Wednesday, 3 June 2015

ஊமைக் காயங்கள் - கவிதை

 Nivetha Uthayan's photo.

மனத்தின் அடங்கா மாயைகள்
வாழ்வின் நாட்கள் எங்கும்
மர்மங்கள் புரிந்திட முடியாது
மயக்கம் தந்தபடி இருக்கின்றன

உறவின் உயிர் நாடியை
உலுப்பிப் பார்ப்பினும்
உண்மை உணரமுடியாதபடி
ஊமைக் காயங்களை
காலம் முழுவதும் விதைப்பினும்
உணர்தலுக்கான வலுவை
மழுங்கச் செய்கின்றது மனது

துணிவின் அப்பாற்பட்டு
துரோகத்தின் விளைவின்
அறுவடைகள் புரியமறுக்க
துவளும் உயிரின் வதையை
யாரிடம் போய் எப்படிக் கூறினும்
தவறி விழும் புரிதலின் மர்மம்
தாங்கொணா விளைவின் நீளலாகிறது

காரணங்கள் கொண்ட காரணமற்ற
சீண்டல்களும் சிதறல்களும்
சிறுகச் சிறுக மனம் சிதைக்க
செயலிழக்க ஆரம்பிக்கும் செல்லாய்
செய்வதற்றுச் சாகும் மனம்
சிதம்பிப்போகும் புண்ணின் காயமாய்
சிறுகச் சிறுக சீரற்றதாக
மாறிக்கொண்டே இருக்கின்றது

மாற்றம் கொள் மனதே இனியும்
மடிப்பிச்சை கேட்டு நீ மானமிழந்து
மங்கும் உன் நிலை உயர
மயக்கம் கொள்ளாதிரு மனமே
மானிட வாழ்வின் மகுடங்கள் இன்னும்
உனக்கானதாக உயிர்ப்புடன் காத்திருக்க
ஊனை உருக்கி நீயும் உயிர்வதை கொண்டு
ஊனமாகி மடிந்திடாது பெண்ணே
மடமாந்தர் முன்னே மிடுக்கோடிரு

No comments:

Post a Comment