Tuesday 29 December 2020

நான் வசந்தன் - சிறுகதை அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும்  வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது.

நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப் பின்னர் இப்பிடிப் படுத்தபடியே பார்த்து இரசிக்க முடியும் என்று ஒரு இரு மாதங்களுக்கு முன்புவரை நான் கனவில் கூட எண்ணியதில்லை.

அம்மா அப்பா தங்கை எல்லோரையும் விட்டுவிட்டு இந்த அறைக்கு நான் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. வீட்டில் இடம் இல்லாமலோ அல்லது அம்மா அப்பாவோட பிரச்சனை என்றோ நான் வீட்டை விட்டு வரவில்லை. எத்தினை நாட்களுக்குத்தான் அவைக்கு என் விடயம் தெரிஞ்சிடுமோ தெரிஞ்சிடுமோ என்று பயந்து பயந்து இருக்கிறது. மற்றவைக்காக என் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் ஏன் நான் விட்டுட்டு இருக்கோணும்.

சிலநேரம் அம்மாவோ அப்பாவோ என் பிரச்சனையைச் சொன்னால் விளங்கிக்கொண்டிருப்பினம் தான். ஆனால் சொன்ன பிறகு அவை அதிர்ச்சியில ஏதும் சொல்லிவிட்டால் என்னால அதைத் தாங்கேலாமல் இருந்திருக்கும். அதால நான் எடுத்த முடிவு சரிதான் என்று என் மனம் சொன்னதை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

நான் வசந்தன். வயது 24. நல்ல உயரமான ஆண் அழகன். என்னைப் பற்றி  நானே பீத்திறன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. என்னோட கதைக்க ஆசைப்படும் பெண்களை வரிசையில் நிக்கவைக்கலாம். நான் கேட்காட்டிக் கூட பெண்கள் விடாமல் என்னைத் துரத்தினால் நான் அழகன் தானே. ஆறடிக்கு மேல் இருப்பேன். தலை நிறைந்த அடர் முடி. கருப்பும் இல்லாமல் மா நிறமும் இல்லாமல் நல்ல ஒரு நிறம் எனக்கு. அம்மாவின் நிறம் தான் நீ என்று என் தங்கை குறைப்பட்டுக்கொள்வாள். அதற்குக்  காரணமும் இல்லாமல் இல்லை.

பெண் பிள்ளைகள் வெள்ளையாக இருந்தால் தானே எங்கள் பெடியளுக்குப் பிடிக்கும். என் தங்கையோ அப்பாவைப் போல கருமை நிறம். அதற்காக அவளுக்கு என்னிலோ எனக்கு அவளிலோ எள்ளளவும் எரிச்சலோ கோபமோ இருந்ததில்லை. என்னிலும் பார்க்க என்றுதான் சொல்லமுடியும்…. அவளுக்கு என்னில் அளவுகடந்த பாசம். ஒருநாள் கூட பகிடிக்குத் தன்னும் நான் அவளின் நிறம்பற்றிக் கதைத்தது கிடையாது. அம்மாதான் திவாவுக்கு உன்ர நிறம் வந்து உனக்கு அப்பாவின்ர  நிறம் வந்திருக்கலாம். ஆம்பிளையள் கறுப்பாய் இருக்கிறதுதான் களை என்று  தங்கை இல்லாத நேரம் என்னிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டும்போது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு என்னம்மா கதைக்கிறீங்கள். தங்கச்சி என்னிலும் எவ்வளவு வடிவு  என்பேன். அம்மா ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு நீ தங்கச்சியை விட்டுக்கொடுக்க மாட்டாய் என்பார்.

எனக்கு சின்னனா நினைவு தெரிஞ்ச நாள்முதல் பெட்டையள் எண்டாலே சரியான விருப்பம். என் அயலட்டையில் ஆறேழு சின்னன்சிறிசுகள் இருக்கினம் தான். மீனாவோடையும் செல்லாவோடயும் சேர்ந்து விளையாடுவதுதான் விருப்பம் எனக்கு. அதிலும் அந்த மீனாவோடையே எப்போதும் இருக்கவேணும்போல, கதைக்கவேணும் போல என் உள்ளக்கிடக்கையைச் சொல்லவேணும்போல ஆசையா இருக்கும். ஆனா அம்மா ஏன்ரா பெட்டையளுக்குப் பின்னால திரியிறாய் என்று அவளவைக்கு முன்னாலேயே ஏசேக்குள்ள அளவேணும்போல இருக்க கண்ணெல்லாம் குளமாயிடும். பொம்பிளைப்பிள்ளை போல அழாதை என்று சொன்னதும் கண்ணீரும் வெளியில வராமல் நிண்டிடும்.

பள்ளிக்கூடம் போனாலும் பெட்டையளோடயே கதைக்கவேணும்போல இருக்கும். ஆனா பெடியள் என்னை இழுத்துக்கொண்டு போவிடுவாங்கள். அதிலும் அந்தக் கரன் அடிக்கடி என்னைக் கட்டிப்பிடிச்சு கடுப்பேத்துவான். என்பாட்டில ஒரு பக்கமாய் போய் நிண்டாலும் விடான். எடேய் வாடா எண்டு என்னைப்  பந்தடிக்க கூட்டிக்கொண்டு போயிடுவான். இருந்தாலும் மார்க்கண்டு வாத்திக்கும் அம்மாவுக்கும் பயந்து விருப்பம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பன். வாத்தி அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரன். தான் தான் எனக்குப் பள்ளிகூடத்தில் காவல்போல அம்மாவைக் காணும்நேரம் ஏதும் வத்திவைப்பார். அதுக்குப் பயந்து அவதானமாக இருப்பன்.

அப்பா வெளிநாடுபோய் எங்களையும் ஸ்பொன்சரில கூப்பிட்ட பிறகு ஊரும் இல்லை அயலுமில்லாமல் நான் சரியாக் கஷ்டப்பட்டுப்போனன். இங்க வந்து மொழி படிக்கிறது கஷ்டம் எண்டா ஒரு சின்ன வீட்டுக்குள்ள அக்கம்பக்கம் எங்கடை ஆட்களும் இல்லாமல்….. அதுகும் ஒருவகையில நின்மதியாத்தான் இருந்துது.

படிக்கட்டும் பிள்ளை எண்டு அப்பா வாங்கித் தந்த கணனியாலதான் என்ர சலிப்பான சிறிய  உலகமே மாறிப்போச்சு. அதுக்காக நான் படிப்பைக் கோட்டை விடேல்லை. அப்பா தான் பாவம். இரண்டு வேலை செய்து என்னையும் தங்கையையும் டியூசனுக்கு அனுப்பி ........ நான் அவையின் நம்பிக்கையைக் கெடுக்காமல் ஒருமாதிரிப் படிச்சு யூனியும் முடிக்கப்போறன். இவ்வளவு நாளும் அரசாங்கம் படிக்கக் காசு தந்தாலும் அம்மாவோடையே மூண்டு வருடங்களும் இருந்து கொஞ்சக் காசும் மிச்சம் பிடிச்சிட்டன். அதிலேதான் இனி மாஸ்டர்ஸ் செய்யவேணும். வீட்டில இருக்கிறது பல விதத்தில நன்மை. சாப்பாடு அந்தந்த நேரத்துக்கு பாசத்தோடு வரும். ஒதுக்குற வேலை, உடுப்புத் தோய்க்கிற வேலை, அதை அயர்ண் பண்ணுற வேலை எதுமே இல்லை. ஆனா ஆம்பிளைப் பிள்ளையாய் பிறந்திட்டு நெடுக அம்மா அப்பாவின் காசில வாழக் கூடாதுதானே. 

இப்ப பகுதி நேர வேலையும் செய்துகொண்டு தான் படிக்கிறன். அந்த வேலை செய்யப் போய்த்தான் எனக்கு அகிலோட பழக்கம் ஏற்பட்டுது. நாங்கள் இருவரும் ஒரே உணவகத்தில் பகுதிநேர வேலை செய்ய ஆரம்பிக்க, என்னுடன் தானே வந்து வலியக் கதைக்கவாரம்பிச்சது அகில்தான். பார்க்கப் பார்க்கப் பாத்துக்கொண்டே இருக்கலாம் போல் அழகு. நல்ல சுருள் முடி. எகிப்து நாட்டின் ஒரு தங்க நிறமும் உயரமும் கூர்மையும் என்னை மட்டுமல்ல யாரையுமே ஈர்க்கத்தான் செய்யும். வேலை முடிந்த பின்னரும் இருவரும் எங்காவது அமர்ந்து ஏதாவது குடித்தபடி பேசவாரம்பித்தது படிப்படியாக அதிகரித்து நான் வீட்டில் வந்து இரவு தூங்கிவிட்டு காலையில் மட்டும் வீட்டில் உணவருந்துவது என்றாகி இப்ப கொஞ்ச நாட்களாக அம்மாவும் தங்கையும் கூட "நீ இப்ப முன்னை மாதிரி இல்லை" என்று சொல்லுமளவு அகிலின் நெருக்கம் அதிகமாகி ...... அப்போதுதான் அகிலுடனேயே எந்நேரமும் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டுப்போனது. 

அகிலின் எண்ணம் எதுவென வடிவாத் தெரியாது நானாக வாய் திறந்து ஏதும் கேட்டு அது தப்பாகி அகிலின் நட்பையே இழந்திடுவேனோ என்ற பயமும் கூடவே இருக்க, அன்று என் அதிட்டம்... நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அகிலே என்னை அணைத்து முத்தமிட்டபோது எல்லாமே எங்கள் இருவருக்கும் புரிந்துபோனது.

அதன் பின்தான் அகிலே நாங்கள் இருவரும் ஒரு தனி வீடு எடுத்து இருந்தால் என்ன என்று கேட்டபோது குப்பென்று மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன். அப்பவும் மனம் பயத்தில் திக் திக் என்று அடித்துக்கொண்டதுதான். தங்கை இருக்கிறாள். அம்மா என்னைத் தனியா இருக்க விடுவாவோ? அவர்களைவிட்டு வந்து இருப்பது சரிதானா? என்று ஒருவாரமாக மண்டையைப் போட்டு உருட்டியதில்த்தான் அந்த ஐடியாவை அகிலே தந்தது. ஆனாலும் அகிலைப் பிரிந்து இருப்பதிலும் பார்க்க பெற்றோரையும் தங்கையையும் பிரிந்து இருக்க முடியும் என்று மனம் அல்லாடிப் பின் வெல்ல, சரி இரண்டுபேரும் தனியாக வாழ ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்ததுதான். எனது மாஸ்டர்ஸ் படிப்பை தூரவாக ஓர் இடத்தில் தெரிவு செய்து அங்கு எனக்கு இடமும் கிடைத்தது என் நல்ல காலம்.

அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு  இதே வேலையாய் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன்.

"நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா" 

"நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே" என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில்.

 

 

 

No comments:

Post a Comment