Wednesday, 3 June 2015

மாயமான் - கவிதை

 Nivetha Uthayan's photo.

மாயமானின் தோற்றம் கண்டு
மகிழ்வுகொண்டிருந்தேன் நான்

உண்மைக்கும் கற்பனைக்குமான
இடைவெளி புரியாது
இறுமாப்பு மட்டுமே வாழ்வாகி
எல்லாம் மறந்திருந்தேன்


நொண்டிக் குதிரையில் பூட்டிய
வண்டிலில் இழுப்புக்கெல்லாம்
வளைந்தும் நெளிந்தும் கோணலாயும்
செல்லும் வழியெல்லாம்
விபரமற்று மகிழ்ந்திருந்தேன்

வாழ்வு எனக்கு இப்போது வந்ததென
வண்ணக்கனவுகள் நாளும் கண்டு
ஒவ்வொரு கணமும் கற்பனையில்
ஒராயிரம் ஆசைகள் தேங்கிட
காலத்தின் கடைசிவரை கணக்கிட்டு
காயம் கசிந்துருக நேசம் கொண்டேன்

நித்தியமானது நிரந்தரம் அதுவென்று
நர்த்தனம் ஆடும் மனது கொண்டு
நாளும் பொழுதும் நகரும் கணமெல்லாம்
ஓய்ந்துபோகும் காலத்தின்
ஒவ்வா நிலையின் கணக்கெடுப்பில்
அவ்வாழ்வு கண்டு களித்திருந்தேன்

ஆனாலும் ஏன் இப்படியானது
அடிமனத்தின் வேரின் விளிம்புவரை
அசைத்து அசைத்து அறுத்து வேருடன்
ஆலமரத்தின் ஆட்டம் குலைத்து
அற்ப மனதின் ஓசைகள் வெல்ல
ஆணவம் கொண்டே சிரிக்கிறது

வலிந்த விதியின் வண்ணங்கள்
ஏற்கும் மனம் எத்தனைதான்
ஆர்ப்பரித்து அலைகளாய் எழும்
அத்தனையும் அடங்கி ஒடுங்கி
அமைதி எப்போ கொண்டுவிடும்
அந்த நாளின் வரவிற்காய்
ஆறா மனதின் வடுக்கள் சுமந்து
அமைதியற்று அலையும் மனதை
ஆற்றுப்படுத்தப் பார்க்கிறேன்

No comments:

Post a Comment