Tuesday 31 March 2020

கிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை






25 Best Things to Do in Athens (Greece) - The Crazy Tourist



athens-greece-monastiraki-square-with-pe

 DSC_0166-5c756ffc46e0fb0001a5ef14.jpg

 Athens-Monastiraki-Square-Night.jpg

 a6.jpg

 Parthenon-Athens-Greece.jpg





 2018 ம் ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான  கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது.
ஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து  பதிவுசெய்தாகிவிட்டது.
இணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாகத் திரிவது ஆபத்து என்று போட்டிருந்தார்கள். மேலும் தேடியதில் விமான நிலையத்தில் இருந்து எதென்ஸ் செல்வதற்கு டாக்சியில் செல்வதற்கு அதிகமான பணம் வசூலிப்பார்கள். விமான நிலையத்துக்கு முன்னாலேயே தொடருந்துத் தரிப்பிடம் உள்ளது. அதில் செல்வது மலிவு என்று போட்டிருந்தார்கள்.
லண்டனில் இருந்து எதென்ஸ் செல்ல நான்கு மணி நேரம். இங்கு காலை எட்டுமணியளவில் புறப்பட்டு பகல் 12.30 க்கு அங்கு போய் நானும் கணவரும் இறங்கிவிட்டோம். வெளியே வந்து பார்த்தால் விமான நிலையம் சும்மா ஒரு கட்டடம் போல் நின்றுகொண்டிருந்தது.
தொடருந்து நிலையம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு அங்கேயே ஒரு எதென்சின் வரைபடத்தையும்  வாங்கிக்கொண்டு வெளியே வந்து காத்திருக்கிறோம். கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும் வரைபடத்தில்  பெயர்கள் எழுதப்பட்டிருந்தது நின்மதியாக இருந்தாலும் சரியான தொடருந்தைப் பிடித்துச் சரியானஇடத்துக்குப் போய்ச் சேர வேண்டுமே என்று மனதில் ஒரு படபடப்பு ஒட்டிக்கொண்டே இருந்தது. தொடருந்து வர இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. காவிருக்கைகள் இருக்கும் இடங்கள் எல்லாம் ஆட்கள் இருக்கின்றனர். வேறுவழியில்லாமல் ரெயின் வரும் வரை நிக்கத்தான் வேணும் என்கிறேன். நாலுமணித்தியாலம் இருந்து தானே வந்தனாங்கள் அரை மணித்தியாலம் நில்லன் என்று கூறிவிட்டு மனிசன் பிராக்குப் பார்க்க வேறுவழி யில்லாது  நானும் தண்டவாளத்தின் பலகைகளையாவது எண்ணிக்கொண்டிருப்போம் என்றால் அந்தத் தொடருந்துத் தடத்துக்கு பலகைகளைக் காணவில்லை. என்னப்பா இது இங்க பாருங்கோ பலகையளைக் காணேல்லை என்று நான் சொல்ல, எனக்கு உதைப்பற்றித் தெரியாது. என்னைக் கேட்காதை. வேறை ஏதும் டெக்னோலஜி பாவிச்சிருப்பான்கள் என்கிறார் மனிசன்.
தொடருந்து வருவதாக அறிவிக்க, இது சரியான தொடருந்துதானா என்ற சந்தேகம் எழ, பக்கத்தில நிக்கிறவனிட்டைக் கேளுங்கப்பா என்கிறேன் மனிசனிடம். மனிசன் கேட்க அவனுக்கோ ஆங்கிலம் விளங்கவில்லை. கொஞ்சம் தள்ளி இன்னொரு பெண்ணும் நிற்கிறார். அவளிடம் கேளுங்கோ என்கிறேன். இந்த நாட்டில தெரியாத ஆட்களிடம் பெண்கள் கதைப்பார்களோ தெரியாது. எதற்கும் நீ போய்க் கேள் என்கிறார் மனிசன். நான் போய் கேட்டதும் அவளுக்கும் விளங்கவில்லை. தூரத்தே தொடருந்து வருவது தெரிகிறது. நான் வரைபடத்தில் இறங்கவேண்டிய இடத்தைக் காட்டி தொடருந்தையும் கை காட்டுகிறேன். அவளுக்கு விளங்கியதோ இல்லையோ. ஓம் என்று தலையை இங்குமங்கும் ஆட்டுகிறாள்.
சரி தொடருந்தை விட ஏலாது. முதல்ல ஏறுவம். பிறகு உள்ள ஆரிட்டையாலும் கேட்பம் என்கிறேன். இதுவாய்த் தான் இருக்கும். சும்மா பயந்து என்னை டென்ஷன் ஆக்காதே என்றபின் நான் எதுவும் கதைக்கவில்லை. தொடருந்து வந்து நின்றதும் பார்த்தால் நிறையச் சனம். இருக்கவும் இடம் கிடைக்காது போல என்று விசனத்துடன் நிக்க, நிறையப்பேர் எதென்சில் இறங்க மனிசன் விரைவாக ஏறி எனக்கும் தனக்குமாக இடம் பிடிச்சிட்டார்.
சரியாக ஒரு மணி நேர பயணத்தில் எதென்ஸ் போய் இறங்கியாச்சு. வரை படத்தைப் பார்த்துப் போனால் இடம் பிடிபடவில்லை. வீதிகளை பார்க்க பாழடைந்துபோய் பலகாலம் பயன்படுத்தாத மூடிய கடைகளும் புழுதியான வீதிகளும்.... என்னடா இது உதவாத இடத்தில் தங்குமிடத்தை எடுத்துவிட்டோமோ என்று புழுக்கத்துடன் போனால் வீதியின் மறுபுறம் நல்ல சுத்தமாக இருக்க, மனதில் ஒரு நின்மதி ஏற்பட்டது. வரவேற்பிடத்தில் போய் எம் பதிவைச் செய்துவிட்டு லிப்ரில் ஏழாம் மாடியை அடைந்து எமது அறையைத் திறந்து குளியலறையையும் திறந்துபார்த்தபின் தான் நின்மதியானது மனது. காலநிலையும் 20 பாகை செல்சியஸ் என்பது வருமுதலே அறிந்ததுதான் எனினும் இதமான காலநிலை மனத்துக்குஒரு மகிழ்வைத் தர பால்கனியில் போய் நின்று பார்க்க மேலே உயரத்தில் ACROPOLIS OF ATHENS என்னும் இடிபாடுகளுடைய கோவில் தெரிகிறது. அதை நாளை பார்க்கப் போகிறோம் என்றதுமே மனதில் ஒருவித பரவசம் வந்து சேர்க்கிறது.
விமானத்தில் தந்த உணவுக்குப் பின்னர் எதுவும் உண்ணாததால் பசிக்கிறது. நேரம் மாலை நான்குமணி. கீழே சென்று உணவுவிடுதியைப் பற்றிக் கேட்க, ஆறு மணிக்குத்தான் திறப்பார்கள். ஒருவருக்குப் 10 யூரோஸ் என்கிறாள் வரவேற்புப் பெண். இனி வெளியே சென்று உணவகம் தேடி உண்பதிலும் இங்கேயே உண்பது என முடிவெடுத்து, அங்கு பார்க்கும் இடங்கள்பற்றி விசாரிக்க இன்னொரு தெளிவான வரைபடத்தைத் தருகிறாள் அவள். ஐந்து நிமிடம் நடந்து போனால் பஸ் தரிப்பிடம் வரும் அங்கே மஞ்சள் உடையுடன் ஒருவர் நிற்பார். அவர் உதவுவார் என்கிறாள்.
மேலே அறைக்குச் சென்று ஒருமணிநேரம் படுத்திருந்துவிட்டு எட்டாம் மாடியில் உள்ள உணவகத்துக்குச் சென்றால் நாம் மட்டும் தான் அங்கே. விதவிதமான சலாட்டுகள், ஒலிவ் பழங்கள், பழங்கள் என்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அன்றைய இரவு முதன்மை உணவு மாட்டிறைச்சியும் உருளைக்கிழங்கும் அல்லது கோழியும் உருளைக்கிழங்கும் அத்தோடு Spaghetti உம் என்று கூற நாம் மாட்டைத் தெரிவுசெய்துவிட்டு சலாட், ஒலிவ் போன்றவற்றை எடுத்துவந்து உண்ணவாரம்பிக்கிறோம்.

2



பிரதான உணவு பெரிதாகச் சூடாக இல்லாமல் இருக்க திருப்பி சூடாக்கி எடுத்துவரச் சொல்வோமா என்று எண்ணினாலும் சரியான பசி காரணமாக நான் உண்ணத்தொடங்க, கணவர் பொறுப்பானவரைக் கூப்பிட்டு உணவு சூடில்லை என்கிறார். அவன் மன்னிக்கவும் என்றுவிட்டு கணவனின் தட்டை எடுத்துப் போக நான் பரவாயில்லை என்று விட்டு உண்கிறேன்.
10 யூரோசுக்கு உணவு பரவாயில்லை. ஆட்களே இல்லை. அப்பிடியிருந்தும் இப்பிடி ஆறிய உணவைக் கொண்டு வருகிறான் எனப் புறுபுறுத்தபடி மனிசன் இருக்க சூடாக்கிய உணவை கொண்டுவந்து வைக்கிறான் அவன். இனிமேல் இங்க சாப்பிடுறேல்லை என்று மனிசன் சொல்ல காலை உணவுக்கும் இங்குதான் என்கிறேன் நான். பார்ப்பம். நாளைக்கு விடியச் சாப்பிட்டுவிட்டு சரியில்லை என்றால் கான்சல் பண்ணுறதுதானே என்கிறார் மனிசன். காலை உணவு பற்றி விசாரிக்க 7 மணிக்கு உணவகம் திறப்பார்கள் என்றான் அவன்.
மணி  ஏழேகால் ஆகிவிட்டுது. இருட்டும் பட்டிட்டுது. இனி வெளியில போகவேண்டாம்.நாளைக்கு வெள்ளண எழும்பிச் சாப்பிட்டிட்டு உடனே இடங்களைப் பார்க்கக் கிளம்பவேனும் என்கிறார். என்னப்பா விடுமுறையிலாவது கொஞ்ச நேரம் படுக்க விடுங்கோவன் என்கிறேன். நித்திரை கொள்ளவே காசைச் சிலவழிச்சு வந்தனி? நிக்கிறது பத்தே பத்து நாள். அதுக்குள்ளே பாக்கக் கூடியதை பாத்திட்டு வீட்டை போய் நித்திரையைக் கொள்ளு என்று கூறிவிட்டுப் போக எரிச்சலோடு நான் பின்னால் போகிறேன்.
கன நாட்களுக்குப் பிறகு பிள்ளை குட்டியள் இல்லாமல் தனியா வந்திருக்கிறம் என்ன என்று எதோ வீட்டில தனிமையே கிடைக்காத கணக்கா மனிசன் சொல்ல தனியா வந்து மாட்டுப்பட்டாச்சே மனிசனிட்டை என்று துணுக்குறுகிறது மனம். இரவு உடைக்கு மாறி அடுத்தநாள் எங்கெங்கெல்லாம் போகவேண்டும் என்று மனிசன் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு நித்திரை கண்ணைச் சுற்றுகிறது. என்னண்டடியப்பா படுத்த உடன உனக்குமட்டும் நித்திரை வருது? நீ கூப்பிட்டாலும் வரமாட்டாய். நான் வாறன் என்றபடி மனிசன் என்னருகில் வந்தால் கட்டில்களுக்கிடையில ஒரு பத்து அங்குலத்துக்கு இடைவெளி.
நான் ஒரே கட்டில் தானே புக் பண்ணின்னான். இதென்ன இந்தளவு இடைவெளி என்று மனிசன் டென்ஷனாக நான் சிரிக்கிறேன். மனுசனுக்கு கோவம் வந்து உடனே ரிசெப்சனுக்கு போன் செய்யிறார். நான் உடனே போனைக் கட் செய்துபோட்டு இப்ப இருட்டுக்குள்ள அவங்கள் ஒண்டும் செய்ய மாட்டாங்கள். பேசாமல் படுங்கோ என்றுவிட்டு AC ஐ போட்டுவிட்டு குயிலெட்டால் போர்த்துக்கொண்டு படுக்கிறேன்.  
நல்ல தூக்கத்தில் யாரோ உலுப்ப ... கண் திறந்து பார்த்து விட்டு எத்தினை மணி என்கிறேன். 6.30 எழும்பு. போய் குளி என்று மனிசன் விரட்ட, ஏழுமணிக்கு எழும்பினால் காணும் தானே என்று தலையைப் போர்வையால் மூட மனிசன் கால் பக்கம் நின்று போர்வையை வில்லன் போல் இழுக்கிறார். பின்னேரம் வந்து வடிவாய் படு என்கிறார் வில்லன். சரி இனி எப்பிடியும் என்னை படுக்கவே விடாது என்று தெரிய  எழுந்து சென்று குளித்துவிட்டு வர மனிசன் வெளிக்கிட்டுத் தயாராய் நிக்கிறார்.
நாங்கள் இருந்ததுக்கு மேல் மாடியில் தான் உணவகம் என்பதனால் கொஞ்ச நேரம் பொறுத்துப் போவம் என்கிறேன். எனக்கு உடன கோப்பி குடிக்க வேணும். எழும்பி எவ்வளவு நேரம் ஆச்சு என்றபடி மனிசன் எழுந்திருக்க நானும் கதவைப் பூட்டிவிட்டுப் போகிறேன் பின்னால்.
அங்கு சென்றால் மூன்றுபேர் எமக்குமுன்னரே வந்து காத்திருக்க நாம் போன பின்னரே கதவைத் திறக்கின்றனர்.
உணவு வகைகள் தாராளமாக விதவிதமாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. பார்க்கவே பசி எடுக்கிறது. தட்டுக்களில் வேண்டிய உணவுகளை எடுத்து  வைத்துக்கொண்டு கோப்பியையும் ஊற்றிக்கொண்டு மேசையில்சென்று அமர்கிறோம். அதிகமாக எமக்குத்தெரிந்த பாண் வகை, சீஸ் வகை, சலாமி வகைகள், அவித்த முட்டை, ஆம்லெட், ஒலிவ்ஸ் என்று விதம் விதமாக இருந்தாலும் வித்தியாசமான உணவு வகைகளைக் காணாமல் இவைதானா என மனம் எண்ணுகின்றது. நிறைய பழ வற்றல்கள், கேக் வகைகள் சில மட்டும் புதியனவாக இருக்கின்றன.  
உணவு உண்டபடியே கண்ணாடிக்கு கதவுகள் யன்னல்களூடே வெளியே பார்க்க வெள்ளைக் கற்களை அடுக்கியது போல் கட்டடங்கள் மட்டுமே தெரிகின்றன. ஒன்றிரண்டு சிறிய மரங்களைத் தவிர பெரிய மரங்களையே காணவில்லை.
 உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்து கைப்பை தொப்பி கண்ணாடி என்பவற்றை எடுத்துக்கொண்டு கீழே வருகிறோம். அழகிய இளம்பெண் கீழே ரிசெப்ஷனில் நிக்கிறாள். இடங்களைச் சுற்றிக்காட்டும் பஸ் தரிப்பிடத்துக்கு எப்படிப் போகவேண்டும் என்று கேட்கிறேன். இரண்டு பக்கத்தாலும் போகலாம் என்று அவள் சிரித்தபடி கூறுகிறாள். உடனே என் கணவர் எமக்கு நீ வேறு அறை தா என்கிறார். ஏன் என்ன பிரச்சனையென்று அவள் கேட்க நாங்கள் இருவரும் கணவன் மனைவி.ஒரே கட்டில் இருக்கும் அறைதான் நான் புக் செய்தது. எமது அறையில் இரண்டு கட்டில்கள் இருக்கின்றன என்கிறார். அறைகள் எதுவுமே காலியாக இல்லை. என்கிறாள் அவள். அப்பிடி என்றால் நாங்கள் வேறு ஹோட்டல் பார்க்கிறோம் என்கிறார். எனக்கோ கூச்சமாக இருக்கிறது. ஏனப்பா இப்பிடிக் கதைக்கிறியள். விசரே உங்களுக்கு. உந்தக் கட்டிலுக்காக இனி சூட்கேஸை இழுத்துக்கொண்டு அலையப் போறியளோஎன்று திட்டுகிறேன். நீ பேசாமல் இரு. அவள் ஏதும் செய்வாள் என்று மனிசன் சொல்லி வாய் மூட முதல் " நீங்கள் வெளியே போய்விட்டு வரும்போது உங்கள் கட்டிலை சரியாக்கி வைக்கிறோம்" என்கிறாள் அப்பெண்.

பாத்தியா நாங்கள் பேசாமல் இருந்தால் அவையும் நல்லா ஏமாற்றுவினம். நான் கனிமூன் மூட்டோட வந்திருக்கிறன். சும்மா விடுவனே என்று அசட்டுச் சிரிப்புச் சிரிக்க எரிச்சல் பற்றிக்கொண்டு வருகிறது. பொல்லுப் பிடிக்கிற வயதிலும் உந்த ஆம்பிளையளுக்குக் கனிமூன் கேட்கும். வாயை மூடிக்கொண்டு வாங்கோ போவம் என்று நான் முன்னால் நடக்கிறேன்.
மீண்டும் முதல்நாள் வந்த வீதி புழுதி படிந்து சிறுநீர் கழித்த நாற்றத்தோடு பார்க்க அருவருப்பாக இருக்க அடுத்த வீதியைத் தெரிவு செய்து அவ்வீதியால் செல்கிறோம்.ஒரு பத்துநிமிடம் நடக்க ஒரு நாற்சந்தியுடன் கூடிய சனநடமாட்டத்துடன்  வாகனங்கள் செல்லும் வீதி தெரிகிறது. அங்கே சென்று தேடினால் ஒரு பஸ்  தரிப்பிடத்தில் மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் அந்தந்த நிற பஸ்களுடன் விளம்பரம் தெரிய அதைநோக்கிப் போக அதற்கு கீழே மஞ்சள் நிற உடையுடன் ஒருபெண் நாங்கள் வைத்திருப்பது போல் வரைபடங்கள் வைத்தபடி நிற்கிறாள்.
அவளிடம் போகவே  அவள் எமக்கு இந்த பஸ் நாங்கள் பார்க்கவேண்டிய இடங்களுக்கு எல்லாம் போகும். இரண்டு நாட்கள் முழுவதும் நீங்கள் இதில் பயணம் செய்யலாம். விரும்பிய இடத்தில் இறங்கிவிரும்பிய இடத்தில் ஏறலாம். காலை எட்டரை தொடங்கி மாலை ஐந்தரை வரை பஸ் ஓடும். ஒருவருக்கு இருப்பது யூரோக்கள் என்கிறாள். நாற்பது யூரோக்களைக் கொடுத்துவிட்டு பஸ்ஸுக்காகக் காத்திருக்க அரை மணி நேரத்தில் பஸ் வருகிறது. மேலே திறந்தபடியான சுற்றுலா பஸ்.
நானும் கணவரும் முன்னதாக ஏற முற்பட ஒரு பன்னிரண்டு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுவன் எம்மை இடித்துக்கொண்டு முதலில் ஏறுகிறான். அவனுக்குப் பின்னால் நாம் வேகமாக ஏறி முன் இருக்கை ஒன்றுக்குப் போக அவன் காலை நீட்டி எம்மைப் போக விடாமல் மறித்தபடி ஏதோ மொழியில் சொல்கிறான். அவன் இடம் பிடிக்கத்தான் ஓடி வந்திருக்கிறான் என்றபடி இரண்டாவது வரிசையில் என் கணவர் இருக்கப் போக அங்கும் இருக்க வேண்டாம் எனக் கைகளால் காட்டுகிறான்.
அவனின் முகத்துக்கு நேரே கையை நீட்டிப் போடா என்றுவிட்டு மனிசன் சீற்றில் இருக்க நானும் இருக்கிறேன். லண்டனில எண்டால் நான் முன் சீற்றிலயே இருந்திருப்பன். இதுதெரியாத ஊர் எண்டபடியா அடக்க ஒடுக்கமா வாயே திறக்காமல் இருந்தன். நாம் இருந்த கையோடு ஒரு எட்டுப் பேர் கொண்ட கும்பல் மேலே வந்து பொடியன் பிடித்த இடங்களிலும் எமக்கு எதிர்ப்பக்கத்தில் உள்ள இருக்கைகளில் இருக்க பெடியன் எம்மைக் காட்டி எதோ சொல்ல அவர்களும் ஏதோ சொல்லிவிட்டு அமர்கின்றனர். ஐந்து நிமிடங்களில் பஸ் வெளிக்கிடுகின்றது. வீதியின் இரு மருங்கிலும் தோடை மரங்கள் அழகுக்காக நடப்பட்டுக் காய்த்துக் குலுங்குவது  பார்க்க அழகாக இருக்கிறது.

3


பேருந்து இரண்டு மூன்று இடங்களில் நின்றும் நாம் இறங்கவில்லை.முதலில் அக்றோபொலிஸ் என்னும் மலையில் எதெனா என்னும் பெண் தெய்வத்துக்காக கடத்தப்பட்ட கோவிலைத்தான் முதலில் பார்க்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். எம்மைக் கொண்டுபோய் அந்த மலையின் அடிவாரத்தில் ஓரிடத்தில் இறக்கினார்கள். அனைத்து வாகனங்களும் அதற்கும் அங்கால் போகாது. நாம் சென்ற நேரம் விடுமுறையைக் கழிக்க எக்கச்சக்கமான  சனங்கள் வந்தும் போய்க்கொண்டும் இருந்தார்கள். மேலே சென்று கோயிலைப் பார்ப்பதற்கு ஒருவருக்கு 10 யூரோக்கள். கடும் ஏற்றமாக இல்லாமல் ஒரு பாதையும், ஒற்றையடிப் பாதை போன்று ஒரு பாதாயும் இருக்க நாம் ஆடிப்பாடி சீரான பாதையால் நடந்து சென்றோம்.
ஒரு ஐந்து பாகை குறைவாக இருந்தாலே குளிர்வதுபோல் இருந்திருக்கும. அன்றைய வெப்பநிலை 19 O செல்ஸியஸ் என்பதனால் எந்தவித சலிப்பும் இன்றி மகிழ்வாக இருந்தது. இடையேயும் சிறு கட்டட இடிபாட்டுடன் கூடிய பிரமாண்டமான மதில்கள் பார்ப்பதற்கு ஆச்சரியத்தைத் தந்தன.
 

 



 
பெருமரங்கள் என்று சொல்வதற்கு எதுவுமே காணப்படவில்லை. இடையிடையே புதிதாக நடப்பட்ட சில மரங்களும் ஒலிவ் மரங்களும் காணப்பட்டன. உச்சியில் ஏறினால் பிரமாண்டமான கோயில் ஒன்று இடிபாடுகளோடு காணப்பட்டாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதனால் வாய் பிளந்து பலரும் அதை பார்ப்பதுபோல் நாமும் சுற்றிவந்து பார்த்துப் பரவசமடைந்தோம்.
பல பாரந்தூக்கிகளை வைத்து இடிபாடுகளை புனரமைத்துக்கொண்டிருந்தார்கள் பலர். ஒரே வெள்ளை நிறக்  கற்களில் பலவற்றை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி செதுக்கிய உயரமான தூண்கள் பல சிதறித் துண்டு துண்டாகி பரவலாய் விழுந்து கிடந்தன. புதைந்து போய்க் கிடந்தவற்றையும் எடுத்துக் பொருத்திக் கொண்டிருந்தார்கள். பார்க்கவே எனக்கு களைப்பாக இருந்தது. ஏனெனில் அத்தனையையும் பொருத்தி முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும்.
எமது கட்டடக்கலைக்கும் சிற்பங்களும் எவையும் ஈடாகமுடியாதுதான் எனினும் அவர்களின் கட்டடக்கலையையும் சாதாரணமான ஒன்றல்ல என்று புரிந்தது.  அவற்றின் பிரமாண்டம் மலைக்கவைத்தது. இதனை பெருங்கற்களை  இந்த மலையில் எடுத்து வந்து இத்தனை பெரிய கோவிலைக் கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்.? எத்தனை பேரை வேலை வாங்கியிருப்பார்கள்.  
 


 
இடையில் நின்று பார்த்தபோது கீழே இந்த அரங்கு தெரிந்தது.
 




 
கீழே அக்றோபொலிஸ் பற்றி எழுதியிருப்பவர் திரு வாசுதேவன். நான் கிரேக்கத்தின் படங்களைப் போட்ட போது அவர் என் முகநூலில் எழுதியதை இதில் இணைக்கிறேன்.
ஐரோப்பாவில் முதன் முதலாக நிறுவப்பட்ட பிரமாண்டமான நகரம் எதென்ஸ் ஆகத்தான் இருக்க முடியும். எதென்ஸில் தான் முதலில் ஜனநாயகம் பிறந்தது. பெரிக்கிளீஸ் தான் எதென்ஸ் நகரின் காரணகர்த்தா. எதென்ஸ் நகரும் அதன் மக்களும் பெரிக்கிளீஸின் நிர்வாகத்தில் செழிப்பை அனுபவித்தார்கள். பெரிக்கிளீஸால் எல்லோருக்கும் பல உரிமைகள் வழங்கப்பட்டன. சிற்றரசுகளாகப் பரிமாணம் கொண்டிருந்த கிரேக்கத்தில் பெரிகிளீஸின் இராணு நிர்வாகமே பாதுகாப்பு வழங்கியது. இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக மற்றைய சிற்றரசுகளிமிருந்து பெறப்பட்ட வரியை முதலாக்கி பெரிக்கிளீஸ் பாரிய கடற்படையையும் உருவாக்கினான். பாரிய கட்டுமானங்களைச் செய்தான். ஏதென்ஸ் நகரத்தைச் சுற்றி பாரிய பாதுகாப்பு மதிலைக்க கட்டினான்.
அக்றோபொலிஸ் மலைப்பீடத்தில் எதெனா தேவதைக்கு உலமே வியக்கும் வண்ணம் ஆலயம் கட்டினான். பின்னால், இரண்டாயிரம் வருடங்கள் கடந்தும், டாவின்சியும்அக்கட்டடக்கலையை விதந்துரைத்தான்.



வருடத்திற்கொருமுறை மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவனாக இருபத்தொன்பது தடவை தெரிவு செய்யப்பட்டான். அத்தனை செல்வாக்குள்ள தலைவனாக விளங்கினான் பெரிக்கிளீஸ். புத்திஜிவிகளுக்கு பாரிய உதவிகளை வழங்கினான். அவர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டான். எதென்ஸ் நகரை விஸ்தரிந்து புதிய நகரங்களை உருவாக்கினான்.
*
ஆனால், எதெனிய அரசியல்வாதிகள் அவனில் பாரிய பொறாமை கொண்டிருந்தார்கள். பெரிக்கிளீஸின் நெருங்கிய நண்பர்கள் சிலரைச் சதியால் கொன்றார்கள். ஸ்பாட்டா சிற்றரசு தொடர்ச்சியாக எதென்ஸ் படைகளுக்கு அஞ்சிய வண்ணமிருந்தது. இருப்பினும் ஸ்பாட்டா அரசு தரைப்படையில் மிகுந்த பலத்தைக் கொண்டிருந்தது. கடல்படையில் மிகவும் பலவீனமாக இருந்தது. ஸ்பாட்டா எதென்ஸ் க்கு எதிராகப் போர் தொடுத்தபோது பெரிக்கிளீஸீன் படைகள் அவற்றைத் தோற்கடித்தன. ஒரே வருடத்தில் பத்துத் தடவைகள் போர்தொடுத்தன. எதென்ஸ் நகரைத் தோற்கடிக்க முடியவில்லை
*
இருப்பினும் -430 ல் பெருநோயொன்று எதென்ஸ் நகரைத்தாக்கியது. எதென்ஸ் நகர அரசியல்வாதிகள் பெரிக்கிளீஸின் நடத்தை காரணமாகவே அவ்வாறு நோய் உருவாகியது என்று குற்றம் சுமத்தினார்கள். எது எப்படியிருப்பினும் பெரிகிளீஸ் அந்நோயாலேயா மாண்டான். எதென்ஸ் நகரம் எதிரிகளின் கைகளில் வீழ்ந்து இழிவடைந்தது.
*
எவ்வாறோவெல்லாம் மாறியது. தேவதை அத்தெனாவின் ஆலயம் பின்னொருகால் கிறிஸ்தவ தேவாலயமாகியது. பின்னர் ஒஸ்மானியர்கள் அதை கைப்பற்றியபோது அது பள்ளிவாசலாக இருந்தது. வெனிசியர்கள் அதைத் தாக்கியழித்தார்கள். சரிந்தது.
*
இன்னமும் அக்ரோபொலிஸ் குன்றின் முகட்டில் நிமிர்ந்து நிற்கும் எதெனா தேவதையின் ஆலயத்தின் உயர்ந்த தூண்கள் பெரிக்கிளீஸின் வெற்றியின் சின்னம்.
*
பெரிக்கிளீசுகள் கிரேக்கத்தில் மாத்திரம் முளைப்பதில்லை. அவர்கள் கிரேக்கத்தில் மாத்திரம் வீழ்வதில்லை. பெரிக்கிளீசுகளை நான் நேசிக்கிறேன். எதென்ஸ் நகரம் என்னை அழைக்கிறது - 22


4


கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மேலே சுற்றிவிட்டு கீழே வந்தால் பயங்கரத் தாகம்.ஒரே ஒரு சிறிய கடை தான் அங்கு. சரியான விலை. ஆனாலும் வேறு வழியில்லை என்பதனால் அங்கே வாங்கிக் குடித்துவிட்டு ஏதாவது உண்ணலாமா என்று பார்த்தால் பெரிதாக எதுவும் இருக்கவும் இல்லை. சரி ஒரு உணவகத்தைத் தேடிப் பிடிக்கும்வரை உண்ணலாம் என ஒரு பிஸ்கற்றை வாங்கி வந்து உண்டுகொண்டே கீழே நடந்துவர நாம் செல்ல வேண்டிய பஸ் போய்க்கொண்டு இருக்கிறது.
அங்கே நின்ற மஞ்சள் உடையணிந்த பெண்ணை கேட்க ஒரு பத்து நிமிடத்தில் அடுத்த பஸ் வரும் என்றாள். காலோ சரியான நோவெடுக்க இருப்பதற்கான இருக்கைகள் பக்கத்தில் எங்கும் காணவில்லை. சற்றுத் தூரத்தில் சீமெந்து இருக்கைகள் தெரிய அங்கே போய் இருப்பமோ என்று நான் கேட்கிறேன். சரியென்று போய் இருந்து கையில் வைத்திருந்த மிச்ச யூஸையும் குடித்து மிகுதி பிஸ்கற்றையும் சாப்பிட கொஞ்சம் களைப்பு அடங்குகிறது.
மத்தியானம் எங்கேயப்பா சாப்பிடுவம் என்று கேட்க, இப்ப தானே பிஸ்கற் சாப்பிட்டு முடிச்சனி. அதுக்குள்ள சாப்பாட்டுக் கதை.  கொஞ்சம் வயித்தைக் காயப்போடன். இன்னும் ஒரு இடத்தைப் பார்த்திட்டுச் சாப்பிடுவம். பட்டினி கிடந்தது பழக்கவேணும் எண்டு மனிசன் ஆரம்பிக்க, ஐயோ கடவுளே உது ஒவ்வொருநாளும் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு. கொலிடே வந்த இடத்திலயாவது நின்மதியா சாப்பிட விடுங்கப்பா என்றவுடன் மனிசன் வேறெதுவும் சொல்லாமல் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். கொஞ்சம் தள்ளி நிறைய மரங்கள் தெரிகின்றன. நான் மரங்களைப் பார்த்துவிட்டு வாறன். பஸ் வந்தால் கூப்பிடுங்கோ என்றுவிட்டு நான் சிறிது தள்ளிப் போய் பார்க்கிறேன். நிறைய மரங்களும் நடைபாதையும் கீழ்நோக்கிப் போகுது. உதில் நடந்து போய்ப் பார்த்தால் என்ன என்று எண்ணிக்கொண்டிருக்க, எங்கட பஸ் வந்திட்டுது ஓடிவா என்றபடி மனிசன் ஓடுறார். போய் எனக்கும் இடம் பிடியுங்கோ என்றபடி நான் பின்னால் நடக்கிறன்.
ஓடிப்போன மனிசனைப் பார்த்தா பஸ்ஸில ஏறாமல் கெதியா வரச்சொல்லி எனக்கு கை காட்டிக்கொண்டு இருக்கிறார். ஏன் இந்த எளிய மனிசன் ஏறாமல் நிக்கிது. இருக்க இடம் கிடைக்காமல் இருக்கப்போகுது என்றபடி நான் போய் சேர்ந்தால், நீ டிக்கற்றை வைத்துக்கொண்டு என்னை பஸ்ஸில ஏறு எண்டால் விடுவாங்களே என்றபடி மனுசனும் நானும் பஸ்ஸில் ஏறினால் எல்லா சீற்ரும் நிறைஞ்சு போய் கிடக்கு. வேறு வழியில்லாமல் கம்பியைப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறன். ஒரு பத்து நிமிடம் பஸ் ஓடியபின் Syntagma square என்னும் இடம் வந்ததும் சனக்கூட்டம் அதிகமாக இறங்க, இங்கே இறங்கி என்ன என்று பார்ப்போமா என்றேன். சரி என்று கூற இருவரும் இறங்கி நடந்தால் அங்கும் திருவிழா போன்று கூட்டம். பல பெரிய விற்பனை நிலையங்கள், உணவகங்கள் என்பனவும் அங்கேயிருந்தன. இங்கேயே சாப்பிட்டுவிட்டு மிகுதியைப் பார்ப்போம் என்று கூற இன்னும் கொஞ்சம் நடந்து பார்ப்போம். ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று கூறியபடி மனிசன் செல்ல நானும் செல்லவேண்டியதாகிவிட்டது. தூரத்தில் ஒரு அழகிய கட்டடம் தெரிகிறது. ஏதென்ஸின் பழைய பாராளுமன்றம் என்று மப்பில் போட்டிருக்கு. லண்டனில் Buckingham palace க்கு முன்னால் நிற்கும் இருவர்போல் இங்கும் இருவர் காவலர் போல் நிற்கின்றனர். அதில் நின்று படத்தை எடுத்துவிட்டு தொடர்ந்து எதிர்ப்புறம் உள்ள வீதியில் நடக்கிறோம்.

ஒரு சைனீஸ் உணவகத்தைக் கண்டதும் இங்கு மத்திய உணவை உண்போமா என்று கேட்டுவிட்டு நானே வேண்டாம் என்றேன். ஏனெனில் ஒரு ஐம்பதுபேர் இருக்கக்கூடிய பெரிய உணவகத்தில் ஒருவரைக்கூடக் காணவில்லை. அதனால் அதைக் கடந்து வேறு சில உணவகங்களை பார்த்துக்கொண்டு சென்றால் உணவுகள் எப்படி இருக்குமோ என்ற யோசனைவேறு. அடுத்த வீதிக்குச் சென்றால் பல சிறிய உணவகங்கள் வீதியோரமாக் இருக்க இளம் பெண்கள் நின்று போவோர் வருவோரை தமது உணவகத்துக்கு வரும்படிஅழைத்துக்கொண்டு நிற்க இரண்டு மூன்றுபேரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக அழைத்த பெண்ணின் சிரிப்பு எனக்குப் பிடித்துவிட அங்கு உண்ணலாம் என்றேன்.
சரி என்று போனால் அங்கு ஒரு மேசையில் நான்கு கதிரைகளும் இன்னொரு சிறிய மேசையில் இரண்டு கதிரைகளும் இருக்க, அந்தப் பெண் எம்மைச் சிறிய மேசையில் அமரும்படி கூற நானும் கணவரும் எதிர் எதிராய் அமர்கிறோம். சூரியவெளிச்சம் என் முகத்தில் அடிக்கிறது. வெய்யிலாக இருக்கிறது அங்கு போய் இருக்கலாமா என்று அப்பெண்ணைக் கேட்க அது நான்குபேர் இருப்பது என்று கூறிவிட்டு நிற்கிறாள்.
நான் அந்தப்பக்கம் வாறன். நீ இங்கே வா என்கிறார் கணவர்.உங்களுக்கு மட்டும் வெய்யில் அடிக்காதோ என்றுவிட்டு எனக்கு இதிலிருப்பதில் விருப்பம் இல்லை. நாம் வேறு கடைக்குப் போகிறோம் என்றுவிட்டு இன்னும் நான்கு கடைகள் தள்ளி ஓர் கடையுள் செல்கிறோம். அங்கும் எமக்குக் காட்டிய மேசைக்கு அருகில் சிகரெட் பிடித்தபடி இருவர் இருக்கின்றனர். எனக்கு அதில் இருக்க முடியாது வேறு இடம் காட்டு என்கிறேன்.  அவள் வேறு இடத்தைக் காட்ட அதில் அமர்கிறேன். ஆனாலும் எனக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை.
அவள் மெனு காட்டைக் கொண்டுவந்து தர அதில் இறைச்சி வகைகளே அதிகம் இருக்கின்றன. குடிப்பதற்கு கோலா ஓடர் செய்துவிட்டு பார்த்தால் நெருப்பில் வாட்டிய பன்றி, ஆடு,கோழி மூன்றும் கலந்த உணவு ஒன்று, சலாட், அவித்த உருளைக்கிழங்கு இத்தனையும் 25 யூரோஸ் இருவருக்கு என்று இருக்க அதை ஓடர் செய்துவிட்டுக் காத்திருக்கிறோம்.
சலாட் முதலில்வருகிறது. பரவாயில்லை. வித்தியாசமான சுவை எதுவுமின்றி லண்டனில் உண்பதுபோலவே இருந்தாலும் பசிக்கு நன்றாகத்தான் இருக்கிறது. அவள் கொண்டுவந்த இறைச்சியைப் பார்த்ததும் பசி கூட எனக்கு இல்லாமற் போச்சு.புதிசாச் சுடச்சுட கொண்டுவரப்போறாள் என்று பார்த்தா பழசைச் சூடாக்கிக் கொண்டுவந்ததுபோல் சூடும் இல்லை. சுவையும் இல்லை. வேறை வழியில்லாமல் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கூட வைக்காமல் வந்திட்டம். 






5



அன்று முதல் நாள் என்றதனால் எல்லாவற்றையும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆனாலும் இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தில் கால்போன போக்கில் நடப்போம் என்று நானும் கணவரும் கதைத்துக்கொண்டு நடந்து போக இன்னுமொரு இடிபாடுகளுடன் கூடிய கட்டடம் தெரிந்தது. மலையில் கட்டிய கோவிலுக்கு காவல் தெய்வத்துக்காக கீழேயும் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுவும் பல தூண்கள் இடிந்து வீழ்ந்து பல புதையுண்டும், இன்னும் சில தூண்கள் திருடப்பட்டும் விட்டன என்றனர்.  




 
தற்போழுது எதென்ஸின் முக்கிய வருமானம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினாலேயே கிடக்கின்றது என்றும் அதை வைத்தே பல புனரமைப்புப் பணிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது என்றும் ஒருவருடன் உரையாடியபோது கூறினார். சுற்றுலாப் பயணிகளுக்காக பொருட்கள் விற்கும் கடைகளுக்குச் சென்றால் அதிக விலையே கூறுகின்றனர்.
மாலை ஐந்து மணிவரை கிரேக்க வீதிகளில் திரிந்தத்தில் கால்கள் எல்லாம் பயங்கர வலியெடுத்தது. அத்தோடு சாடையாக இருளவும் ஆரம்பிக்க மீண்டும் எமது தங்குமிடத்துக்குச் செல்வதற்கு பஸ் எடுத்தால் இருட்டுக்குள் நாம் எங்கே இறங்கவேண்டும் என்பதில் குழப்பம் உண்டானது. சாரதியிடம் சென்று வரைபடத்தில் நாம் தங்கியிருந்த இடத்தைக் காட்ட அவர் எம்மை சரியான இடத்தில் இறக்கிவிட்டார். வீதியால் நடந்து எமது கோட்டலுக்குச் செல்லும் வழியில் பார்த்தால் வீதிகளின் கரைகளில் காலையில் திறக்காத கடைகள் திறந்திருக்க ஆண்கள் பலர் மது அருந்திக்கொண்டும் தேநீர் அருந்திக்கொண்டும் இருக்கின்றனர். எனக்கு பயமாக இருக்கு என்று நான் சொல்ல நீ ஏன் அங்கே பார்க்கிறாய். பேசாமல் நடந்துவா என்கிறார் மனிசன்.
ஒருவாறு ஆறுமணிக்கு கிட்ட கோட்டலை அடைந்து அறைக்குச் சென்று குளித்துவிட்டு ஒரு மணித்தியாலம் களைப்புத் தீரப் படுத்துவிட்டு இரவு உணவுக்குச் செல்லுவோம் என்றுவிட்டு கட்டிலில் படுத்ததுதான். காலை கண்விழித்தபோது ஆறுமணி. நான் சென்று பல் தீட்டி முகம் கழுவிவிட்டு வந்து மனுசனை எழுப்ப மனிசன் என்ன விடிஞ்சிட்டுதோ  என்று ஆச்சரியமாகக் கேட்கிறார். எனக்கு இரவு உண்ணாததும் சேர்ந்து பயங்கரப் பசி. ஏழுமணிவரை எதுவும் குடிக்காமல் இருக்க முடியாது என எண்ணி தொலைபேசியில் கீழே இருக்கும் வரவேற்பாளருக்கு போன் செய்து நாம் தேநீர் குடிப்பதற்கு எதுவும் இங்கில்லை என்கிறேன். அறைகளில் நாம் எதுவும் வைப்பதில்லை. நீங்கள் ஏழுமணிவரை பொறுக்கவேண்டும் என்கிறான்..அவன். சாதாரணமாக எல்லா கோட்டல்களிலும் தேநீர் ஊற்றுவதற்குத் தேவையான எல்லாம் வைத்திருப்பார்கள். இங்கு இல்லை.
ஏழுமணியானதும் உணவகத்துக்குச் சென்று காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் பஸ் எடுக்கிறோம்.
இன்று ஒரு இருப்பது நிமிடத்தில மியூசியம் ஒண்டு தெரிய அதை அடுத்ததாகப் பார்ப்போம் என்று இருவரும் இறங்கியாச்சு. தொன்மையான பொருட்களை எல்லாம் அங்கே சேமித்து வைத்திருக்கின்றனர். தோண்டி அகழ்வாய்வு செய்து அவற்றை அப்படியே வைத்தபடி மேலே கண்ணாடியால் தளம் போட்டுக் கட்டியிருப்பது பார்க்க வித்தியாசமாக இருக்கு. உள்ளே சென்று பார்ப்பதற்கு ஒருவருக்கு 5 யூரோஸ்.
மட்பாண்டங்கள் வேறு பல பொருட்கள் எல்லாம் எமது போன்றே இருக்கிறன. மூன்று மாடிகள் முழுவதும் பிரம்மாண்டமாக கண்ணாடிகளால் நவீனமாக வடிவமைக்கப்பட்டு தொண்மப் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன.
மூன்றாம் மாடியில் எதென்ஸ்  நகரம் எப்படி அமைக்கப்பட்டது, எப்படி அழிக்கப்பட்டது என பெரிய திரையில் விவரணப் படம் ஒன்றைக் காட்டுகிறார்கள். அதையும் பார்த்துவிட்டு வெளியே வருகிறோம். எங்கு பார்த்தாலும் சனங்கள்.
 
6


மூன்றாம் நாள் காலையில் கணவர் எழும்பு எழும்பு என்று கரைச்சல் படுத்தியும் இன்று ஒன்பது மணிக்கு முன்னர் எழும்பவே மாட்டேன் என்று அடம்பிடித்தபடி படுத்துக்கிடக்க, மனிசனோ மந்திரம் சொல்வதுபோல தொடர்ந்து எழும்பு என்று கூறிக்கொண்டே என்னைத் தூங்க விடாது தொல்லை செய்தபடியே இருக்க, வேறு வழியில்லாது ஒன்பதுக்கு எழும்பிக் குளித்து முடித்து காலை உணவுக்குப் போனால் பல உணவுகள் முடிந்த நிலையில் பாணும் சீஸ், சொசேஜ் போன்ற சிலவும் ஒலிவ், வாழைப்பழம் போன்றவையுமே எஞ்சியிருந்தன.
உன்னாலதான். வெள்ள வந்திருந்தால் நல்ல உணவுகள் உண்டிருக்கலாம் என்று மனிசன் புறுபுறுக்க நீங்கள் தனியா சாப்பிட வந்திருக்கலாமே. நானோ வேண்டாம் எண்டனான்? என்று அவரின் வாயை அடைத்துவிட்டு. இருப்பதை வேறு வழியின்றி உண்ண ஆரம்பித்தோம்.
நாம் பார்த்துக்கொண்டு இருக்கவே பலர் ரிசுப் பேப்பரில் பாண், சலாமி,சீஸ் எல்லாம் வைத்து சுற்றிக்கொண்டு தம்முடன் எடுத்துச் செல்ல ஒரு பணியாள் அவர்களிடம் நீங்கள் எடுத்துக்கொண்டு போக்க கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர்கள் எவரும் அவரை அலட்சியம்  செய்தபடி போய்க்கொண்டிருந்தனர்.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முதன்முதலில் கிரேக்கத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததுதான். அன்றைய நாள் அங்கு செல்வதென முடிவெடுத்து பதினோரு மணிபோல் கிளம்பினோம். அன்று பார்த்து 25 o செல்சியஸ். வெய்யில் சுட்டெரிக்காவிட்டாலும் வெப்பம் கொஞ்சம் அதிகமாகவே இருக்க மனிசன் என்மீது சிவபுராணம் பாடத் தொடங்கினார்.
ஐம்பதாயிரம் இருக்கைகளுடன் கி .மு 300 ஆண்டளவில் கட்டப்பட்டதாக (Panathenaic Stadium)மிகவும் பிரமாண்டமானதாக இல்லாவிட்டாலும் இருக்கைகள் அத்தனையும் வெண் சலவைக் கற்களால் ஆக்கப்பட்டிருந்தமை பார்ப்பதற்கு வியப்பை அளித்தாலும் வெய்யிலின் கொடுமையில் அதிக நேரம் அதை நின்று இரசிக்க முடியவில்லை.  அதன் ஒரு ஓரத்திலேயே குகை போன்று நிலத்தைக் குடைந்து சிறிது தூரத்தில் ஒரு சுரங்கக்  கட்டடத்தையும் அமைத்து அதில் ஒலிம்பிக் பற்றிய பல அரிய புகைப்படங்கள், பொருட்கள் போன்றவற்றைப் பாதுகாத்துப் பார்வைக்காக வைத்துள்ளனர்.
எனோ தெரியவில்லை இந்த ஸ்டேடியத்தைப் பார்ப்பதற்கு ஒன்றிரண்டு பேர்தான் வந்திருந்தனர்.
 





 
மாலை ஆறு மணிபோல் தங்குவிடுதிக்கு வந்து மேலே செல்வதற்காகக் காத்திருக்க வரவேற்பிலிருக்கும் பெண் எங்களை அழைக்கிறாள். என்ன என்று போய்க் கேட்டால் கிரேக்கத்தில் இருக்கும் தீவுகளில் மூன்று தீவுகளுக்கு உங்களைக் கப்பலில் அழைத்துப் போவார்கள். கோட்டலில் இருந்து பேருந்தில் ஒருமணி நேரப் பயணம். இங்கிருந்தே உங்களை அழைத்துப்போய்  மீண்டும் கொண்டுவந்து விடுவார்கள். உங்களுக்கு விருப்பமா என்றாள். எவ்வளவு காசு என்று என் கணவர் கேட்க, ஒருவருக்கு 125 யூரோஸ். காலை உணவை நாமே இங்கு பொதிசெய்து தருவோம். நீங்கள் காலை 5 மணிக்குத் தயாராக இருக்கவேண்டும் என்றவுடன் சரி நாங்கள் வருகிறோம் என்றுவிட்டு வெளியே வாங்கிவந்த இரவு உணவையும் உண்டுவிட்டு வெள்ளணவே தூங்கச் செல்கிறோம்.
அதிகாலை எழுந்து குளித்து வெளிக்கிட்டு வரவேற்ப்பில் சென்று காத்திருக்க பிளாஸ்டிக் பெட்டியில் பொதி செய்யப்பட்ட  உணவு தண்ணீர்ப் போத்தல், யூஸ் போத்தல் என்பவற்றைக் கொண்டுவந்து தருகிறாள் ஒருபெண். அட நல்லாத்தான் ஒழுங்கு செய்கிறார்கள் என்று மனிசன் கூற எனக்கு வேறு யோசனை ஓடுகிறது.
சிறு வயதிலிருந்தே எனக்கு பஸ்ஸில் பிரயாணம்செய்வது என்பது ஒவ்வாமை. வேம்படிக்குப் படிக்கப் போன காலத்திலிருந்தே போகும்போது பஸ்ஸில் நின்றே போவதும் வரும்போது எப்படியோ உயரமான இருக்கையை முதலில் ஏறிப் பிடிப்பதுமாக வாழ்க்கையை ஓட்ட முடிந்தது. உயரமான சீட் அல்லது பஸ்ஸின் முன்பக்கத்து இருக்கைகள் என்றால் சரி. அல்லது தலை சுற்ற ஆரம்பித்து விடும். வாந்தி வருவதுபோன்று அந்த நாளே விரயமாகிவிடும்.
 உல்லாச பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். முன் சீட் எல்லாம் ஆட்கள் இருந்தால் என் பயணம் எப்படி இருக்கப் போகிறது என்பதே என் பயமாகி எதற்கும் இரண்டு பைகளை வரவேற்புப் பெண்ணிடம் கேட்டு வாங்கி என் கைப்பையில் வைத்துக் கொண்டேன். உந்தப் பிரச்சனைக்கு மருந்து வாங் கினாய்  தானே. அதை போடன் இப்ப என்கிறார் மனிசன். அதை லண்டனிலேயே மறந்து விட்டு வந்ததை கூறி அந்தாளிட்டை திட்டும் வாங்கிக் கொண்டிருக்க கதவைத் திறந்துகொண்டு வந்த ஒருவர் எமக்கு வணக்கம் கூறிவிட்டு எங்கள் பெயர்களைக் கூற நாம் எழுந்தோம்.
எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்று எண்ணி என் பிரச்சனையைக் கூறி முன்னிருக்கை வேண்டும். தர முடியுமா என்றேன். இங்கிருந்துதான் பஸ் கிளம்புகிறது. றைவரின் சீற்றையும் அதற்குப் பக்கத்தில் உள்ள தனது சீற்றையும்  விட்டுவிட்டு நீ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அவர் நகைச்சுவையாகக் கூற எனக்கு ஏற்பட்ட மன நின்மதி சொல்லிட முடியாது.
பஸ்ஸில் ஏறி அமர்ந்து பிரயாணம் ஆரம்பிக்க என் மனதில் எப்ப கப்பலைப் பார்ப்போம் என்ற பெரிய அவா உண்டாயிற்று. 1982 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து அம்மாவுடன் இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்குச் சென்றபோதுதான் முதல் கப்பல் பயணம். கடல் அப்போதும் ஆனந்தமாக இருந்ததுதான் ஆனாலும் கடலில் விழுந்தாலும் என்ற பயத்தில் அம்மா சுதந்திரமாகக் கடலைப்பார்க்க விடவில்லை. அதன்பின் யேர்மனியில் இருந்து லண்டன் வந்தபோது பல தடவைகள் பிரயாணக் கப்பலில் இரவில் வந்ததாலும் குளிர், காற்று போன்றவற்றால் கடலை இரசிக்க முடியவில்லை. நீண்ட நாட்களாக ஒரு கடற் பயணம் செல்வதை பற்றிய ஆசை இருந்தது.அது தானாகவே கூடி வந்ததில் நானும் கணவனுமாக எந்தக் கவலைகளுமற்று விடுமுறையில் என்பது அதீத மகிழ்வையும் நிறைவையும் தர ஆவலாகக் காத்திருக்கவாரம்பித்தேன்.
வேறு வேறு தங்கு விடுதிகளில் நிறுத்தி மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு மணிநேரத்தில் கடற்கரையை அடைந்தோம். அங்கே எம்மைக் கூட்டிக்கொண்டு போனவர்கள் எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிறையானச் சீட்டையும் தர விரைந்து சென்று கப்பலைப் பார்த்தால் கப்பல் சிறிதாகவே இருந்தது. நானோ டைட்டானிக் கப்பலை மனதில் நினைத்துக்கொண்டே சென்றிருந்தேன். மூன்று அடுக்குகள் கொண்டதாக இருந்தது அது. கீழ் தளத்தில் கனஅடித் தடுப்புக்களூடாகத்தான் கடலைப் பார்க்க முடியும். நான் அதை விரும்பவில்லை. மேல் தளத்துக்குச் சென்று வசதியாக இடம் பிடித்த்துக் கொண்டேன். அதன்பின் பலரும் வர எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டது. இன்று எதோ எனக்கு அதிட்டம் தான் என மனம் நின்மதியானது.


கப்பல் சிறிதாக இருந்தாலும் கடற்பயணம் மனதில் பேருவகையை ஏற்படுத்தியது. மத்தியதரைக் கடலில் கலக்கும் சிறிய கடற்பகுதிக்கு மிருடன் கடல் என்று பெயர். ஆனால் அவர்கள் கப்பல் மத்தியதரைக் கடலில் செல்வதாகவே எமக்குக் கூறினர். இந்தச் சிறிய கடலே இத்தனை பெரிதாக இருக்கிறது. பெருங்கடல்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும் என்ற ஆசையும் கூடவேபயமும் எழுந்தது.  
முதலில் எம்மை கைட்றா என்னும் அழகிய தீவில் இறக்கிவிட்டனர். நாமாகவே சென்று இடங்களைப் பார்த்துவிட்டு இரண்டு மணி நேரத்தில் திரும்ப கப்பலுக்கு வந்துவிட வேண்டும்.பக்கத்தில் எல்லோரும் போகிறார்கள் என்று நாமும் போனால் ஒரு பழைய தேவாலயம். சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று பார்த்துவிட்டு பலரும் போய்க்கொண்டிருந்த ஒரு வீதியைத் தெரிவு செய்தோம். ஆரம்பத்தில் அவை சிறிய வீதிகளாக முழுவதும் வெண்கற்களால் நிலம், வீதி வீடுகள் எல்லாமே வெள்ளையாகத் தெரிந்தன. கழுதை போன்ற ஒன்றைக்கொண்டுவந்து குதிரையில் போகப் போகிறீர்களா என்று ஒருவன் கேட்கிறான். உயரம் குறைவாக இருக்க ஏறிப் பார்ப்போமா என எண்ணி மனிசனிடம் கேட்க பாவம் கழுதை என்று மனிசன் காலை வாருகிறார்.
சிலர் அதில் ஏறிச் செல்வதை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்குகிறேன். தொடர் வீடுகள். வீதியிலே வாசல்கள் இருக்கின்றன.கொஞ்சம் ஏற்றமாக இருக்கிறது. கடும் வெய்யில் என்றாலும் கடற்காற்றில் நன்றாக இருக்கிறது.தொடர்ந்து நடக்க நடக்க மழைக் குன்றுகள் தான் தெரிகின்றன.தொட்டம் தொட்டமாக வீடுகள். பாதை உயர உயரச் செல்கின்றது. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் நடக்க ஒரு உணவு விடுதி வருகிறது . நேரம் பத்தரை என்பதனாலும் கப்பலில் கொண்டுவந்த காலை உணவைக் கப்பலில் உண்டதாலும் பசி இல்லை. ஆனாலும் நடந்து களைத்ததனால் கோப்பி அருந்திவிட்டுச் செல்வோம் என்று அங்கே அமர்ந்து கோப்பியும் அவர்களின் கேக்கும் உண்டுவிட்டு எழுந்து மீண்டும் நடக்கிறோம். வெட்டை வெளிகளையும், மரம் செடி, கொடிகளையும் பார்த்துக்கொண்டிருக்க நேரம் போய்விட்டது. மீண்டும் திரும்ப வருகிறோம்.
இன்னும் ஒரு பத்து நிமிட நடையில் கப்பலை அடைந்துவிடலாம். இருந்தாற்போல் பெரிய குழல் ஊதுவதுபோல் எமது கப்பலில் இருந்து சத்தம் வருகிறது. கப்பல் புறப்பட ஆயத்தமாகி அதன் பாதையை பூ ட்டிடத்தொடங்கிவிட்டனர்.  நெஞ்சு பாதை பதைக்க stop என்று கத்தியபடி ஓடி வருகிறோம் நாம் இருவரும். எடுத்த கப்பலை நிறுத்தி மீண்டும் எமக்குப் பாதையைத் திறந்து விடுகின்றனர். மனதில் பெரிய நின்மதியும் கூடவே வெட்கமும் எழுகின்றது. மன்னியுங்கள் என்று அதில் நின்றவரிடம் கூறிவிட்டு உள்ளே சென்று அமர்கின்றோம்.
பன்னிரண்டரை  முதல் ஒரு ஒன்றரை மணி வரை கப்பலிலேயே  மதிய உணவு என்று எமது வழிகாட்டி கூறியிருந்தார். பபே என்பதனால் எதற்கும் முதலே உண்பது நல்லது என்று எண்ணி மேலே செல்லாது காத்திருக்கிறோம். நேரம் நெருங்க கதவைத் திறந்துகொண்டு சென்றால் சனம் நெருக்கி அடித்தபடி நிற்கின்றனர். ஒருவாறு இடம்பிடித்து அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தோம். இந்திய உணவுகளும் மீன் வகைகளும் மரக்கறிகளும் செய்துவைத்திருந்தனர். சுவையாகவே இருக்க இரசித்து உண்டுகொண்டிருக்க என்ன குடிக்கிறீர்கள் என்று ஒருவர் வந்து கேட்டார். கணவர் கோலா சொல்ல நான் எனக்கு கலந்த பணம் வேண்டும் என்று ஒரேன்ஜ் வித் ginger என்று ஓடர் செய்தேன். சிறிது நேரத்தில் வந்த பணியாள் தோடம் பழம் இல்லை என்று கூறி எலுமிச்சையில் இஞ்சி போட்டு வேறு ஒரு சிரப் விட்டுத் தருகிறேன் நன்றாக இருக்கும் என்றான். சரி கொண்டுவா என்றுவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தால் அழகாக அலங்கரித்துக் கொண்டு வருகிறான்.
வாயில் வைத்துக் குடிக்க ஒரு கசப்புத் தெரிகிறது. குளிர்பானங்களுக்குத் தனியாக நாம் பணம் செலுத்தவேண்டும் என்று கூறி பில்லையும் தர வாங்கிப் பார்த்தால் கோலா 5 யூரோஸ் எனது பணம் 7யூரோஸ் என்று இருக்கு. அனியாயக் காசு என்று மனிசன் புறுபுறுக்க அந்தாளின் திட்டுக்குப் பயந்து எதுவும்சொல்லாமல் மிச்சம் வைப்போமோ என்று நினைத்த யூஸைக் குடித்து முடிக்கிறேன். 

7


ஒரு மணி நேரம் சென்றபின் கப்பல் மீண்டும் போறோஸ் என்னும் ஒரு தீவை அடைகிறது. ஆனால் எந்தவித கவர்ச்சியும் அற்று இருக்கிறது தீவு. எக்கச்சக்கமான சிறிய உல்லாசப் படகுகள் மரக்கறிகள் அடுக்கியதுபோல் கரைகளில் கட்டப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டு படகுகள் மட்டும் கடலில் செல்கின்றன.
ஒரு அரை மணி நேரம் நீங்கள் சுற்றிப் பார்க்கலாம் என்கிறார் எமது வழிகாட்டுபவர். தலை தெறிக்க ஓடிவந்த அனுபவம் அரைமணியில் சுற்றிப்பார்க்கும் ஆசையை நிராகரிக்க நானும் கணவரும் கடக்கரையின் ஓரமாக படகுகளைக் கணக்கெடுத்தபடி நடக்கின்றோம். மதியம் இரண்டரை ஆகிவிட்டதால் பயங்கர மதிய வெய்யில் சுடுகிறது. பத்து நிமிடத்தின் பின்னர் திரும்பி நடக்கிறோம். போகும் வழியில் நிரைக்கு ஆட்கள் இல்லாத உணவகங்கள் மட்டும் தான். எமது கப்பலில் வந்த பலரும் அங்கேயே சுத்திக்கொண்டிருக்கின்றனர். முதல் பார்த்த தீவைப் போலவே கிட்டத்தட்ட இத்தீவும் இருந்ததால் தீவைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆசை பலருக்கும் எழவில்லையாக்கும்  என எண்ணியபடியே வருகிறேன்.
அடுத்ததாக எஜீனா என்னும் இன்னொரு தீவுக்குப் போகப் போகின்றோம். தீவைச் சுற்றிப்பார்க்க விருப்பமானவர்கள் வாருங்கள். பஸ்ஸில் அழைத்துப் போவோம். தனியாகவும் நீங்கள் செல்லலாம். ஒருவருக்கு 20 யூரோஸ். ஒரு மணிநேரம் நேரம் சுற்றிப் பார்க்க.பின்னர் கடலுணவு பஃபே என்கிறார். வழிகாட்டுபவர். பஃபே என்றவுடன் ஒரு இருப்பது பேர்வரை நாங்களும் வருகிறோம் என்று கூறுகின்றனர். மீண்டும் எமது கப்பல் புறப்படுகிறது.
இம்முறை நான் கப்பலின் உள்ளேயோ மேலேயோ போய் இருக்காமல் முதலாவது தளத்தில் நின்றபடியே கடலைப் பார்த்துக்கொண்டு எப்போது கரை வரும் என்று பார்த்துக்கொண்டு நிற்கிறேன். மீண்டும் எனக்கு பஸ்ஸில் முன்பக்கம் இடம் பிடித்துத் தீவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் எழுகிறது. கணவர் தான் போய் இருக்கப் போகிறேன் என்கிறார். தீவை அடைய இன்னும் அரை மணி நேரம் இருக்குது தானே என்ற எண்ணத்தில் வாருங்கள் கோப்பி குடிப்போம் என்று கணவரை இழுத்துக்கொண்டு செல்கிறேன். அங்கு இரண்டு மூன்றுபேர் கோப்பிக்கு பணத்தைச் செலுத்திவிட்டு காத்துக்கொண்டிருக்கின்றனர். நானும் பணத்தைச் செலுத்திவிட்டு நிற்கிறேன்.கணவர் கதிரையில் அமர்ந்துவிட்டார்.
பத்து நிமிடமாகிவிட்டது  இன்னும் எனக்கு கோப்பி வரவில்லை. ஒருவன் ஆடிப்பாடிக் கோப்பி போட்டுக்கொண்டும் இளம் பெண்களைக் கண்டால் பல்லைக் காட்டிக் கதைத்துக்கொண்டும் வேலையில் கவனமின்றி இருக்கிறான். எனக்குப் பின் வந்த பெண் ஒருவருக்கு எனக்குத் தராது கோப்பியைக் குடுக்க நான் கோபத்துடன் எனக்கு என்னும் தராமல் அவளுக்கு கொடுக்கிறாய் என்கிறேன். அவன் சிரித்துக்கொண்டு கூல் கூல் என்று சொல்லியபடி அவர்கள் மொழியில் அவளுடன் கதைத்துக் கொண்டு நிற்க, என் பணத்தைத் திரும்பக் கொடு எனக்குக் கோப்பி வேண்டாம் என்கிறேன். அவன் வேண்டுமென்றே தன் மொழியில் கதைக்கிறான். என் நல்ல காலம் அந்தநேரம் பார்த்து எமது வழிகாட்டி படிகளில் இறங்கி வருகிறார். நான் அவரிடம் சென்று முறையிடுகிறேன். அவர் சென்று அவனிடம் எதோ கூற என் பக்கம் திரும்பி சொறி என்றுவிட்டு கோப்பி தயாரிக்கிறான். நான் எனக்கு கோப்பி வேண்டாம் பணத்தை தா என்கிறேன் மீண்டும். நீ போய் இரு நான் கொண்டுவாறன்  என்றபடி வழிகாட்டி என்னைச் சமாதானப்படுத்த, நான் கணவருக்குப் பக்கத்தில் சென்று அமர்கிறேன். உனக்குப் போற இடம் எல்லாம் பிரச்சனை தான் என்று மனிசன் நக்கலாச் சிரிக்குது.
வழிகாட்டுபவர் எமக்கு கோப்பிகளைக் கொண்டுவந்து வைத்தபடி கெதியாக் குடியுங்கள் இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கு என்று கூற கோப்பியைக் குடிதத்துவிட்டு மீண்டும் வாசலுக்கு அண்மையில் கணவரையும் இழுத்துக்கொண்டு போய் நிற்கிறேன்.
வழிகாட்டியும் கீழேயே நின்றது மனதுக்கு நின்மதியாக இருக்கு. கப்பல் நின்றவுடன் வழிகாட்டிக்குப் பின்னாலேயே நானும் கணவரும் சென்று பஸ் எங்கே நிற்கிறது என்று கேட்க அவர் அதோ தூரத்தில் நிற்கும் வெள்ளை பஸ் தான் என்கிறார். நல்ல காலம் வேறு நிற பஸ்கள் பல நின்றதால் வெள்ளையை அடையாளம் கண்டு நானும் கணவரும் விரைந்து சென்று வாசலில் நிற்கிறோம். வழிகாட்டி மிச்சப்பேரைக் கூட்டிக்கொண்டு வந்தபின் கதவு திறக்க நானும் கணவரும் முன் இருக்கையைப் பிடித்து அமர்கிறோம்.
மலைக் குன்றுகள் நிறைந்த ஒரு சிறிய தீவு. கடல் நீர் பளிங்கு போல் தெளிவாக இருக்கிறது. பார்த்தவுடன் தண்ணீரில் இறங்கவேண்டும் போல் ஆசை எழ, இக்கடலில் குளிக்க முடியாதா என்று கேட்கிறேன். நேரம் போதாது என்கிறார் வழிகாட்டி. ஏற்ற இறக்கமான பாதையில் பஸ் செல்கின்றது. ஆங்காங்கே சிறிய வீடுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.  மற்றப்படி ஒன்று இரண்டு பேரைத்தான் வீதியில் காண முடிகின்றது. நேரே எம்மை ஒரு தேவாலயத்துக்கு கூட்டிச் செல்கின்றார். உயர்ந்த ஒரு கோபுரத்தோடு நிற்கிறது தேவாலயம். வேறு வழியின்றி அதை பார்த்துவிட்டு வெளியே வர மூன்று நான்குபேர் பிஸ்ராசியோ ( pistachio nuts)ஐ வைத்து விற்றுக்கொண்டிருக்கின்றனர். அதில் வயதுபோன கணவன் மனைவி வைத்திருந்த இடத்தில் சென்று அவர்கள் உண்டு பார்க்கவென்று வைத்திருந்த  பிஸ்ராசியோக்கள் சிலதை உண்டு பார்க்கிறோம். மிகவும் ருசியாகவும் மலிவாகவும் இருக்க ஒரு கிலோவை வாங்கிக்கொண்டு வருகிறோம். அங்கு நிறைய விளைவதாக வழிகாட்டி கூறி மரத்தையும் எமக்கு காட்டுகிறார். மஞ்சள் நிறப் பூக்களுடனும் சிறிய இலைகளுடனும் பிஸ்ராசியோ மரங்கள் நிற்கின்றன.
அதன் பின்னர் மீண்டு பஸ்ஸில் ஏறி இயற்கை அழகை இரசித்தபடி கப்பல் நிற்கும் இடத்துக்கு வருகிறோம். கடலுணவு  பஃபே உண்ணலாம் வாருங்கள் என எல்லோரையும் வழிகாட்டி அழைக்க விதவிதமான கற்பனையோடு நானும் செல்கிறேன். நல்ல வாசனைகள் மூக்கைத் துளைக்கின்றன. எம்மை உணவகத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறார் என்று நாம் நினைக்க உணவகத்துக்கு பக்கத்தில் மூன்று நான்கு வாங்குகள் போட்டிருக்க அதில் எம்மை அமரச் சொல்லிவிட்டு உள்ளே செய்கிறார் வழிகாட்டி. ஒரு சிறிய மேசை அங்கே இருக்கிறது.
ஒரு பெண் சில யூஸ் பெட்டிகளையும் பிளாஸ்டிக் கப்புகளையும் கொண்டுவந்து வைக்கிறாள். எல்லோரும் பசியுடன் இருந்ததால் உடனே யூஸ்களைக் குடிக்கவாரம்பிக்க நாமும் சேர்ந்துகொள்கிறோம். சிறிது நேரத்தில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குப் பொரியலையும் இருவிதமான சோஸ்களையும் அத்தோடு சிறிய பேப்பர் தட்டுக்களையும் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போகிறாள். மற்றவர்கள் எழுந்து அவற்றை எடுத்து உண்ண நான் போகாமல் கடலுணவுகள் வரட்டும் என்று காத்திருக்கிறேன். நானும் கொஞ்சம் எடுக்கப்போறன் என்றபடி எழுந்து சென்ற மனிசன் பாத்திரத்தை உருட்டிப்பிரட்டி மிச்சமிருந்த மூன்று துண்டுகளைப் பொறுக்கிக் கொண்டு வருகிறார். இந்த ஒன்றையாவது தின் என்று ஒரு துண்டை எனக்குத் தந்துவிட்டு இரண்டைத் தான் உண்ண இந்த ஒண்டாய் உண்டு நான் ஏன் வாயைப் பழுதாக்குவான் நீங்களே சாப்பிடுங்கோ என்று குடுத்திட்டு வழிகாட்டியைத் தேடுகிறன். அவனை அந்தப் பக்கமே காணேல்லை.
மீண்டும் அந்தப் பெண் வர முதலே போய் எடுப்பம் அப்பா.பிறகு கிடைக்காது என்றபடி நான் எழுந்து சென்று பார்த்தால் ஒரு குடும்பம் சாப்பிடக் கூடிய சிறிய இறால் பொரியல், கணவாய்ப் பொரியல் மீன் பொரியல் மூன்றையும் கொண்டுவந்து வைத்திருக்கிறாள். எரிச்சலை அடக்கிக்கொண்டு நான்கைந்து பொரியல்களை   எடுத்துக்கொண்டுவந்து  வாயில் வைத்தால் உறைப்புப் புளிப்பற்று எண்ணெய் இழுத்து .... ஒன்றைச் சாப்பிடவே வெடுக்கு மணத்துடன்  ...... இறாலை எடுத்தால் அது சோர்ந்துபோய் விழுது. எனக்கு வேண்டாம் என்று மனிசனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் போய் யூஸை வாரத்துக்கு குடித்து வயிறை நிரப்பிக்கொண்டு எதுவும் கூறாது வந்திருக்க, நால்லா ஏமாத்திப்போட்டாங்கள். பழசை சூடாக்கித் தந்திருக்கிறாங்கள் கள்ளப்பயல்கள் என்று கோவப்படாத மனிசன் கோவத்துடன் ஏசுறார். ஆனாலும் பசியில் தட்டில் ஒரு துரும்பு கூட இருக்கவிடாமல் எல்லாரும் கோப்பைகளைக் காலி செய்யினம்.
ஒரு பத்து நிமிடத்தில் அந்த வழிகாட்டி உள்ளேயிருந்து வந்து "விரைவாக வாருங்கள் எல்லாரும் கப்பலுக்குப் போகவேண்டும் உடனே" என்கிறான். எல்லாரும் அவன் மேல் இருந்த கோபத்தை மறந்து  கப்பலுக்கு விரைகின்றனர். கப்பல் புறப்பட்டு மீண்டும் அரை மணி நேரத்தில் கரையை அடைய நான் இறங்கி கோட் டலுக்குப் போவதற்கான பஸ்சில் ஓடிப்போய் முதலாவதாக ஏறுகிறேன்.
இரவு ஏழு மணிக்கு பஸ் தங்குமிடத்தை அடைய உள்ளே செல்லாது பக்கத்தில் இருந்த ஒரு உணவகத்துக்குச் சென்று இரு உணவுகளை வாங்கி உண்டுவிட்டு வர மனம் அதன் ருசியில் நின்மதியாகிறது.


8


https://www.youtube.com/watch?v=8WzlqQlYUis&feature=emb_title

https://www.youtube.com/watch?

அன்று இரவு உணவை உண்டுவிட்டு வாங்கிக்கொண்டு வந்த பிஸ்தாசியோவை எடுத்து உடைத்து வாயில் வைத்தால் அவை காற்றுப் போய் இளகி உண்பதற்கே அருவருப்பாய் இருக்க, எமக்கு உண்பதற்கு நல்லதைத் தந்துவிட்டு பழையவற்றை விற்று எம்மை ஏமாற்றிவிட்டது தெரிய  பழுதானத்தை ஏன் மினைக்கெட்டுக் காவிக்கொண்டு போவான் என்றபடி தூக்கிக் குப்பையில் எறிகிறேன்.
அடுத்தநாள் எழுந்து காலை உணவை உண்டுவிட்டு நடந்து சென்று தொடருந்தில் டிக்கற் எடுத்து ஒரு மாக்கற்றுக்குப் போனோம். இங்கெல்லாம் கூடுவதுபோல் பெரிதாகச் சனங்கள் இல்லை. கறுவா,ஏலம்,கராம்பு போன்ற வாசனைத் திரவியங்களும் வேறு பல காய்ந்த மூலிகை வகைகளும் பூசணி விதைகள், பருப்பு வகைகள், பிஸ்தாசியோ என்பன அனைத்துக்கடைகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மலிவாக இருந்தாலும் எல்லாம் திறந்தே இருந்தபடியாலும் முதல் நாள் வாங்கி ஏமாந்த அனுபவத்தாலும் எனக்கு வாங்கவே மனம் வரவில்லை. தக்காளிகள் தான் அதிகமாக விற்றுக்கொண்டிருந்தார்கள்.
ஓரிடத்தில் நிறைய மரங்கள் செடி கொடிகளைக் கண்டவுடன் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கு செல்ல போற இடத்திலயும் உதை விடமாட்டியோ  ஒரு கண்டுகளும் வாங்காதே. கொண்டு போக விடமாட்டாங்கள்.  என்று திட்டியபடி மனிசன்.  கனக்க மாதுளை மரங்கள் ஒவ்வொரு அளவிலும் பார்க்க ஆசையாக இருக்க ஒன்றைத் தூக்க, உன்னட்டை ஏற்கனவே ஒரு மரம் இருக்குதானே என்று பறிச்சு வச்சிட்டுது மனிசன்.
பிஸ்தாசியோ மரம் இருக்கா என்று தேடினால் ஒன்றுகூட இல்லை. நிறைய வேறுவேறு விதைகளும் அவர்கள் வைத்திருக்க  வறுக்காத பிஸ்தாசியோ விதைகள் இருக்கா என்று கடைக்காரனிடம் கேட்க, விதை இருக்கா என்று தேடிவிட்டு மரம் இருக்கு வா என்று ஒரு மீற்றர் உயரமுள்ள மரத்தைக் காட்டுகிறான். முதல் நாள் அந்தத் தீவில் காட்டிய மரம் போல் இல்லாமல் இலைகள் வேறாக இருக்க அவன் என்னை ஏமாற்றுகிறான் என்று புரிய இது வேண்டாம் என்கிறேன். பொறு கடையில் விதைகள் இருக்கின்றன தேடி எடுத்துத் தருகிறேன் என்று அவன் சொல்ல நானும் ஆவலாய்க் காத்திருக்க கையில் வேர்க்கடலையைக் கொண்டுவந்து  இந்தா பிஸ்தாசியோ விதை என்கிறான். எனக்கு கோவம் வர ஏன் இப்பிடி ஏமாற்றுகிறாய். இது எமது நாட்டில் இருக்கிறது என்றுவிட்டு மற்றப் பக்கம் போகிறேன்.
வித விதமாய் ஒரு ஏழு எட்டு விதமான ஒலிவ் பழங்கள். பார்க்க அழகாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருக்க சாப்பிட்டுப் பார்க்கும்படி கடைக்காரன் ஒவ்வொன்றையும் எடுத்துத் தருகிறான். எல்லாமே நன்றாக இருக்க ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ தா என்று சொல்ல, உவ்வளத்தையும் கொண்டுபோய் சாப்பிட்டு முடிக்க மாட்டாய். கொஞ்சமாய் வாங்கு என்று இந்தாள் தடை போட வேறு வழியின்றி ஒவ்வொன்றிலும் அரைக் கிலோ வாங்குகிறேன். வேறு எதுவும் வாங்காமல் நடந்துகொண்டே போக ஓரிடத்தில் இறைச்சி, மீன் என்பவற்றின் படம் போட்டிருக்க சரி வந்தனாங்கள் இதையும் பார்த்திட்டுப் போவம் என்கிறார் மனிசன். நான் அதுக்குள்ள வரமாட்டன் என்று  நான் முரண்டு பிடிக்க நீ உதில நில். நான் போய் பார்த்திட்டு வாறன் எண்டு சொன்ன மனிசன் ஒரு இரண்டு நிமிடத்திலேயே திரும்பி வர மீன் நாத்தம் தாங்க முடியேல்லையோ என்று நான் நக்கலாய்ச் சிரிக்கிறேன்.
இப்பிடிச் சுத்தமான மீன் சந்தையை நான் ஒரு இடமும் பார்க்கில்லை. கட்டாயம் நீயும் பார்க்கவேணும். வந்து பார் எண்டு என்னை இழுத்துக்கொண்டு போகுது அந்தாள். நான் என்ன நாத்தம் நாறப் போகுதோ ஏன் இந்தாளுக்கு உந்த விபரீத ஆசை என்று திட்டியபடி போன என்னால் என் கண்களையம் மூக்கையும் நம்ப முடியவில்லை. வகை வகையாய் மீன்கள் அடுக்கி விடப்பட்டிருக்க ஒரு சிறிய தண்ணீர்ப் பைப்பும் ஒவ்வொரு கடைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்க மீன் சந்தை என்பதற்கான எந்த மணங்களும்  இன்றி இருக்கிறது அது. அப்பப்ப மீன்களுக்கு தண்ணீரை விடுகிறார்கள். மணக்காமல் இருக்க என்ன செய்கிறார்கள் என்று இன்றுவரை விளங்கவில்லை.

9

அடுத்த பக்கம் போனால் இறைச்சிக் கடைகள். அவையும் கூட எந்த மணமும் இன்றி அழகாக அடுக்கி வைக்கப்பட்டும் தொங்கவிடப்பட்டும் இருக்கின்றன. ஒரு கடை இந்தியர்களுடையது. எம்மைக் கண்டதும் மகிழ்வுடன் சிரித்துக் கதைத்தார்கள். எப்படிச் சந்தையில் மணம் இல்லாமல் இருக்கிறது. மருந்துகள் ஏதாவது போடுகிறீர்களா என்று கேட்டதற்கு, இது ஏதென்ஸின் பெரிய சந்தை. எல்லாம் புதிதாக ஒவ்வொரு நாட்களும் வரும் அன்றே விற்று முடிந்துவிடும் என்கிறார் ஒருவர். 
 
  அடுத்த நாள் ஒரு சுத்திக் காட்டிற பஸ் எடுத்து போனால் சும்மா ஒரு வீதியுலா போறான். ஒரு பக்கம் முழுக்க ஒரு பத்துக் கிலோமீற்றர் கடற்கரைதான். ஆனால் பெரிதாக ஆட்களைக் காணவில்லை. ஒரு மணிநேரம் சென்றபின் பஸ் ஓரிடத்தில் திரும்பி மீண்டும் ஓடி ஒரு வளைவில் நின்றது. நீங்கள் அரை மணி நேரம் கீழே இறங்கிப் பார்க்கலாம் என்கிறார் ஓட்டுநர். என்னத்தைப் பார்ப்பது எதையும் காணவில்லையே என எண்ணியபடி இறங்கி மற்றப் பக்கம் போனால் அழகான ஒரு காட்சி மனத்தைச் சொக்க வைத்தது.

கடலில் இருந்து வரும் நீரேரி குளம் போல் ஓரிடத்தில் நிற்க சிலர் நீந்திக்கொண்டிருந்தனர். அட முதலே தெரிந்திருந்தால் நாமும் நீச்சல் உடை கொண்டு வந்திருக்கலாமே என்னும் எண்ணம் எழ ஆவென்று அரை மணிநேரம் நின்று பார்க்க மட்டும் தான் முடிந்தது. சிலர் சுற்றிப் போய் கிட்ட நின்ற பார்த்துவிட்டு வந்தார்கள். சாரதி மீண்டும் எல்லோரையும் வரும்படி அழைக்க திரும்பவும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம். அந்த இரண்டு மணி நேரப் பயணத்துக்கு ஒருவருக்கு 5 யூரோக்கள் மட்டும்தான். மீண்டும் நகரில் வந்ததும் பசி எடுக்க ஒரு சிறிய கடையில் இருந்த உணவு எம்மை இழுக்க அங்குபோய் அமர்ந்தோம். 




அடுத்த நாள் காலை எழுந்து காலை உணவை உண்டுவிட்டு மீண்டும் வந்து கட்டிலில் இருந்து ஊர் கதை உலகக் கதை எல்லாம் கதைத்துவிட்டு பத்துமணிபோல் கிளம்பி மீண்டும் பார்த்த இடங்களில் தவறவிட்ட  சிலவற்றைப் பார்த்துவிட்டு மேலே இருந்து பார்த்துவிட்டுத் தவறவிட்ட அரங்கத்தைப் பார்த்தே தீரவேண்டும் என்று போனால் வரிசை நீண்டுகொண்டே போகுது. நின்றாள் ஒரு மணிநேரமாவது வரிசையில் நிற்க வேண்டும். அன்று பார்த்து பள்ளி விடுமுறைபோல அதிகளவில் பிள்ளைகுட்டிகளோடு வந்திருந்தனர். சரி அத்தனை நேரம் நிற்கமுடியாது என்று கீழே வந்து sintagma square இங்கு வந்து அங்கிருந்து ராமில் ஒருவருக்கு 2.50 யூரோ கொடுத்து பயனச் சீட் டை எடுத்து அமர்ந்தோம்.
ஒரு மணிநேரம் ராம் கடற்கரை ஓரமாகவே ஓட அதிலிருந்தபடியே இடங்களை பார்த்துக்கொண்டு வந்து ஓரிட த்தில் இறங்கினோம். கடற்கரைகளில் பெரிதாக ஆடைகளையே காணவில்லை.  தனியாக இருவரும் வந்ததனால் தெரியாத கடலில் குளிப்பது ஆபத்து என்று எண்ணி நான் கடலில் இறங்கவே மறுத்துவிட்டேன். மனிசன் சொல்லக் சொல்லக் கேட்காமல் இறங்கிவிட்டுது. தூரப் போகாதேங்கோ எண்டாலும் கேட்கவில்லை. அந்தாள் வெளியில வரும் வரைக்கும் எனக்கு நெஞ்சுக்குள்ள தண்ணி இல்லை. ஒரு வாறு கத்திக் கத்திக் கூப்பிட்டு வெளியே வந்து தலை துடைத்து விட்டு மணலில் கற்களை அடுக்கி யாருடையது உயரமாக இருக்கு என்று சிறு பிள்ளைகள் போல் விளையாடிவிட்டு வெய்யில் தாங்க முடியாததாக மீண்டும் வந்து ராமில் ஏறினோம். தனியாகக் கடற்கரைக்குச் செல்வது காதலர்களுக்கு வேணுமானால் நன்றாக இருக்குமே தவிர கணவனும் மனைவியும் யாருமற்ற ஒரு கடற்கரையை அதிகநேரம் இரசிக்க முடியாது என்பது அன்றுதான் புரிந்தது. (தணியடிக்கிற கோஷ்டியளின் கதை வேறை).
மீண்டும் ஏறிய இடத்தில் இறங்கி நடுவில் ஆட்கள் இருப்பதற்குப் போடப்பட்டிருந்த வாங்குகள் போன்ற இருக்கையில் இருந்து போவோர் வருவோரை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருக்க மனிசன் போய் ஐஸ்கிரீம்கள் வாங்கிக்கொண்டு வந்தார். கடற்கரையிலும் பார்க்க இந்த இடம் நன்றாகவே இருக்க நேரம் போனதே தெரியவில்லை. மேலே மலைக்குன்றில் அக்றோபொலிஸ் கோவில் மிக அழகாக இருந்தது. இன்று இரவு இந்த இடத்துக்கு வந்து கோவிலில் அழகைப் பார்த்தால் என்ன என்றேன் நான். மின் விளக்கின் ஒளியில்  இரவில் அழகாக இருக்கும் என்று ஒன்லைனில் பார்த்த நினைவு எழ அருகில் கும்பலாக நின்ற நான்கைந்து போலீஸ் காரரிடம் சென்று இரவில் இந்த இடத்துக்கு அதிகமான மக்கள் வருவார்களா என்று கேட்டேன். நீங்கள் தனியாகவா அல்லது குழுவாக வந்துள்ளீர்களா என்று கேட்டார்  ஒருவர். நானும் கணவனுமென்று சொன்னதும் குழுவாக வருபவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் இரவில் கள்வர்கள் அதிகம். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பஸ்ஸில் அல்லது ட்ரெயினில் தானே இங்குவரவேண்டும்.அது பாதுகாப்பானது இல்லை என்கிறார்கள்.
நாம் எமது ஹோட்டலை புக் செய்தபோது அந்தக் கோவிலின் வியூ நன்றாகத் தெரியும் என்கிறார்கள். வந்தபின் தான் தெரிந்தது எதுவுமே தெரியவில்லை என்று. இனி அதுக்காகச் சண்டை போட முடியுமா என மனதில் எண்ணிக்கொண்டு எழுந்தோம். அடுத்தநாட் காலை ஐந்து மணிக்கு விமான நிலையம் செல்ல எழவேண்டும். அதனால் விரைவில் தூங்கவும் வேண்டும் என்று கூறியபடி ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு உணவகத் தில் உணவை உண்டுவிட்டு வர எதோ நீண்ட நாள் வசித்த இடத்தை விட்டுப் போவதுபோன்ற ஒரு துயரம் எழுந்தது.
என்னைக் கேட்டால் இன்னும் பலமுறை கூடச் செல்லச் சலிக்காத ஒரு இடம் கிரீஸ். ஆனால் இருவர் மட்டும் போகாது சிலராவது சேர்ந்து போனால் இன்னும் பல இடங்களைக் கடற்கரையை துணிவாக மகிழ்வாக அனுபவித்துவிட்டு வரக் கூடிய அற்புதமான சுற்றுலாத்தளம்.
 

 ஆக்கம் 22.04.2019



No comments:

Post a Comment