Thursday 11 June 2015

ஒவ்வாமை - கவிதை





ஓய்ந்துபோய் விட்டது மனது

ஒவ்வொரு நாளின் காத்திருப்புக்களும்
முடிவில் எஞ்சிடும் ஏமாற்றமும்
எதிர்பார்த்து இழந்த ஏக்கமுமாய்
எல்லாமுமாய் ஒன்றாகி
சூறைக் காற்றொடு மழையடித்து
சுத்தமாய் ஓய்ந்து போனதுபோல்
எதுவுமற்று இருக்கிறது மனது

ஆசைகளும் கனவுகளும்
ஆழக்கடலின் பேரலையாய்
ஆழ்மனதைப் புரட்டிப் போட்டு
சூறாவளியாய் சுழன்றடித்து
கரைகடந்து மேலும் கீழுமாய்
காணுமிடமெல்லாம் கரகமாடி
காற்றின் வேகம் கடந்து போனதும்
வேரறுந்து வீழ்ந்த மரமாய்
வெளியாக்கிக் கிடக்கிறது

ஓய்ந்த மனதின் ஓசை அறுந்து
ஓங்காரத்தின் நாதமாய் ..........
எதுவும் அசைத்திட முடியா
அடங்கல்களுடன் ஆழ்மனம்
எதுவும் தாங்கி எல்லாம் தாங்க
எஞ்சியவை எப்படியும் நடக்கட்டும்
என்னும் ஏகோபித்த முடிவாய்
எதிர்ப்பதற்கு எதுவுமேயற்று
எதிர்பார்ப்பின்றிக் கிடக்கின்றது

No comments:

Post a Comment