Friday, 14 August 2015

மனவானம் இன்று



மனவானம் இன்று
மகிழ்வாய் இருக்கிறது
மனதோடு பாடல்
மிதமாய் ஒலிக்கிறது

கனவான அன்பின் நெகிழ்வில்
கடிமனம் கசிவுகொள்ள
காலத்தில் கொடுமையைத்
தினம் தினம் கொன்று
கல்லாய் மாறிய மனம்
காற்றுப்பட்ட மரணத்தின்
கடைசி மூச்சின் ஒலியாய்
கண்விழித்தே கனவு காண
கூதல் குறைந்த மனம்
குதூகலத்தின் கடிவாளம் சுமந்து
குதிரைகளாய் சவாரி செய்ய
தொடரும் நாட்களும் தொலைந்திடாது
தென்றலாய் வீசும் நம்பிக்கையில்
துளிர்விடும் கனவுகளைத்
தூக்கமுடியாது தூக்கியபடி
தொலைதூரம் நடக்கிறேன்


27.07.2015 

வானவெளியின் வண்ணமேகங்களாய்



வானவெளியின் வண்ணமேகங்களாய்
மனதெங்கும் காட்சிகள் வியாபிக்க
வசந்தங்களின் வரிசைகளில் மனம்
வசமிழந்து போகின்றது

அன்பின் பரிமாறல்கள் நிதமும்
அவசரமின்றி அரங்கேறி வர
அமிழ்தின் சுவை திகட்டி
ஆனந்தத்தின் அதிர்வுகள் எல்லாம்
அணிவகுத்து நிற்கின்றன

குளிர் நிலவின் ஒளிர்வாய் வீசும்
கோடையின் தென்றல் கூடி
குசுகுசுப்பாய்ச் சேதிசொல்லிக்
கூடலின்றித் தவித்த மனதை
கும்மாளமிட வைக்கின்றன

கார்காலம் மீண்டும் வரலாம்
கனவுக்காட்சிகளும் கலையலாம்
கனதியுடன் காத்திருக்கும் என்
காலாவதியாகா நம்பிக்கைகள்
கடைசிவரை எனக்கு மட்டுமாய்
கண்மூடும்வரை கலைந்திடாது
காற்றுவெளியில் காத்திருக்கும்


28.07.2015 

தத்தித் தவழ்ந்து நான்



 

தத்தித் தவழ்ந்து நான்
நடை பயில அன்று
அழகாய் கைகோர்த்து
அகமகிழ்ந்திருப்பார்
என் அப்பா

அ என நான் எழுத
என் விரல் அவர் பிடித்து
அழகழகாய் மண்ணில்
ஆசையாய் கோடுகள்
வரைந்திருப்பார்

அம்மா அப்பா எனும்
ஆரம்ப மந்திரத்தை
மழலை மொழியில்
நான் மிழற்றிடவே
மிக்க மகிழ்ந்திருப்பார்

செந்தமிழை நான் அன்று
செருக்குடன் கற்றிட
ஆக்கங்கள் பலசொல்லி
ஊக்கங்கள் தந்தெனை
அரவணைத்திட்டார்

எப்போது சென்றாலும்
இன்முகம் காட்டி
அன்பாய் அணைத்து
அகமகிழும் அப்பா
இன்றில்லை எம்மோடு

ஆனாலும் இம்முறை
அவரின்றி அவர் குரலின்றி
ஆரத்தழுவும் கைகளின்றி
பாசத்துடன் எமைப் பார்த்து
படத்தில் மட்டும் சிரித்தபடி


01.08.2015

மனதின் ஓசைகள் அடங்கிட




மனதின் ஓசைகள் அடங்கிட மறுக்கின்றன

அன்பின் கணக்குகள் அறியப்படும் நேரமெல்லாம்
ஆள்கிணறுள் தள்ளப்படுவதான உணர்வில்
அங்கவீனமாகிப் போகின்றன அத்தனையும்

நேசிப்பின் அர்த்தம் அறியா ஆணவம்
நெகிழ்வின்றி நேர்கோட்டில் செல்கையில்
நலிந்து போன நம்பிக்கைகள் யாவும்
நகர்வதற்கும் சக்தியற்றுப்போகின்றன

பொய்யிலும் புனைவிலும் பின்னப்பட்ட
புரிதலற்ற அன்பின் ஒழுங்கற்ற பிணைப்பு
எந்நேரமும் அறுவதாய் அச்சுறுத்தியபடி
நெஞ்சின் நாடிக்களில் நெருக்கமாய் ஓடியபடி
இணக்கமற்ற தண்டவாளங்களாய்
இடைவிடாது ஓசை எழுப்பியபடி
விதியின் வலிய கைகள் எனைப்பற்ற
விடாமல் துரத்தியபடியே இருக்கின்றன

என்செய்வேன் நான் நிதமும்
எரித்திட முடியா நினைவுகள் கொண்டு
எல்லைகள் அற்ற கற்பனை கண்டு
காரண காரியம் புரிந்திடா மனதில்
இடியும் மின்னலும் தொடர்ந்திடக்கண்டு
இயலாமையில் இயல்வதும் கொன்று
எண்ணங்களில் எரிதழல் மூண்டிட
ஏதுமற்றுக் காத்திருக்கிறேன் ஏதிலியாய்
02.08.2015

அன்று உன்னிடம்




அன்று உன்னிடம்
அன்பு மட்டுமே இருந்தது
என் உயிர்ப்பை இரட்டிபாக்குவதாய்
என் உணர்வை முழுமையாக்குவதாய்
என் அறிவை ஆராதிப்பதாய்
கருத்தின் கருவை ஆமோதிப்பதாய்
எந்நேரமும் என்னை மகிழ்விப்பதாய்
என்னை மறந்து நான் திளைக்க
எனக்காக அத்தனையும் செய்தாய்

இன்று உன்னிடம் ஒட்டியிருக்கும்
ஓரங்களில் மட்டுமானதான அன்பு
உதிரக் காத்திருக்கும் பூவின் இதழாய்
வருடலின்றி வாசனையின்றி
வருத்தம் மட்டும் தினம் தருவதாக
என் உயிர்ப்பைத் தொலைத்து
உள்ளத்தின் சுவர்களைத் தினம்
உளியாற் செதுக்குவதான வலியை
கணப்பொழுதுகளில் கூடக்
காரணமின்றித் தந்தபடி இருக்கிறது
05.08.2015

மரணத்தின் நுகரமுடியா











மரணத்தின் நுகரமுடியா வாசனையாக
வாழ்வின் பக்கங்கள் மடிக்கப்படுகின்றன
கேள்விகளும் இல்லாத பதில்களுமாய்
வசந்தங்கள் வராத நாட்களின் கணக்கு
கிடைக்காத எண்ணிக்கையைத் தினம்
தந்தவண்ணமே தடுமாறுகின்றன

அன்பின் அசைக்கமுடியாத அளவின்
காலத்தின் கணக்குகளும் என்றும்
ஏற்றுக்கொள்ளமுடியா நம்பிக்கையின்
எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்து
எதுவுமற்ற நிலையை எதிர்கொள்வதாய்
எண்ணக் கிடங்குகளில் எப்போதும்
நிரம்பியபடியே காத்திருக்கின்றன

மறக்கும் நிலையற்ற மனதின் மகிமை
மற்றவர் எண்ணத்தை மலிந்ததாக்க
பெறுமதியற்ற காலங்களின் நேரங்கள்
பெருவாரியாக இறைக்கப்பட்டபடி
முகிழ்ந்திடமுடியா மனப்பாறையை
மீண்டும் மீண்டும் தகர்க்க முயன்று
தோற்றுக்கொண்டே இருக்கின்றன
10.08.2015

நிற்கதியாகி நிற்பதான




நிற்கதியாகி நிற்பதான உணர்வில்
நெஞ்சக் கூட்டில் நிதம்
பாறாங்கல்லாய் அடைக்கிறது
சுவாசத்தின் காற்று

அன்பின் வெளிப்பாடற்ற அசைவு
அங்கத் திசுக்களில் எல்லாம்
அசைக்கமுடியாத வலியை
நினைக்காத நேரத்திலும் தந்து
நெருப்பின் சுவாலை ஆகிறது

அதீத உணர்வின் வெளியில்
இதயத்தின் குருதிப் பாதைகளில்
இசைப்பு இறுமாப்பிழந்து நிற்க
எதிர்வலுவற்று இயங்க மறந்து
ஏக்கங்களை மட்டும் மூச்சாய்
எங்கும் பரவவிட்டபடியே தினம்
எதிர்நீச்சல் போடுகின்றன

மனவெளி எங்கும் உன் ஓசை
கேட்டுக்கொண்டே இருக்க
மரத்துப்போகா மாய மனதை
எது செய்தும் மாற்ற வழியின்றி
எதிரொலித்து வஞ்சம் புரிய
மரணத்திடம் மீள்வதற்காய்
தினம் என்னைத் தயார் செய்கிறேன்
11.08.2015