Friday, 14 August 2015

மனதின் ஓசைகள் அடங்கிட




மனதின் ஓசைகள் அடங்கிட மறுக்கின்றன

அன்பின் கணக்குகள் அறியப்படும் நேரமெல்லாம்
ஆள்கிணறுள் தள்ளப்படுவதான உணர்வில்
அங்கவீனமாகிப் போகின்றன அத்தனையும்

நேசிப்பின் அர்த்தம் அறியா ஆணவம்
நெகிழ்வின்றி நேர்கோட்டில் செல்கையில்
நலிந்து போன நம்பிக்கைகள் யாவும்
நகர்வதற்கும் சக்தியற்றுப்போகின்றன

பொய்யிலும் புனைவிலும் பின்னப்பட்ட
புரிதலற்ற அன்பின் ஒழுங்கற்ற பிணைப்பு
எந்நேரமும் அறுவதாய் அச்சுறுத்தியபடி
நெஞ்சின் நாடிக்களில் நெருக்கமாய் ஓடியபடி
இணக்கமற்ற தண்டவாளங்களாய்
இடைவிடாது ஓசை எழுப்பியபடி
விதியின் வலிய கைகள் எனைப்பற்ற
விடாமல் துரத்தியபடியே இருக்கின்றன

என்செய்வேன் நான் நிதமும்
எரித்திட முடியா நினைவுகள் கொண்டு
எல்லைகள் அற்ற கற்பனை கண்டு
காரண காரியம் புரிந்திடா மனதில்
இடியும் மின்னலும் தொடர்ந்திடக்கண்டு
இயலாமையில் இயல்வதும் கொன்று
எண்ணங்களில் எரிதழல் மூண்டிட
ஏதுமற்றுக் காத்திருக்கிறேன் ஏதிலியாய்
02.08.2015

No comments:

Post a Comment