Wednesday 20 May 2015

நினைவழியா நீண்ட காலத்தின் - கவிதை


நினைவழியா நீண்ட காலத்தின்
நெடும் பயணத்தின் வழியே
மீண்டுமொரு முறை ..........

அப்போது நீ எனக்காக இருந்தாய்
என் எண்ணங்களை உனதாக்கி
எப்போதும் நெய்தபடி இருந்தாய்
என் நினைவுக்குள் நீயே நினைவாய்
எண்ணங்களை எல்லாம் சிறைப்பிடித்து
ஏதுமற்றவளாக்கி எனைத் தினம்
ஏக்கம் கொள்ள வைத்தாய்


நான் மரமாக நீ காற்றாகி மனதின்வழி
நாதங்கள் கேட்க வைத்தாய்
நான் நிலமாக நீ நீராகி நிதம் எனை
நெக்குருகியே நெகிழவைத்தாய்
காற்றின் ஒலியாகி கார்கால மழையாகி
காணும் இடமெங்கும் என்மனவீட்டில்
எங்கும் உன் ஒளியாக ஒளிரவைத்தாய்

இன்றும் நான் நானாகவே இருக்கிறேன்
நீயோ ஒலிக்காதவனாய் ஒளியற்றவனாய்
எதிர்வினை காட்டியே எனைவிட்டு
எங்கெங்கோ எட்டாதவனாய் செல்கையில்
ஒளியிழந்த உன்மனதின் அறியமுடியாத
ஆத்மாவின் அழகைக் காணமுடியாது
நீ தூங்கும் நேரங்களிலும் உன் நினைவு சுமந்து
தூங்கமுடியாது நானும் காத்திருக்கிறேன்
கணக்கில் எழுதமுடியாக் குறிப்புக்களோடும்
விழுதுகள் அற்ற ஆலமரத்தின் வேர்களில்
இன்றும் தொங்குவதற்காய் ஆசைகொண்டபடி

No comments:

Post a Comment