மனதெங்கும் எத்தனையோ
மாயங்கள் அலைகளாய்
எண்ணத்தில் தோன்றுவது
எழுத்தில் வடித்திட முடியாததாய்
காணும் காட்சிகள்
கண்விட்டுப் போவதுபோல்
நினைவுகளின் நீட்சிகள்
தொடராதிருந்தால்
எத்தனை இன்பம் மனம்
எப்போதும் கொண்டிடும்
காலத்தின் பதிவுகள்
கனவின் கோலங்களாய்
மனதில் மகிழ்வு தொலைத்து
கண்கட்டிவித்தையில்
கண் மூடும் வேளைகளில் கூட
கபடியாடுகின்றன
பகுக்க முடியாத எண்களாய்
பகிரப்படும் நாட்கள்
பம்பரமாய் சுழன்று மீண்டும்
பரிதவித்து நிற்பதுவாய்
நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய்
நெடுந்தூரம் செல்கின்றன
தவிர்க்கவும் மறுக்கவும்
மறக்கவும் முடியாததான
பிணைப்பின் வலிமையில்
மறுதலிக்கும் மனதின் செயல்
எத்தனை கடிவாளமிடினும்
எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில்
எப்போதும் போல் என்னிலை
ஏக்கங்களை மட்டும்
எதிர்க்க முடியாது சுமந்தபடி
No comments:
Post a Comment