ஆழ்கடலின் அலை அயத்தமானது
அது புரியாது நானும்
அதன் அழகில் மயங்கி
அலையின் சீற்றம் புரியாது
கடலின் ஆழம் தெரியாது
கரையின் ஓரமாய் நின்று
ஆர்ப்பரிக்கும் அலை கண்டு
அகமகிழ்ந்தே காத்திருந்தேன்
அலை உயந்து பின் தணிந்தது
சுழன்ற காற்றின் திசையெங்கும்
சுழற்றி வாரி நீரை இறைத்தது
என்மேல் தெறித்து விழுந்த
நீர்த்துளிகள் மேனி நனைக்க
அலையின் மகிழ்வில் நானும்
ஆர்ப்பரித்து நின்றேன்
எழுந்தது எதிரியாய்ப் பேரலை
என் அங்கம் அத்தனையும் சுருட்டி
ஆத்மாவின் மூச்சை நிறுத்தி
சிந்தனை எல்லாம் அழித்து
சிகரங்கள் எல்லாம் தொட்டவளை
தன்னை நம்பியே நின்றவளை
ஆழ்கடலின் இருண்ட அறையில்
எழுந்திடமுடியாப் பாறைகள் நடுவே
எதிரியாய்த் தள்ளி எக்காளமிட்டது
என்ன செய்வேன் நான்
எழுந்துவர முடியவில்லை
எள்ளளவும் இரக்கமில்லை
எதுபற்றி எழுந்திடவும் எதுவுமில்லை
நம்பிக்கை நகர்ந்துபோக
நானாய் எனக்காய்த் துடித்து
நெஞ்சக் கூண்டில் நீர் நிரம்ப
மூச்சுக் குழல் வெடித்து முகமளுத்த
முடியாத போதினில் வழியின்றி
மூச்சடங்கிப் போகிறேன் முடிவின்றி
No comments:
Post a Comment