Sunday, 8 February 2015

என்னை நானே எழுதப் பார்க்கிறேன் - கவிதை


என்னை நானே எழுதப் பார்க்கிறேன்
எல்லைகள் அற்றவளாய்
ஏக்கங்கள் இல்லாத எண்ணிலடங்கா
மாற்றங்கள் மனதடைந்து
மீட்கவியலாத முடிவிலாத் தூரமதை
மனதின் மந்தகாரமில்லா
முடிவே அற்றதான முடிதல்களுடன்
மிகைப்படுத்த முடியாதபடி

புலன்களின் புரிதலற்ற பதுங்குதல்களில்
பிடிவாதமாய் பின்னி நிற்கும்
படிநிலைகளின் பக்குவமற்ற பதங்கள்
பாகுபாடற்று என்றும்
பாழ்மனதைப் பலமிழக்கச் செய்து
பரிகாரம் தேடித் தேடியே
பரிவறுக்கச் செய்கின்றன நிதம்

காலங்களின் ஆற்றவும் முடியாததான
மாற்றங்களை நிதம் நம்பி
மீண்டு வரவே முடியாததான நிலையின்
மிகைப்படுத்தப்படும் மிதப்பில்
மாயைகளில் மதம்பிடித்தாடும் மனதின்
மார்க்கங்கள் என்றும் அறியோராய்
மீட்பர்கள் போல் மந்தகாசித்தபடி மனிதர்கள்

மாறுகின்ற காட்சிகளின் மனதோடு
முகம் முழுதும் மாயத்தோல் போர்த்து
மின்மினிகளாய் வானம் எங்கணும்
வரலாறு பாடுகின்றன வண்ணத்துப்பூச்சிகள்
மனம் என்னும் பாறையில் மட்டும்
மாற்றமே நிகழ்த்த முடியாததாய்
மடிந்தபடி இருக்கிறது வசந்த காலம்


08.02.2015
நிவேதா உதயன்

No comments:

Post a Comment