Saturday 16 November 2013

இன்று கூட நாம் காத்திருக்கிறோம்

புத்தாண்டே நீ புதிதாய் வருகின்றாய்
அத்தனை பேரும் ஆவலுடன் உனக்காய்
அகமகிழ்ந்து எங்கும் காத்திருக்க
எத்துனையும் அலுக்காது எப்படி
நீயும் எழில் பொங்க வருகின்றாய்

சாதிமத பேதமின்றி  சண்டைகள் ஏதுமின்றி
சமத்துவத்தோடு நீயும் சரிநிகராக
சகலருக்குமாக  எப்படி வருகின்றாய்

புத்தாண்டிலாவது புதுவழி பிறக்குமென
நம்பிக்கை கொண்டோரின் கனவை நனவாக்க
நாடுகள் தோறும் நீ  நளினத்துடன் வருகின்றாய்

எத்துன்பம் வந்தாலும் அத்தனையும் களைய
ஆவலுடன் உன்னை அத்தனை பேர் பார்த்திருக்க
ஏற்றமுடன் நீயும் எப்படியோ  வருகின்றாய்

ஆனாலும் நாமும்தான் ஆசையுடன் உன்னை
ஆண்டாண்டாய்ப்  பார்த்திருந்தோம்
ஆறுதல் தேடி ஊரூராய் அலைந்திட்டோம்
ஆழக்கடல் கடந்து அகதியாய் அலைந்திட்டோம்
ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்திட்டோம்
உலகெல்லாம் கூட்டி நீதி கேட்டிட்டோம்
ஒன்றும் நடக்கவில்லை ஒன்றும் நடக்கவில்லை

ஆயிரம் ஆயிரம் அருமை உயிர்கள்
அணுவணுவாக  அழிந்தொழிந்தது
ஆசையாய் வாழ்ந்த எங்கள் ஊர்கள்
அந்நியன் கைகளில் வீழ்ந்து போனது
ஆடு மாடுகள் வீடு வேலிகள்
அத்தனையும் அழிந்து போனது
எத்தனை காலமாய் இருந்த ஏக்கம்
இடிவிழுந்ததால்  இல்லாமல் போனது

இன்று கூட நாம் காத்திருக்கிறோம்
இனிவரும் ஆண்டின் புதிய வருகையில்
எமக்காய் ஏதும் ஏற்றம் வருமென
செத்து மடிந்தவர் சிந்தையின் நோக்கம்
சிறப்பாய் எம்மைச்சேர்க்கும் என்று
சுதந்திரக் காற்றை சுவாசம் காண
சுடர்மிகு ஆண்டாய் நீ பிறப்பாயென
சிந்தை முழுதும் செங்குருதியோடு
சோகம் சுமந்து காத்திருக்கின்றோம்

No comments:

Post a Comment