Tuesday 23 June 2015

கண்ணீரில் கலந்த கல்வாரி - கவிதை

 


உயிரின் ஓலம் ஊரெங்கும் கேட்கின்றது
ஏமாற்றங்கள் சுமந்ததான மனவெளியில்
ஒப்பாரிப் பாடலாய் ஓயாது கேட்கிறது

மீண்டிட முடியாத மரணக் கிடங்கினுள்
தெரிந்தே நான் இறங்கி நிற்கிறேன்
தெளிவற்ற மனதின் தேய்மானத்தில்
தெரிவதெல்லாம் கண்ணில் படாது
தேய்ந்துகொண்டே போகின்றது

விந்தை தெரியாது வீழ்ந்து மாழும்
விட்டில் பூச்சியாய் என் மனம்
வெடித்துச் சிதறும் விதைகளாய்
வில்லங்கமாய் மண் பற்றியபடி
வேறு வழியேயின்றி தினமும்
முளைவிடும் வேர்களை ஊன்றி
எழுவதர்க்காய் எத்தனிக்கின்றது

கலங்கிப் போன காலத்தின் விதியோ
கைகொட்டிச் சிரித்தபடி என் முன்னே
கண்கட்டு வித்தையில் கைதேர்ந்து
காவலிருக்கும் பொழுதுகளை எல்லாம்
கடிவாளமிடாது கண்டுகளிப்பதர்க்காய்
காலநேரம் பார்த்தபடி எப்போதும்
கண் முன்னே காவலிருக்கிறது

என்ன சொல்லி என்ன .... என்றோ
எழுதிவிட்ட விதியின் வலிந்த இழுப்பில்
என்னையறியாது நானும் தான்
வீழ்ந்தே கிடக்கிறேன் எழவே முடியாது
யாரும் மீட்டுவிடவே முடியாத
கற்கள் மூடிய பாறைகள் நடுவே

No comments:

Post a Comment