இன்றுடன்
அவள் இங்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. எட்டு மாதப் பிள்ளை
அங்கு என்ன செய்கின்றதோ என்பதே எந்நாளும் இவள் கவலையாக இருக்கிறது. எத்தனை
கெஞ்சியும் பிள்ளையைக் கண்ணில்க் காட்டுகிறார்களே இல்லை. அதுவும் முதல்
பிள்ளை. எனக்குத் தெரியாமல் அவனுக்குப் பிள்ளையைக் காட்டுவார்களோ என்று எண்ணும்போதோ மனம் பதட்டப்படத் தொடங்கிவிட்டது தாரணிக்கு.
“நீ தேவையில்லாமல் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதை. இன்னும் கொஞ்ச நாள்த்தான். பொறுமையாய் இரு.”
“நீ எண்டாலும் தருணை ஒருக்காய் போய்ப் பாரனடா. இரவிலை என்னால நித்திரையே கொள்ள ஏலாமல் இருக்கடா”
“நான் இண்டைக்கே போய்க் கதைக்கிறன். நீ நின்மதியாய் இரு அக்கா”
விடைபெற்றுச் செல்லும் தம்பியைக்கூட அவளால் முற்றிலுமாக நம்பமுடியாவிட்டாலும் இப்ப அவனை விட்டாலும் யாருமில்லை அவளுக்கு என்னும் உண்மை உறைக்க, தம்பியார் கண்ணில் மறைந்தபின்னரும் கூட திரும்ப அவர்களுடன் சென்று தன் அறையை அடைந்து கட்டிலில் அமர்கிறாள்.
அவளுக்கு வேறு வழியே இல்லாமல் அமர்வது அல்லது படுப்பதும் இருப்பதுமாகவே வாழ்வு சென்றுகொண்டிருக்கிறது. உணவுகூட நேரத்துக்கு வந்தாலும் எல்லாவற்றையும் உண்ணவும் முடியாது, கொட்டுவதும் அழுவதும் தனக்குள்ளேயே பிதற்றுவதுமாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. கணவன் பலமுறை அவளை பார்க்க வந்தும் அவள் மறுத்துவிட்டாள்.
“அத்தானில என்ன அக்கா பிழை? நீ ஏன் அவரில் கோவிக்கிறாய்” என்று தம்பியார் பலதடவை கேட்டும் அவள் எந்தப் பதிலும் கூறவேயில்லை. என்ர பிள்ளையை சொந்த அப்பப்பாவோட தானே விட்டுட்டு வேலைக்குப் போனனான். வேற யாரோடையும் எண்டால் தான் என்னிலை பிழை சொல்லவேணும். ஆரையெண்டாலும் நம்பி என்ர சின்னப் பிள்ளையை விட்டுவிட்டு நான் வேலைக்குப் போனது என் பிழை தானே என்று தனக்குத்தானே தவறைப் பலமுறை ஒப்புக்கொண்டாலும், நான் செய்தது தப்பே இல்லை என்று ஆணித்தரமாக மனம் சொல்ல, பின்னால் உள்ள சுவரில் சாய்ந்து அழவாரம்பிக்கிறாள் தாரணி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
“நாளைக்கு காலை தயாராய் இருக்க வேணும். கோட்ஸ்சுக்கு அழைத்துப் போவோம்” என்றபடி அவளின் ஆடைகளை அந்தப் பெண் கொண்டுவந்து கொடுக்க, தலையை ஆட்டி அதை ஆமோதித்தவண்ணம் என்னென்ன கேட்பார்களோ? என்ன சொல்வார்களோ? என்று யோசனை ஓட, நன்றாய்ப் போய்க்கொண்டிருந்த அவளின் திருமண வாழ்க்கை மனதின் முன்னே வருகிறது.
இலங்கையிலிருந்து திருமணமாகி கணவன் இவளை தாங்காத குறையாக இங்கு அழைத்து வந்ததுமுதல் நூற்றைம்பது பேருக்குச் சொல்லித் திருமண வரவேற்பு வைத்ததுவரை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இவள் கேட்காமலே நகை நட்டு வாங்கிக் கொடுப்பது, விதவிதமாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பது என்று இவளுக்கும் மனமெல்லாம் நிறைஞ்சு போனதுதான். போகப்போகத்தான் கணவனின் பொறுப்பற்ற செலவுகளும் கடனும் இவளுக்குத் தெரியவந்தது. இனி என்ன திரும்பப் போகவா முடியும்? முதலில் அவனுக்கு வரும் கடிதங்களை இவள் திறந்தும் பார்ப்பதில்லை. ஒருநாள் தற்செயலாக ஒன்றைத் திறந்து பார்க்க கிரெடிட் காட்டில் இவன் பெரிய தொகை எடுத்திருப்பது தெரிய துணிந்து கேட்டுவிட்டாள்.
“உம்மை ஸ்பொன்சறில் கூப்பிட்டது எண்டவுடனே எல்லாம் பிரீ எண்டு நினைச்சீரே? எல்லாத்துக்கும் இங்க காசுதான். டிக்கட், நகைநட்டு, கலியாணச் செலவு எல்லாம் நான்தானே. உமக்கு வீடு மட்டும் தானே. நான் சீதனமா காசு ஒண்டும் கேட்கேல்லையே” என்பவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் தாரணி.
விடுமுறைக்கு இலங்கை வந்தவன், தன்னுடன் கூடப் படித்த நண்பனையும் தேடி வந்தான். நண்பனுடன் கதைத்துக்கொண்டு இருந்தவனை தேநீரும் கடையில் வாங்கிய ரோள்சும் குடுத்து தாயார் உபசரித்துக்கொண்டிருக்க, வேலைக்குப் போய்விட்டு ஸ்கூட்டியில் வந்து இறங்கிய இவளைப் பார்த்துவிட்டு “யாரடா இது” எண்டு கேட்டவன், தமையன் இவளை பற்றிக் கூறியதும் இவளை பார்த்து “எப்பிடி இருக்கிறியள்” என்று இயல்பாக்கினான். இவள் உடனேயே சிரித்துவிட்டு அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அன்றிலிருந்து ஒரு வாரம் மிதுன் இவள் வரும் நேரங்களில் தமையனுடன் கதைத்துக்கொண்டிருந்தான். அதன் பின் தான் தமையன் தாயாரையும் இவளையும் கூப்பிட்டு “மிதுன் இவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். இவளுக்கும் சம்மதம் என்றால் செய்து வைப்பம்” என்றான். தாய்க்கோ சரியான மகிழ்ச்சி. வெளிநாட்டில் இருந்து வந்தவன் தன்னை விரும்பிக் கிடக்கிறான் என்றால் இவளுக்கும் கசக்குமா என்ன? பார்ப்பதற்கும் நன்றாகத்தானே இருக்கிறான் என்று இவளும் சம்மதம் சொல்ல எல்லாம் விரைவாக நடந்தேற, ஒரு ஆண்டு முடியும் முன்னரே இவள் லண்டன் வந்துவிட்டாள்.
அதன் பின் தான் அவனின் கடன் விபரங்கள் தெரியவர, தானும் எங்காவது வேலைக்குச் செல்லலாம் என முடிவெடுத்து கணவனிடம் சொல்ல, அவனும் தன் நண்பனின் கடையில் வேலையும் எடுத்துக்கொடுக்க, இவளுக்கு வேலை கடினமாக இருந்தாலும் கணவனின் கடன் குறைகின்றதே என்று மனம் நின்மதியானது.
ஆறு மாதங்கள் வேலை செய்தபின் இவள் கர்ப்பம் தரிக்க, தொடர்ந்து வேலைக்குப் போவதா விடுவதா என்று இவள் மனம் குழம்பிய வேளை, “முதல் பிள்ளை தானே. எட்டு மாதங்கள் வரை வேலை செய்யலாம்” என்று கடையில் வேலை செய்த நண்பி சொல்ல, இவளும் தொடர்ந்து போய்க்கொண்டுதான் இருந்தாள். எட்டாம் மாதம் இவளுக்கே அசதியாக இருக்க வீட்டில் இருக்கவாரம்பித்தாள்.
தமக்கையுடன் இருந்த மாமியார் இவளுக்குக் காவலாக வீட்டில் இருந்தார் தான். ஆனாலும் இருவருக்கும் பெரிதாக ஒட்டவேயில்லை. எதோ கடமைக்கு இருவரும் கதைப்பது போலவே இவளுக்கு இருக்கும். சீதனம் ஒண்டும் கொடுக்காமல் மகனை மருட்டிவிட்டாள் என்று இவளில் கோபம்.
குழந்தை கஷ்டப்படுத்தாமல் பிறந்துவிட்டான். மாமியாருக்கும் மிதுனுக்கும் கூட ஆண்பிள்ளையாய்ப் பிறந்தது மகிழ்ச்சி. இவனின் சகோதரி, நண்பர்கள் என்று சிலர்தான் குழந்தையைப் பார்க்க வந்தார்கள். கனடாவில் மிதுனின் மூத்த சகோதரியுடன் வாழும் இவனின் தந்தையும் இவனின் திருமண வரவேற்பிற்கு வந்து போனதோடு சரி. இப்ப பேரனைப் பார்க்க வந்து இவர்களுடனேதான் தங்கப்போகிறாராம் என்ற தகவலை இவன் கூறியதிலிருந்து இவளுக்கு ஏற்பட்ட எரிச்சலை இவள் வெளியே காண்பிக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள்.
என்ன இருந்தாலும் மிதுனின் தந்தையை எப்படி இவர்களுடன் வந்து நிற்கவேண்டாம் என்று சொல்வது? இங்கிருக்கும் தமக்கை வீட்டில் இருக்கும் சிறிய அறையில் தான் தாயார் தங்குவது. அங்கு தந்தையும் வந்திருக்க முடியாதபடி சிறிய வீடு. இவர்கள் வசிக்கும் அபார்ட்மென்ட் ஒரு பெரிய படுக்கை அறையும் ஒரு சிறிய அறையும் கொண்டதனால் மாமனார் இங்கு வருவதைத் தடுக்கமுடியவும் இல்லை.
மருமகளே மருமகளே என்று இவளுடன் நல்ல வாரப்பாட்டுடன் தான் மாமனார் இருந்தார். இந்த நாடுகளில் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க முடியாதுதானே. குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் லீவெடுத்துவிட்டு மிதுன் சமைத்துக்கொடுத்து ஒத்தாசையாகத்தான் இருந்தான். அதன்பின் அவனாலும் லீவெடுக்க முடியவில்லை. பிள்ளையின் அலுவல்கள் முடிய பெரும் எடுப்பு எடுக்காமல் இரண்டுபேருக்கும் இவளேதான் சமைக்கவேண்டியதுமாயிற்று. மாமனார் வந்த பிறகு அவரே சாமான்கள் வாங்கக் கடைக்குப் போவது, மரக்கறி இறைச்சிகள் வெட்டித் தருவது, சில நேரம் தானே சமைப்பது என்று இவளுக்கும் மாமனார் தம்முடன் இருப்பதும் உதவி போலத்தான் இருந்தது.
இவளும் குழந்தை கிடைத்து ஐந்து மாதங்களாகிவிட்டபடியாலும் தாய்ப்பால் சுரப்பதும் நின்று போத்தல் பால் பிள்ளை பழக, மாமனாரிடம் விட்டுவிட்டு திரும்பவும் வேலைக்குப் போனால் என்ன என்ற ஆசை எட்டிப் பார்க்க, கணவனிடம் கேட்க முதலே மகிழ்வாக அவன் தலையாட்டினான்.
ஏற்கனவே அங்கு வேறொருவர் வேலைக்குச் சேர்ந்துவிட இவளுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேர வேலையே அங்கு கிடைத்தது. அதுவும் நல்லதுதான். போவதும் வருவதும் தெரியாது என்று எண்ணி மகிழ்ந்தவளாய் பிள்ளைக்கு குளிக்கவார்த்து, சமையல்முடித்து, பிள்ளையின் போத்தல் சாப்பாட்டைத் தீத்தி தூங்கவைத்துவிட்டு தானும் சமையலை முடித்து மாமனாருக்கும் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு குளித்து வெளிக்கிட்டு ஒண்டுக்கு இறங்கினால் 1.30 – 4.30 வரை வேலை. ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவாள். போகும்போதே மாமனுக்குக் கஸ்டம் கொடுக்காமல் பிள்ளைக்குப் மாப்பாலைக் கரைத்து வோமரில் மூடிவைத்து விட்டுப் போனால் பிள்ளை மூன்று மூன்றரைக்கு எழும்பிப் பாலைக் குடிப்பான். பிறகு இவள் ஐந்துக்கு வந்து இரவுச் சாப்பாட்டைச் செய்து பிள்ளைக்குக் கொடுப்பாள். இடையில் பிள்ளை அழுதால் மாமனார் பிள்ளைக்குரிய தேநீரைக் கரைத்து ஆற்றிக் கொடுப்பார். அதனால் இவளுக்குப் பெரிதாகப் பிரச்சனை இல்லை.
ரிங் ரிங் ரிங் ........என்னும் மணியோசையில் இவளின் நினைவுகள் கலைய, அது இரவு உணவுக்கான மணி என்பதை உணர்ந்து அவர்களுக்காகக் காத்திருக்கவாரம்பித்தாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இது இரண்டாவது தடவை இவள் கோட்டுக்கு வருவது. என்ன நடந்தாலும் ஒன்றுதான் என்ற மனநிலை இவளுக்கு வந்திருந்தாலும் மகனைப் பார்க்கவாவது அனுமதி கேட்கவேண்டும் என்று முடிவெடுத்தவளாகக் காத்திருந்தாள். இவளின் முறை வந்ததும் இவளின் வக்கீல் இவளை உள்ளே கூட்டிக்கொண்டு போக, இவளுக்கான ஒரு மொழிபெயர்ப்பாளரும் எதோ தீண்டாத தகாத பொருளைப் பார்ப்பதுபோன்று இவளைப் பார்க்கப் பிடிக்காது தலையை வேறு புறம் திருப்பிக்கொண்டு வர, இவளுக்குச் சிரிப்பு வருகிறது. சரி பிழைக்களுக்கும் அப்பால் ஒரு மனிதரை மதிக்கத் தெரியாதவனை எப்படி இந்தத் தொழிலில் அனுமதித்தார்கள் என்ற எண்ணமும் எழுந்தது.
இவள் பற்றிய வழக்கு ஆரம்பமாகியதில் கூண்டில் சாட்சியாய் ஏறி நிற்கவேண்டிய நிலை. ஆனாலும் அதுகூட அவளை பாதிக்கவேயில்லை. ஏறி நின்றபின் பார்த்தால் தன் தம்பி ஒருபுறமும் கணவன் ஒருபுறமும் இருக்க சுருக்கென்று கோபம் தலைக்கேறியது. திரைப்படங்களில் வருவதுபோல் இரு வக்கீல்களும் அதிக நேரம் வாதாடவேண்டிய தேவை இன்றி இவள் திட்டமிட்டு இந்தத் தவறைச் செய்யவில்லை என்பது நிரூபணமாகியதால் இவருக்கு விடுதலை கொடுக்கிறோம் என்னும் தீர்ப்பு இவளை திக்குமுக்காடச் செய்ய, என்ர பிள்ளையை என்னட்டைத் தாங்கோ என்றாள் கத்தி அழுதபடி.
அழாதேங்கோ. பிள்ளையைத் தருவார்கள் என்று வக்கீல் சொன்னதை மொழிபெயர்ப்பாளர் சொல்ல, என் கணவனும் என் பிள்ளையைப் பார்க்கக் கூடாது என்று சொல்லுங்கோ என்றாள். அந்தப் பிரச்சனை வேறு ஒரு நாள் தான் கதைக்கலாம். இப்ப வாங்கோ போவம் என்ற வக்கீலிடம் நன்றி கூறியபடி தம்பியார் வருகின்றானா என்று பார்த்தபடி வாசலுக்கு வருகிறாள்.
“அக்கா அத்தான் உன்னோடே கதைக்கவேணுமாம்”
“நான் ஒருத்தரோடையும் கதைக்கமாட்டன். முதல்ல பிள்ளையை எங்க வச்சிருக்கிறாங்கள் எண்டு கேளடா”
தமக்கையின் கோபம் புரிய, “சரி வா கேட்பம்” என்றபடி முன்னால் நடக்கிறான் தம்பி.
எத்தனையோ பத்திரங்களில் கையொப்பமிட்டு, பல மனநல மருத்துவத் துறையினரின் பரிசோதனைகளின் பின்னர் இவளின் பிள்ளையை இவளிடம் ஒப்படைக்கவே ஒரு மாதமாக, பிள்ளையை வாங்கியவள் நெஞ்சோடு ஆசைதீர அணைத்துக்கொள்கிறாள்.
“அம்மா இனிமேல் பிள்ளையை யாரிட்டையும் விடமாட்டன். என்ர செல்லம். அம்மா வந்திட்டன்” என்று புலம்பியபடி ஆசைதீரப் பிள்ளையைப் பார்க்கிறாள்.
“வா அக்கா வீட்டை போவம்” என்றபடி தம்பியார் காரில் ஏற, தாரணியும் காரில் ஏறி பின் இருக்கையில் பிள்ளையை நெஞ்சுடன் அணைத்தபடி இருந்தவள் மனம் வாகனத்தின் சத்தத்தையும் மீறி எங்கெங்கோ அலைந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்ததை நடுக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மாமனாரிடம் குழந்தையை விட்டுவிட்டு போவதற்கு மனம் இல்லைத்தான் என்றாலும், யாரும் ஏதும் சொல்லிவிடுவினமோ எண்ட பயமும்கூடவே எழ, கடை நண்பியிடம் கூறுகிறாள்.
“உமக்குப் பிரச்சனையைத் தீர்க்க மற்றவையோ காசு தரப்போயினம். நாள் முழுக்கவே வேலை செய்யிறீர். நாலு மணித்தியாலம் தானே. ஒன்றுக்கும் யோசிக்காதையும்” நண்பி கூற மனம் நின்மதி பெறுகிறது.
மீண்டும் வேலைக்குப் போய் ஒருமாதம் முடிந்த நிலையில், இரண்டு மூன்று நாட்களாக இவள் கரைத்து வைத்த பால் சிறிது பருக்கியபடியும் அரைவாசிகூடக் குடிக்காமலும் மிகுதி பருக்கப்படாமல் அப்படியே இருக்க, “மாமா இவனுக்குப் பால் பருக்கேல்லையோ” என்கிறாள் ஆதங்கத்துடன். “பருக்கின்னான். குடிக்கமாட்டன் எண்டிட்டான்”. என்றபடி அவர் தொலைக்காட்சியைப் பார்க்க தாரணிக்கு எரிச்சல் தான் வருகிறது.
இவள் பிள்ளையைத் தூக்கப் பிள்ளை எடுத்த சத்தி இவளின் முகத்திலும் ஆடைகளிலும் தெறிக்கிறது.
“என்னப்பன்? என்ன செய்யுது?. ஏன் பாலைக் குடிக்கேல்லை” என்றபடி முகத்தை இளஞ்சூட்டு நீரில் நனைத்த துணியால் துடைத்து சமாதானமாக மார்புடன் அணைத்துத் தூங்கச் செய்கிறாள். தொடர்ந்தும் அன்று இரு தடவைகள் பிள்ளை வாந்தியெடுத்து ஒரே சோர்வாக இருக்க, அடுத்தநாள் பிள்ளையை வைத்தியரிடம் கணவனும் மனைவியுமாகக் கொண்டு போகிறார்கள். வைத்தியர் பார்த்துவிட்டு என்ன என்று புரியவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பார்த்துவிட்டுக் கொண்டுவாருங்கள் என்று சொல்லி அனுப்ப, சிறிது மன நின்மதியுடன் இரண்டு நாட்கள் வேலையில் லீவு சொல்லிவிட்டு பிள்ளையுடனேயே இருக்கிறாள். இவள் அணைப்பில் பிள்ளை குணமானதுபோல் தெரிய, மூன்றாம் நாள் பிள்ளையை விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள்.
“மாமா தருணைக் கொஞ்சம் கவனமாய் பாருங்கோ” என்றபடி வேலைக்கு கிளம்பியவளுக்கு மனம் எதோ சஞ்சலமாகவே இருக்க, மனதைச் சமாதானப்படுத்தியபடியே வேலைக்குச் செல்கிறாள். அன்றைக்கென்று பார்த்து “நீர் இண்டைக்கு வாறன் எண்டு சொல்லாததால நானே வேலைக்கு வந்திட்டன்” என்று மற்ற வேலைசெய்யும் பெண் கூற, தான் இன்று வேலைக்கு வருவதுபற்றி இவர்களுக்கு கூற மறந்தது இப்பதான் நினைவு வர, “சரி அப்ப நீங்களே செய்யுங்கோ. நான் நாளைக்கு வாறன்” என்றபடி தாரணி தொடருந்துத் தரிப்புக்கு வருகிறாள்.
பத்து நிமிடங்களில் பேருந்து வர ஒருவித நின்மதியில் இருக்கையில் சாய்கிறாள். வீணாக வெளிக்கிட்டு வந்தது. ஒரு மணிநேரம் வீண் என்று எண்ணியபடி முப்பது நிமிடப் பயணத்தில் வீடு வந்தவள், கதவை மெதுவாகத் திறந்தபடி கைப்பையை கொழுவிவிட்டு படுக்கை அறைக்குள் நுளைகிறாள். பிள்ளைக்கு நப்பீஸ் மாற்றுவதற்காக போடப்பட்டிருந்த மேசையின் அருகில் மாமனார் தெரிய, நான் வடிவா எல்லாம் மாற்றிவிட்டுத்தானே சென்றேன் என்று எண்ணியபடி “என்ன மாமா? கக்கா இருந்திட்டானே திரும்ப” என்றவள் குரல் கேட்டு அதிர்ச்சியுடன் மாமனார் திரும்ப முன்னரே மாமனாரின் அரை நிர்வாண நிலை இவளின் நெஞ்சைப் பதறவைக்க, பிள்ளையின் வாயிலிருந்து ஒழுகும் திரவமும் கண்ணில்பட, புரிந்தும் புரியாமலுமான அடுத்தநொடி “டேய்” .....என்றபடி பாய்ந்து சென்று மாமனாரை இழுத்து கீழே தள்ள, இவளைத் தள்ளிவிட்டு மாமனார் கதவை நோக்கி ஓடுகிறார். இவள் பாய்ந்து சென்று மீண்டும் ஆவேசத்துடன் கீழே விழுத்தி அருகில் இருந்த கதிரையை எடுத்து தன் பலம்கொண்டமட்டும் தாறுமாறாகத் தாக்குகிறாள்.
“டேய்” என்று தமக்கை கத்திய சத்ததில் என்னவோ எதோ என்று காரை பிரேக் பிடித்து நிறுத்திய தம்பி, அக்கா ஓக்கேயா?? என்று கேட்கத்தான் இவளுக்கு நிகழ் காலம் கண்ணில் தெரிகிறது.
யாரை மன்னித்தாலும் தன் கணவனை மன்னிக்கவே முடியாது. அன்றைக்கு அவள் போன் செய்து கணவன் வர அவனிடம் எல்லாம் சொன்னதும், கணவன் அவள் காலில் விழுந்து கெஞ்சியதும் காதுகளில் நாராசமாக இன்றும் கேட்கிறது.
"பிளீஸ் தாரணி. அப்பா செய்ததை வெளியில சொல்லிப்போடாதையும். எங்கட குடும்ப மானமே போயிடும். வேற ஏதும் சாட்டுச் சொல்லுவம்".
சீ என்று அவனை அன்று உதறியவள் தான்.
No comments:
Post a Comment