Wednesday, 29 July 2020

நினைவுகளின் அலைதல்

பேராசிரியர் அ . ராமசாமி - இந்தியா


ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ,இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும்,மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாது. அவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும் அர்த்தம் சுவாரசியமானது. அந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காமல்கூடப் போகலாம். காரணம் சூழல். இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவாக்குகின்றன  சூழல் என்பது கவிதை உருவான சூழலாகவும் வாசிப்பவரின் சூழலாகவும் இருக்கிறது.
 
வாசிக்கப்படும் கவிதைக்குள் செயல்படும் மொழிப்பயன்பாடு,உண்டாக்கப்படும் உருவகம் அல்லது படிமம் போன்றன அந்தக் கவிதையை நின்று நிதானமாக வாசிக்கவும் யோசிக்கவும் தூண்டும்.அப்படித் தூண்டக்கூடிய கவியின் கவிதைகள் கண்ணில் பட்டால்போதும் உடனடியாக வாசிக்க நினைப்பதே வாசக மனம். திரும்பத்திரும்ப வாசிக்க நேரும்போது, ஏற்கெனவே வாசித்த அதே கவியின் கவிதைகள் நினைவுக்கு வந்துவிட்டால், அந்தக் கவியின் பெயர் வாசிப்பவரின் மனதில் தங்கும் பெயராக ஆகிவிடும். அதன் மூலம் ஒருகவி வாசகர்களிடம் தனது பாணியைக் கடத்தியவராக ஆகிவிடுவார். தொடர்ந்து அவரை வாசிக்கும்போது வாசகர்களுக்குப் பிடித்த கவியாக அவர் மாறிவிடுவார். அப்போது அந்த வாசகரால், நமது மொழியின் முக்கிய கவிகளில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுவார்;சொல்லப்படுவார். தொடர்ச்சியான வாசிப்புகளைக் கருத்தாக முன்வைக்கும் திறனாய்வாளராக இருந்தால் கவிக்கு ஒரு பிம்பம் உருவாகிவிடும். நிவேதா உதயனின் இந்தக் கவிதைகளுக்குள் ஒருவர் திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்ளத்தூண்டும் தன்மைகளும், மனதில் தங்கிவிடத்துடிக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன. அந்தக் கூறுகள் எவையெனத் தேடிப்பார்க்கலாம்.
ஒருவர் தன்முன்னால் பரப்பப்படும் கவிதைகளை எப்படி வாசிப்பது என்ற கேள்வியைக் கேட்கும் ஒருவர்,  ஒரு கவியைச் சந்தித்தால், உங்களிடம் கவிதைகள் எவ்வாறு பிறக்கின்றன ? அல்லது உருவாகின்றன? என்று கேட்கக்கூடும். தான் எழுதி முடித்த ஒவ்வொரு கவிதையும் எப்படி உருவானது என்று சொல்லமுடியாமல் ஒரு கவி திணறவும்கூடும் ஆனால் கவிதையைத் தொடர்ந்து வாசித்து அர்த்தப்படுத்தும் கவிதை வாசகர் தன்னிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு விரிவான பதிலைத் தரவே செய்வார். வாசிக்கும் கவிதைக்குள் இருக்கும் பாத்திரத்தை/கவிதைசொல்லியைத் தேடிக் கண்டுபிடிப்பது வாசிப்பவரின் முதல்வேலை. அந்தத் தேடலில் கவிதைக்குள் அலைவது ஆண் தன்னிலையா? அல்லது பெண் தன்னிலையா? இரண்டுமற்ற பொதுத்தன்னிலையா? என்பதை  முதலில் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும். அதன்பிறகு அந்தச் சொல்லிகள் யாரோடு உரையாடுகிறார்கள் என்பதும், எவை பற்றிப் பேசுகிறார்கள் என்பதும் வாசகர்களுக்குப் பிடிபடத் தொடங்கிவிடும். ஆணென்றாலும் பெண்ணென்றாலும் முதலில் உடல், சமூக அடையாளங்களால் அர்த்தப்படுத்திக் கொள்வது நடக்கும்.அவ்விரண்டும் சேர்ந்து எழுதும் கவியின் தன்னிலைகளின் உளவியலைக் கட்டமைத்துக் கொடுக்கும். நிகழ்காலக் கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் இந்த எளிய சூத்திரத்தைப் பின்பற்றினால் போதும் எந்தவிதமான கவிதைகளையும் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். 


17350020_1328202143883074_7630200362623513370_o.jpg


கவி நிவேதா உதயனின் மொத்தக் கவிதைகள் என் முன்னால் பரப்பிக் கிடக்கின்றன.இப்போதுதான் அக்கவிதைகளை வாசிக்கிறேனா என்றால் நிச்சயம் இல்லை. அவரை,அவரது சில கவிதைகளை அவ்வப்போது முகநூலில் வாசித்திருக்கிறேன். அதற்கு முன்பு அவரது பதிவுகளை வாசித்திருக்கிறேன். அவர் விவரிக்கும் ஐரோப்பிய நிலவெளியில் நானும் இருந்தவன் என்பதால் அந்தப் பதிவுகள் என்னை ஈர்ப்பனவாக இருந்தன. அந்த பதிவுகள் வழியாக  அவரைப் பற்றிய சித்திரம் எனக்குள் உருவாகி இருக்கிறது. அந்தச் சித்திரத்தோடு இப்போது அவரது மொத்தக் கவிதையின் மொழிதல் முறையையும் அதற்குள் இருக்கும் கவியின் / கவிதை சொல்லியின் இருப்பையும் வாசிக்க முடிகிறது.அதன்வழியாக இந்தக் கவிதைத்தொகுப்பைப் பற்றிப் பேசமுடிகிறது.
நிவேதாவின் கவிதைமொழிதல் எளிமையான வடிவம் கொண்டது. தொடங்கும்போது சொல்பவர் யாரெனக் காட்டிக்கொள்ளக்கூடாது என நினைப்பது எளிய கவிதையின் எதிர்நிலை. ஆனால் நிவேதா அப்படி நினைக்கவில்லை. இவர்தான் இதைச் சொல்கிறார் அல்லது முன்வைக்கிறார் என்பதை வெளிப்படையாகக் காட்டியபடியே தொடங்கும் எளிமை. அந்த எளிமை, கவிதையை இசையின் ரூபமாக நினைக்கிறது.மொழியின் அடுக்குகள் வழியாக உருவாக்கப்படும் தாளலயத்துக்குள் கவிதை இருப்பதாக நம்பும் கவிமனம் அது.அந்த மனத்திற்குத் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சில எளிமையான கேள்விகளும், ஆச்சரியங்களும், குழப்பங்களும் இருக்கின்றன. அவற்றிற்கு விடைகளைத் தேடும் முயற்சியும் இருக்கிறது. இவ்விரண்டின் விளைவுகளால் உருவாகும் எண்ண ஓட்டங்களே அவரது கவிதைகள். எளிமையான கேள்விகளுக்குக் கிடைக்கும் எளிமையான பதில்கள் போதாது என்று நினைக்கும்போது எளிய கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன கவிதைகளில். இத்தொகுப்பில் பாதிக்கும் மேலான கவிதைகள் அத்தகைய கேள்விகளை எழுப்பிப் பதில் சொல்லும் மொழிதல் முறையையே கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு ‘எல்லை அற்ற மனம்’  என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை வாசித்துப் பார்க்கலாம்
புலன்களின் புரிதலற்ற பதுங்குதல்களில்
பிடிவாதமாய் பின்னி நிற்கும் படிநிலைகளின் பக்குவமற்ற பதங்கள்
பாகுபாடற்று என்றும்
பாழ்மனதைப் பலமிழக்கச் செய்து பரிகாரம் தேடித் தேடியே பரிவறுக்கச் செய்கின்றன நிதம்
என்பதான வரிகளை வாசிக்கும்போதும், ஊமைக் காயங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள
மனத்தின் அடங்கா மாயைகள்
வாழ்வின் நாட்கள் எங்கும்
மர்மங்கள் புரிந்திட முடியாது
மயக்கம் தந்தபடி இருக்கின்றன
 
உறவின் உயிர் நாடியை
உலுப்பிப் பார்ப்பினும்
உண்மை உணரமுடியாதபடி
ஊமைக் காயங்களை
காலம் முழுவதும் விதைப்பினும்
உணர்தலுக்கான வலுவை
மழுங்கச் செய்கின்றது மனது
என்பதான வரிகளை வாசிக்கும்போதும் உருவாகும் சித்திரம், தனது அகத்தைத் தேடும் ஒருவரின் சித்திரமே. தனது அகநிலையைத் தேடும் இத்தகைய கவிதைகளில் இருக்கும் அதே மனம்தான்
நான் மரமாக நீ காற்றாகி மனதின்வழி
நாதங்கள் கேட்க வைத்தாய்
நான் நிலமாக நீ நீராகி நிதம் எனை
நெக்குருகியே நெகிழவைத்தாய்
காற்றின் ஒலியாகி கார்கால மழையாகி
காணும் இடமெங்கும் என்மனவீட்டில்
எங்கும் உன் ஒளியாக ஒளிரவைத்தாய்
என இன்னொரு தன்னிலையோடு உறவாடுவதையும் வாசிக்க முடிகிறது. அத்தகைய இன்னொரு மனம், இன்னொரு தன்னிலை, இன்னொரு ஆளுமை என்பன நட்பாக, காதலாக, உறவாக, பகையாக என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் கவியின் மனம் இன்னொரு உயிரியோடு உறவாடும் மனமாகவே இருக்கிறது. மனிதர்கள் தவிர இயற்கையோ, வாழிடமோ, பிரபஞ்சத்தின் சிக்கல்களோ எல்லாம் நிவேதாவின் கவிதைப் பரப்பிற்குள் வரவில்லை. மனிதர்களை நேசித்தும், கேள்விகேட்டும், கோபித்தும், விளக்கம் சொல்லியும், அரவணைத்தும் செல்லும் அவரது கவி மனத்திற்கு  இன்னொரு வெளி ஒன்றும் இருக்கிறது. கவிதைக்குள் அலையும் அந்த மனம், தனது பால்ய நினைவுகளின் அலையும் மனம்.
பால்ய வயது நிலப்பரப்பையும், தோட்டவெளிகளையும் வீட்டையும் விட்டுப் பிரிந்து விலகிநிற்கும் மனம்திரும்பவும் தேடுகிறது. அந்த விலகலுக்கான காரணத்தை நேரடியாக அனுபவித்தறியாத அந்த மனத்திற்குக் காரணங்கள் தெரிந்திருந்தாலும் கவிதையாகச் சொல்லத்தெரியவில்லை.  தனது சின்ன வயது நினைவாக இருக்கும் அந்த நிலப்பரப்பு எப்படி இருக்கும்? என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிற ஒரு மனதைப் பல கவிதைகளில் வாசிக்க முடிகிறது.
கால்கள் புதையும் கனவுகளோடு
கண்விழித்த காட்சிகள் இன்னும்
பசுமை குலையாத பச்சை வயலாய்
பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன
என்கிறது ஓரிடத்தில். இன்னோரிடத்தில்
காரணங்கள் அற்று நானும்
காணவே முடியாதனவற்றை
காண்பதான மாயை சுமந்து
மீண்டுவரா நாட்களின் தகிப்பில்
மனதின் மகிழ்வு தொலைய
எந்நேரமும் விடுபட எண்ணிடும்
நூலிழை பற்றியே நிதமும்
எழுந்துவர எத்தணித்தபடியே
எதுவும் முடியாது காத்திருக்கிறேன்
என்று புலம்புகிறது. அலைவதாகவும் காத்திருப்பதாகவும் சொல்லும் அந்த மனத்திற்குரிய நபர் இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரால் புலம்பெயர்ந்தவரா? என்று தேடினால் அதற்கான ஆழமான பதிவுகள் எதையும் கவிதைக்குள் காணமுடியவில்லை. அதைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் எப்படிப்பதிவு செய்வது என்ற குழப்பம் இருக்கிறது. அந்த மனத்திற்குத் தனது சொந்த பூமியில் நடக்கும் போரும், போரினால் ஏற்படும் அழிவுகளும், மனிதர்கள் படும் துயரங்களும் தொடர்ச்சியான தகவல்களாய்க் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் கேள்விப்படும் சங்கதிகள் மட்டுமே. அவரது அனுபவங்களல்ல.
கேள்விப்படும் சங்கதிகளும் தகவல்களும் உருவாக்கும் மனக்கொதிப்பு கவியின் தவிப்பாக ஆகாமல், இரக்கமாக மாறித் தன்னிரக்க வெளிப்பாடுகளாக மாறியுள்ளன.  இந்தக் கவிதைக்குள் வெளிப்படும் அந்த மனத்தை நீங்கள் வாசிக்கும்போது எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
ஏனோ எம் மண்ணின் நினைவு
எப்போதும் எம்முடனே இருக்கின்றது
ஆனாலும் எந்தையர் எமக்காய் வாழ
ஏதுமற்று ஏதிலியாய் இருக்கின்றது
காய்ந்து போன காட்சிகள் மட்டும்
கனவுகளின் மீட்டல்களோடு
கந்தலாகிப் போன சுற்றங்களுடன்
காற்றில் மட்டுமே கேட்கும் கானமாய்
கைவிட்டுப் போன எம் கனவுகள் போல
எப்போதாவது வரும் ஏக்கங்கள் தாங்கி
நிலையான நினைவாகி நிலைத்துப் போனது
(நினைவுகளாய் வீடும் அயலும் )
தனது அகத்தை நோக்கிய கேள்விகளே ஆயினும், புறத்தை - சூழலை நோக்கிய கேள்விகளே ஆயினும், எல்லாமே எளிமையான கேள்விகள் தான். ஆழப்பதிந்து கிடக்கும் சொந்தத் தேசத்து நிலப்பரப்பு பற்றிய நினைவலைகளும்கூட நேரடியனுபவமற்ற எளிய ஞாபகங்கள் தான்.  நிவேதாவைப் போன்ற கவிகள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கவே செய்கின்றனர். எப்போதும் எளிய வாழ்க்கையை, எளிமையான மொழியால் சொல்லிவிடும் திறமைகொண்ட கவிகளுக்கும் ஒரு மொழிப் பரப்பில் இடம் இருக்கவே செய்கின்றன. எளிமையின் அழகை  ரசிக்க முடிந்தால், நிவேதா உதயனின் கவிதைகளை ரசிக்க முடியும். எளிமையான கேள்விகளுக்கான விடையை நீங்களே உருவாக்கிக்கொள்ள முடிந்தால் நிவேதாவின் கவிதைகள் உங்களுக்குக் கவிதையனுபவத்தையும் ருசியையும் உண்டாக்கும். ருசியை உருவாக்கிக் கடத்த அவர் பெரிதும் நம்பியிருப்பது ஒருவிதச் சந்தலயத்தை. ஆற்றிலிருந்து பிரிந்து வாய்க்கால் வழியாக ஓடும் நீரோட்டம் எழுப்பும் ஒலியலைகளைப்போல இந்தக் கவிதைக்குள் இருக்கும் சந்தலயம், மென்மையாக ஓடிக் கொண்டிருக்கிறது. லயத்தோடுகூடிய எளிய ஓட்டத்தை ரசிக்கும் விருப்பம் உள்ளவர்களுக்குத் தேவையான/உத்தரவாதமான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
 

கவி நிவேதா உதயனுக்கு வாழ்த்துக்கள்
 
மார்ச்,2017

No comments:

Post a Comment