Tuesday, 31 March 2020

கொரோனாவா கொக்கா

Image result for coronavirus

 

கொரோனா என்னும் கொடுநோய்
காணுமிடமெங்கும் கரகமாடுகிறது
கொள்ளைபோல் வந்து மனங்களை
கொதிநிலையில் கதிகலங்க வைக்கிறது

கூட்டம்கூட முடியவில்லை
கொஞ்சிப்பேசவும் முடியுதில்லை
குடும்பமாய்க் கூட நாமெல்லாம்
குதூகலிது மகிழ்ந்திருக்க முடியாது
கொடுங்கோல் ஆட்சியாளனாய்
கொத்துக்கொத்தாய் மனிதர்களை
கொன்றேதான் குவிக்கின்றது

வைரஸ் என்னும் விழியில் தெரியா சிறுகிருமி
வல்லவர்களைக் கூட விழிபிதுங்க வைக்கிறது
மானிடர்கள் கண்ட மதி நுட்பமெல்லாம்
பேரிடரில்க் கூடக் கைகொடுக்க மறுக்கிறது
மாளிகையில் வாழும் மகாராணி கூட
மனங்கலக்கம் இன்றி இருக்கவா விடுகிறது 
வீதியில் இருப்போரும் வீடுகளில் இருப்போரும்
வேறில்லை என்றேயது வினைகூறி நிற்கிறது

வீதியெங்கும் வாகனம் விரைந்து செல்கின்றது
கடைக்கண்ணி எங்கும் கலவரமாய் இருக்கிறது
காணும் பொருள்கள் எல்லாம் கூடையில் நிறைகின்றது
கண்மண் தெரியாமல் காசும் கரைகின்றது
வீடுகள் எங்கணும் விளைபொருளால் நிறைகின்றது
பள்ளிகள் இல்லாது பிள்ளைகளில் கூச்சலில்
பக்கத்து வீடும் பரிதவித்து நிற்கின்றது  

விண்ணுந்துப் பறப்பற்று வானம் இருக்கிறது
தொடருந்துத் தடமோ அதிர்வற்று இருக்கின்றது
வேகச் சாலைகளில் வேறெதுவும் செல்லவில்லை
அலைமோதும் கடைகளில் ஆளரவம் எதுவுமில்லை  
காணுமிடமெங்கும் கதவடைத்தே இருக்கின்றது
போர்க்கால நிகழ்வாய் புதுமையாய் இருக்கிறது

ஆனாலும்
இணையத்தளங்களும் இணையற்ற முகநூலும் 
தொலைபேசி என்னும் தொடர்பாடற் கருவியும்
திக்குத் திசையற்று நேர காலமற்று எப்போதும்
எல்லைகள் தாண்டியும் எதிரொலித்தபடியே
எண்ணிலடங்காது இயங்கிக்கொண்டே இருக்கின்றன

 

No comments:

Post a Comment