அப்போது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த
வருடம் காபொத சாதாரண பரீட்சைக்காக மாலையில், சனி ஞாயிறுகளில் எல்லாம்
டியூசனுக்குப் நண்பிகள் சேர்ந்து போவோம்.
கொஞ்ச நாட்களாக புதிய முகமொன்று எங்களுக்குக் காவலுக்கு பின்னாலேயே வந்து
கொண்டிருந்தது. ஆள் பார்க்க அழகாகவும் உயரமாகவும் இருந்தான். ஆனால் எதோ ஒரு
குறை ஆளில் உள்ளதாக மட்டும் எனக்குப் பட்டதன்றி என்ன என்று விளங்கவில்லை.
பதின்நான்கு வயது எல்லாவற்றையும் விளையாட்டாக எடுக்கும் வயது. எங்களில்
ஒருத்தியை சைட் அடிக்கிறான் என்று மட்டும் தெரிகிறது. ஆனால் யாரை என்று
கொஞ்சநாள் புரியவில்லை.நான் அவனை மறித்துக் கேட்கட்டுமாடி என்றதற்கு
இருவரும் ஒருசேர வேண்டாம் என்றனர். சரி என்ன நடக்கிறது என்றுதான்
பொறுத்திருந்து பார்ப்போம் என்று நானும் இருந்துவிட்டேன்.
என்னுடன் வரும் மற்ற இருவரும் என்னிலும் நல்ல நிறமானவர்கள். அதனால்
அவர்களில் ஒருத்திதான் என்று எண்ணி அவர்களை தனித் தனியக் கேட்டும் இருவரும்
மறுத்துவிட்டார்கள். ஆனாலும் எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.
சென்ரல் கொலிச் பெடியள் எத்தனையோ விதமாகக் கண்ணில் பட்டதனால் எனக்கு இவன்
பெரிதாகத் தெரியவில்லை. பின்னால் காவலுக்கு வருபவன் ஒருநாள் முன்னால்
சயிக்கிளில் முன்னால் நிக்கிறான். நாம் தூரத்தில் இருந்தபடியே
பார்த்துவிட்டோம். என்னடி இவன் இண்டைக்கு முன்னுக்கு நிக்கிறான் என்று
ஆளாளுக்குக் கேட்கிறார்கள். எனக்கும் எதோ நடக்கபோகிறது என்று புரிகிறது.
திடீரென சயிக்கிளை எனக்கு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு மடித்து
ஒட்டிய கடிதம் ஒன்றை நீட்டுகிறான். நான் அவன் எனக்குக் கடிதம் தருவான்
என்று எதிர்பார்க்காததால் திகைத்துப்போய் நிக்கிறேன். நாங்கள் மூவரும்
செய்வதறியாது நிற்க அவன் என் புத்தகத்தின் மேல் கடிதத்தை வைத்துவிட்டுச்
சென்றுவிடுகிறான்.
அதன்பின் நாங்கள் சுற்றுமுற்றும் பார்த்து யாரும் கவனிக்கவில்லை என்று
நின்மதிப் பெருமூச்சு விடுகிறோம். நான் அலட்சியமாக கடிதத்தை மற்றவளிடம்
கொடுத்து உடையடி என்கிறேன். அவள் மீண்டும் ஒருமுறை சுற்றிவரப்
பார்த்துவிட்டு கடிதத்தை உடைக்கிறாள். அவர்கள் வாசித்து முடிய நானும்
வாங்கி வாசிக்கிறேன். என் இதய ராணி என ஆரம்பித்து .......தொடர்ந்து
என்பெயரையும் போட்டு காதல் கடிதம் நீண்டிருந்தது.
எனக்கு ஒரு குறுகுறுப்பு இருந்தாலும் ஏனோ தெரியவில்லை அவன் மேல் காதல்
ஏற்படவில்லை. அதற்கு அவன் எழுதியிருந்த கடிதத்தில் எழுத்துப் பிழைகள் நிறைய
இருந்ததுகூடக் காரணமாக இருக்கலாம். வாசித்து முடிய நான் வைத்துக்கொள்ளாது
என்னுடன் வந்த ஒருத்தியிடமே நீயே வைத்துக்கொள். வீட்டுக்குப் போகும்போது
கிழித்து எறிந்துவிடலாம் என்கிறேன். திரும்பி வரும்போது கடிதத்தைத்
துண்டுதுண்டாகக் கிழித்து ஒரேயடியாக எறியப் பயத்தில், ஒவ்வொரு இவ்விரண்டு
துண்டுகளாக எறிந்து கொண்டு வந்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு
வருகிறது.
அடுத்தநாள் அவன் எதிர்பார்ப்புடன் காத்து நிற்க நாங்கள் எதுவும் கூறாது
கடந்து செல்கிறோம். என்னடி அவனுக்கு ஓம் என்று சொல்லப் போகிறாயா என்கிறாள்
ஒருத்தி. இல்லை என்று நான் கூற முதலே, அப்ப மாட்டேன் என்று உடனேயே கூறிவிடு
என்கிறாள் மற்றவள். எனக்கோ இன்னும் இரண்டு நாள் பின்னால் வரட்டும் என்று
எண்ணம் தோன்றினாலும் உடனேயே மனதை மாற்றி நாளை நீயே சொல்லிவிடெடி என்கிறேன்.
அடுத்த நாள் நானும் ஒருத்தியும் அவனைக் கடந்து போக மற்றவள் எனக்கு
விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு விரைந்து என்னிடம் வந்து பாவமடி
என்கிறாள். அடுத்துவந்த இரு நாட்கள் நாம் போகும் பாதையில் பேசாது
பார்த்துக்கொண்டே நின்றான். ஆனாலும் எனக்கு எந்த இரக்கமும் தோன்றவில்லை.
அதன்பின் அவனைக் காணவில்லை.
ஆனாலும் என் வாழ்வில் முதலில் கிடைத்த காதல் கடிதத்தையும் அவனின்
உருவத்தையும் எப்போதாவது மீட்டிப் பார்ப்பேன். அதன்பின் அவனை நான்
காணாவிட்டாலும் கூட அவன்பால் ஒரு இரக்கம் தோன்றுவதைத் தவிர்க்க
முடியவில்லை.
No comments:
Post a Comment