என் மன வெளிகளிடையே
என் நலிந்த நம்பிக்கைகள்
எனைப் பார்த்து ஏளனம் செய்தபடி
எண்ணிக்கையற்று நகர்கின்றன
யாருமற்ற வனாந்தரத்தில்
நான் மட்டுமே எதிரியுடன்
தனித்திருப்பதான எண்ணம்
எல்லைகளற்று எனை நிரப்பி
என்றுமில்லாததாய் எனை அழுத்த
எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி
ஏதிலியாய் நான் மட்டும்
எண்ணக் குவியலின் நடுவே
எக்குத்தப்பாய் எனை மறந்து
எழுவதர்க்காய் எத்தனிக்கிறேன்
கட்டப்பட்ட கைகளும் கால்களும்
கருத்துகள் இன்றியே சிதைய
காலாவதியாகும் கோபமடக்கி
கரைகின்ற கைகளின் கனவடக்கி
கோலங்கள் காணாமற்போகும் நாளின்
கடைசித் துளிகளின் கதவடைக்கும்
கண்ணீரின் கனமடக்கி நலியும்
நம்பிக்கைகளில் பின்னிய கூட்டை
நெகிழ்தலின்றி நகர்த்துவதர்க்காய்
நெருப்பின் மேலே நடக்கின்றேன்
No comments:
Post a Comment