Saturday, 16 November 2013

மீன் போச்சே

என் வீட்டுக் குளத்தில் பத்தொன்பது மீன்கள் நேற்றுவரை இருந்தன. மீன்கள் ஓடி விளையாடும் அழகைப் பார்த்துக்கொண்டே எத்தனை நேரமானாலும் இருக்கலாம். கடந்த குளிர் காலத்தில் யாழ் இணையமே கதியென்று கிடந்ததால், குளத்தைக் கொஞ்சம் கவனியாது விட்டுவிட்டேன்.
 
தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரமும் பழுதடைந்து, புதிது வாங்க நேரமின்மையும், போய் வாங்கப் பஞ்சியாயும் இருந்ததால், நரி மீன்களை உண்ணாமலிருக்க மேலே போட்டிருந்த வலையிலும் சேர்த்துப்  பாசி பிடித்துவிட்டது. ஒழுமுறை கழுவிப் பார்த்தும்  பாசி அப்படியே இருந்ததால், வலையைச் சுருட்டி குப்பை வாளியுள் போட்டாயிற்று. தொட்டியுள் மேலதிகமாக இருந்த தாவரங்களையும் அகற்றி மீன்தொட்டி இப்ப சுத்தமாகிவிட்டது. வலை வாங்கி மேலே போடவேண்டியது ஒன்றுதான் குறை.

எனக்கு வலையைப் பாக்கப் பாக்க எரிச்சல் தான் வரும். அது குளத்தின் அழகைக் கெடுப்பது போலும் இருக்கும். அதனால் ஒரு வாரமாவது வலையைப் போடாமல் வைத்திருப்போம் என எண்ணி இருந்தேன். நல்ல வெயில் என்பதால் மீன்கள் எல்லாம் மேலேயே நின்று விளையாடும். பத்து செம்மஞ்சள் மீன்கள், ஆறு வெள்ளை மீன்கள், இரண்டு கருப்பு வெள்ளை  செம்மஞ்சள் கலந்த நிறமுடைய மீன்கள், ஒரு பெரிய கருப்பும் பழுப்பும் கலந்த நிற மீன். இவ்வளவும் இருந்தன.

எனக்கு இப்ப கன நாட்களாக கனவுகளே வருவதில்லை. முந்தநாள் நரி என் மீன்களை  பிடிப்பதுபோல் கனவு வந்தது. காலை எழுந்ததும் ஓடிப்போய் முதல் வேலையாகக் குளத்தைப் பார்த்தேன். அப்பாடா எல்லா மீன்களும் இருந்தன. கனவில் எப்பவும் எதிர் மறையாகத தானே நடப்பது என்று சிறிது ஆறுதல். சரி இன்னும் ஒரு நாள் போகட்டும் வலையைப் போடலாம் என்று இருந்துவிட்டேன்.
 
இன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டு இருந்தபோது மகளின் ஐயோ அம்மா என்னும் சத்தத்தில் என்னவோ எதோ என்று பதறியபடி வெளியே ஓடினால், எல்லாம் உங்களால் தான் என்னும் குற்றச்சாட்டுடன் மகள் குளத்தைக் கைகாட்டியபடி. எட்டிப் பார்த்ததால் ஒரே ஒரு மீனைத் தவிர ஒன்றும் இல்லை. அந்த ஒரு மீன் கறுப்பும் பழுப்பும் சேர்ந்த அந்தப் பெரிய மீன்.

அழகழகாய் இருந்த மீன்களை எல்லாம் உண்ட நரி, நிறத்தைப் பார்த்து அந்த மீனை மட்டும் உண்ணவில்லையா??? அல்லது அதன் நிறமே நரியிடமிருந்து அதனைக்  காப்பாற்றியதா??? நரிக்கு மட்டும் தான் வெளிச்சம்.
 
 
 
P1000083_zpsb7b28eb4.jpg

இப்படி ஒரு விலங்கும் தண்ணீரில் நிற்கிறது. பெயர் ஊர் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

No comments:

Post a Comment