Tuesday 31 March 2020

அவனும் அவளும் - சிறிய கதை

                         

                                 ஒன்று

 காலைக் கதிரவன் கதிர்பரப்பிக் கடைவிரித்த பின்னும்கூட நயினி கட்டிலில் இருந்து எழுந்திருக்க மனமின்றி படுத்தே கிடந்தாள். எழுந்து என்னதான் செய்வது? இந்தப் பரபரப்பான பாரீஸ் நகரின் எல்லையான பொண்டி என்னும் இடத்தில் தான் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி வீடு அமைந்திருந்தது.  ஐம்பது குடும்பங்களாவது வசிக்கும் அக்கட்டடம் பிரதான வீதியிலிருந்து சற்று உள்ளே அமைந்திருந்ததால் எவ்வித வாகன ஓசைகளும் இன்றி அமைதியான பிரதேசமாகக் காணப்பட்டதனால் நாமாக அலாரம் வைத்து எழுந்தாலோ அல்லது நித்திரை முறிந்து எழுந்தாலோ அன்றி யாரும் இடைஞ்சல் தர மாட்டார்கள். முகுந்தன் காலை  ஆறுமணிக்கு எழுந்து வேலைக்குச் சென்றானென்றால்  மாலை ஐந்து மணிக்குத்தான் திரும்ப வருவான். அதுவரை அவதியாகச் சமைக்க வேண்டிய தேவையோ அல்லது கட்டாயம் உண்ணவேண்டிய தேவையோ அவளுக்கு இல்லை.
நயனி முகுந்தனைத் திருமணம் செய்து வந்து ஒன்றரை ஆண்டுகள்  ஆகிவிட்டன. பெற்றோர் பேசிச் செய்த திருமணம் தான். ஆளும் பார்க்கக் கறுப்பென்றாலும் களையாகவே இருந்தான். இராமநாதன் கல்லூரியில் நடனம் பயின்றுகொண்டிருந்தாலும் அவள்இன்னும் ஒரு ஆண்டுகள் பயின்றிருந்தால் பட்டதாரியாகி வெளியே வந்திருக்க முடியும். அவளின் அறிவற்ற விளையாட்டுச் செயல் வினையில் முடிந்து கடைசியில் இங்கும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது.
நயினியின் நெஞ்சில் இருந்து நீண்டதொரு பெருமூச்சு வெளியே வந்தாலும்கூட அவள் நடந்துபோன அந்த நிகழ்வைப் பற்றிப் பெரிதாக்க கவலை கொண்டதேயில்லை. கல்லூரிப்படிப்பு என்றால் சும்மாவா. அதுவும் கலைக் கல்லூரி என்றால் ஆண்களும் பெண்களும் அரட்டையிலேயே அரைவாசிநாட்கள் பறந்து போய்விடும். அவளின் சொந்தக் கிராமம் முல்லைத்தீவில் இருந்தாலும் இராமநாதன் கலைக் கல்லூரியில் இடங்கிடைத்ததும் அவளின் மகிழ்ச்சி கட்டற்றதாய் ஆனது. பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளரும் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மகிழ்ச்சிதான் அவளுக்கும் ஏற்பட்டது. வேறு மாணவிகளுடன் இணுவிலில் ஒரு வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் செல்வது புத்திய அனுபவமாக இருந்தது.
நடனத்துக்கு ஏற்ற அவளின் மெல்லிய உடல்வாகும் நீண்ட முடியும் களையான முகமும் அவளுக்கே தன்பால் ஈர்ப்பை ஏற்படுத்தி அவளை சஞ்சரிக்க வைத்தது. வீதியால் இருப்பது நிமிடம் நடந்து கல்லூரிக்குச் செல்லும் பாதையில் தன்னை அறியாமலே ஏற்படும் கர்வத்துடன் யாரையும் ஏறிட்டும் பார்க்காமல்த்தான் அவள் நடந்து செல்வாள். ஆனாலும் இந்தத் தர்சினிதான் அவள் மனதைக் கெடுத்தவள். தர்சினி வவுனியாவில் இருந்து வந்து நடனம் பயின்றுகொண்டிருந்தாள். இவளின் நிறம் இல்லாவிட்டாலும் அவளும் பார்க்க அழகாய்த்தான் இருந்தாள். எடி அவன் உன்னை வைத்தகண் வாங்காமல் பார்க்கிறான் என்று போகும்போதும் வரும்போதும் இவள் காதில் முணுமுணுக்கும்போது இவளுக்கு மகிழ்த்ச்சி ஏற்பட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாது பேசாமல் வாடி என்பாளேயன்றி நிமிர்ந்தும் யாரையும் பார்த்ததுமில்லை.
அதற்கும் ஒரு காரணம் இருந்தது. மூத்த பெண்ணான இவள்பால் தந்தை வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை தான் கெடுக்கக் கூடாது என்றுதன் மனதில் ஏற்படுத்தியிருந்த எண்ணம் வலுவாக மனதில் பரவியிருந்ததும் ஒரு காரணம். இவளும் ஒரு தம்பியும் மட்டுமே குடும்பத்தில். தந்தை எப்போதுமே இவளை திட்டி இவள் அறிந்ததில்லை. ஆனாலும் அடிக்கடி இவளுக்கு புத்திகூறியபடியே இருப்பார். இவள் அழகாயிருந்ததும் அதன் காரணம். இந்தக் காலத்தில் யாரையுமே நம்ப முடியாது அம்மா. கவனமாக இருந்துகொள்ளுங்கோ. உங்களுக்கு ஒண்டு என்றால் நாங்கள் ஒருத்தரும் உயிருடன் இருக்கமாட்டம் என்று அவர் சாதாரணமாகக் கூறினாலும் தன்மீது தந்தை வைத்துள்ள ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடுதான் அது என்றதும் அவள் அறிந்ததுதான்.
செந்தூரன் பாவம்டி. நீ அவனைத் திரும்பியும் பார்க்கிறாய் இல்லை சரியாய்க் கவலைப் பட்டவன் என்று தர்சினி  கூறும்போதெல்லாம் அப்ப நீயே அவனைக் கலியாணம் கட்டடி என்று  கூறிவிட்டு எவ்வித உணர்ச்சியுமற்றிருப்பாள். அவன் எவ்வளவு நல்லவன். என்னை அவன் பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓமெண்டு சொல்லிப்போடுவன் என்று தர்சினி கூறும்போதும் இவள் அசையவே மாட்டாள்.
வார இறுதி நாட்களில் பக்கத்து வீடுகளில் சைக்கிளை வாங்கிக்கொண்டு இருவரும் ஊரைச் சுற்றி வருவார்கள். சிலவேளை மற்றைய வீடுகளில் வசிக்கும் சிநேகிதிகளும் சேர்ந்து கோவில்களுக்கோ அல்லது சினிமா பார்க்கவோ போவதோடு சரி. அன்றும் அப்பிடித்தான் காரைக்காய் சிவன் கோவிலுக்கு இன்று போய் வருவமாடி என்று தர்சினி கூற இவளுக்கும் பொழுதுபோக வேண்டும் என்று ஒரு சைக்கிளில் இவளையும் பின்னால் ஏற்றிக்கொண்டு தர்சினி கோவிலுக்குப் போகிறாள். காரைக்கால் சிவன் கோவில் ஒரு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. திருவிழாக் காலங்களில் மட்டும்தான் சனத்தைப் பார்க்கலாம். மற்றப்படி வெறிச்சோடிக் கிடைக்கும். ஆனால் முன்னால் பரந்துவிரிந்திருக்கும் அரசமர நிழல் நல்ல குளிர்மையைத் தந்து கொண்டிருக்கும். கோவிலைச் சுற்றியும் பல மரங்கள் இருப்பதனால் சோலையாகக் காட்சி தரும்.  
கோவில் திறந்துதான் இருந்தது. ஆனாலும் ஐயரைத் தவிரக் கோவிலில் ஆட்களே இல்லை. எல்லா விளக்குகளும் போடாமல் .. நயனிக்குக் கோயிலுக்கு வந்ததுபோலவே இல்லை. என்னடி அரிச்சனை ஏதும் செய்யப்போறியோ என்று தர்சினியைக் கேட்க, இல்லையடி சுத்திக் கும்பிட்டுவிட்டுப் போவம் என்றபடி ஒருதரம் உள் வீதியைச் சுற்றிவிட்டு வெளியே வருகின்றனர். வெளியே வந்து செருப்பைப் போட்ட போதுதான் பார்த்தால் பக்கத்தில் செந்தூரன் இவளை பார்த்தபடி நிற்பது தெரிகிறது. இவள் மனம் பதட்டமாக உடனே திரும்பினால் பக்கத்தில் தர்சினியைக் காணவில்லை. நயனி பயப்பிடாதையும். உம்மை நான் கடிச்சுத் திண்ணமாட்டன் என்கிறான் அவன். அவள் பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்து என்ன விளையாட்டு இது என்கிறாள். அவன் முகம் சிரிப்புடன் அழகாகத்தான் இருக்கிறது என்று இவள் மனம் எண்ணினாலும் அதை முகத்தில் காட்டாது கடுகடு என்று வைத்துக்கொண்டு என்னட்டை உந்த விளையாட்டு ஒண்டும் வேண்டாம். நான் போறன் என்றபடி அவள் நடக்கவாரம்பிக்க, அவன் அவள் கைகளை பிடித்து கைகளில் ஓர் கடிதத்தை வைத்துவிட்டு அவசரப்பட்டு ஏதும் திட்டிடாதையும் நயனி. எனக்கு உங்களை நல்லாப்பிடிச்சுப் போச்சு. கடிதத்தைக் கசக்கி எறியாமல் கொண்டுபோய் தனியா இருந்து வாசிச்சுப் பாரும். உமக்கு விருப்பமில்லை எண்டால் நான் உம்மைத் தொந்தரவு செய்யமாட்டன். என்றபடி அவள் கைகளை விட்டுவிட்டுப் போன பிறகும் கூட அவன் கைகளை பிடித்திருப்பதாகவே மனம் எண்ணியது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுக் கடிதத்தை சட்டைக்குள் வைத்துவிட்டு வெளியே தெரிகிறதா என்று தடவிப் பார்த்துவிட்டு தர்சினி எங்கே நிற்கிறாள் என்று தேடினால் அவள் சிரித்தபடி வந்துகொண்டிருந்தாள்.


                                                            இரண்டு
 
என்னடி செந்தூரனைக் கலைத்துப் போட்டாய் போல என்ற கேள்விக்கு உமக்கேன் தர்சினி தேவையில்லாத வேலை. யாராவது பாத்திருந்தால் எனக்குத்தான் கெட்ட பெயர் என்று கோபித்தபடி நடக்கத் தொடங்க, நயனி நீர் இரண்டு நாள் அவனோட கதைச்சுப்பாரும். உமக்கு கட்டாயம் அவனைப் பிடிக்குமப்பா. ஒருதரும் பாக்கக் கூடாது எண்டுதான்  உம்மை இங்க கூட்டிக்கொண்டு வந்தனான். அவனுக்கு என்ன குறை. அவன்  சொந்தமாக்  கடை வச்சிருக்கிறான். பெட்டையளிட்டை வழியிற கேசுமில்லை. ஆகத்தான் பிகுபண்ணிறீர் என்றுவிட்டு சேர்ந்து நடக்கிறாள் நயனியுடன்.
வீட்டுக்கு வந்த பிறகும் அவளுக்கு கடிதத்தைத் திறந்து படிக்கப் பயத்தில் படபடப்பை கஸ்டப்பட்டு அடக்கியபடி காத்திருக்கிறாள். ஏன் நான் அவனிடம் வாங்கினேன் எனக்கும் அவனைப் பிடிக்குதோ என்று மனதுள் இரகசியமாகக் கேட்டபடி "தலை இடிக்குது" என்று கூறியபடி பாயை விரித்துப் படுப்பவளைப்  பார்த்துக் கொடுப்புள் சிரித்தபடி தர்சினி " நான் பக்கத்துவீட்டு விமலா அக்கா வீட்டை போட்டு வாறன்" என்று சொல்லியபடி கதவைச் சாத்திக்கொண்டு போகிறாள்.  தர்சினியின் காலடி ஓசை மறைந்த பின்னும் கண்ணைத் திறக்காது கிடக்கிறாள் நயினி. ஒரு ஐந்து நிமிடத்தின் பின்னர்தான் படபடப்புக் குறைந்து போக எழுந்து கதவைத் திறப்பால் பூட்டிவிட்டு கடிதத்தை எடுத்து விரிக்க குப் என்று வியர்த்துக் கைகள் நடுங்குகின்றன.
அன்பே உன் நினைவு தினமும் சுடுகிறது
நித்தமும் உனைப்பார்த்து நின்மதி கொள்ள
முகம் காட்ட முனையாது நிலவுபோல் மறைகிறாய்.
என் நின்மதி தொலைத்துவிட்டு  நீமட்டும்
நின்மதியாய்த் தினமும் தூங்குகிறாய்
நெருப்பிடை நிற்பதுவாய் நான் தினம்
உன் நினைவில் நான் வெந்துபோகிறேனடி
என்னைக் கரைசேர்க்க மாட்டாயா காதலியே
என்று கவிதை முடிந்திருக்க இதயத்தின் படபடப்பு இரட்டிப்பாக கால்கை சோரப் பாயில் அமர்கிறாள். கதவு தட் டப்படும் சத்தம்கேட்டு திடுக்குற்று எழுந்து கதவைத் திறந்தவள் தர்சினியைக் கண்டதும் தலையைக் குனிகிறாள். என்னடி அவன்ர கடிதத்தை வாசிச்சிட்டியா என்பவளை, எப்படித் தெரியும் என்ற கேள்வியோடு நிமிர்ந்துபார்க்க, நீ கடிதத்தை வாசிச்சு முடிக்கட்டும் என்று தான் நான் வெளியில போனனான் என்று தர்சினி கூற உனக்குத் தெரிஞ்சிட்டுதா என்றபடி முகம் சிவக்க நண்பியை நிமிர்ந்து பார்க்க முடியாமால் தலை குனிகிறாள் நயனி.
பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவளை முகுந்தனின் தொலைபேசி அழைப்பு நிகழ்வுக்கு கொண்டுவர சொல்லுங்கோ என்கிறாள். இன்னும் படுத்திருக்கிறீரோ? எழும்பும் என்ற அன்பான குரலில் நெகிழ்ந்தவள் எழும்பீற்றன் என்றபடி போனை காதில் வைத்தபடி எழுகிறாள். காலையில கட்டாயம் சாப்பிடவேணும். தேத்தண்ணியைக் குடிச்சிட்டு பாணைச் சாப்பிட்டிட்டு அக்கா வீட்டை போறதெண்டால் போம். அல்லது இருந்து டிவி பாரும் நான் இண்டைக்கு நாலு நாலரைக்கு வந்திடுவன். பிள்ளையார் கோவிலுக்குப் போவம் என்றபடி போனை வைக்க இவள் எழுந்து பல் விளக்கப் போகிறாள். டீவியை எத்தனை நாட்களுக்குத்தான் பாக்கிறது. எதுக்கும் மச்சாள் வீட்டுக்கே போவம் என்று எண்ணியபடி உடுப்பை மாற்றுகிறாள்.
முகுந்தனின் அக்காவும் இரண்டு கட்டடங்கள் தள்ளிதான் வசிக்கிறாள். மிகவும் நல்லவள். நயனியை தன்  சொந்தத் தங்கையைப் போலவே நடத்துபவள். முக்கியமாய்க் கள்ளங்கபடம் அற்றவள். அவள் கணவனும் நல்லவன்தான். இரண்டு பிள்ளைகள். பிள்ளைகளை பள்ளிக்கூடம் விட்டுவிட்டுக் கணவன் வேலைக்குச் செல்ல அவளுக்கும் பொழுது போகாதுதானே. தம்பியின் மனைவியை தன் வீட்டுக்கு கூப்பிட்டு வைத்துக்கொள்வாள். மற்றைய மச்சாள்மார் போல் இல்லாமல் தம்பி மனைவியை, அவளின் அழகைத் தம்பிக்கு முன்னாலேயே பாராட்டுவதில் இவளுக்கும் அவளை நன்கு பிடித்துவிட்டது.  முகுந்தனின் தமக்கையின் வீடு சொந்த வீடு. ஆனாலும் தம்பியையும் மனைவியையும் தன்னோடு வைக்குமளவு வசதியற்றவீடு. ஆனாலும் தான் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே தம்பியையும் ஒரு அறையில் வசிக்கச் செய்திருந்தாள். கொஞ்சநாள் அங்கேயே இருந்துகொண்டு ஒரு வீட்டை நீயும் வாங்குதம்பி என்றதும் முகுந்தனுக்கும் மகிழ்ச்சிதான். ஒரு அறையினுள்ளேயே எல்லாம். குசினி சரியான சின்னன்தான் என்றாலும் ஒருநேரம் இரண்டு கறியும் சோறும் சமைக்க அது போதும் தானே.
நயனிக்கு என்ன குறை எண்டால்  ஒரு நல்ல போன் இல்லை எண்டதுதான். வைத்திருக்கும் போனில் அவன் போன் செய்வான்.  அல்லது தமக்கை போன்செய்வாள். அவனிடம் ஸ்மாட்ப்போன் இருந்தாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட வரையறைகளுடன் தான்.  ஞாயிற்றுக் கிழமைகளில் அவனின் போனில் இருந்து பெற்றோருடன் கதைப்பதோடு சரி. மகளுடன் கதைப்பதற்காக அவளின் தந்தை ஒருபோனை வாங்கி வைத்திருந்தார். கொஞ்சம் பொறும். இன்னும் ஆறேழு மாதங்களில உமக்கு இரண்டு வருஷம் முடிஞ்சு 5 வருட விசா தந்திடுவாங்கள். சொந்த வீடும் வாங்கிடலாம். அதுக்குப் பிறகு குஞ்சுக்கு ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித்தாறன் என்று கூறுபவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு எதுவும் கேட்பதில்லை. என்னை சந்தோஷமாக வைத்திருக்கத்தானே இதெல்லாம் செய்யிறார் என்று மனதை சமாதானம் செய்துகொள்வாள்.
முகுந்தனின் தமக்கையின் வீட்டில் கணனி ஒன்று இருக்கிறது. அக்காவுக்கு கணனியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் இல்லை. அத்தான் காரன் தான் அதை பயன்படுத்துவது. மற்றப்படி பிள்ளைகள் விளையாடுவதற்குப் பயன்படுத்துவதோடு சரி. இப்ப நயனிகூட அதை பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டாள். அதற்கு காரணம் அவள் பிரெஞ்சு மொழியைக் கற்க வாரத்தில் இருநாட்கள் பள்ளிக்குச் சென்று வருகிறாள். அங்கு ஒரு மணி நேரம் கணனி வகுப்பும் இருக்கின்றது. அங்கு வரும் இன்னொரு யாழ்ப்பாணப் பெண்தான் இவளுக்கு முகநூலை அறிமுகப்படுத்தியது. தட்டுத்தடுமாறி ஒருவாறு முகநூல் போய் வருவதற்கும் பழகிவிட்டாள். முகுந்தனின் அக்கா வீட்டில் இருக்கும் கணனியினால் நயனிக்கு பொழுது போவதே தெரிவதில்லை.
அந்த மாதம் வழமையாக வரும் மாதவிடாய் வராது நின்றுபோய் ஏழு வாரங்கள் தாண்டிய பின்னர்தான் அவளுக்கு உறைத்தது. கணவனிடம் கூறியவுடன் அவன் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை. ஆனால் இவளின் மகிழ்ச்சியற்ற முகம் பார்த்து என்ன உமக்கு சந்தோசமில்லையோ என்றான் முகுந்தன். "எங்கட சொந்த வீட்டிலதான் எங்கள் முதல் குழந்தை பிறக்கவேணும். இந்த இட்டுமுட்டான அறையில என்ன செய்யிறது" என்று அவள் கேட்பதுகூட  முகுந்தனுக்கும் சரியாகப் பட, அப்ப என்ன செய்யிறது என்று பரிதாபமாக அவளைக் கேட்கிறான். அக்காட்டைச் சொல்லாதேங்கோ. டொக்டரிட்டை நான் கதைக்கிறேன் என்று கெஞ்சுபவளை மறுப்பதற்கு அவனால் முடியவில்லை. கலியாணங் கட்டி முதல்முதல் தங்கிய பிள்ளையை அழிப்பதற்கு அவளுக்கு கூட மனமில்லைத்தான். ஆனால் வேறுவழியில் இல்லை என்று மனதை அவனும் அவளும் தேற்றிக்கொண்டனர்.


                                                                   மூன்று


இது நடந்து நான்கு மாதங்கள் இருக்கும். அவள் தமக்கையின் வீட்டில் கணனியில் மும்மரமாக இருந்தாள். முகுந்தன் இன்று வெள்ளண வருவதாகவும் அவளை போன் வாங்கக் கடைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூற அவளுக்குத் தலைகால் புரியவில்லை. அவனுக்கு இன்னும் சமைக்கவில்லை. தமக்கையிடம் போட்டுவாறன் மச்சாள் என்று கூறியபடி அவளின் பதிலுக்கும் காத்திராமல் செல்பவளை முகுந்தனின் தமக்கை அதிசயமாகப் பார்த்தாள். நயனி சமைத்து வைத்துவிட்டு அவனின் வருகைக்காகக் காத்திருந்தால் ஆறுமணியான பின்தான் அவன் முகத்தில் சோர்வோடு வந்து சேர்ந்தான். வெளிக்கிடட்டோ  என்று கேட்டதுக்கும் சொறி நயனி இண்டைக்குப் போகேலாது கடை பூட்டிவிடும். எனக்கும் சரியாத் தலையிடிக்குது என்று கூறுபவனை ஏமாற்றத்தோடு பார்த்தபடி சாப்பிடுறியளோ என்றாள். இல்லை வேண்டாம். நான் குளிசை போட்டுட்டுப் படுக்கப் போறன் என்றபடி அவளின் பதிலுக்குக் காத்திருக்காது குளியலறை சென்று முகம் கழுவி வந்து படுக்க, நயனி என்ன செய்வது என்று தெரியாது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்கவாரம்பித்தாள்.
அடுத்தநாள் காலை முகுந்தன் நயனிக்குச் சொல்லாமலே வேலைக்குச் சென்றிருந்தான். அவளுக்கு மனதை எதோ பிசைய காலை உணவை உண்ணாமல் தமக்கை வீட்டுக்குச் சென்றால் தமக்கை வாரும் நயனி. விடியச்  சாப்பிட்டிட்டே வாறீர். இண்டைக்கு ராசவள்ளிக் களி செய்தனான் கொஞ்சம் சாப்பிடுமன் என்றதும் தாங்கோ என்று வாங்கிக்கொண்டு கணனியின் முன் அமர்ந்தாள். கணனி வேலை செய்தாலும் இன்டநெட் வேலை செய்யவில்லை. மச்சாள் இது ஏன் வேலை செய்யுதில்லை என்று கேட்க, பிள்ளைகள் எதோ செய்துபோட்டுதுகள். இனி சனிக்கிழமைதான் தம்பி அல்லது இவர் திருத்தவேணும் என்றுவிட்டு தொலைக்காட்சித் தொடரைப் பார்க்கவாரம்பிக்க இவளும் அதில் அமர்ந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
முகுந்தன் அன்று சாப்பிட்டீரோ என்று போன் செய்யாதது அவளுக்கு ஒருவித நெருடலை ஏற்படுத்த தானே அவனுக்குப் போன் செய்தாள். போன் நிப்பாட்டியிருந்தது. ஆருக்கு அடிக்கிறீர் என்று  முகுந்தனின் தமக்கை கேட்க இவருக்குத்தான் என்றாள். அவன் வேலை நேரத்தில ஆரோடையும் கதைக்கிறதில்லையே  என்று தமக்கைக்கூற சரி பின்னேரம் வரும்போது கேட்போம் என்றபடி வீட்டுக்குச் செல்ல ஆயத்தமானாள். அங்க போய் என்ன செய்யப்போறீர் தம்பி வந்தபிறகு இரண்டுபேரும் இங்கேயே சாப்பிடுங்கோவன். நான் நண்டு சமைக்கப்போறன் என்றதற்கு நேற்றும் இவர் இரவு சாப்பிடேல்லை மச்சாள். சாப்பாடு அப்பிடியே கிடக்கு. நானும் படுத்திட்டன். நித்திரையும் சரியாக கொள்லேல்லை. கொஞ்ச நேரம் படுக்கப் போறன் என்றுவிட்டுக் கிளம்பி வீட்டுக்கு வந்து படுத்தவள் முகுந்தன் வந்து எழுப்பும் வரைக்கும் எழும்பவேயில்லை.
நான் உங்களுக்குப் போன் செய்தனான். ஏன் எடுக்கவில்லை என்று கொஞ்சலாகக் கேட்டாள். இண்டைக்கு சரியான வேலையப்பா. அதுதான் போன் செய்ய ஏலாமல் போச்சு.ஆனால் குஞ்சுக்கு ஒரு சப்பிறைஸ் வச்சிருக்கிறன் என்றான். என்னவென்று அவள் கேட்க்காமலே அவனே சொல்லட்டும் என்று அவளும் பேசாமல் இருந்தாள். என்ர பேரில ஆறு பரப்புக்காணி அம்மா வாங்கி விட்டவ எல்லா. அதை நான் போய் வித்துப்போட்டு  வரப்போறன். அந்தக் காசையும் போட்டு அடுத்த மாதமே இங்க ஒரு வீடு பாத்திருக்கிறன். அதை வாங்கப் போறன். அதில நீர் மகாராணிமாதிரி இருக்கப்போறீர் என்றுவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான். நானும் போன் ஏதோ வாங்கிவந்தனான் என்று சொல்லப்போறீங்கள் என்று நினைச்சன் என்று சந்தோசமற்றுச் சொல்ல, இன்னுமொன்றும் இருக்கு. இன்னும் இரண்டு நாளில நானும் நீரும் ஊருக்குப் போறம் என்றதும் அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன.
அவன் கூறியதை நம்ப முடியாவிட்டாலும் அவன் அவளை அழைத்துச் சென்று அவள் தந்தைக்கு, தம்பிக்கு, தாய்க்கு என்றும் தன் தாய், சகோதரி பிள்ளைகளுக்கு என்று பொருட்கள் வாங்கியதும் நம்பத்தான் வேண்டியிருந்தது. அவளின் மகிழ்ச்சி எல்லைகளற்றிருந்தது. ஆனாலும் தமக்கை வீட்டுக் கணனி வேலை செய்யாதது  மிகுந்த எரிச்சலையும் தந்தது. தர்சினியைக் கட்டாயம் பார்த்து வரவேண்டும் என்று மனதில் எழுந்த ஆசை கணனி இன்மையால் நிராசையாகிவிடுமோ என்னும் பதற்றமும் சூழ்ந்துகொண்டது. அடுத்தநாள் பள்ளிக்கூடம் சென்று அந்த யாழ்ப்பாணப் பெண்ணிடம் தங்கள் வீட்டுக் கணனி வேலை செய்யவில்லை. இங்கு எப்படி முகநூலுக்குச் செல்ல முடியும் என்று கேட்டவுடன் அப்பெண் தன் போனைநீட்டி இதில் போம் என்றதும் தலைகால் புரியவில்லை. ஆனாலும் அந்தப் பெண்ணின் போனில் முகநூலை ஒருவாறு திறந்து தர்சினியின் முகநூலில் தான் நாட்டுக்கு வரும் விபரம் கூறி அவளின் தொலைபேசி எண்ணை தன் முகநூல் மெசெஞ்சருக்கு  அனுப்பும்படி எழுதிவிட்டு வந்த பின்தான் சிறிது நின்மதி ஏற்பட்டது. செந்தூரனுக்கு அவள் ஊருக்கு வரும் விடயத்தைக் கூறவே முனையவில்லை. அதற்கு காரணம் அவன் தன்னைப் பார்க்கவென்று திடுதிப்பென்று வந்துவிடுவானோவென்ற பயம்தான். அடுத்தநாள் முகுந்தன் வீட்டிலேயே நின்றதனால் அவளால் சாட்டுச் சொல்லிவிட்டு வெளியே செல்லவும் முடியாதிருந்தது.
விமானத்தில் அவனருகில் இருந்தாலும் மனம் முழுதும் ஊரில் இருப்பவரை நினைத்து வட்டமிட்டது. உன் பெற்றோருக்கு கூறவேண்டாம். அவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் நேரில் போய் நிற்போம் என்று முகுந்தன் கூறியதை அவளும் ஏற்றுக்கொண்டாள். விமானம் வானில் பறக்கவாரம்பிக்க அவளின் நினைவுகளும் பின்னோக்கிப் பறந்தன
வருவினம்


                                                                  நான்கு
 
செந்தூரனின் காதல் தாங்கி வந்த கடிதம் அவளுக்கு அவன்மேல் எல்லையற்ற மயக்கத்தை ஏற்படுத்த அடுத்த நாளே அவனைச் சந்திக்கவேண்டும் என்று தர்சினியூடாக ஒழுங்கு செய்து சந்திக்கவாரம்பித்து ஒரு மாதம் முடிய முன்னரே அவனை விட்டு இருக்க முடியாது என்னும் நிலை ஏற்பட்டுப் போன நிலையில்தான் அவளின் தந்தை திடுதிப்பென்று இவள் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்தார். உடனடியாகத் தன்னுடன் அவளை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தவரிடம் எந்த சாட்டும் எடுபடவில்லை. அடுத்த வாரம் திரும்ப வந்துவிடலாம் என்றவரிடம் எதுவும் கூற முடியாது தன் ஊருக்குச் சென்றிருந்த தர்சினியையும் பார்க்காது அவளிடமோ அல்லது செந்தூரனிடமோ எதுவும் கூற முடியாது, தந்தையுடன் கிளம்ப வேண்டியதாகிவிட்டது.  தந்தை வருவார் என்று தெரிந்திருந்தால் முதலே செந்தூரனுக்குக் கூறியிருக்கலாம். அவனைப் பார்க்காமல் இருக்கவேண்டும் என்னும் எண்ணமே எதுவோ செய்ய தந்தைக்குத்தெரியாது தர்சினிக்கு ஒரு கடிதத்தை விபரமாய் எழுதி அவள் பெட்டியில் வைத்துவிட்டுக் கிளம்பவேண்டியதாகிவிட்டது.
வீட்டுக்குச் சென்ற பின்னர் தான் தந்தை தன்னைக் கூட்டி வந்ததன் நோக்கம் தெரியவர அதிர்ச்சியில் மயக்கமே வந்தது. வெளிநாட்டு மாப்பிளை ஒன்று அவளுக்குச் சரிவந்திருக்காம். அந்தப் பெடியன் ஊர்ல தானாம் வந்து நிக்கிறான். ஒரு வாரத்தில கலியாணம் கட்டிப்போட்டுப் போய் அவளைக் கூப்பிடுவானாம் என்று தாய் மகிழ்வோடு சொல்ல இடி தன்மேல் விழுந்ததுபோல் நிலைகுலைந்துபோனாள் நயனி. அம்மா எனக்கு இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்லை என்று திரும்பத்திரும்பச் சொன்னபிறகும் அப்பா அவளருகில் வந்தமர்ந்து "அம்மா மூத்த பிள்ளை நீங்கள். நீங்கள் வசதியா வாழவேணுமெண்டுதான் நான் அந்த மாப்பிள்ளையைப் பாத்திருக்கிறன். என்பது வீதப் பொருத்தம் நல்ல ஆட்கள். வசதியான ஆட்கள். இவர் தான் கடைசிப்பிள்ளை. எண்டதாலை பொறுப்புமில்லை. நீங்கள் எந்தவிதச்சிக்கலும் இல்லாமல் நல்லாய் வாழுவீங்கள் அம்மா. என்று அவள் தலையைத் தடவி அப்பா கூறியபோது செந்தூரனைப் பற்றிக்கூற ஒருவீதத் துணிவுகூட ஏன் தனக்கு ஏற்படாமல் போனது என்று எண்ணியபடி விமான இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தவளை ஏன் நயனி அழுகிறீர் என்று கூறி முகுந்தன் தோளைத்தட்டி கேட்ட பின் தான் தன்னுணர்வுபெற்று எனக்குத் தலை சுற்றுகிறது  என்று பொய் கூறியபடி கண்களைத்துடைத்தபடி மீண்டும் கண்ணை மூடிக்கொண்டாள்.
 விமானத்தில் இருதடவைகள் உணவு பரிமாறப்பட்டும் அவள் தேநீரை மட்டும் குடித்துவிட்டு இருந்துவிட்டாள். பதினோரு மணி நேர பயணத்தின் பின்னர் அதிகாலையில் கட்டுநாயக்காவில் வந்திறங்கி வெளியே வந்தபின் ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு கோட்டைத் தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கு பிரயாணச் சீட்டை  எடுத்துக்கொண்டு தொடருந்துக்காகக் காத்திருக்க, நயனியின் மனமோ எப்படி செந்தூரனைச் சந்திப்பது என்பதிலேயே  இருந்தது.
இன்னும் அரை மணிநேரம் இருக்கு. நான் போய் ஏதும் வாங்கிவாறன் என்றுவிட்டு முகுந்தன் சென்றுவிட அவள் மனம் என்ன செய்யலாமென்று வழிகண்டுபிடிக்க முனைந்து தோற்றது. அவனைச் சந்திக்க முடிமா ? முகுந்தனுக்குத் தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடுமே. தர்சினியின் தொடர்பு கிடைத்தால் மட்டும்தான் அவளூடாக அவனைப் பார்க்க முடியலாம் என்று மனம் ஏதேதோ எல்லாம் எண்ணிக் குளம்பியது. தூரத்தில் இருக்கும்போது கட்டுப்பாடாய் இருந்த மனம் அருகே வந்து விட்டேன் என்றதும் எப்படித் துடிக்கிறது. இப்படி அவன் மேல் இன்னும் அன்பு இருப்பவள் எப்படி இன்னொருவனை மணக்கச் சம்மதித்தாய் என்று இடிக்கும் மனதுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் அவள் நிலையை நீடிக்க விடாது முகுந்தன் மாலு பண் , கடலை வடை, இடியப்பப் பார்சல், ஒரேஞ் பார்லி எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தான். இன்னும் உமக்குத் தலையிடி மாறேல்லையா என்றபடி பையை நீட்ட, பசி காரணமாக ஒரு மாலு பண்ணை எடுத்து உண்ணவாரம்பித்தாள்.

தொடருந்தினுள்ளும் இவளால் நின்மதியாக இருக்கவே முடியவில்லை. ஆயினும் தன் முகத்தில் இருந்து எதையாவது முகுந்தன் கண்டுகொண்டு விடுவானோ என்னும் பயத்தில் எத்தனை இயல்பாக இருக்க முடியுமோ இருக்க முயன்றாள். இடையில் ஒரு தரிப்பில் முகுந்தன் வாங்கிக்கொடுத்த தேநீர் மனக் கவலையை கொஞ்சம் மறக்கவைக்க, அவன் தோளில் சாய்ந்தபடி தொடருந்தின் ஆட்டத்தையும் மீறித் தூங்கிப்போனாள். அவன் அவளை எழுப்பியபோது அவர்கள் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர். அவன் அவளின் பயணப் பொதிகளையும் தானே தூக்கிக்கொண்டு கவனமா இறங்கும் என்று அக்கறையுடன் கூறியபடி இறங்கினான்.
இன்னும் முப்பது கிலோமீற்றருக்குக் கிட்ட இருக்கு அவளின் ஊருக்குச் செல்ல. பாரிஸில் இருந்தே வாகன ஒழுங்கு அவன் செய்திருந்ததனால் அவனுக்குத் தெரிந்த ஒருவரின் சிற்றுந்து அவர்களுக்காகக் காத்திருக்க, பொதிகளை பின்னால் வைத்துவிட்டு அவளையும் ஏறச் சொல்லிவிட்டு அவன் முன்னாள் ஏறி அமர்ந்தான். வெ யில் முப்பத்தைந்து பாகையில் கொதித்துக் கொண்டிருக்க அவன் மனதிலும் அதற்கு மேலால் வெப்பம் ஏற்பட்டதுதான் எனினும் என்னும் உன் நேரம் வரவில்லை என்று மனம் எச்சரிக்க அமைதியாக இருந்து ஓட்டுனருடன் அளவளாவியபடி தன் வெப்பத்தைக் குறைக்க முனைந்தான். இடையில் ஓரிடத்தில் நிறுத்தி உணவகம் ஒன்றில் நன்றாக உண்டுவிட்டு மூவரும் மீண்டும் வந்து ஏறிப் பயணத்தை ஆரம்பிக்க, உங்கள் வீட்டுக்கு நாங்கள் வாறது தெரியுமா என்றாள் நயனி. அக்காவிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட் டேன். உங்கள் வீட்டுக்கு  முதலில் போட்டு பிறகு இரண்டு நாளில எங்கட வீட்டை போவம் என்று கூறுபவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு கூசியது. முகுந்தன் எத்தனை அன்பாக என்னுடன் இருக்கிறார். நான் மனத்தால்க் கூட செந்தூரனை மீண்டும் நினைப்பது தவறுதான் என்று எண்ணினாலும் அவனைப் பார்க்கவே வேண்டுமென்னும் நினைப்பும் எல்லாவற்றையும்மீறி எழ, என்ன பெருமூச்சுவிடுறீர் என்றான் முகுந்தன்.  ஐயோ நான் என்னை கொஞ்சம் அடக்கிக்கொள்ள வேண்டும். என்னையறியாமலேயே நான் என்னைக் காட்டிக் குடுத்துடுவன் போல என்று எண்ணியவள் எல்லா நினைப்புக்களையும் தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளியே பராக்குப் பார்க்கவாரம்பித்தாள்.


                                                                 ஐந்து
 
இவளைக் கண்டதும் பெற்றோருக்கும் சகோதரனுக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும் சொல்லாமல் கொள்ளாமல் ஏன் வந்தார்கள் என்னும் கேள்வி தந்தை மனதில் ஓடவே செய்தது. ஆனாலும் மருமகனின் முகத்தில் எந்தக் கடுமையும் இல்லாதபடியால் அவர் நீண்ட நாட்களாகக் காணாத மகளைக் கண்ட மகிழ்ச்சியில் வாயெல்லாம் பல்லாக மாப்பிள்ளையுடன் கதைக்கவாரம்பித்தார். மகள் உடலில் தசை சிறிது கூடி பார்ப்பதற்கே அழகாக இருப்பதைக் காணத் திருப்தியும் ஏற்பட்டது.
அடுத்த நாட் காலை, "வெளிக்கிடும் நயனி. வத்தாப்பளை அம்மன் கோவிலுக்குப் போட்டு வருவம்" என்று கூற, அவளும் குளித்து முடித்து பஞ்சாபியைப் போடட்டே என்று முகுந்தனிடம் கேட்கிறாள். சேலை தான் உமக்கு இன்னும் அழகு. கோவிலுக்கு  நங்கள் ஓட்டோவில போறம் அதாலை பயப்பிடாமல் நல்ல சீலையை  உடு த்துக்கொண்டு வாரும் என்கிறான். அழகிய நீலநிறச் சேலையில் அவளைக் காண முகுந்தனுக்குகே கண்கலங்குகிறது. அழகிதான் இவள். இருந்தும் என்ன பயன் என்று மனம் எண்ணுகிறது.  நானும் அக்காவோட போறன் என்று கூறும் தம்பிக்கு அவள் வாடா என்று சொல்ல முதல் "இன்னொரு நாள் நீங்களும் வாங்கோ. இண்டைக்கு நாங்கள் ஒரு வேண்டுதலை நிறைவேற்றப் போறம்" என்று கூறும் முகுந்தனை எனக்குத் தெரியாமல் இவருக்கு என்னவேண்டுதல் என்று ஆச்சரியமாகப் பார்க்கிறாள் நயனி.
கோவிலைச் சென்றடைந்தபோது சனமே கோயிலில் இல்லை. இப்போதெல்லாம் கோவில்களுக்குப் போவதிலும் பார்க்க நிறையச் சோலிகள் மனிதர்களுக்கு. விசேட தினங்கள் என்றால்கூட முன்புபோல் சனங்கள் வருவதில்லை. இன்று சனங்கள் அதிகமில்லாதிருப்பதும் நல்லதுதான் என நினைத்தபடி முகுந்தன் இறங்கி கோவிலுக்குச் செல்ல முதல் தன் போனில் யாருடனோ கதைக்கிறான். "என்னடா எல்லாம் ஓகேயா? கோவிலுக்கு உள்ளேயா நிற்கிறீர்கள்" என்று மட்டும் கேட்டுவிட்டு, வாரும் என்று நயினியைப் பார்த்துக் கூறியபடி செல்கிறான். அவனின் நண்பர்கள் யாரையோ இங்கு வரும்படி கூறியுள்ளான் போல என எண்ணியபடி பின்தொடர்ந்து சென்றவள், கோவிலினுள்ளே சென்றதும் அங்கு நின்றவனைக் கண்டதும் திடீரென  மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவள் போல் மனம் பதைத்து தேகம் நடுங்க மேற்கொண்டு நடக்கமுடியாது அப்படியே நின்றாள். அவளைத் திரும்பிப் பார்த்த முகுந்தன் வாரும் நயினி என்று அவளுக்குக் கிட்டச் சென்று "நான் தான் செந்தூரனை இங்கே வரவளைத்தேன்" என்றதும் அவளுக்கு கண்கள் இருண்டு கொண்டு வர விழாதிருக்க சுவரைப் பிடித்துக்கொண்டாள்.
செந்தூரனுக்கும் எதுவும் புரியவில்லை. இரு நாட்களுக்கு முன்னர் முகநூல் மெசெஞ்சரில் தான் இங்கே வருவதாகவும் இந்தக் கோவிலில் இத்தனை மணிக்கு நீங்களும் வாருங்கள் கதைப்போம் என்று நயனி எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டு அவளை ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் காணும் ஆவலுடன் வந்திருந்தவனுக்கு, அங்கு நயினி கணவனுடன் வந்திருந்ததே அதிர்ச்சியாக இருக்க மலங்கமலங்க விழித்தபடி என்ன அடுத்துச் செய்வது என்று எண்ணியபடி நிற்கிறான். அவள் கணவனே தன்னை வரவழைத்தேன் என்று கூறியது ஆச்சரியத்தையும்  அதிர்வையும் பலமடங்கு ஏற்படுத்த, என்ன சொல்லி இந்த நிலையைச் சமாளிக்கலாம் என எண்ணமுன்னரே  இரண்டுபேரும் வந்து இதில இருங்கோ என்று கூற, வேறுவழியின்றி இருவரும் வந்து தலை குனிந்தபடி அமர்கின்றனர்.
இரண்டு பேருமா சேர்ந்து இதை வாசிச்சுக்கொண்டிருங்கோ. நான் வாறனென்று ஒரு என்வலப்பைக் கொடுத்துவிட்டு நண்பனையும் அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறான். 
"உங்கள் இரண்டு பேருக்கும் இதை  நம்பமுடியால்த்தான் இருக்கும். ஆனால் எனக்கு ஏற்பட்டது அதிர்ச்சியும் ஏமாற்றமும். நயினி அக்கா வீட்டில கணனியைப் பாவிச்சுப்போட்டு நிப்பாட்ட மறந்துபோனா. அதை தற்செயலாக என் அக்கா பார்க்க நேர, அவ அவசரப்பட்டுக் கோபப்படாமல் என்னைக் கூப்பிட்டுக் காட்டினா".
"இன்னும் நான்கு மாதத்தில எனக்கு ஐந்து வருட விசா கிடைத்துவிடும். அதுக்குப்பிறகு என்னை விவாகரத்துச் செய்திட்டு உங்களை ஊர்ல வந்து திருமணம் செய்து பிரான்சுக்கு கூப்பிடுவதாகவும் நயினி எழுதியிருந்ததையும்,  உங்கள் மேல் இன்னும் இருக்கிற காதலாலதான் வயிற்றில வந்த பிள்ளையை அழித்ததாகவும் இவ உங்களுக்கு எழுதியிருந்ததை மட்டுமில்லை நீங்கள் மூன்று மாதங்களாகக் கதைத்த எல்லாத்தையும் நான்மட்டுமில்லை அக்காவும் வாசிச்சிட்டா. நீங்கள் இரண்டுபேரும் காதலிச்சது தவறில்லை. அதுக்குப் பிறகு இவை என்னைக் கட்டினதுகூடத் தப்பில்லை. ஆனால் என்னோட தொடர்ந்தும் குடும்பம் நடத்திக்கொண்டு என்னை ஏமாற்றத் திட்டம் போட்டதுதான் தப்பு."
"நான் இவவை நூறு வீதம் நம்பி என் மனைவி என்ற  உண்மையான அன்போடதான் நடத்தினனான். இவ பெற்றோரை எதிர்த்து உங்களைக் கலியாணம் செய்திருக்கவேணும். அது நடக்கேல்லை என்றதும் எனக்காவது உண்மையா இருந்திருக்கவேணும். அதைவிடப் பெரிய தவறு குழந்தையை அழிச்சது. எவ்வளவு நம்பிக்கையோட நான் இவவோட வாழ்ந்துகொண்டிருக்க, என்னோட வாழ்ந்துகொண்டே ஆறுமாதத்துக்குப் பிறகு என்னை விவாகரத்துச் செய்திட்டு உங்களைக் கலியாணம் செய்யப்போவதாக எழுதின பிறகு நான் இவவை மன்னிச்சு இவவோடை வாழமுடியாது. இவவை மட்டும் இங்கை அனுப்பியிருக்கலாம். ஆனால் இவ இங்க வந்து என்னில பழியைப் போட்டுவிட்டுத் தப்பிவிடுவா. அதுக்கு இடங்குடுக்கக் கூடாது எண்டும் தான் நானும் வந்தது. இப்ப நீங்கள் இரண்டுபேரும் கலியாணம் செய்து கொண்டு சந்தோசமா வாழுங்கோ. பக்கத்தில இருக்கிற பையில மாலையும் தாலியும் இருக்கு. என்னை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க ஏலாது. நான் நயினியின் பாஸ்போட்டையும் ரிக்கரையும் கூட எடுத்துக்கொண்டு போறன்". என்று முடிந்திருக்க விம்மி விம்மி அழும் நயினியை எப்படித் தேற்றுவது என்று தெரியாது என்ன செய்வது என்றும் தெரியாது செந்தூரன் திகைத்துப்போய் அமர்ந்திருக்கிறான்.............
 
 
 

 

No comments:

Post a Comment