Friday, 5 August 2016

வாழ்வு வதையாகி - சிறுகதை


கி பி அரவிந்தனின் நினைவாக நடைபெற்ற சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற எனது கதை




வாழ்வு வதையாகி



காற்றுடன் மழையும் சுழன்றாடுவதை அந்த அறையின் சாளரத்தினூடு பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாந்தினி. சாதாரண ஆடை தான் அணிந்திருக்கிறாள். ஊசிக் காற்றில் சாளரக் கண்ணாடிகளையும் ஊடுருவிக் காற்று சிறிதாக உள்ளே வந்தபடி தான் இருக்கிறது. ஆனாலும் சமரில் வெப்பமாக இருப்பதுபோல் அறை கதகதப்பாக இருப்பதனால் குளிரவே இல்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் இந்த நாட்டில் வாழ்ந்து முடித்து விருட்சமாய் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என........ கையில் வைத்திருக்கும் காகிதங்களைக் குனிந்து பார்த்தாள். காகிதங்கள் காற்றுப் பட்டு ஆடுகின்றனவா ?அல்லது தன் மனதின் அதிர்வில் ஆடுகின்றனவா என்று புரியவில்லை சாந்தினிக்கு.
எல்லாம் ஓய்ந்து போகப் போகிறது. இந்த உலகம், ஊர்கள், உறவுகள், நண்பர்கள் தெரிந்தவர் போனவர் எல்லாமே என எண்ணியபோது சாந்தினிக்கு மனம் எண்ண முடியாத வேதனையை உணர்ந்தது. எத்தனை காலம் அவள் இப்பூமியில் வாழ்ந்துவிட்டாள். எண்ணிலடங்கா மகிழ்வை அனுபவித்திருந்தாலும் இப்போ கொஞ்ச நாட்களாக மனதில் எழும் வேதனை சொல்ல முடியாததாகி மனதுள்ளே குமைந்து குமைந்து அவள் அனுபவிப்பதை என்னவென்று சொல்லி யார் விளங்கி ......
சில நாட்களாக அவள் மனதிலோடும் எண்ணத்தைச் செயற்படுத்தும் துணிவு அவளுக்கு இருக்கிறதுதான் எனினும் இவ்வுலகில் மீண்டும் இந்த உறவுகளுடன் வாழவே முடியாதே என்னும் ஏக்கமும் அதனால் எழும் அங்கலாய்ப்புமே அவளை அடிக்கடி துன்புறுத்திய வண்ணம் இருக்க, இன்னும் கொஞ்ச நாட்கள் அல்லது மாதங்கள் பொறுத்திருப்போம் என மனம் ஆசை கூட்ட, கண்களை மூடி ஒரு ஐந்து நிமிடங்கள் இருந்தவள், மனதைத் திடப்படுத்திக்கொண்டு அந்தப் படிவத்தில் கையொப்பம் இட்டு மேசையில் வைத்தாள்.
*****************************************************************************
சாந்தினி குளிராடைகள் அணிந்துதான் இருக்கிறாள். கீற்றர் இன்னும் போடப்படவில்லை. மகன், மருமகள்,பேரப்பிள்ளைகள் எல்லோரும் இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில்லை. இன்று சனிகிழமை என்பதால் அவர்கள் எழும்ப எட்டு ஒன்பது செல்லும். அவர்களுக்குக் குளிர்ந்தால் மட்டும் தான் இந்த வீட்டில் கீற்றர் போடுவார்கள். இவளுக்குக் குளிரும் என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை. இரண்டு மூன்று தரம் இவளும் குளிருது எண்டு மகனிடம் சொல்லிப் பார்த்ததுதான். "வெள்ளன எழும்பி என்ன அம்மா செய்யப் போறியள். படுத்து இருக்கிறதுதானே" என்றதுடன், "நல்ல மொத்த யம்பரைப் போட்டுக்கொண்டு காலுக்கு பெட்சீற் சுத்திக்கொண்டு இருந்தால் குளிராது தானே அம்மா" என்றதன் பின்னர் சாந்தினி ஒன்றும் சொல்வதேயில்லை.கால்கள் இரண்டும் செயலிழந்து சுரணையே இல்லையே. இதில் கால் ஏன் குளிரபோகுது? உடல் எல்லோ குளிருது என்று சொல்ல எண்ணியதையும் சொல்லாது மனதில் மட்டுமே சொல்லிக்கொண்டாள்.
சின்ன வயதில் இவனுக்குக் குளிரும் என்று தேடித்தேடி உடுப்புகள் போட்டுவிடுவதும், இவன் களட்டி எறியும் சொக்சைப் பார்த்துப் பார்த்துப் போடுவதிலுமே இவளின் நேரம் பாதி போய்விடும்.
முன்பெல்லாம் இவளுக்குக் குளிர்வதில்லை. கீற்றர் போட்டவுடன் மூக்குக் கண் எல்லாம் கடிக்கும். உடல் வேர்க்கும். இருந்தாலும் பிள்ளையளுக்குக் குளிருமே எண்டு இவள் தன் துன்பத்தைச் சகித்திருக்கிறாள். இப்பவும் அதேதான் தொடர்கிறது.
இப்ப கொஞ்ச நாளாத்தான் இவளுக்கு வெள்ளனவே விளிப்பு வந்துவிடுகிறது. நாள் முழுதும் தூங்குவதும், தூங்காமல் விழித்திருப்பதும், எழுந்தால் இந்த யன்னலூடு வெளியே பார்ப்பதும் தானே இவளது வேலை .
சாப்பிடும் வேலையும் இருக்குத்தான். ஆனாலும் அதுக்குக் கூட இப்ப மனம் வருகுதில்லை. கீழே ஒரு அறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் என்ன செய்வது இந்த மகனின் வீடு அத்தனை வசதியாக இல்லை. இவன் சுதன் நினைத்தால் கீழே ஒரு அறையைக் கட்ட முடியும் தான். மருமகள் விட மாட்டாளே. கீழே ஒரு சிறிய அறை இருக்கிறதுதான். அங்கே இவளை மாற்றி விட்டால் நன்றாக இருக்கும் என எத்தனையோ நாட்கள் இவள் எண்ணியிருக்கிறாள். ஆனால் வாய் திறந்து ஒருமுறை கேட்டதோடு சரி. அந்த அறையில் பிள்ளைகள் படிப்பதற்கு எனக் கணனியும் மேசை கதிரைகளும் புத்தக அலுமாரியுமாக.....
அப்பப்போ பிள்ளைகள் மகன் மருமக்கள் எல்லாம் சிரித்துக் கதைப்பது கேட்கும். தானும் அவர்களுடன் சேர்ந்து கதைக்க மனம் ஏங்கும். பேரப்பிள்ளைகளின் கதைகளை, அசைவுகளை, சின்னச்சின்ன சண்டைகளை மருமகளின் வெருட்டல் உருட்டலையும் மகனின் அடங்கிய குரலையும் கேட்கக்கேட்க நடக்கேலாமல் படுத்திருக்கிறேனே என்னும் வெறுப்பும் கூடவே எழும். பிறகும் எதுவுமே செய்ய முடியாது ஆசைகளை ஆதங்கங்களை அடக்கியபடி சும்மா இருக்கத்தான் முடிகிறது.
கடந்த ஆண்டுவரை அவளது நண்பி பாமா இவளுக்கு மிக்க துணையாக அடிக்கடி தொலைபேசியில் கதைத்து இருவரும் தத்தமது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். அதற்கும் மருமகள் புறுபுறுப்பதுதான் என்றாலும் சாந்தினி அதை விளங்கியதுபோல் காட்டிக்கொண்டதே இல்லை. அவள் திடீரென இறந்த பின்னர் சாந்தினிக்கு நடுக்காட்டில் யாருமின்றி விட்டதுபோல் பயமும், தனிமையும், சுய பச்சாதாபமும் மேலோங்கி வயோதிகத்தைப் புரிந்து கொள்ளா மனிதர்களுடன் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது பெரும் பாடாய்ப் போனது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்று காலை அவள் நித்திரையால் எழும்பினாலும் பல் தீட்டாது கன நேரமாய் படுத்தே இருந்தாள்.
வைத்தியசாலை போல் இருந்தாலும் இவர்கள் எல்லாம் எத்தனை சகிப்புத் தன்மையோடு எம்மை எல்லாம் பராமரிக்கின்றனர் என எண்ணியபோது வியப்பாக இருந்தது. இவள் மணியை அழுத்த அவர்கள் இவளுக்கு பல்லுத் தீட்ட, சிறுநீர் கழிக்க, குளிக்க என்று எந்த முகச்சுளிப்புமின்றி எல்லாம் செய்து உடை மாற்றி மீண்டும் கட்டிலில் கொண்டுவந்து விட்டபின், உனக்கு விருப்பம் என்றால் உன்னுடன் நிற்பதர்க்கு உன் பிள்ளைகளை நீ அழைக்கலாம் என்று கூறிவிட்டு இவளை அன்போடு பார்த்தாள் அந்தப் பெண். வேண்டாம் என்ற சாந்தினியின் தலையாட்டலை விளங்கிக்கொண்டு இவளுக்குக் காலை உணவை இவளுக்குப் பக்கமாக நகர்த்திவிட்டுச் சென்றபின், கண்களில் கண்ணீர் முட்டி வழிவதா வேண்டாமா என்று காத்திருக்க, பிள்ளைகளைக் கண்டால் என்னையறியாமலே என் மனம் மாறியும் விடலாம் என்று எண்ணியவளாய், உணவை மெதுமெதுவாய் இருக்கும் சொற்ப பற்களால் கடித்து உண்ண ஆரம்பித்தாள் சாந்தினி.
கணவன் இருந்த வரை அவளை எல்லோரும் மரியாதையுடன் தான் நடத்தினார்கள். ஏனெனில் கணவனும் அவளும் தனி வீட்டில் சுதந்திரமாக இருந்து, சமைத்துச் சாப்பிட்டுக் கோவிலுக்குப் போய் எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது அவர் இறக்கும் மட்டும். ஐம்பது ஆண்டுகள் கூடிவாழ்ந்த அவர் இறந்தபின் அதிர்ச்சியில் அவளுக்கு பாரிசவாதம் வந்து ஆறுமாதங்கள் படுத்த படுக்கையாய் வைத்தியசாலையில் இருந்து அவளுக்கு நோய் பாதி குணமாகி வீட்டுக்குப் போகலாம் என்றபோதுதான் பிள்ளைகளுக்கிடையில் அம்மாவை யார் வைத்திருப்பது என்று பிடுங்குப்பாடு வந்தது. கடைசியில் கடைசியாகப் பெற்ற சுதன், தான் தாயை வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டான். நடக்க முடியாமல் இருப்பவரை வைத்திருக்க ஆருக்குத்தான் ஆசை வரும் என்று இவளுக்குமே புரிய "அந்தாளோட நானும் போயிருக்கக் கூடாதா? கடவுளே நான் என்ன பாவம் செய்தன் இப்பிடிக் கிடக்க" என்று மனதுள் அழ மட்டுமே முடிந்தது.
முன்பெல்லாம் காலை எழுந்து குளித்துவிட்டு வந்து தான் மிச்ச வேலை எல்லாம். இப்ப வாரம் இருமுறை என்றிருந்து ஒருமுறைதான் முழுக்கு என்றாகிவிட்டது. இவளால் தனிய கன நேரம் நின்று குளிக்கமுடியாது. ஒருக்கா இவள் தடக்கி விழுந்த பிறகு, தான் நிக்கும்போதுதான் குளிக்கவேணும் என்று மகன் சொல்லிவிட்டான். அதன் பிறகு மாலையில் மகன் வேலையால வந்த பிறகுதான் குளிப்பு முழுக்கு எல்லாம். தோலெல்லாம் சுருங்கி வற்றிவிட்டாலும் குழந்தைப் பிள்ளையைப் போல் மகன் சாந்தினியைத் தூக்கிக்கொண்டு போய் கதிரையில் இருத்தி குளிக்க வாக்க தன்னை அறியாமலே ஒரு கூச்சம் எழும். ஆனாலும் அடக்கியபடி இருக்கத்தான் முடிகிறது.
இப்ப கொஞ்ச நாளா இடுப்புக்குக் கீழே உள்ள பாகங்கள் செயலிழக்கத் தொடங்கிவிட்டன. இனிமேல் அதுக்கும் மற்றவரை எதிர்பார்த்து அவர்களின் முகச்சுளிப்போடு ....... நினைத்துப் பார்கவே முடியவில்லை அவளால். அந்த நிலை வரும்வரை இருக்கக் கூடாது என்ற வைராக்கியம் மட்டும் மனதில் எழுந்தது.
சுதன் ஒன்றும் சும்மா வைத்திருக்கவில்லை சாந்தினியை. கவுன்சிலில் இருந்து தாயைப் பராமரிக்க என்று குறிப்பிட்ட தொகையைப் பெறுகிறான் தான். ஆனாலும் தாய்க்கு தான் எந்த உதவியும் பெற்றுக்கொள்ளாமல் தன் செலவில் பார்ப்பதுபோல் தான் வருபவர்களிடம் கூறுவதை சில நேரங்களில் சாந்தினி கேட்டும் கேட்காததுபோல் இருந்துவிடுவாள். என்ன இருந்தாலும் அவன்தானே பாக்கிறான். பிள்ளையை ஏன் மற்றவர்கள் முன்னால் விட்டுக் கொடுப்பான் என எண்ணி மனம் அமைதியடையும்.
மற்றப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எப்போதாவது வந்து போவார்கள். மூத்தவன் வந்து ஒரு அரை மணித்தியாலம் சாந்தினியோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டுப் போனாலும் மருமகள் அந்தி பூத்தாற்போல் வந்து போவதுடன் சரி. இரண்டாவது மகன் கொலண்டில் இருப்பதால் தொலைபேசியில்மட்டும் வாரம் ஒருநாள் கதைப்பதும் ஆண்டில் ஒருதடவை வருவதும் கூட இப்ப அருகிவிட்டது. தூர இருப்பவனைப் பார்க்க மனம் ஆசை கொள்வது இயல்புதான் என்றாலும் அவைக்கும் எத்தனை வேலைகள், பேரப்பிள்ளைகள் படிப்பு என்று இவளால் தன் ஏக்கத்தை ஒருபுறம் தள்ளி வைக்க மட்டுமே முடிந்தது. ஒரு பொம்பிளைப் பிள்ளை இருந்திருந்தால் இப்பிடி என்னைத் தனிய விட்டிருக்காது " என்று மனம் அங்கலாய்க்கும்.
என்ன எண்ணி என்ன எல்லாம் விதி என்று மனதை ஆற்ற எண்ணினாலும் ஆறாமல் கிடந்தது உழலும் மனதை என்னதான் செய்வது என்று அவளுக்குமே புரியத்தான் இல்லை.
*****************************************************
கீழ் மாடி எண்டால் எப்பிடியும் கோலுக்குள்ளை ஆராவது ஒருத்தர் நடமாடிக்கொண்டு இருப்பினை. இந்த அறைக்குள்ள நாலு சுவரையும், கிடக்கும் ஒரு அலுமாரி ஒருமேசையையும் தவிர என்ன கிடக்குப் பாக்க ? இன்னும் ஒருக்கா மகனைக் கேட்டுப் பாப்பமோ என்று எழுந்த ஆசையை முன்பு கேட்டபோது நடந்தது நினைவில் வந்து அடக்கியது.
"பிள்ளையளின்ரை வசதி முக்கியமோ உவவின்ரை முக்கியமோ. பிள்ளையளை மேல விட்டால் என்ன செய்யிறாங்கள் என்று தெரியாது. இவ்வளவு காலம் அனுபவிச்சது பத்தாதே" என்று மருமகள் சாந்தினியின் காதுபடச் சொன்னது இப்பவும் நெஞ்சை அதிரப் பண்ண எதுவும் தோன்றாமல் அமர்ந்திருந்தாள் சாந்தினி.
இப்பிடி நடமாட முடியாதவர்களுக்காக இங்க எத்தினையோ வயோதிக இல்லங்கள் இருக்குத்தான். ஆனாலும் சொந்தங்கள் பார்ப்பது போல் ஆர் பாக்கப் போயினம். அதோட அங்க நடக்கிற அநியாயங்களை அவள் பலதடவை தொலைக்காட்சியில் பார்த்தும் இருக்கிறாள் தானே. "தம்பி என்னைக் கடைசிவரை அங்க விட்டுடாதை" என்று மகனுக்குச் சொன்னபோது மகனுக்கும் கண்கலங்கிப் போனதை இவளும் கவனிச்சவள்தான். "நான் கொண்டு போய் விடமாட்டன் அம்மா" என்று தாயின் கைகளைப் பிடிச்சுக்கொண்டு சொன்னவன்தான். ஆனாலும் மருமகள் இப்பவெல்லாம் பலதடவை காதுபடவே "என்னாலை உந்தப் பம்பஸ் மாத்திற வேலை எல்லாம் செய்ய ஏலாது. கொண்டே ஹோமிலை விடுங்கோ" எண்டு கத்த "அம்மாக்குக் கேட்கப் போகுது" எண்டு அவன் மனைவியைத் தள்ளிக்கொண்டு வெளியே சென்று வாக்குவாதப் பட்டதும் தான் இவளுக்கு மனதில் அந்த யோசினை வந்தது.
இவள் ஒன்றும் ஒன்றும் தெரியாதவள் இல்லை. ஆங்கில அறிவும் மற்ற அறிவுகளும் உள்ள ஒருத்திதான். ஒரு கடையில் சுப்பவைசராக இருபத்தைந்து ஆண்டுகள் வேலையும் செய்து இப்ப பென்சனும் எடுப்பவள் தான். அப்பிடிப்பட்டவளையே வயது போட்டுது எண்டவுடன இப்பிடி வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறானே மகன். அப்ப படிக்காமல் வேலைவெட்டி செய்யாமல் பிள்ளையளையும் புருசனையும் நம்பி வாழுற பெண்களுக்கு என்ன நிலை என்று மனதில் அவர்கள் பால் சிறிது பச்சாதாபமும் எழுந்தது.
ஆரம்பத்தில் இவளுக்குக் கூட அறையில் டிவி ஒன்றும் இல்லை .கொலண்டிலிருந்து இரண்டாவது மகன் வந்தபோது என்னம்மா வேணும் உங்களுக்கு என்று கேட்க, "ஒரு பழைய டிவி எண்டாலும் ஒண்டு இருந்தால் பொழுது போகும் மகன்" எண்டதில், அவன் புதிதாகவே ஒரு சிறிய டிவி வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனான்.
அது வாங்கினது எவ்வளவு நல்லதாகிவிட்டது இப்பொழுது என்று தனக்குள் தானே மகிழ்ந்தாள் சாந்தினி. அது இல்லாவிட்டால் தானும் இந்த நரகத்தில் சாகும் வரை உழன்று கொண்டே இருந்திருப்பேன் என எண்ணியவள் யாரும் வீட்டில் இல்லை என நிட்சயம் செய்துவிட்டு தொலைபேசியை எடுத்தாள்.
********************************************************************
இன்னும் ஒரு மாதத்தில் அவள் இந்தப் பூமிக்கு வந்து எண்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. மாலையில் மகன் வேலையால் வந்து சாப்பிட்டு முடித்து மேலே இவளிடம் வந்து இவளை சுகம் விசாரித்தபின் இவள் மெதுவாகத் தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள். "தம்பி எனக்கு எல்லாச் சொந்தக்காறறையும் பாக்கவேணும் போல இருக்கு" என்றவுடனேயே உங்களைக் கூட்டிக்கொண்டு "என்னை வீடுவீடாப் போகச் சொல்லுறியளோ" என்று அவன் பாய்ந்தபோது அதை எதிர்பாத்தது இருந்ததால் சாந்தினி அசரவில்லை.
"என்னப்பன் உங்களைப் பெத்து வளத்து ஆளாக்கினதுக்கு நான் கேக்கிற ஒரு உதவியைக் கூடச் செய்ய மாட்டியளோ" என்று குரலைக் கொஞ்சம் உயர்த்தியே இவள் கேட்டாள். நீங்கள் ஒண்டும் என்னை வீடுவீடாக் கொண்டு போக வேண்டாம். எல்லாரையும் ஒரு இடத்துக்குக் கூப்பிடுங்கோ என்று இவள் கூறியதுதான் தாமதம், "உங்களுக்கு என்ன விசரோ அம்மா" என்றான் பிள்ளை சத்தமாக.
"எனக்கு எண்பது வயது வருது. அதுக்கு வரச்சொல்லிக் கூப்பிடு" என்றதும் மகனின் முகத்தில் எள்ளல் தெரிந்தது. "உவவுக்கு பேத்டே கொண்டாடுற ஆசை வந்திட்டுதோ அப்பா. உந்த வயதில நல்ல ஆசைதான் " என்றபடி உள்ளே வந்த மருமகளைச் சட்டை செய்யாது, "ஆசை எண்டே வச்சுக்கொள்ளுங்கோ. நீங்கள் ஒண்டும் பணம் சிலவழிக்கத் தேவை இல்லை. என்ரை தாலிக்கொடி கிடக்கு. அதை வித்துப்போட்டு வீட்டுக்குப் பக்கத்தில கிடக்கிற கோலை புக்பண்ணி எல்லாரையும் அம்மாக்குப் பிறந்த நாள் எண்டு கூப்பிடுங்கோ. சாப்பாடும் ஓடர் செய்யுங்கோ. உங்களுக்கு எந்தச் சிலவும் இராது" என்று சொல்லிவிட்டு நீங்கள் போகலாம் என்பதுபோல் மகனைப் பார்த்தாள் சாந்தினி.
எதோ சொல்ல வாயெடுத்த மனைவியை கண்காட்டி வெளியே கூட்டிச் சென்றான் மகன். "சத்தம் போடாதையப்பா. மனிசி இனி எவ்வளவு நாளைக்கு இருக்கப் போகுதோ. சரி அவவின்ர ஆசையை ஏன் கெடுப்பான்" என்று கூறியது சாந்தினிக்குக் கேட்டதாயினும் அதற்குப் பதிலாக மருமகள் முணுமுணுத்தது விளங்கவே இல்லை.
ஒரு வாரமாக மருமகள் மனதுக்குள் சாந்தினியைத் திட்டித்திட்டி எல்லாரையும் பிறந்த நாள் விருந்துக்கு அழைக்க "அட சாந்தினியின்ர மகனைப் பாரன். தாய்க்கு பிறந்தநாள் செய்கிறான். குடுத்து வச்ச மனிசி" என்று எல்லாரும் தம்முள் கதைத்துக் கொண்டனர் மனிசி கொடுத்தது தாலிக்கொடியை என்று தெரியாமல்.
*******************************************
தாலிக்கொடி காசாகி சாந்தினிக்கு ஒரு நல்ல பட்டுச் சீலையும் வந்துசேர, சாந்தினியின் பிறந்த நாள் அன்று இரு உறவினர்கள் வந்து மருமகளுடன் சேர்ந்து அவளை வெளிக்கிடுத்தி சாந்தினியின் இரட்டை வடச் சங்கிலி, இரண்டு சோடி காப்பும் போட்டு அலங்கரிச்சு, முடிமயிர் வச்சு ஒரு பெரிய கொண்டையும் போட்டு முடிய, சந்தோசப்படுவதர்க்குப் பதிலாக மனம் முழுதும் பாராமாகிச் சுமக்க முடியாத அவஸ்த்தையானது சாந்தினிக்கு.
கொலண்டிலிருந்து வந்திருந்த இரண்டாவது மகனும் நேற்று முதல் குடும்பத்துடன் வந்து இங்குதான் நிக்கிறான். இரண்டு மக்களுமாக சாந்தினியை தூக்கிக் கொண்டு வந்து மகனின் ஜீப்பில் இருத்தி மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். மண்டபத்துள் இவளைக் கூட்டிக்கொண்டு போனதும் எல்லாரும் எழும்பி வெள்ளைக்காரர் செய்வது போல் கைகளைத் தட்டி இவளை வரவேற்க இவளுக்குக் கூச்சமாகப் போய்விட்டது.
நடுவில் போட்டிருந்த பெரிய சிம்மாசனம் போன்ற இருக்கையில் இவளை இருத்த, இவளுக்கு என்னவோ போல் இருந்ததுதான் என்றாலும் மண்டபம் நிறைய உறவினர்கள் நண்பர்களைப் பார்க்க மனதில் இன்பமும் துன்பமும் மாறிமாறி எழுந்தன. மண்டபத்துக்கு வந்திருந்த மூத்த மகன் தனக்குத்தான் முதல் உரிமை அம்மாவில் என்பதுபோல மைக்கை வாங்கி வந்திருந்த எல்லோருக்கும் வருகை தந்தமைக்காக நன்றியும் கூறி வரவேற்க, அம்மாவைப் பற்றி ஆகா ஓகோ என்று மற்ற மகன்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் எல்லோரும் புகழ்ந்து புளுக, ஒரு புன்சிரிப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தினி. அம்மாவுக்காகச் செய்வித்த பெரிய கேக்கைப் பிள்ளைகள் சூழ நின்று அம்மாவைக் கொண்டு வெட்டுவித்து அம்மாவுக்குத் தீத்தி, தாமும் அம்மாவின் கையால் வாங்கி உண்டு.... பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவர்களின் பாசம்கண்டு மனம்பூரித்து தாம் தம் பெற்றோருக்குச் செய்யவில்லையே என்னும் ஆதங்கத்தையும் இதைவிட தம் பெற்றோருக்குச் சிறப்பாகச் செய்யவேணும் என்னும் நினைப்பையும் கொடுக்க, சாந்தினி மட்டும் மனதுக்குள் பலவித அல்லாடல்களோடு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
பிள்ளைகளைக் குறை சொல்ல முடியாதபடி எல்லாரும் ஓடியோடி அனைவரையும் உபசரிக்க அனைவரும் மகிழ்வாக உண்டும், சிலர் சாந்தினிக்குப் பக்கத்தில் கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டும் ஊர்க்கதை உலகத்துக்கதை எல்லாம் கதைத்து முடிய, சாந்தினியோடு நின்று எல்லாரும் படம் எடுக்க ஆரம்பிக்க, மைக்கை ஒருக்காக் கொண்டா தம்பி என்று அதை வாங்கி எல்லாரும் என்ர பிறந்த நாளுக்கு வந்து என்னை சந்தோசப்படுத்தினதுக்கு மிக்க நன்றி. ஆனால் படம் எடுத்துப்போட்டு உடன எல்லாரும் போயிடாதேங்கோ. எல்லாரும் படம் எடுத்து முடிய நான் உங்களுக்கு ஒண்டு சொல்லப்போறன். அதைக் கேட்டுட்டுப் போங்கோ என்றதும் மண்டபத்தில் சலசலப்பு எழுந்தது.
பிள்ளைகள் மூண்டுபேரும் என்ன அம்மா இது என்று, தம்மைப் பற்றித்தான் தாய் ஏதேனும் உளறி வைக்கப் போகின்றாவோ என்று முகம் முழுதும் பயம்தெரிய வந்து நிக்க, ஒண்டும் இல்லை பயப்பிடாதேங்கோ என்று விட்டு, வாங்கோ படம் எடுக்க என்று நிலைமையை வழமையாக்க, வந்திருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று சாந்தினியுடன் நின்று படம் எடுக்க ஆரம்பித்தனர்.
**********************************************************
அனைவரும் ஒருவித எதிர்பார்ப்புடன் படம் எடுத்தபின்னும் போகாது காத்திருக்க, சாந்தினி அருகிலிருந்த மைக்கை நடுங்கும் கைகளால் எடுத்தாள்.
"என்ர பிள்ளையள் மூண்டுபேரும் என்னை முதல்ல மன்னிக்க வேணும். பிள்ளையளுக்கு மட்டும் இதைச் சொல்லியிருந்தால் அவை கடைசிவரை இதுக்குச் சம்மதிச்சிருக்க மாட்டினம். அதாலைதான் எல்லாருக்கும் முன்னால வச்சுச் சொல்லுறன்" என்றதும் பிள்ளைகளிலும் விட மனைவிமாரின் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்க, எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் சாந்தினி தொடர்ந்தாள்.
"நான் இந்த உலகத்தில இருக்கப் போறது இன்னும் சில வாரங்கள் தான்" என்று அவள் முடிக்க முன்னர் மண்டபத்தில் பெரும் இரைச்சல் எழுந்தது . "தயவு செய்து எல்லாரும் அமைதியாக் கேளுங்கோ. எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. என்ர பிள்ளையள் என்னை நல்ல வடிவாத்தான் பாக்கினம். ஆனால் நான் நோயாளியாகிப் பிள்ளையளுக்குப் பரமா இருக்க விரும்பேல்லை. அதனால பிள்ளையளைக் கேட்காமலே நான் இறந்து போறதுக்கு முடிவெடுத்திட்டன்" என்றதும் "அம்மா உங்களுக்கு விசரே" என்றபடி நெருங்கி வந்த பிள்ளைகள், தாயின் தீர்க்கமான பார்வையையும், எதுவும் கதைக்க வேண்டாம் என்று தாய் காட்டிய சைகையையும் பார்த்து செய்வதறியாது நிற்க, சாந்தினி தொடர்ந்தாள்.
"நடக்க முடியாமல் இருக்கும் போதே என்னால பிள்ளைகள், மருமக்களுக்குத் துன்பம். ஏதும் நோய் வந்து படுத்த படுக்கையானா .... என்னால நினைச்சுப் பார்க்கவே முடியேல்லை. தற்செயலா ஒருநாள் தொலைக்காட்சி பாக்கேக்கை Euthanasia பற்றி அறிஞ்சனான். அதால சுவிசில இருக்கிற அந்த நிறுவனத்தோட நான் தெளிவாக் கதைச்சிட்டன். என்ர லைப் இன்சூரன்ஸ் இன்னும் சில நாளில முப்பது ஆண்டுகள் முடியப்போகுது. ஒரு குறிப்பிட்ட காசு தருவினம். அந்தக் காசு இந்தச் செலவுகளுக்கும் செத்தவீட்டுச் செலவுக்கும் போதும். அவையே என்னைப் பொறுப்பெடுத்து கூட்டிக்கொண்டு போய் என்ர உடலை இங்கே திருப்பக் கொண்டு வந்தும் தருவினம். எல்லாரும் என்னை மன்னிச்சு சந்தோசமா வழியனுப்பி வைக்கவேணும்" என்றுவிட்டு மைக்கை மேசையில் வைக்க, சின்னச் சத்தம் கூடக் கேட்காமல் மரண அமைதியாகிப் போன மண்டபத்தில் மைக்கின் சத்தத்தம் டொங் என்று பெரிதாய்க் கேட்டது.

ஆசை மனதளவு – சிறுகதை

ஆசை மனதளவு – சிறுகதை



காலை இள வெயில் எங்கும் இருள் விரட்டி ஒரு கதகதப்பைத் தந்துகொண்டிருந்தது.  கடந்த ஆறு மாத குளிரின் பின் இன்றுதான் வெப்பநிலை இருபது பாகை செல்கியசுக்கு வந்துள்ளது. மரங்களில் தளிர்களின் பசுமை இங்கொன்றும் அங்கொன்றுமாயும் பார்க்கவே மனதிலும் ஒரு உற்சாகத்தையும்  புன்னகையைத் தந்திருக்க வேண்டும். ஆனால் இனியாள் எதையுமே பார்க்கப் பிடிக்காது படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள். மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர். மனிதாபிமானமும் மனச்சாட்சியும் அற்றுப்போய் எல்லாம் பணமாகி, கூச்சம் எதுவுமற்று ……
அவளுக்கு நினைக்கத் தன்மேலேயே கூச்சம் எழுந்தது.
நான் கூடக் கூச்சமற்றவள் தானே. உயிருக்காக இப்படி ஒன்றைச் செய்யப் போய்த் தானே இப்படி ஒரு சுழலில் மாட்டி நிற்கிறேன். அங்கேயே இருந்திருக்க வேண்டும். இத்தனை ஆயிரம் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் தானே போரின் வடுச்சுமந்து, காயங்களை இன்னுமே ஆற்ற முடியாது, மீண்டு எழவே முடியாத சகதிக்குள் சிக்கி……ஒருவிதத்தில் நானும் சுயநலம் கொண்டவள் தான்…. எண்ணிக்கொண்டு இருக்கும் போதே கைத்தொலைபேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தவள், தமக்கையின் எண் என்றதும் கோபத்துடன் தொலைபேசியை முற்றிலும் அணைத்துவிட்டு மேசையில் வைத்தாள்.
இவள் எப்பிடி எனக்கு அக்காவாகப் பிறந்தாள் என்று கோபம் எட்டிப் பார்த்தது. தான் தவறு செய்ததுமல்லாமல் என்னையும் செய்யும்படி தூண்டுவது எத்தனை தவறு. என்னால் முடியாது என்று எத்தனை தடவை அழுத்தம் திருத்தமாகக் கூறிய பின்னும்  சீச் சீ..வெளிநாடு  வந்து கொஞ்சம் பணமும் சேர்ந்தால் இப்படியா நடப்பது என்று எண்ணியவள், உடனேயே அந்த எண்ணமே தவறு என்றும் எண்ணிக்கொண்டாள். ஒருத்தியை வைத்து  மற்றவர்களையும் அப்படி எண்ணுவது தவறு என்று எண்ணிய மாத்திரத்தில் ஜீவா அண்ணா தான் மனதில் வந்தார். அவரும் இல்லை என்றால் நான் சிலவேளை தற்கொலை தான் செய்திருப்பேன் என எண்ணிக்கொண்டே படுக்கையை விட்டு எழ மனமின்றி மறுபுறம் திரும்பிக் குறுகிக் கொண்டாள் இனியாள்.
*************************************************************
எங்கும் ஒரே புகை மூட்டமாகக் காட்சியளிக்க ஓடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுடன் அவளும் சேர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறாள். அங்கங்கே குண்டுகள் பட்டு எரிந்துகொண்டிருக்கும் கட்டடங்களும் நிலம் செடி கொடிகள் எல்லாம்….ஐயோ…. அவள் பின்னால் பிணங்கள் எல்லாம் எழுந்து ஓடிவருவதுபோல் இருக்க அவற்றிலிருந்து தப்பிப்பதற்காய் இன்னும் வேகமாக ஓடியோடி கால்கள் ஒய்ந்துபோக அத்தனையும் இவளை வந்து மூடியதில் மூச்சே விடமுடியாது இவள் கத்திய சத்தத்தில் நந்தினி ஓடிவந்து இவளை உலுக்கியதில் இவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவு வந்தது. இப்பிடித்தான் கடந்த ஆறுமாதமாக போர் தந்த சுழலில் சிக்கி வெளிவர முடியாது தவிப்பவளைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு வந்து வெள்ளவத்தையில் வைத்திருக்கிறாள் நந்தினி.
இனியாளின் சகோதரி ஒருத்தி லண்டனில் இருக்கிறாள். அவள் எப்பிடியும் இனியாளைக் கூப்பிடுவதற்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி அவள் செலவுக்கு கொஞ்சப் பணமும் அனுப்பியிருக்கிறாள். பணம் அனுப்பாவிட்டால் கூட நந்தினி அவளிடம் அதை எதிர்பார்த்திருக்க மாட்டாள் தான். கொழும்பில் ஒரு பத்திரிக்கை நிருபராக இருப்பதனால் இயல்பாகவே நந்தினியிடம் இருக்கும் துணிவுதான் அவளைத் தன்னுடன் வைத்திருக்க உதவியது. இயக்கத்தில் இருந்த ஒருத்தியை, காம்பில் ஆட்களோடு ஆட்களாய் தப்பிப் பிழைத்து வந்தவளை தன்னுடன் கூட்டிக்கொண்டு வர அவளாக ஆசைப்படவில்லைத்தான். ஆனாலும்” நந்தினி இவள் இனியாளை உன்னோட கூட்டிக்கொண்டு போய் வச்சிருந்து பாஸ்போட்டும் எடுத்துக் குடுத்தால் மூத்தவள் எப்பிடியும் வெளியில எடுத்துப் போடுவள். இங்க இருந்தால் இவள் யோசிச்சு யோசிச்சே செத்துப்போவள். வெளியில சனத்தை நம்பிப் போகவும் ஏலாது. இந்த உதவியை மட்டும் செய் நந்தினி ” என்று பெரியம்மா கெஞ்சிய கெஞ்சில் இப்ப  நான்கு மாதங்கள் இனியாள் நந்தினியுடன் தான்.
எப்போதும் எங்கோ வெறித்தபடி படுத்துக் கிடப்பதே இனியாளின் நிலையாக இருக்க, அவள்மேல் இரக்கப்பட்டு நந்தினியும் எதுவும் சொல்வதில்லை. இவளாவது எத்தனை குடுத்துவைத்தவள். தப்பி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் வந்துவிட்டாளே. பிடிபட்டிருந்தால் என்ன கதி. பாவம் எமது பெண்போராளிகள் என மனதுள் மற்றவர்களுக்காக கவலை கொண்டு பெருமூச்சை மட்டும் தான் விட முடிந்தது நந்தினியால்.
இத்தனை மிருதுவானவள் எப்பிடி இயக்கத்தில் சேர்ந்தாள் என்று நந்தினிக்கு இன்றுவரை வியப்பாகவே  இருந்தது. அதிர்ந்து ஒரு வார்த்தை கூடப் பேசாதவள். கடிதம் எழுதி வைத்துவிட்டு பதினாறு வயதில் இயக்கத்துடன் இணைந்துவிட்டாள். பெரியம்மா அழுதழுது எத்தனையோ காம்பில் கேட்டும் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இறுதி யுத்தத்தம் நடந்துகொண்டிருந்தபோது நான்கு நாட்களுக்கு முன் தாயாரிடம் வந்து சேர்ந்தபோது ஒரு நிமிடம் தாய்க்கே அவளை அடையாளம் தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளில் இனியாளிடம் நிறைய மாற்றங்கள். நந்தினி அவள் இயக்கத்தில் இருந்தது பற்றி எத்தனையோ தடவை கேட்டும் வாயே திறக்கவில்லை அமசடக்கி. இவளிடம் தமக்கை நேற்றுக் கூறியதை எப்படிக் கூறுவது என்று யோசனையோடுதான் நந்தினி நேற்றிலிருந்து இருக்கிறாள். எப்படியும் இன்று இவளுடன் கதைத்துவிடவே வேண்டும் என்று முடிவு கட்டியபடி ” இனியாள் எழும்பிச் சாப்பிடும். உம்மோட முக்கியமாய் ஒரு கதை கதைக்கவேணும்” என்றபடி தன் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.
********************************************************************
இரண்டு ஆண்டுகள் எப்பிடி ஓடிப்போனது என்று வியப்பாக இருந்தது இனியாளுக்கு. இந்த  இரண்டு ஆண்டுகளில் அவள் தன் இழப்புக்களையும் வேதனைகளையும் மறந்தாள் என்று சொல்ல முடியாவிட்டாலும் லண்டன் வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டு விட்டாள். ஜீவா அண்ணனின் கடையில் வேலை கிடைத்தது தான் செய்த அதிட்டம் தான் என்று அவள் வலுவாக நம்பியதற்கிணங்க அவர் தான் அவளின் விசா அலுவல் தொடக்கம் லோயரிடம் கதைப்பதுவரை செய்கிறார். எத்தனையோ நாட்கள் விசாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தவளை, திரும்பிப் போனால் அவள் மட்டுமல்ல அவள் தாயும் சந்திக்க நேரும் துன்பங்களைத் திரும்பத்திரும்பச் சொல்லி அவள் மனதை மாற்றியவரும் அவர் தான்.
பெண்கள் என்றாலே படுக்கை மட்டுமே லண்டனில் வசிக்கும் தமிழ் ஆண்களுக்கு நினைவுவரும் என்று அவள் நூறுவீதமாக நம்பியதை, இல்லை நல்லவர்கள் தான் பலரும் என்று நிரூபித்தவர் ஜீவா அண்ணனும் அவர் நண்பர்களும். இவளை லோயரிடம் அழைத்துப்போய் இவள் கேசை இத்தனை தூரம் கொண்டு வருவதற்கு உதவிய பலரை அவள் மனம் நினைத்துப் பார்க்கிறது.
உண்மைக்குப் புறம்பாக எப்படிப் பேசுவது என்று அவள் முரண்பட்ட நேரம் எல்லாம் நன்மைக்காகப் பொய்யும் சொல்லலாம் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அவனின் பேராசைக்குத்தானே இத்தனையும் என்று ஜீவா அண்ணா பல தடவை சொல்லித்தான் அவள் கோட்டில் சாட்சி சொன்னது.
அன்றைய நாளை நினைத்தால் இப்பகூட அவளுக்குக்குலை நடுங்குகிறது. சிவா என்னும் அந்த மிருகத்திடமிருந்து தான் தப்பியது தான் செய்த புண்ணியம் தான் என்று அவள் கடவுளை நம்பத் தொடங்கியதும் அதன் பின்னர் தான்.
***************************************************
சிவா இனியாளைப் பதிவுத் திருமணம் செய்யக் கொழும்பு வந்திருந்தான். காலையில் இனியாளை எழுப்பி, வேண்டா வெறுப்பாக அவள் குளித்து சேலை உடுத்து,  இனியாளைத் தயார் செய்யவே நந்தினிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. உதுக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டன் என்று அடம்பிடித்தவளை எவ்வளவோ சொல்லித்தான் சம்மதிக்கவைக்க வேண்டியிருந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தமக்கை கூறிய விபரங்களின் படி லண்டனிலிருந்து வந்து சேர்ந்தவனுக்கு ஒரு நாற்பது வயதாவது இருக்கும். அவனைப் பார்த்ததும் நந்தினிக்கு அவனை நம்பலாம் போல் தான்  இருந்தது. இனியாள் அவனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் எதுவும் பேசாமலே இருந்தாள். கடைசி இருவருக்கும் இருபது வயதாவது இடைவெளி இருக்கும். தமக்கைக்குத் தெரிந்தவன் என்று இவனை நம்பி இவளைக் கூட அனுப்ப முடியுமா என்று யோசித்தபடியே அவனை அளக்கப் பார்த்தாள் நந்தினி. தன் தாயிடம் கூட இந்த விடயம் பற்றிக் கூற வேண்டாம் என்று தமக்கை கூறியதில் காதும் காதும் வைத்ததுபோல் இதை முடிக்க வேண்டி இருந்தது.
சிவாவுடன் கதைத்த மட்டில் நன்றாகத்தான் கதைக்கிறான். பெண்கள் என்று எம்மிடம் வழியவும் இல்லை. நேர் பார்வையுடனும் இருக்கிறான். தமக்கை லண்டனில் தானே இருக்கிறாள். இவள் போய் இறங்கியவுடன் தமக்கையுடன் தானே இருக்கப் போகிறாள். இங்கு வைத்து இவளை நெடுகப் பாதுகாக்க முடியாது என எண்ணியபடியே சாதாரணமாக அலங்கரித்து முடிக்கவே பெரும்பாடானது. எதுக்கு அலங்காரம் ? என்று அடம் பிடித்தவளை நாங்கள் சாதாரணமாப் போய் நின்றால் நொத்தாருக்கே சந்தேகம் வந்திடும் என்று ஒருவாறு கூட்டிப்போய் திருமணப் பதிவை முடித்து சரியாக ஒன்றரை மாதத்தில் அவளுக்கு விசாவும் கிடைத்தது இனியாளின் அதிட்டம் என்றுதான் நந்தினி எண்ணினாள்.
லண்டன் வந்து ஒரு மாதம் வரை அவள் சகோதரியின் வீட்டில் தான் தங்கியிருந்தாள். ஒவ்வொருநாளும் அந்த சிவா, இவளின் வெளிநாடு வருகைக்காக மட்டும் என்று திருமணப்பதிவு செய்து இவளை லண்டன் அழைத்து வந்தவன், பல்லிளித்துக்கொண்டு அடிக்கடி தமக்கை வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவன் வரும்போதெல்லாம்  இவள் உடனேயே அறைக்குள் சென்று இருந்துவிடுவாள். தமக்கை அவனை விழுந்துவிழுந்து உபசரிப்பது கேட்கும். அதன்பின் இருவரும் எதோ குசுகுசுப்பதும் கேட்கும். அத்தானும் கூட எதுவும் சொல்லாதது இவளுக்கு இன்னும் கோபத்தை வரவழைக்கும். சொந்த அக்காவே இவள் வாழ்வில் மண் அள்ளிப் போட எண்ணுகையில் அத்தான் பாவம் என்ன செய்வார் என்று அவர் மேலும் இரக்கம் எழும்.
தமக்கை அன்று வெளியே சென்று சிறிது நேரத்தில் கதவு தட்டுப்பட, தமக்கை தான் வந்து தட்டுகிறாள் என்று இவள் எழுந்து சென்று கதவைத் திறந்தால் அந்த சிவா இவளைத் இடிப்பதுபோல் உங்களோட கதைக்க வேண்டும் என்று உள்ளே வந்துவிட்டான். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க முன் “என்னை ஏன் உமக்குப் பிடிக்கேல்லை. என்னட்டை அழகு இல்லையோ, காசுபணம் இல்லையோ, உம்மை நான் சந்தோசமா வச்சிருப்பன்”  என்று அவன் ஏதேதோ பினாத்த, எல்லாம் தன் தமக்கையின் சதி தான் என்று அவளுக்குத் தெளிவாகப் புரிய கோபம் வார்த்தைகளாய் வந்து விழுந்தது. வெளியில போடா. பெண்டில் பிள்ளையோட இருக்கிற உனக்கு நான் கேட்குதோ. விசாவுக்கு எண்டு சொல்லித்தானே என்னை கூட்டி வந்தனி. அக்கா காசு தந்திட்டாள் தானே. உடனடியா வெளியில போகாட்டிப் போலீசைக் கூப்பிடுவன் என்று கத்தியவளை அவன் சிரிப்பு நிறுத்த, யோசனையோடு அவனைப் பார்த்தாள் இனியாள்.
உன்ர அக்கா எனக்கு இன்னும் காசு தரேல்லை. நீ சட்டப்படி என்ர மனிசி. நான் மனம் வச்சா உன்னை உடனே திருப்பி அனுப்பலாம். நான் மனம் வச்சாத்தான் நீ தொடர்ந்து இங்க இருக்க விசாவும் தருவாங்கள். எதோ சுத்தபத்தமான ஆள்போல நால்லாத்தான் பிறியம் விடுறாய். ஆமிக்காரர் உன்னைச் சும்மாவே விட்டிருப்பாங்கள்”   என்றபடி எழுந்து அவளருகில் வர, எப்பிடித்தான் அவளுக்கு அந்தக் கோபமும் பலமும் வந்ததோ  அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு அவனிடம் அகப்படாமல், கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடி, ஜீவா அண்ணன் வீட்டு வாசல் மணியை அடித்துக்கொண்டே நிக்க, கதவைத் திறந்த ஜீவா அண்ணனின் மனைவி சுகி வீட்டு உடுப்போடு காலில் செருப்பும் இல்லாமல் இவள் நின்ற நிலையைப் பார்த்து “உள்ள வாரும்” என்று இவள் தோளைப் பிடித்து அழைக்க என்னைக் காப்பாத்துங்கோ அக்கா என்று அவள் தோழில் சாய்ந்து குளறி அழுபவளை அழுது முடியும் மட்டும் அணைத்து முதுகு தடவி அசுவாசப்படுத்திவிட்டு சோபாவில் அமரச் செய்தார் சுகி.  வெறுங்காலுடன் ஓடி வந்ததில் காலில் எதுவோ குத்தி இரத்தம் வடிந்ததைக் கூட சுகிதான் கண்டு காலைக் கழுவிவித்து மருந்து போட்டுக் கட்டி, கணவனின் வருகைக்காகக் காத்திருக்கவாரம்பித்தார்.
********************************************
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பின் தமக்கை தேடி வந்தபோது இவள் பார்க்க மறுத்துவிட்டாள். அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என ஜீவா அண்ணன் எச்சரித்து இருந்ததையும் மீறி இப்ப வந்து நிற்கும் தமக்கையை எந்தவித சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கும் அவளைப் பார்க்க தமக்கையின் வாயும் தன் வேலையை ஆரம்பித்தது. உனக்கு விசரோடி. சிவா உனக்கு விசா எடுத்துத் தராட்டி நீ சிலோனுக்குத்தான் போகவேணும். அங்க போய் என்ன செய்வாய். ஒரே ஒருக்கா அவனுடன் நீ இருந்தாப் போதும். அவன் விசா எடுத்துத் தருவான் என்று சொன்னதுதான் தாமதம்,” நீ எல்லாம் ஒரு பொம்பிளையோ? இந்த இரண்டு வருசமா வேலை செய்து உன்ர காசு தந்திட்டன். உனக்கு வேணும் எண்டா நீயே அவனோட படுத்து காசைக் கழிச்சுக் கொள்”  என்றதும் தான் தாமதம் ” எளிய நாயே, எனக்குச் சொல்லிறியோ. ஜீவா அண்ணா தான் உன்னை வச்சிருக்கிறார் போல என்று சொல்லி முடியும் முன்பே தமக்கையின் கன்னத்தில் இனியாள் அடித்த அடி இடியாய் இறங்க, விதிர்த்துப் போய்க் கன்னத்தைத்ப் பிடித்துக்கொண்டு நின்ற தமக்கையை பிடித்துத் தள்ளிக்கொண்டு போய் கடையின் வெளியே விட்டு, உனக்கும் எனக்கும் இனி எந்த உறவுமில்லை. இந்தப் பக்கம் வந்தால் அக்கா என்று பார்க்க மாட்டன் என்று உறுமும் இனியாளைப் பயத்துடன் பார்த்தபடி நகரும் தமக்கையை எப்படி நீ எனக்குத் தமக்கையாகப் பிறந்தாய் என்று வெறுப்புடன் பார்த்துக்கொண்டே நின்றாள் இனியாள்.
********************************************
இன்று தீர்ப்புச் சொல்லும் நாள். இருவருக்கும் விவாகரத்துக்கு பதிவுசெய்து அவனின் சொத்துக்களிலும் இவளுக்குப் பங்கு தரவேண்டும் என்று இவள் பக்கம் வாதாடும் லோயர் வழக்குப் போட்டபின் தான் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடி வந்தான் சிவா. அப்ப கூட அவனின் தடிப்பும் கோபமும் குறையவில்லை. “நீ என்னோட ஒண்டா இருக்கேல்லை எண்டு கோட்டில சொல்லுவன் ” என்றதற்கு, “அப்பிடிச் சொன்னால் உன்னைத்தான் முதலில் உள்ளே பிடித்து ஏழு வருடம் போடுவார்கள். தாராளமா உள்ள போய் இருக்கலாம் ” என்று இவள் தனக்கும் சட்டங்கள் பற்றித் தெரியும் என்று அவனுக்கு உணர்த்தக் கூறியவுடன் அவன் எதுவும் கூறாமல் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போனதை நினைக்க இப்பவும் சிரிப்பு வந்தது இனியாளுக்கு. ஜீவா அண்ணன் சொல்லியிராவிட்டால் இவளுக்கு இந்த நாட்டுச் சட்டங்கள் பற்றி எப்பிடித் தெரிந்திருக்கும்.
லோயர் சொன்னபோது இனியாளுக்குக் கூட அவனின் சொத்தில் பங்கு கேட்பதில் எந்தவித உடன்பாடும் இல்லை. நீங்கள் சும்மா இருங்கோ பிள்ளை. உப்பிடியான ஆண்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேணும் எண்டு லோயர் சொன்னதில் அவளும் பேசாமல் இருந்துவிட்டாள். அவனின் ஐந்து அறைகள் கொண்ட வீட்டின் பெறுமதியில் அரைவாசியை அவளுக்கு வழங்கவேண்டும் என்று தீர்ப்பானதும் அவன் எரித்து விடுவதுபோல் பார்த்த பார்வை இவளை ஒன்றுமே செய்யவில்லை.
“அவர் எதோ தெரியாமல் செய்துபோட்டார் பிள்ளை. எங்களுக்கும் மூண்டு பிள்ளைகள். இப்பிடிச் சொத்தைக் கேட்டால் எப்பிடி ” என்று  சிவாவின் மனைவி வந்து அழுது மாய்மாலம் விட்டும் இவள் மசியவில்லை. “கேவலம் காசுக்காக இப்பிடி புருஷனை விவாகரத்துச் செய்துவிட்டு ஒண்டா இருக்கிறதாலதான் மற்றப் பெண்களையும் உங்கள் கணவன் கேவலமாக நினைக்கிறான். நான் ஒண்டும் செய்ய ஏலாது ” என்று முகத்திலடித்தாற் போல அறைந்து கதவைச் சாற்றிய பின் அப்படிச் செய்ததனால் தானே நீ இன்று இங்கு நின்றுகொண்டிருக்கிறாய் என்று கேள்வி கேட்ட மனதை அலட்சியம் செய்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
இரண்டு மாதங்களின் பின் அவனிடமிருந்து இன்னும் இரண்டு மாதகால அவகாசம் கேட்டு அவளுக்கு வந்திருந்த கடிதத்தை லோயரிடம் கொடுக்கும் போது “தங்கச்சி கவலைப்பட வேண்டாம். இரண்டு மாதத்தில அவர் உங்களுக்குக் காசு தராட்டால் கோட் அவற்றை சொத்தை தானே வித்து உங்களுக்கு வரவேண்டிய காசைத் தரும்” என்று கூறி ஒன்றரை மாதத்தின் பின்னர் லோயர் இரண்டு லட்சம் பவுன்சை இவள் வங்கிக் கணக்குக்கு மாற்ற, அடுத்த நாளே சிவாவின் வீட்டுக்கு ஜீவா அண்ணனுடன் இவள் சென்று அவனின் மனைவியின் வங்கிக்கணக்கு இலக்கத்தை வாங்கி வந்ததோடு அல்லாமல் அத்தனை பணத்தையும் சிவாவின் மனைவியின்  பெயருக்கு மாற்றியபின் தான் அவளால் நின்மதியாக மூச்சே விட முடிந்தது.
“கொஞ்சக் காசை வச்சுக்கொண்டு மிச்சத்தைக் குடுத்திருக்கலாம்” என்று ஜீவா அண்ணா கூறியதையும் அவள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. “அவனின் காசை நான் எடுத்தால் நானும் விபச்சாரி ஆகிவிடுவன் அண்ணா. இப்ப நான் சுதந்திரமானவளாய் சுத்தமானவளாய் ஆனது போல இருக்கண்ணா. நானே உழைச்சுச் சாப்பிட எனக்குத் தெம்பும் இருக்கண்ணா” என்று கூறிவிட்டுச் செல்பவளை பெருமையாகப் பார்த்தபடி நின்றார் ஜீவா.

நிவேதா உதயராஜன்
பெ