ஆதாரமற்றதான அன்பின் படிகளில்
காலம் அடம்பிடித்து நகர்கிறது
பகிர்தலற்ற அன்பு என்றும்
மற்றவரைத் துன்புறுத்தி
மனதின் மகிழ்வைக் குலைத்து
மனதெங்கும் மட்டற்ற கேள்விகளை
மயக்கத்துடன் கேட்டு நிற்கும்
வியாபித்திருக்கும் எண்ணங்களின்
எழுத்துக்களற்ற வரிகள்
எதிர்பாத்திருக்கும் தருணங்களில்
ஏமாற்றத்தையும் அதனூடே
எதிர்வுகூற முடியா உணர்வுகளை
எங்கும் விதைத்துவிடுகின்றன
தீர்மானித்தவை அதன் ஒழுங்கில்
திடமற்று நகர்கையில்
ஆற்ற முடியாததாய் மனதை
அதிகமாய்த் தகிக்க வைத்து
தாண்டவத்தோடு தினமும்
தன்மையைத் தகர்க்கின்றன
தள்ளாடும் தவறுகளின் தாக்கத்தில்
சிறு சிறு சொல்லாடல்கள் கூட
சிக்கல்களில் பின்னப்பட்ட நூலாய்ச்
சத்தமிழந்த எதிரியின் ஆயுதமாக
சிந்தை குலைத்துச் செருக்குடைத்துச்
சினம் கொள்ள வைக்கின்றன
ஏன் தான் எனும் கேள்வி என்னுள்
எல்லாம் இருந்தும் எதுவுமற்றதான
எதிர்வினையின் ஈர்ப்பில்
எதிர்மறை எண்ணங்களை
எதிர்ப்பின்றிக் களைந்து என்னால்
எழுந்துவர முடியாதா என்று மனம்
ஏங்கியபடியே நகர்கிறது
No comments:
Post a Comment