வேலை அற்ற நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏனோ அவனுக்கு வெள்ளனவே விழிப்பு வந்துவிடும். அந்த நாள் முழுவதையும் அமைதியாக வீட்டிலிருந்தபடியே கரைப்பதான அவனின் அந்தத் தீர்மானத்தை யாராலும் கலைக்க முடியவே இல்லை இன்றுவரை.
தொலைபேசி அழைப்புத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அம்மாவாகத்தான் இருக்கும். இப்படித் தொடர்ந்து வேறுயாரும் போன் செய்துகொண்டே இருக்க மாட்டார்கள். இருதடவை கண்களையே திறக்காது கிடந்தவன்இ மூன்றாவது தடவையாக போன்சத்தம் தொடர்ந்ததில் கைகளை மட்டும் நீட்டி போனை எடுத்துக் காதில் வைத்து ம் என்றான்.
***************************************************
பத்மாவின் மனம் இன்று கொந்தளித்தபடி இருந்தது. எத்தனை எண்ணியும் ஆறுதல் கொள்ளமுடியாது தவிப்புடன் கூடவே கோபமும் எழுந்ததுதான் எனினும் எதுமே செய்ய முடியாத கையாலாகாத் தனத்தில் தன்மீதே எரிச்சல் வந்தது. இந்த நாற்பத்தெட்டு வயதில் கூட மற்றவர் திரும்பிப் பார்க்கும் அழகுடனும் சுறுசுறுப்புடனும் இருக்கும் தனக்குஇ தன் கணவனைத் தன்னுடன் கட்டி வைக்கும் கலை வாய்க்கவில்லையே என தன்மீதே பச்சாதாபம் எழஇ ஏதும் செய்ய முடியாத தன் நிலையை எண்ணிப் பெருமூச்சைத்தான் விடமுடிந்தது.
வயதுக்கு வந்து எத்தனையோ ஆண்டுகளாகியும் தன் பெண்ணைப் பற்றிக்கூட ஒரு தந்தை கவலை கொள்ளாது இருக்க முடியுமா என்று அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
தன் மகளை மட்டுமல்ல தன் குடும்பத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இந்த ஐம்பத்து ஐந்து வயதிலும் வாலிப நினைவுடன் திரியும் கணவனைப் பற்றிய கவலையிலேயே அவளுக்கு தன் மற்றைய துன்பங்கள் மறந்துவிட்டன. மூத்தவன் அசுவத்தாமா கூட உரித்துவைத்து அப்பனைப் போலத்தான். குடும்பத்தில் எந்த ஈடுபாடுமின்றித் தன் காரியங்களை மட்டும் சாதித்துக்கொண்டு போவதில் வல்லவனாக இருந்தான். ஆனாலும் அவனையும் குறை சொல்ல முடியாது. இப்படி ஒரு அப்பாவுக்கு மகனாகப் பிறந்துவிட்டு ... எதோ தன் படிப்பைத் தானே கவனித்து இன்று அமெரிக்காவில் நல்ல ஒரு வேலையில் இருக்கிறான். ஆனால் என்ன என் சம்மதத்தைக் கேட்காமலே ஒரு வெள்ளை இனப் பெண்ணை மணந்து ... சரி என் விதி என்று நொந்தபடி கணவனின் விடயத்தை நினைவில் கொண்டுவந்தாள் மீண்டும்.
இப்ப மூன்று மாதங்களாக கணவனிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்றதும் அவளுக்கே கொஞ்சம் பயம் ஏற்பட்டது. அத்தோடு நேற்று முன்தினம் மகளின் சாதகத்தைக் கொண்டு இணுவிலில் உள்ள சாத்திரம் சொல்லும் ஒருவரிடம் சென்றபோதுஇ உன் மகளுக்கு மூன்று ஆண் சகோதரர்களும் இன்னொரு பெண் சகோதரியும் இருக்கிறார்கள் என்று சொன்னதும்இ இல்லை அம்மா எனக்கு இரண்டு ஆணும் ஒரு பெண்ணும் தான் என்றாள் பத்மா. அவர் மீண்டும் கண்ணை மூடியபடி என் வாக்குப் பலிக்காமல் விட்டதில்லை. இப்ப மூன்று என்றால் இன்னும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இவள் சாதகத்தில் சகோதர பலன் உண்டு என்று கூறிவிட்டுஇ அடுத்த ஆண்டுதான் திருமணப் பலன் உண்டு. கவலை கொள்ளாமல் போய் வா என்று கூற இவள் எதை எல்லாமோ எண்ணியபடி வீடுவந்து சேர்ந்தாள்.
இந்த வயதில் பிள்ளைகளைப் பற்றிய கவலை தான் இருக்கவேண்டுமே தவிர முப்பது வருடத் தாம்பத்தியத்தில் கணவனைப் பற்றிப் பயம் கொள்வதுஇ கணவனின் அரவணைப்பு தனக்கு கிடைக்காத காரணத்தினால்த்தானோ என்று குழப்பம் ஏற்பட இரண்டாவது மகனுக்கு தொலைபேசி எடுத்து அவனின் சுக நலன்களைக் கேட்ட பின்னர்இ ஒருக்கா அப்பாவைப் போய்ப் பார்த்துக்கொண்டு வருகிறாயாடா கண்ணா. அம்மாவுக்காக போடா என்று இறைஞ்சுவதுபோல் கேட்டாள்.
********************************************************************
சிவாவுக்கு தந்தை மேல் அலாதிப் பிரியம். அதற்காகத் தந்தையும் இவனுடன் நல்லமாதிரி என்று எண்ண முடியாது.ஆனால் ஆண் சிங்கங்கள் இரண்டைப் பெத்திருக்கிறேன் என்று அது பெரிய சாதனைபோல் கூறும் தந்தையை அவனுக்கு மட்டுமல்ல பெரும்பாலானவர்களுக்கும் பிடிக்கும்தான். நல்ல உயரமாக நிறமாக நீண்ட மூக்குடன் பார்ப்போரை வசியம் செய்வதுபோன்ற பார்வையும் கண்ணும் கொண்டவரைஇ யாருடனும் தானாக வழிந்து பேசாமல் திமிராய் இருப்பதனால்த்தானோ அவனுக்கு அப்பாவைப் பிடிக்கும் என்று கேட்டால் தெரியாது என்பதாய்த்தான் அவன் பதில் இருக்கும். அங்கிலம் சரளமாக அப்பா பேசும்போதுஇ கணக்கைப் புரியும்படியாக இவனுக்கு விளங்கப்படுத்தும்போதும் அவர் மற்றைய அப்பாக்களை விட உயர்ந்தவராகவும் சிவாவின் மனதிலிருந்து எந்த நிலையிலும் கீழே இறக்கமுடியாதவராகவும் ஆகிப்போனார்.
மற்றைய பிள்ளைகள் என்றால் தம்மைக் கவனிக்காத அப்பபாக்கள் மேல் வெறுப்பைத்தான் வளர்த்துக் கொள்வார்கள். முன்பு எங்கேயாவது தந்தையுடன் செல்ல முடிந்த வேளைகளில் அப்பாவின் கைகளைப் பிடித்தபடி வீதியில் போவது இவனுக்குப் பெருமையாக இருக்கும். வீதியில் பலர் அப்பாவுக்குக் கொடுக்கும் மரியாதையில் இவன் தனக்குமானதாக எண்ணித் தலை நிமிர்த்திக்கொண்டு போவான். பல தடவைகள் யாழ்ப்பாணத்தில் சந்திரா அன்டி அப்பாவுடன் கதைத்துக்கொண்டே வருவா. இவனுக்குச் சினமாக இருந்தாலும் அப்பா தன் கையை விடாமல்ப் பற்றி இருப்பதும்இ சுபாஸ் கபேயில் வாங்கித்தரும் ஐஸ்கிரீமும் ரோல்சுமே அப்பாவின் மேலுள்ள எரிச்சலையும் குறைத்துஇ அடுத்த தடவையும் அப்பாவுடன் செல்வதான ஆசையையும் கிளறிவிடும்.
அம்மா எப்போதும் அப்பா பற்றி சிவாவிடம் தூண்டித்துருவிக் கேட்டது கிடையாது. அந்த விடயத்தில் அம்மாவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவனால். இப்பொழுது வளர்ந்து இருபத்தாறு வயதாகிய பின்னும் கூடஇ அப்பா தம்மை எல்லாம் எழு ஆண்டுகளாகப் பிரிந்து கென்யாவில் ஆங்கில ஆசிரியராகச் சென்றதன் பின்னரோஇ லண்டனில் காலூன்றித் தன் வாழ்வை ஆரம்பித்ததன் பின்னரோகூடஇ அப்பாவில் எந்தவித வெறுப்பும் ஏற்படாமல் எப்படி இருக்கிறது என்பது அவனை அடிக்கடி வியப்பில் ஆழ்த்தும் விடயம்.
பாவம் அம்மாதான் எம்மை வளர்ப்பதற்கே தன் வாழ்வைத் தொலைத்தவர் என்னும் இரக்கமும் தாயின் மேல் உண்மையாகவே அவனுக்கிருந்த அன்பும் தாயின் வேண்டுகோளை நிறைவேற்றுவதான முடிவைக் கொடுக்கஇ எழுந்து முகம் கழுவி ஒருகோப்பியைப் போட்டுக்கொண்டு வந்து கணனியின் முன் அமர்ந்தான் விமானச் சீட்டைப் பதிவு செய்வதற்காக.
*******************************************************************
அவன் ஆபிரிக்காவில் இருந்து வந்து ஒரு வாரங்களாகிவிட்டது. இன்னும் தாய்க்குத் தொலைபேசி எடுக்கவே இல்லை. நான் இன்னும் கென்யாவில் இருக்கிறேன் என்றே அம்மா எண்ணிக்கொண்டு இருப்பா. எடுப்போமா விடுவோமா என்று இரண்டு மூன்று தடவைகள் எண்ணிவிட்டு பிறகும் அம்மாவுடன் கதைக்கும் என்னத்தைத் தள்ளிப்போட்டான்.
அப்பா முந்தைய கம்பீரத்தோடு இல்லை ஆயினும் இப்போதும் முப்பது முப்பத்தைந்து மதிக்கத் தக்கவர் போலவே இளமையாக இருந்தார். இவனை எயாப்போர்ட்டில் வந்து கூப்பிடும் போது இவனுக்குத் தந்தையைக் கட்டி அணைக்கவேண்டும் போல இருந்தது. ஆனாலும் தந்தை தோழில் கைபோட்டு எப்பிடி இருக்கிறாய் மை சண் என்றபோது அவனின் ஏமாற்றம் அளவிடமுடியாததாக இருந்தது. அத்தோடு வந்ததும் வராததுமாய் எத்தனை நாள் நிப்பாய் இங்கே என்றதும் கூட ஒரு ஏமாற்றத்துடன் கூடிய வலியையும் தந்தது தான் எனினும் சமாளித்தபடி ஒரு வாரம் தான் அப்பா என்றான்.
தூரத்தில் இருக்கும் போது தந்தை பற்றி எண்ணியதற்கும் இப்போது கண்முன்னே நடப்பவைக்குமான வித்தியாசத்தை மனம் கிரகித்துக்கொள்ள மறுக்கஇ அவன் எதிர்பார்த்து வந்த அப்பா இவர் இல்லை என்பதும் உறைக்கத் தன் மனதைச் சமநிலைப்படுத்துவதர்க்காய் வீட்டுக்குப் போகும் வரை இவன் எதுவுமே பேசாமல் அமர்ந்திருந்தான். இவன் முதல்த்தடவை கென்யா வந்தபடியால் இவனுக்கு ஒவ்வொன்றையும்காட்டி சிறுவன் ஒருவனுக்கு விளங்கப்படுத்துவதுபோல் கூறிக்கொண்டே அப்பா வர இவனும் ம் போட்டபடியே வந்தான். பச்சைகளும் கட்டடங்களும் அங்காங்கே தெரிந்தனதான் எனினும் ஒருவித வெறுமை பார்க்கும் இடமெங்கும் தெரிந்தது. சன நெரிசல் கூடிய லண்டனை தன் மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது எண்ணிக் கொண்டான்.
அப்பா இருந்த வீடு சிறிய பங்களோ போன்று இருந்தது. டாக்சியை அனுப்பிவிட்டு உள்ளே போக சிவா வெளியே நின்றபடியே சுற்றிவரப் பார்வையால் அளந்தான். அங்காங்கே சில பூஞ்செடிகள் இருந்தனதான் எனினும் பூக்கள் இன்றி குளிர்ச்சியின்றி இவன் மனது போல இருப்பதாகவே இவனுக்குப் பட்டது. அத்தோடு சுட்டெரிக்கும் வெயிலும்இ வியர்வையில் நனைந்துபோன இவனின் உடைகளும்இ காற்றே அற்ற அந்தச் சூழலும் ஒருவித வெறுப்பைத் தோற்றுவித்தன.
வாடா உள்ளே என அப்பா அழைத்ததும் மனதில் ஒரு சந்தோசம் துளிர்க்க உள்ளே சென்று கதிரையில் பாக்கை வைத்துவிட்டு அமர்ந்தான். என்னடா குடிக்கிறாய் என்று அப்பா உரிமையுடன் கேட்க அப்பாமேல் இருந்த கோபம் காணமற்போனதாக உணர்ந்து மனதில் ஒரு நின்மதி பரவியது. அதன் பின் தந்தை தனக்காகச் சமைத்து வைத்தது என சோறு பருப்பு மரவள்ளிக் கிழங்கு மீன் பொரியல் என நாவுக்குச் சுவை இல்லாவிடினும் தந்தை தனக்காகச் செய்தது என்னும்போது அமிர்தமாகத்தான் இருந்தது.
ஏன் அப்பா இங்கே இருக்கிறீர்கள். அம்மாவும் தங்கச்சியும் பாவம். எங்களிடம் சொத்துப்பத்தா இல்லை. இனியாவது வேலையை விட்டுவிட்டு அங்கே போய் இருங்களன் என்றான். போகத்தான் வேணும். இன்னும்கொஞ்சக்காலம் இருந்துவிட்டுப் போகலாம் என்று இருக்கிறேன். அசுவன் எப்படி இருக்கிறான் என்று தன் மூத்த மகன் பற்றி இந்த மகனிடம் கேட்டார். ஏனப்பா நீங்கள் அண்ணனுடன் கதைப்பதே இல்லையா என்றிவன் ஆச்சரியமாகக் கேட்டான். எங்கடா அவன் என்னுடன் முன்பே உன்போல் இல்லைத்தானே என்று ஒருவித மனத்தாக்கலோடு அவர் சொல்வதுபோல் இருந்தது.
அந்த நிலையை நீடிக்கவிடாது அண்ணா நன்றாகத்தான் இருக்கிறான் என்றான். நீ ரள போயிருக்கிறாயா என்றுவிட்டு இவனைப் பார்த்தார். நான் இன்னும் போகவில்லை. அண்ணா போன வருடம் லண்டன் வந்திருந்தான் அண்ணியுடன் என்றுவிட்டு இவனும் மேற்கொண்டு எதுவும் கதைக்கத் தோன்றாது இருந்தான். தந்தைக்கு என்ன தோன்றியதோ அல்லது பிள்ளையிடம் பிள்ளை பற்றி விசாரிக்கும் குற்ற உணர்வு ஏற்பட்டதோ அவரும் மௌனமாகவே உண்டு முடித்தார்.
ஐந்து நாட்கள் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. இத்தனை நாள் தந்தையிடம் இழந்தவைகளை மீளப்பெறுவதுபோல அவன் தந்தையுடன் ஐக்கியமாகிவிட்ட நிலையில்இ அவன் மனதில் உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை தந்தையைக் கேட்டான்.'இந்த வீட்டில் நீங்கள் தனியாகவா இருக்கிறீர்கள்' என்று. தந்தையின் முகத்தில் ஒரு திடுக்கிடல் தோன்றி உடனே மறைந்ததை இவன் கவனித்துவிட்டு அவரின் பதிலுக்காகக் காத்திருந்தான். இங்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது. தன் சகோதரி வீட்டு விசேடத்துக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள். நாளை அல்லது மறுநாள் வந்துவிடுவார்கள். நீ நாளை மறுநாள்த்தானே கிளம்புகிறாய் என்று கேள்வியோடு இவனைப் பார்த்தார்.
இவனும் யோசனை ஒருபக்கமும் தந்தையுடன் இன்னும் சிறிதுநாள் நிற்போமா என்னும் சிந்தனையுடன் வேண்டுமானால் இன்னும் ஒருவாரம் டிக்கற்றை மாற்றிப் போட்டு நிற்க முடியும் என்றான். எனக்கு வேலையேடா நான் லீவு எடுக்க இயலாது என்று கூறுபவரைஇ மீண்டும் அந்நியமாகிவிட்ட மனதோடு பார்த்துவிட்டு அப்ப நான் நாளை மறுநாள் கிளம்புகிறேன் என்றுவிட்டு எதுவும் பேசாது அமர்ந்திருந்தான்.
***************************************************************
அடுத்தநாள் இவன் தந்தையுடன் வெளியே சென்றுவிட்டு வரும்போது அந்தப் பெண் வீட்டிலிருந்தாள்.கருப்பாக இருந்தாலும் பார்க்கக் களையாக இருந்தாள். என்ன என் வயது தான்வரும் போல என மனதுள் எண்ணியதை வெளியே சொல்லவில்லை. ரீற்ரா என்று தந்தை அறிமுகம் செய்து வைக்க கலோ என்று கை நீட்டிக் குலுக்கிக் கொண்டான். அவளின் கண்களில் ஒரு தெளிவும் கூர்மையும் இருந்தது. பெரிய மார்பும் அளவான இடையும் .....அவளைப்பற்றி எண்ணத் தொடங்கிய மனத்தைக் கட்டுப்படுத்தியபடி எப்படி இருக்கிறீர்கள் என்றான் ஆங்கிலத்தில். ரீட்டா தன் மொழியில் அப்பாவிடம் எதோ சொல்வதும் பின்னர் தந்தையும் எதோ சொல்லிய பின் பைன் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு மேற்கொண்டு நின்று இவனுடன் உரையாட விருப்பம் அற்றவளாய் உள்ளே இருந்து வந்த இரண்டு பிள்ளைகளையும் மீண்டும் தன்னறைக்கு அழைத்துக்கொண்டு சென்றுவிடஇ சிவா கேள்விக்குறியுடன் தந்தையைப் பார்த்தான். அவளுக்கு சரியாக அங்கிலம் பேச வராது என்று தந்தை கூறிவிட்டு நகர இவன் வெளியே இருந்த கதிரையில் வெறுமையைத் தெரியும் வெட்டைவெளியில் எதையாவது இரசிப்பதற்கு முனைந்தான்.
அடுத்தநாள் இவன் கண் முன்னால் அந்தக் குழந்தைகளும் ரீட்டாவும் வந்தனர் தான் எனினும் அதிக நேரம் அவனுக்கு முன்னே நடமாடவில்லை. அப்பா இந்த வீட்டில் தங்கி இருப்பதனால் அவர்கள் என்னுடன் காட்டாயமாகக் கதைக்கவேண்டுமென்று இல்லையே எனத் தன் மனதை சமாதானம் செய்து கொண்டான். றீட்டாவின் கணவன் கூடக் கண்ணில் படவில்லை. காலையில் மேசையில் இவனுக்காகத் தேநீரும் பாண்இ யாம்இ பட்டர் போன்றனவும் கொண்டுவந்து வைத்துவிட்டு கடமைக்குச் செய்யும் செர்வன்ட் போல் அவள் போகஇ அவளை நிறுத்திக் கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை உடனே மாற்றி ஒன்றும் கூறாமல் தேநீரை எடுத்துப் பருகியபடி சிந்தனையில் ஆழ்ந்தான்.
நாளை இந்நேரம் அவன் விமானத்தில் பறந்துகொண்டிருப்பான். அடுத்த நாளில் இருந்து அவனது வழமையானவை அவனை ஆட்கொண்டுவிடும். அப்பாவிடம் வரும்போது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. அனால் அது அவரை விட்டுப் பிரிகிறேன் என்பதற்காக இல்லை என்று அவனுக்கே தெரிந்துதான் இருந்தது. அவர்மேல் அடிமனதில் கோவம் இருந்ததுதான் எனினும் அதை அவர்முன் காட்ட அவனுக்கு மனம்வரவில்லை. அது அவர் அவர்களைப் பிரிந்து அதிகநாள் இருந்ததனால் ஏற்பட்ட நிலையா அல்லது எல்லாம் தமது கைமீறிவிட்ட நிலையா என்று கூட அவனுக்குப் புரியாது மனத்தில் எழுந்து தாண்டமாடிய சஞ்சலத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு தூக்கக் கலக்கத்துடன் வந்த தந்தையைப் பார்த்து குட் மோர்னிங் என்றபடி சிரிக்கஇ எனக்கு முன்னரே எழுந்துவிட்டாயா என்றபடி பல்விளக்கச் சென்றார் அவர். எங்கேயப்பா என்னை இரவு தூங்க விட்டீர்கள் என்று மனம் அப்பாவைச் சத்தமாய்க் கேள்வி கேட்டது.
**************************************************************************
இன்று எப்படியும் அம்மாவுடன் கதைக்க வேண்டும் என எண்ணியவன் மனதைச் சமநிலைப்படுத்தியபடி தாயின் பக்கத்துவீட்டுக்காரரின் இலக்கத்தை அழுத்தித் தாயின் வரவுக்கு வழிசெய்துவிட்டு வரும்வரை காத்திருந்தான். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களின் பின் போன் செய்தபோது பத்மாவே போனை எடுத்தார். எடுத்த உடனேயே அப்பா எப்படியட இருக்கிறார் என்றுதான் கேட்டார். அப்பா நால்லா இருக்கிறார் அம்மா என்று இவன் முடிக்க முதலே எப்ப இங்க வருகிறாராம் என்று ஆவலுடன் கேட்கும் தாயை கலவரப்படுத்தாது அப்பாவுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் கொன்றாக்ட் இருக்காம் அம்மா அது முடிய வருவர் என்றான். இன்னும் ஐந்து வருடங்களா என்று தொய்ந்த குரலுடன் கேட்கும் அம்மாவை மேலும் தந்தையுன் கதை கேட்டக விடாது தங்கச்சி என்ன செய்யிறாள்என்றான். அவளுக்குத்தான் உன் மாமாமார் ஒரு கலியாணம் பொருத்தி இருக்கினம். அது சரி வந்தால் கொப்பா இல்லாமல் என்னண்டு கலியாணம் செய்யிறது என்று வினவும் அமாவுக்கு என்ன பதில் தருவது என்று யோசித்தவன்இ நான் கட்டாயம் வருவன் அம்மா.மாமா ஆட்கள் இருக்கினம் தானே அப்பாவையும் வரச் சொல்லுறன் ஒரு வாரமாவது லீவு எடுத்துக்கொண்டு என்றுவிட்டு வேறு கதைகளைப்பேசி முடித்துத் தொலைபேசியை வைத்தவனுக்கு ஒரு வாரத்தின் முன் நடந்தது கண்முன்னே காட்சியானது.
இவனுடனேயே நிழலாகத் திரிந்த தந்தைஇ இன்று எதோ அலுவல் காரணமாக வெளியே சென்றுவிடஇஇரண்டு மணிநேரமாகத் தனியே நத்தைப்போல் தன்னறையில் இருக்கும் ரீட்டாவிடம் சிறிது தூரம் வெளியே நடந்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவன்இ கன தூரம் நடந்தபின்னரே தான் எதையுமே இரசிக்காமல் சிந்தனையில் ஆழ்ந்தபடி வருவது உறைக்கஇ இங்கு இரசிப்பதர்க்குத்தான் என்ன இருக்கிறது எண்ணியபடி மீண்டும் வீடுக்குத்திரும்பி நடந்தான். தூரத்தில் அவன் பார்க்கும்போது தந்தையின் ஸ்கூட்டர் வாசலில் தெரிந்தது. தந்தையைக் காணும் ஆவலுடன் விரைந்து நடந்தவன்இ டாடி என்று அந்தச் சிறுவன் அழைப்பதும் சொறி மை சன் என்றபடி அந்த ஐந்து வயதுச் சிறுவனைத் தந்தை கட்டியணைத்துத் தூக்கிக் கொஞ்சுவதையும் கண்டவன் அதிர்ந்துபோய் அடுத்த அடிகூட எடுத்து வைக்காது அப்படியே நின்றான். திரும்பி ஓடு என மூளை கட்டளை பிறப்பிக்க உடனே சத்தமின்றித் திரும்பி நடந்து கைகால்களில் எல்லாம் நடுக்கம் குறைந்து மூச்சு சீராக வரும்வரை நெடுந்தூரம் நடந்து பின்னர் திரும்பிவந்ததை இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சில் இதயத்துடிப்பு திடீரென அதிகரித்து படபடப்பு எழுந்தது சிவாவுக்கு.
நிவேதா உதயன்
03.03.2015
No comments:
Post a Comment