நிறுத்தாமல் ஆட்டுகிறான்.
ஒரு குற்றத்தைக் கண்டாலோ அல்லது சந்தேகம் கொண்டாலோ அதுபற்றி உரியவர்களிடம்
அறிவிக்க வேண்டியது ஒவ்வொருப்வரின் கடமை. எனக்கு இவன் நேர்மை இல்லை என்று
மனம் சொல்கிறது. ஆனாலும் அதை எப்படி நிரூபிப்பது என்று தெரியாமல்
யோசனையுடன் இருக்கிறேன். மீண்டும் அவனைப் பார்த்து நீ எங்கே வசிக்கிறாய்
என்று கேட்கிறேன். அவன் எதோ திட்டிவிட்டு அந்தப் பையனை இறுக்க அணைத்தபடி
என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து அமர்ந்திருக்கிறான்.
இன்று இவனை விடுவதில்லை என்று மனதில் எண்ணிக்கொண்டு சில திட்டங்களைப்
போடுகிறேன். ஆனாலும் மனதில் ஒரு படபடப்பும் கூட ஒட்டிக் கொள்கிறது. அவர்கள்
இருவரையுமே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஒருமுறை என்பக்கம் திரும்பிப்
பார்த்தவன் நான் அவர்களையே பார்ப்பதை கண்டதும் சடாரெனத் தலையைத் திருப்பிக்
கொள்கிறான்.
அடுத்த தரிப்பு வந்ததும் எதிர்பாராது பையனை இழுத்துக்கொண்டு அவன் இறங்க
நானும் விரைந்து என் கைப்பையைத் தூக்கியபடி பின்னால் இறங்குகிறேன்.
பையனுடன் விடுவிடு என்று கொஞ்சத்தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான்.
நான் வருவதைக் கண்டதும் அவனின் நடை துரிதமாகிறது. அவனை எப்படியும்
தவறவிடக்கூடாது என்னும் ஆர்வத்தில் நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்கிறேன்.
எப்படியாவது வெளியே வந்தவுடன் போலிசுக்கு போன் செய்துவிட்டு அவனைப்
பின்தொடர்ந்து செல்வது தான் என் திட்டம். அதனால் மற்ற எதுவும் கண்ணில்
படவிடாது அவனையே பார்த்தபடி தொடர்கிறேன்.
எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று
எண்ணியபடி அந்த திருப்பத்தில் திரும்ம எதுவோ என்னில் வேகமாக மோத, கைப்பை
ஒருபுறமும் ஒரு காலணி ஒருபுறமும் போக விழ இருந்த என்னை ஒரு காப்பிலி
இழுத்து நிறுத்துகிறான். என்னை இடித்துவிட்டு தொடருத்தைப் பிடிக்க ஓடிய
வெள்ளையும் சொறி சொல்லிவிட்டு மீண்டும் ஓட, நான் காலனியை எடுத்து
அணிந்துகொண்டு கைப்பையையும் எடுக்கிறேன்.
அதன் பின்தான் எனக்கு முதல் விடயம் நினைவுக்குவர விரைந்து சென்று படிகளில்
தாவித்தாவி ஏறி பிரயாணச் சீட்டை அழுத்திவிட்டு வெளியே வந்தால்
தேர்த்திருவிழா போல மக்கள் கூட்டம்.
No comments:
Post a Comment