நினைவுகளில் எல்லாம்
நிமிடத்தில் தீ மூளும்
நெஞ்சம் படபடத்து
நிலையின்றிக் கனவுகாணும்
மனதடக்க முடியாது
மட்டிலா மகிழ்வுகொண்டு
மிதக்கும் மனது கொண்டு
மேகத்தில் நடமாடும்
காட்டாற்று வெள்ளமாய்
காட்சிகள் சுழன்றாடும்
கவலைகள் சேர்ந்ததனால்
கள்ளம் குடிகொள்ளும்
எட்டாத கோட்டை எல்லாம்
எப்படியோ கட்டவைத்து
எதிர்பார்ப்பை ஏணியாக்கி
எங்கெங்கோஅலையவைக்கும்
பசிமறந்து தூக்கம் கெடும்
பலபாடல் மனமிசைக்கும்
பார்க்காதிருந்தாலே
பயித்தியம் பிடித்துவிடும்
கற்பனைக் குதிரைகளை
கணக்கின்றி அவிழ்த்துவிடும்
கடிவாளம் அற்றதாய்
காததூரம் ஓடவைக்கும்
உறவுகள் கண்மறைக்கும்
உற்றவர் தான் மறக்கும்
பெற்றவர் என்றாலும்
பேரிடராய்த் தோன்றிவிடும்
நித்தம் நினைவிழந்து
பித்தம் தலைக்கேறி
மற்றதெல்லாம் மறக்கவைத்து
சித்தம் கலங்கவைக்கும் காதல்
செத்தொழிந்து போனாலும்
சொத்தழிந்து போனாலும்
சித்தம் நிறைந்து சொர்க்கம் திறந்து
சொக்கவைப்பது காதல்
No comments:
Post a Comment