Wednesday, 29 July 2020

உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி - ஒரு விமர்சனம்

நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன்


 
நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம்

சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து .          நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,'' ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல் ,புலம்பெயர் வாழ்வுக்கும் தாயக வாழ்வுக்கும் இடையே பல வேறு தளங்களில் தத்தளிக்கும் வாழ்வின் ஒரு வெட்டுமுகம் என்பதில் ஐயமில்லை .
      எழுத்தாளர் ஒருவர் தனது படைப்பை மக்கள் முன் வைக்கும் நோக்கம் என்ன ?இப்போது வாழும் மனித குலம் இன்னும் சிறிதளவு சிறந்ததாக இன்னும் கொஞ்சம் மனிதப் பண்பு மிக்கதாக மேலும் சற்றுக் கூரப்படைந்ததாக மாற அந்தப் படைப்பு உதவுமாக இருந்தால் அது படைப்பாளியின் வெற்றிப்படி என்று கருதலாம் .கதையின் உள்ளடக்கம் தருகின்ற செய்தி வாசகர் ஒருவரிடமாவது இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
உருவம் கலைநயம் மிக்கதாக அமைந்து ரசிகரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் .உதாரணமாக இந்நூலில் 'ஆசை மனதளவு 'என்ற கதையின் நாயகி விழுமியமும் அறமும் மாறுபட விரும்பாதவளாய் உயர்ந்து நின்று உள்ளடக்க நோக்கத்தை நிறைவு செய்கிறாள் .

Rocco Fumento என்ற ஆய்வாளர் சிறுகதை நாலுவகை என்பார் .
1.நிகழ்ச்சியால் சிறப்பெய்தும் கதை
2.சூழலால் சிறப்பெய்தும் கதை
3.கதை மாந்தரின் பண்பால் சிறப்பெய்தும் கதை
4.உரிப்பொருளால் சிறப்பெய்தும் கதை

 
'பணத்துக்காக எதுவும் செய்யலாம் 'என்ற கலாசாரம் தமிழர் மத்தியில் மிக வேகமாகப் பரவுகிறது .இனியாளின் அக்கா அதற்கான ஒரு வகை மாதிரி .அதனால் அது கதைமாந்தரின் பண்பால் சிறப்புப்பெறுகிறது .என்ஜினியர் கதை கலாசார அதிர்ச்சியை அழகாகச் சொல்லுகிற அதே நேரம் தாயகத்தில் வளர்ந்த ஆண் ,வெளிநாட்டில் வளர்ந்த பெண் ஆகியோரின் பாத்திரப் படைப்பை மிக இயல்பாகத்தந்து அத்தகைய திருமணத்தில் வரக்கூடிய நெருக்கீட்டை கதை மாந்தர் சித்திரிப்பால் சிறப்புறச் சொல்கிறது
பெண்மனது கதை முதுமையில் வரும் இயலாமை ,வன்முறை ஆகியவற்றைக் காட்டினாலும் தேவகி என்ற பாத்திரத்தினால் சிறப்புறுகிறது .தேவகியை வகைமாதிரிப் பாத்திரம் எனப்பார்க்கலாம் .
வேப்பங்காய்கள் அழகான தலைப்பு .நீளமான கதை.சிறுகதைக்கட்டமைப்பு ப் பேணப்படுகிறதா உடைந்துவிடுகிறதா என்ற ஐயம் ஏற்பட்டாலும் சிந்தியா பாத்திரத்தால் உயர்வடைகிறது .
விடுதலை தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று .நந்தா என்கிற அருமையாக வார்க்கப்பட்ட பாத்திரம் அதற்கான காரணம் .சம்பவங்கள் இதனை இயற்பண்பு கொண்ட கதை ஆக்கி விடுகின்றன .
நிகழ்வுகளால் சிறப்பெய்தும் கதைகளில் உறவுகள் ஒன்று.ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வு முறையின் மாற்றம் பற்றி அது பேசுகிறது .மகனுடைய நடத்தை நிறையவே சிந்திக்க வைக்கிறது .அவன் உணர்வு பூர்வமாகச் சந்தோஷிக்கிறானா ?தனது எதிர்ப்பைக் கோபமாக வெளிப்படுத்தாவிட்டாலும் உறுதியாகவேனும் புலப்படுத்தா காரணம் என்ன ?பயமா ?அசௌகரியமான சூழலை எதிர்கொள்ளும் தயக்கமா ?எதிர் காலத்தில் தனக்கான முன்மாதிரி என்று நினைக்கிறானோ ?விவாதிக்கத் தூண்டும் பாத்திரம் .
எப்போதும் இரவு நல்ல தலைப்பு .நிகழ்வுகளால் உயரும் மற்றோர் கதை .பெண்கள் மீதான வன்முறை கலை நயத்துடன் வெளிப்படுகிறது .ஆயினும் வாசகர் திருப்திப்பட முடியவில்லை .
தொகுதியின் தரமான கதைகள் வரிசையில் வரக்கூடிய மற்றொன்று வரம் வேண்டினேன் .நிகழ்வுகளால் மேலேவருவது .மருத்துவருக்கு இந்த மாற்றம் சாதாரணமாக இருக்கலாம் .ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்ட பெற்றோரின் உணர்வு ?எமது மரபணு குழந்தைக்கு வராவிட்டால் உயிரியல் தொடர்ச்சி என்ற திருப்திக்கு என்ன ஆவது ?இதுதான் நியதி என்றால் குழந்தை ஒன்றைத் தத்து எடுத்திருக்கலாமே ?இவ்வளவு செலவும் துன்பமும் ஏன் ?விடை இல்லாத வினாக்கள் .
உணர்வுகள் கொன்றுவிடு என்ற தலைப்புக் கதை உரிப்பொருளால் சிறப்புப் பெறுவது .நேரில் பார்க்காத ,பழகாத ,முகப் புத்தக உறவுகளின் கொடுமை பற்றி அழகாகப் பேசுவது இக்கதை .அண்மையில் தாயகத்தில் இருந்து ஒரு பெண் ,நிஜத்தில் இத்தகு உறவைத்தேடி இந்தியா சென்று தற்கொலையில் தன் வாழ்வை நிறைவு செய்திருப்பது பத்திரிகைச் செய்தி .முடிவாகிப்போனது என்ற கதையும் தற்கொலையில் முடிகிறது .நல்ல அன்பு என்றால் உயிர் ஒன்றாகப் போகுமா ?அல்லது முறையற்ற உறவு அகால மரணத்தில் தான் முடியுமா ?எழுத்தாளரின் தொனி காதலரின் முடிவுக்குச் சாதகம் போலத் தெரிகிறது .
அநீதியை எதிர்ப்பது கனவில் தான் முடியும் என்கிறதா ரயில் பயணம் ?வாழ்வு வதையாகி என்ற கதை Euthanasia கருப்பொருளைக் கொண்டது .உலக சரித்திரத்தில் இது புது விடயம் .தமிழ்ச் சிறுகதை ஒன்றில் இக்கருப்பொருளைக் கலைத்துவமாகக் கையாண்டமை எழுத்தாளரின் பலம் .ஆனாலும் இனிமேல் மாற்றவே முடியாத கடும் வேதனையைத் தருகிற நோய்களுக்குத்தான் Euthanasia சாத்தியப்படும் .பாரிசவாதம் மெல்ல மெல்லக் குணமடைவதும் உண்டு .கடும் வேதனை தராத அந்த நோயுடன் பத்து வருடத்துக்கு மேல் வாழ்பவர்களும் உண்டு .கதையின் யதார்த்தப் பண்பு கேள்வியாகிறது .
மனம் எனும் மாயம் என்ற கதையில் பலவீனமான மனம் ஒன்று அழகாகக் காட்டப்பட்டாலும் முடிவு நம்பும்படி இல்லை .
ஆசிரியரின் சில இடங்களில் இவர் எழுத்தாளர் தான் என்பதை உறுதி செய்கிறது .உதாரணமாக ,'வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது '(கிடந்தன ?)ஆயினும் மொழி இன்னும் சிறக்கலாம் .
படைப்பு வட்டம் என்பது தயாராதல் ,அடைகாத்தல் ,உந்தல் ,சரிபார்த்தல் ,என நாலு நிலைகளைக் கொண்டது .சரிபார்த்தல் என்ற நிலையில் எழுத்துப் பிழைகள் ,இலக்கண வழு ஆகியனவும் கவனிக்கப் படவேண்டும் .நின்மதியா ?நிம்மதியா ?ஏஜென்சியா ?ஏயென்சியா?
கதையோடு கதையாகச் சொல்லிச் செல்லும் சில விடயங்கள் மனதில் நிற்கின்றன .காசுக்காகப்  புருஷனைவிவகாரத்துச் செய்துவிட்டு ஒன்றாக வாழும் மேல்நாட்டுக் கலாசாரம் ஒரு வகைமாதிரி .
மனதுக்கு நிறைவு தரும் தொகுப்பு .
கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன்
இலங்கை 

கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன்




    உலகிலேயே மிகவும் கொடுமையான செயல்கள் எனப் பட்டியலிடப்பட்டால்  அதில் முதன்மையாக இருப்பது பாலியல் வன்கொடுமை என்பதாகத்தான் இருக்கும். அன்றுதொட்டே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவந்துள்ளனர்தான் எனினும் அண்மைக்காலங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கேள்விப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கான ஒரு சமத்துவம், சுதந்திரம் என்பன  பேணப்படாத நிலையில் வன்கொடுமை என்பதும் அதிகரித்து எத்தனையோ பேரின் வாழ்வைத் தினம் தினம்  சிதைத்தபடி இருக்கிறது.  அதிலும் சிறுவர் வன்கொடுமை என்பது மிகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    உலக நாடுகளெல்லாம் எத்தனையோ சட்ட வரைபுகளைப் பெண்களுக்காக ஏற்படுத்தியுள்ளபோதும், பெண்களுக்கான , சிறுவர்களுக்கான பாலியல் துன்புறுத்துதல் இன்னும் தொடர்வதற்கான காரணம் அதுபற்றி உண்மைகள் வெளியே சரியானபடி தெரிவதில்லை. வெளியே சொல்ல வெட்கப்படுகின்ற பெண்கள்,  பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், சமூகம் என பெரிய தடைகளைத் தாண்டும் மனோதிடம் பலருக்கும் இல்லாதிருப்பதே இத்தகைய செயலைச் செய்யும் காட்டுமிராண்டிகளை இனங்காண முடியாததாகவும் இருக்கிறது.
    பெரிய பெண்கள் தமக்கு நடைபெறும் வன்கொடுமைகளை உணரவும் , எதிர்க்கவும் முடிகின்ற சூழலில் இருக்கின்றபோதும் அதையும் மீறி நடக்கின்ற வன்முறைகள் கொடுமைமிக்கது என்றால், எதுவும் தெரியாத சிறுவர்கள்  தமக்கு நடப்பது வன்முறை என்றே தெரியாது அதற்குப் பலியாகிப் போவது கொடுமையிலும் கொடுமை. அதற்குக் காரணம் இலகுவாக சிறுவயதினர் மிரட்டிப் பயன்படுத்தப்படுவதும், என்ன நடக்கிறது என்பது புரியாததாலும், இப்படியானது சாதாரணமாக எல்லோருக்கும் நடப்பது போன்று அவர்கள் நம்பவைக்கப்படுவதும் காலங்காலமாக நடந்துதான் வந்திருக்கிறது. அதிலும் தம் வீட்டில் இருக்கும் உறவினர், நண்பர்கள், வீட்டில் வாடகைக்குத் தங்கி இருப்போர், பாடசாலை ஆசிரியர்கள், ஏன் உரிமையாய் வீட்டுக்குள்ளேயே நடமாடும் தாயாரின் தந்தையாலோ அல்லது தந்தையின் தந்தையாலோ, அதைவிடக்கொடுமையாக பெற்ற தந்தையாலும் கூட பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியபடிதான் இருக்கின்றனர்.
    இந்த விடயத்தில் முக்கியமாக கவனமாக இருக்கவேண்டியது பெற்றோரின் கடமைதான் எனினும் தந்தையை விடத் தாய்க்கே அந்தப் பொறுப்பு அதிகமாகிறது. ஒரு சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமையைத் தன்  தாய்க்குச் சொல்லக்கூடிய துணிவை அவர்கள் பெறும்படி பிள்ளைகளுடன் உறவைப் பேணுவது மிக முக்கியமானது. அதைவிட பல பிள்ளைகள் குற்றச்சாட்டுகளைக் கூறும்போது பல பெற்றோர் அதைக் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை. அந்தப் பிள்ளை கூறுவதை நம்புவதுமில்லை. எப்போது நாம் கூறுவதை என் பெற்றோர் கேட்க்கின்றனர், அவர்களிடம் நாம் எந்த விடயத்தையும் கூறலாம், அவர்கள் மட்டும் தான் எம்மைக் காப்பாறுவார்கள் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளிடம் ஏற்படுத்தவேண்டும். பிள்ளை கூறுவதை நம்பாமல் இவள்/ இவன் பொய் கூறுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு நாம் பிள்ளைகளைக் கடிந்துகொண்டால் , பெரியோர் எம்மை நம்பப்போவதில்லை என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை பிள்ளைகளுக்கு ஏற்பட்டு அவர்கள் அதன்பிறகு நடக்கும் தொடர் வன்முறைகளைக் கூட எம்மிடம் பகிர்ந்துகொள்ளாது தம்முள்ளேயே போட்டு மூடி, அவர்களை மீள முடியாத இக்கட்டில் தள்ளுவதற்கு ஏதுவாகிவிடும்.
    பள்ளி சென்று வரும் உங்கள் பிள்ளைகளுடன் மனந்திறந்து உரையாடுங்கள், அவர்கள் சோர்வாகத் தெரிந்தால்  உரியவாறு அவர்களுடன் பேசிப் பிரச்சனை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களோ உறவினர்களோ வீட்டுக்கு வந்தால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள், நண்பர்களின் பெற்றோர், இன்னும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து ஆண்பெண்களுடனும் அவதானமாக இருங்கள். நான் ஏன் பெண்களையும் என்று கூறுகிறேன் என்றால் சில பெண்கள் கூட தன் கணவனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர்கள் செய்யும் வன்கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
    ஆகவே ஒவ்வொரு பெண்களும் விழிப்புடன் இருக்கவேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களைக்கூட அப்பப்போ அவதானிக்கவேண்டும். என் கணவர் தானே நல்லவர் என்னும் முட்டாள்தனமான நம்பிக்கையுடனேயே பலர் நடப்பவற்றைக் கண்டும் காணாமலும் அல்லது அதை வெளியே எப்படிச் சொல்வது எண்ணம் தயக்கத்தில் பேசாமல் இருக்கின்றனர். அது மிகவும் தவறான அணுகுமுறையாகும். உங்களுக்கு ஒரு விடயத்தில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டிருப்பின் உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் அந்த விடயம் பற்றி உரையாடித் தெளிவுபெறுவதும், சரியான முடிவை எடுத்து செயல்படுத்துவதும் மிக அவசியமான ஒன்றாகும். அதைவிடப் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உடல், உளரீதியான ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் ,நம்பிக்கையையும் கொடுக்கவேண்டியது மிகமிக முக்கியமானது. அதைவிடத் தவறு செய்தவர் யாராய் இருப்பினும் தண்டனை பெற்றுத் தரவேண்டியதும் மிக மிக அவசியமான ஒன்று.
    எங்கள் பிள்ளைகளை எம்மைத் தவிர எவருமே பாதுகாக்க முடியாது. பணம் பணம் எனப் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்காது ஒரு குறிப்பிட்ட வயதுவரை உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் இருப்பதும், அவர்களை புரிந்துகொள்வதும், அவர்களுக்கு உங்கள்பல நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ஒரு ஆரோக்கியமான பிள்ளை இந்தச் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வழிசெய்யும். உங்கள் வீடுகளில் கண்டவர்களையும் வாடகைக்கு அமர்த்தாது உங்கள் குழந்தைகள் ஓடிவிளையாடி சுதந்திரமாய் இருப்பதற்கான சுற்றுச் சூழலை உருவாக்குவது பிள்ளைகளை பெற்றவர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை. புலம்பெயர் சூழலில் மற்றவர்களின் வாழ்க்கைத் தராததுக்கு எம்மையும் உயர்த்தவேண்டும் என்னும் பேராசை காரணமாகவே பல பெற்றோர்கள் இரு வேலை, இரவுநேர வேலை, பிள்ளைகளை வீட்டில் தனியாக விடுதல், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதுவே பின்னர் பிள்ளைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாகிறது. பேராசை கொள்ளாத போதும் என்ற மனமும், மற்றவர் வாழ்வோடு ஒப்பிடாத நிலையும், எளிமையான ஆரோக்கியமான வாழ்வுமே எம் புலம்பெயர் சமூகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவரும்.
    கொரோனாவின் பின்னாவது ஒவ்வொருவரும் உலக வாழ்வைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். எத்தனை பணம் வைத்திருந்தும் பயனின்றி இறந்தவர் எத்தனைபேர். நாம் எப்போதும் இறந்துபோகலாம். இறக்கும் வரை எப்படி வாழ்ந்தோம் என்பதில்தான் எம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து மனித நேயத்துடனும், அன்போடும், அகந்தை துறந்தும் வாழ்வோமானால் அதுவே உயரிய வாழ்வு.
     
    நிவேதா உதயராஜன்-ஐக்கிய இராச்சியம்
     

    21.07.2020
     

எனது நேர்காணல்


https://akkinikkunchu.com/?p=121613 


கேள்வி(1): எழுத்துத்துறைக்கு நீங்களா விரும்பி வந்தீர்களா அல்லது எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு வந்தீர்களா?
 நானாக விரும்பி இந்த எழுத்துத் துறைக்கு வந்தது கிடையாது. யாழ் இணையத்தின் வாசகியாகச் சென்ற எனக்கு அங்கு எழுதியவர்களின் எழுத்துக்களும், யாழ் இணையத்தின் மிகச் சிறந்த பகுதியான கருத்துக்களமுமே  என்னை எழுதத் தூண்டியது எனலாம்.
கேள்வி (2): நீங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் எதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள்.இவைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் எவைகளில் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள்?
நான் மேற்கூறிய மூன்றில் சிறுகதையில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறேன். ஏனெனில் அதுதான் எழுதுவதற்கு இலகுவானது.
கேள்வி (3):  நீங்கள் கவிதை எழுதுபராகவிருந்தால் எத்தகு கவிதைகளில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டி எழுதி வருகிறீர்கள்?.
நான் 140 கவிதைகளை இதுவரை யாழ் இணையத்திழும் முகநூலிலும் எழுதி 80 கவிதைகளை நூல்வடிவமும் ஆக்கியுள்ளேன். அவற்றுள் பல என் மனவோட்டதத்தின் பிரதிபலிப்பாய் எழுந்த கவிதைகள். சமூகத்தின்பாலும் தனிமனித உறவுகளின்மேலும் எழுந்த கோபங்கள் கவிதையூடே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கேள்வி (4):எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி எதுவென நினைக்கிறீர்கள்.
துணிவு தான் ஒரு எழுத்தாளருக்கு இருக்கவேண்டிய முதற் தகுதி என நான் எண்ணுகிறேன். ஏனெனில் எத்தனைதான் எழுத்தாற்றல் பெற்றவராக இருந்தாலும் பொதுவெளியில் ஒருவருடைய படைப்பு வெளிவரும்போது, அதற்குப்பின்னர் வாசகர்களின் நேர், எதிர்மறைக் கருத்துக்களை உள்வாங்கவும் எதிர்கொள்ளவுமான துணிவு கொண்டவர்கள் மட்டுமே தொடர்ந்தும் எழுதமுடியும்.
கேள்வி (5): கட்டுரை தவிர்ந்து சிறுகதை, நாவல் என இவையிரண்டும் யதார்த்தக் கதை, கற்பனைக் கதை  ஆகிய இரண்டிணையும் நீங்கள் எழுதுபவராயின் யதார்த்தக் கதைகளில் கற்பனைச் சாயம் பூசப்படுவதில்லையா?.
யதார்த்தக் கதைகளில் பெரும்பாலும் கதை ஆரம்பிக்கும்போது சிலர் தேவையற்ற ஆலாபனைகளைச் சேர்ப்பதுண்டு. அது எழுதுபவரையும் வாசகரையும் சார்ந்தது. சில வேளைகளில் அக்கதையை மற்றவர்கள் ஆவலுடன் வாசிக்கச் செய்யும் நோக்கிலும் கதையை இலகுவாக நகர்த்துவதற்கும் சில சாயம் பூசுதல்கள் இருப்பதுதான். அதைத் தவறு என்று கூற முடியாது என்பதே என் கருத்து. ஆனாலும் என் கதைகளில் கற்பனைச் சாயம் பூசவேண்டிய தேவை ஏற்பட்டத்தில்லை. 
-புனைகதைகள் என்பன உண்மைச் சம்பவங்களை அடியொற்றித்தான் எழுதப்படுகின்றன என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?
எல்லாப் புனைகதைகளும் உண்மைச் சம்பவங்களை அடியொற்றித்தான் எழுதப்படுகின்றன என்று கூற முடியாது. சிலரின் கற்பனை வளத்தினால் சிறந்த ஒரு கதையை, இதுவரை கேள்விப்படாத, நடக்காத ஒன்றைக் கதையாக்க முடியும். 
கேள்வி (6): நீண்ட காலமாக எழுத்துலக வெளியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது.அது என்னவெனில,யதார்த்தக் கதைகளில் வரும் கதைமாந்தர்கள் அன்றாடம் உரையாடல்களில் பயன்படுத்தும் சொற்களை அப்படியே எழுதுவதும்,சம்பவங்களை அப்படியே எழுதுவதும் யதார்த்தம் எனச் சொல்லப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
கதைகளில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது ஒருவித உத்தி என்பேன். பல சாதாரண வாசகர்களுக்கு அவைதான் வாசிப்பதற்கு இலகுவாகவும் சலிப்பற்றதாகவுமிருக்கும். ஆனால் எல்லாக் கதைகளிலும் அப்படி எழுதுவது சாத்தியமற்றது. அத்துடன் சாதாரனர் அல்லாத மனிதர்களுக்கு தரமான ,பொதுவான எழுத்துநடையில் வாசிப்பதே இன்பமளிக்கும். ஆகவே யதார்த்த எழுத்து ஒருபாலாருக்கும் தரமான எழுத்து இன்னொருபாலாருக்கும் பிடித்துப்போகலாம். அது வாசிப்பவருடைய மனநிலையிலும் எழுதுபவரின் எழுத்திலுமே தங்கியுள்ளது.
கேள்வி (7) உலகதர இலக்கியங்கள் என்று சொல்லப்படுபவையை அரசியல் சாராத இலக்கியங்கள்தான் என உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?.
உலகத் தர இலக்கியங்கள் என்பது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டதோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதோ இல்லை. ஒரு சிலரால் அல்லது குழுவினரின் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படுவது. அல்லது மற்றவரையும் நம்பவைக்கப்படுவது. இக்காலத்தில் அனைத்துமே அரசியல்மயப்படுத்தப்பட்டதுதான். ஆகவே என்னால் அரசியல் சார்ந்ததா இல்லையா என உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.
-சமூக மாந்தர்களே எழுத்துக்களில் இடம்பெறுகிறார்கள். இந்தச் சமூக மாந்தர் சமூகத்தோடு தொடர்பு பட்டிருக்கிறார்கள். இந்தச் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?.
உங்கள் வினாவிலேயே நீங்கள் கேட்ட வினாவுக்கான விடையும் அடங்கிவிட்டதே!
கேள்வி 8: பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.
 
பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.
கேள்வி (9): நீங்கள் கவிதை எழுதுபவராயின் முகநூல்களில் வரும் கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.
முகநூல் என்பது துணிவுள்ள எவரும் தம் எண்ணக்கருத்தை எழுத முடிந்த ஒரு தளம். பலர் தம் உணர்வுகளை கவிதைகளாக அங்கு வெளிப்படுத்துகின்றனர். அதில் தவறென்ன? சிலர் தம்மாற்றலை முழுவதுமாய் எண்ணத்தில் வடிக்கின்றனர். சிலர் எண்ணங்களை எப்படியோ எழுத்தாய் வடிக்கின்றனர். அவர்களுக்கும் அது ஓர் அங்கீகாரம்தானே. ஒரு பத்திரிகைக்கோ அன்றி  இணையத்துக்கோ அவர்கள் தம் கவிதைகளை அனுப்பி அது கிடப்பில் போடப்படுவதும் நிராகரிப்பதுமாக இல்லாது என்னாலும் முடியும் என்னும் ஒரு ஆத்ம திருப்பதியை ஏற்படுத்தும் தளமாக முகநூல் அவர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் பலரின் சிறந்த கவிதைகளை முகநூலூடாகவே பார்க்க முடிந்திருக்கிறது. நல்ல கவிதைகளை நின்று ரசிக்கலாம். அல்லாதுவிடில் கடந்து செல்லலாம் அவ்வளவே.
கேள்வி (10) ஒரு கருத்தை, கவிதை மூலமோ அல்லது கதை மூலமோ அல்லது சிறுகதை மூலமோ இவற்றில் எதன் மூலம் சுலபமாகச் சொல்ல முடியும் என நினைக்கிறீர்கள்?.
சில சிறந்த கருத்துக்களை கவிதையில் சில வரிகளினூடே கூறிவிட முடியும். அனால் அது வாசிக்கும் அத்தனை பேருக்கும் விளங்குமா என்பதும் கவிதையின் வரிகள் எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கும் என்பதையும் பொறுத்தே அது அமையும். ஆனால் கதையூடாகக் கூறுவது அதைவிட இலகுவானது. கேட்பவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதாயும் அந்த நேரத்திலேயே யாராலும் எவராலும் கிரகிக்கக் கூடியதாகவும் உள்ளதால் இலகுவில் பலரையும் சென்றடையக்கூடியதுமாகவும் இருக்கிறது.
கேள்வி (11) இலங்கையில், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின், எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி உங்கள் பார்வை?.
அக்காலத்தில் இலங்கையிலும் ஒரு குறிப்பிட்ட வகையான எழுத்துக்களே அதிககாலம் ஆதிக்கம் செலுத்திவந்தது. பின்னர் எஸ் போ அதை மாற்றியமைத்தார். அதன்பின் பல எழுத்தாளர்களும் எழுத்துக்களும் வளர்சியுற்றன. பின்னாளில் போர் காரணமாக உருவாகிய போரிலக்கியங்கள் மிக வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியுற்றன. அக்காலத்தில் புறநானூற்றுப் பாடல்களில் கூறப்படத்திலும் பார்க்க அதிகமான இலக்கியங்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களால் உருவானது. இது ஒரு பாரிய வளர்ச்சிதான்.
-புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வளர்ச்சிப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றதா?
யாரும் எவற்றையும் எழுதலாம் என்னும் நிலையும், மற்றவரின் குறுக்கீடுகளின்றி நூலாக்கப்படுவதற்கான இலகுத்தன்மை காணப்படுவதும் அதிகரித்த இணையங்களும், இணையப்பத்திரிகைகளும், தாமே தமக்காக உருவாக்கும் தளங்களும் கூட எழுத்துக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. ஆனாலும் இன்னும் சிலர் எப்போதும்போல் தரமான எழுத்துக்கள் மட்டுமே எழுத்துலகில் நிலைக்கவேண்டும் என்னும் குறுகிய நோக்கில் தடைக்கற்களாகவும் உள்ளனர். நாடுப்புறப் பாடல்கள் எப்படி இன்றும் எம் பண்பாட்டு விழுமியங்களை இலகுநடையில் சொல்கின்றனவோ அவ்வாறே அனைத்து புலம்பெயர் எழுத்துக்களும் எழுத்தாளர்களும்கூட வருங்காலத்துக்கு எம் வாழ்வியலை, எம் துன்பங்களை எடுத்துக் கூறும் இலக்கியங்களாக இருக்கப்போகின்றன என்பதை உணர்ந்து, பேதமின்றி அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதும் ஏற்குக்கொள்வதும் புலம்பெயர் எதிர்காலச் சமூகத்துக்கு நாம் செய்யும் மகத்தான உதவியாகவும் எமக்கான ஒரு வரலாற்றுப் பதிவாகவும் இருக்கும் எனலாம்.
கேள்வி (12) நீங்கள் ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கும் போது கதை மாந்தராக உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டு எழுதுவீர்களாயின் கதை மாந்தர்களின் பலதரப்பட்ட உணர்வுகள் உணர்ச்சிகள் போன்றவற்றை உங்களுக்குள் பிரதிபலிக்கச் செய்துதான் எழுதுவீர்களா?
அப்படிச் சிலரோ பலரோ எழுதலாம். ஆனால் நான் என் கதை தவிர்ந்த மற்றைய கதைகளுக்கு கதை மாந்தராக என்னை எண்ணுவதில்லை. அப்படி எண்ணினால் கதை இன்னும் மெருகேறக்கூடும் . ஆனாலும் என்னால் ஒரு கதையை வெளியே இருந்துதான் பார்க்கமுடிகிறது. அது என் பலமா பலவீனமா என்றும் என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை.
கேள்வி (13) உங்களுடைய படைப்புக்கள் பற்றி விமர்சனம் செய்யப்படும் போது அதனை ஏற்றுக் கொள்வீர்களா?
ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் சிறந்த படைப்பாளர்களாகவே இருக்கமுடியாது.
- அல்லது நிராகரிப்பீர்களா?
நிராகரிப்பதற்கான நிலை எனக்கு இன்னும் ஏற்படவில்லை.
- கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் இவைகளில் எவை அதிக விமர்சனத்துக்குள்ளாவதாகக் கருதுகிறீர்கள்?.
சிறுகதை, கவிதை போன்றவை பெரிதாக விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் கட்டுரைகளே அதிகளவில் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. அதற்கான காரணம் பல கட்டுரைகள் பொதுத்தன்மை கொண்டவையாயும் சமூகம் சார்ந்த விடயங்களை அதிகம் உள்ளடக்கியவைகளாகவும் தனிமனித சார்பற்றவையாகவும் இருப்பதனால் துணிவாகப் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது. அதற்கு அடுத்ததாகவே நாவல்கள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. அவைகூட கதை சார்ந்த அளவீடாக இல்லாது தனிமனிதர், சமூகம் போற்றவையே விமர்சிப்புக்குள்ளாகின்றன.    
- படைப்புக்களில் இடம்பெறும் எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட ஒரு கதையை ஆர்வமாக வாசிக்கும் ஒருவரை நிறுத்தி, சலிப்படைய வைப்பவை எழுத்துப் பிழைகள்.
கேள்வி (14) நீங்கள் ஒரு பெண் எழுத்தாளரானால், அரசியல் கட்டுரை எழுதும் ஆண் எழுத்தாளர்களைப் போல நீங்களும் அரசியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்களா?.
அரசியல் வேலைகள் பல செய்திருந்தாலும் அரசியல் கட்டுரை எழுதுமளவு ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. அதனால் எழுதுவது பற்றி எண்ணிப்பார்த்ததும் இல்லை.
 கேள்வி (15) நீங்கள் இதுவரையில் எத்தனை ஆக்கங்களை எழுதியிருக்கிறீர்கள்?.
சிறுகதைகள் எத்தனை?.நாவல்கள் எத்தனை?.கட்டுரைகள் எத்தனை?.கவிதைகள் எத்தனை?.எத்தனை நூல்களை  வெளியிட்டிருக்கிறீர்கள்?.
என் எழுத்து என்று பார்த்தால் முதலாவது கவிதை ஆழிப்பேரலை அழிவு நினைவுகூரப்பட்டபோது எழுதப்பட்டது. இரண்டாவது கவிதை செஞ்சோலைப் படுகொலைக்கானது. அதன் பின் பெரிதாக எதுவும் எழுதவில்லை. ஐபிசி வானொலியில் கதிர்கள் என்னும் நிகழ்ச்சிக்காக ஒரு பத்து நாடகங்களை எழுதித் தொகுத்திருக்கிறேன். பின்னர் யாழ் இணையத்தில் இணைந்தபின்னர்தான் என் எழுத்துக்கள் வேகமெடுத்தது. அங்கு எழுதுபவர்களின் ஊக்கம் தான் என்னை இத்தனை உயர்த்தியது எனலாம். அங்கு நான் எழுதிய தமிழர்களின் தொன்மைபற்றிய சுமேரியர்கள் தான் தமிழர்கள் என்னும் கட்டுரைக்கு ஏற்படட ஆதரவும் ஊக்குவிப்பும் மகத்தானது. என்னால் எழுத முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள்  யாழிணைய வாசகர்களும் எழுதுபவர்களும். அதன்பின்னர் என் சொந்த அனுபவத்தையே முதற் கதையாக்கினேன். தொடர்ந்து ஒரு ஆண்டில் பதினைந்து சிறுகதைகளையும் கிட்டத்தட்ட எண்பது கவிதைகளையும் பல கட்டுரைகளையும் எழுதினேன். 2013 ம் ஆண்டு டிசம்பரில் என் இரு நூல்கள் "வரலாற்றைத் தொலைத்த தமிழர்" என்னும் நூலும் "நிறம் மாறும் உறவுகள்" என்னும் சிறுகதைத் தொகுப்புக்களும் நூலாக்கம் பெற்று 2014 மே மாதத்தில் லண்டனிலும் 2015 தையில் சென்னைப் புத்தகச் சந்தையிலும் வெளியீடு செய்யப்பட்டன.
அதன்பின்னர் என் 80 கவிதைகளின் தொகுப்பு 2016 மார்கழியில் பூவரசி வெளியீடாக வெளிவந்து புத்தகக் கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டது. என்னால் 2014 தொடக்கம் எழுதப்பட்ட மிகுதி 14 சிறுகதைகள் "உணர்வுகள் கொன்றுவிடு" என்னும் சிறுகதைத் தொகுப்பாக ஜீவநதியின் வெளியீடாக 2019 பங்குனியில் என் ஊரான இணுவிலில் உள்ள அறிவாலய அரங்கில் வெளியிடப்பட்டது. மொத்தமாக நான்கு நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த விருதையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் விருதுக்காக அனுப்பப்படுமளவு என் எழுத்துக்கள் மேன்மையடையவில்லை என்றும் எண்ணலாம். அதைவிட யாரிடமும் நான் விருதுக்காக என் கதைகளை பரிந்துரைக்கவுமில்லை. மலைகள், ஜீவநதி, ஞானம் போன்றவற்றில் என் ஆக்கங்கள் சில வந்திருந்தாலும் யாழ் இணையத்தில் எழுதுவதோடு மட்டும் நான் திருப்தியடைந்துகொள்கிறேன். மற்றைய இணையத்தளங்களுக்கோ அன்றி செய்தித்தாள்களுக்கோகூட நான் எதையும் அனுப்புவதேயில்லை.
கேள்வி (16) வரலாற்றுக் கட்டுரைகளை எழுதுபவர்கள் ஒரு இனக்குழுமத்தைப் பற்றி எழுதும்போது சார்புநிலைக்குத் தக்கதாக சில வரலாற்றுத் தடங்களை தவிர்த்துவிட்டு, அந்த இனத்தின் மேன்மைமிகு நிகழ்வுகளை அல்லது சம்பவங்களை மட்டுமே எழுதுவது பற்றி உங்கள் அபிப்பராயம் என்ன?
வரலாற்றுக்கு கட்டுரைகளை எழுதுபவர்களில் பலர் அகழ்வாய்வாளராக இருப்பதில்லை. தம் அறிவுக்கு எட்டியவரை தாம் மற்றவர்களினூடாக அல்லது அறிந்துகொண்ட தகவல்களை மையமாக வைத்து தம் மனதுக்கும் காட்சிக்கும் ஏற்புடையதானத்தை மட்டும் வைத்து எழுத்துப்பரப்பில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும் அறிவார்ந்தவராகக் காட்டிக்கொள்வதற்கு மட்டுமே எழுதுகின்றனர். அவர்கள் வேறெதையும் பற்றிச் சிந்திப்பதுமில்லை. மற்றைய இனத்தைப்பற்றி அக்கறையோ கொள்வதுமில்லை.
-ஒரு வரலாற்று ஆசிரியரும் ஊடகவியலாளருமான ஒரு கல்விமானிடம் இதே கேள்வியைக் கேட்ட போது வரலாறுகள் யாவும் சார்பு நிலையிலேதான் எழுதப்படுகின்றது. அது தவிர்க்க முடியாதது எனறு சொன்னார் அவர் கருத்துப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்றுதொட்டு இன்றுவரை பலர் முறையான அகழ்வாய்வுகளினூடே உண்மைகளை நிலைநாட்ட முனைந்தாலும் பல வல்லரசுகளின் தலையீடுகளின்றி அவர்களால் எவற்றையும் சுதந்திரமாக உலகுக்கு கூற முடிவதில்லை. அதற்குக் காரணம் உலகின் தொன்மைமிக்க இனங்களாக, முதலில் நாகரீகம் அடைந்த இனங்களாக ,அறிவுபூர்வமான கண்டுபிடிப்புக்களுக்குக் காரணமானவர்களாகக் கறுப்பு இனங்களே ஆடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது உலக வல்லரசுகளாக இருக்கும் வெள்ளை இனத்தவருக்கு அவை ஏற்புடையதல்ல. தேவையற்றுப் பல போர்களை ஆரம்பித்து தொன்மையை அடையாளங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கிருந்து அகழ்வுப் பொருட்களையும் செல்வங்களையும் எடுத்துவிட்டு அடையாளங்களைச் சிறிதுமின்றி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு நூற்றாண்டின் பின்னர் உலகின் தொன்மையான இனம் வெள்ளை இனத்தவர்கள் என்று அவர்கள் கூறும்போது அதற்கு எதிர்ச் சான்றுகளாக எவையும் இருக்கப்போவதில்லை. இருப்பவர்களும் அதுபற்றிக் கவலை கொள்ளப் போவதில்லை. அதற்கான பாரிய திட்டமிடல்கள்தான் இந்த வரலாற்றுச் சார்புநிலைகளும் ஆவண அழிப்புக்களும். எம் கண்முன்னாலேயே கீழடி ஆய்வை நிறுத்த இந்திய அரசு செய்தவற்றைப் பார்த்துக்கொண்டு மட்டும்தானே எல்லோரும் இருக்கின்றனர். 
கேள்வி (17): நீண்ட காலமாக பெண்கள் மத்தியில் தாம் தொடர்ந்தம் அடிமைப்பட்ட நிலையிலேயே  இருந்து வருகிறோம் என்ற நம்பிக்கை  நீடித்துக் கொண்டே வருகின்றது.இது உலக நாடுகளில் உள்ள அனைத்து இனப் பெண்களிடமும் காணப்படுகின்றது.குறிப்பாக பெண் விடுதலையில் பாரிய வளர்ச்சியடைந்த  ஐரோப்பிய நாட்டுப் பெண்கள் தாம் இன்னும் ஆணாதிக்கத்தினாலும்  சமூகத்தினாலும்  விடுதலை அடையவில்லை இன்னமும் கருதி வருகிறார்கள்.நீங்கள் இதுவரையில் பெண் விடுதலை சம்பந்தமாக நீங்கள் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக அனுபவித்துக் கொண்ட அனுபவங்கள் ரீதியாகவும்,உலகப் பார்வையில் நீங்கள் கவனித்ததை வைத்தும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?.
இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தபின்னும்கூடத் தொடர்ந்தும் பெண்கள் பலர் அடிமைப்படுத்தப்பட்டு பல கொடுமைகளுக்கு முகம்கொடுத்தபடிதான் இன்றுவரை இருக்கிறார்கள். நாகரிக வளர்ச்சசியும் பெண்களுக்குப் பாதுகாப்பான சட்டங்களும் முதன்மையாக இருக்கும் ஐரோப்பிய நாடென்றாலென்ன, உலகம் முழுவதும் கூட அடிமைநிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அதற்கான புறக்காரணிகளாக தொழில், ஊதியம், ஆணாதிக்க அரசியல் சமூகக் கட்டமைப்புக்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பினும் குடும்ப அமைப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது முதற்கொண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் பெண்தான் என்னும் நிலையில் பல தடைகளையும் அனுசரிதத்தல்களையும் பெண்கள் ஏற்கவேண்டியுள்ள அதேவேளை ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு  விருப்புவெறுப்பின்றி இசைந்துபோகவேண்டிய கட்டாயத் திணிப்பும் பெண்களுக்கெதிரானதொரு பாரிய அடக்குமுறைதான். ஆனாலும் தன் கணவன் என்னும் ஆணால் அடக்கி வைக்கப்படும் ஒரு பெண், தான் பெற்ற பிள்ளைகளிடையே ஆண், பெண் பாகுபாட்டைக் காட்டியே வளர்ப்பதும், பெண்கள் மதிப்பாக நடத்தப்படவேண்டும் என்பதை தன் ஆண் பிள்ளைக்குச் சொல்லி, அப்பிள்ளையை ஒரு நல்ல ஆணாக வளர்க்காத தவறும் வீட்டில் தன் தாய் தந்தையால் நடத்தப்படும் நிலை பார்த்து, சமூகத்தின் ஆணாதிக்க  சிந்தனையோடு வளரும் ஆண்குழந்தை போற்ற காரணிகளும் முக்கியமாகப் பெண்கள், தாமே தம் சுதந்திரம் பற்றி அறியாதவர்களாகவும் அடக்குமுறைகளை உடைத்து வெளியேவரும் மனோதிடம் அற்றவர்களாக எம் சமூக அமைப்பு கட்டமைத்து வைக்கப்பட்டுள்ளதுமே பாரிய பின்னடைவுகளாகும். அத்தோடு வலுவான ஆணின் உடலமைப்பும் பின்விளைவுகளற்ற நிலையுமே அவர்களுக்குச்ச்சார்பாயும் பெண்களுக்கு எதிராகவும் உள்ளன. பெண்கள் விரும்பித் துணிவுபெற்றாலன்றி பெண்ணடிமைத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கப்போகின்றது.
-எழுத்துத்துறையிலிருக்கும் நீங்கள், உண்மையில் பெண்கள் விடுதலை அடையவில்லை என்பதற்கு சொல்லும் காரணங்கள் எவை?
எழுத்துத்துறையே அதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆண்களால் சூளப்பட்ட உலகில் அத்தனையும் ஆண்களின் கைகளிலேயே உள்ளது. பெண் எத்தனை சிறந்த எழுத்தாளரானாலும் ஆணே முதன்மைப்படுத்தப்படுகின்றான். முன்னே வரும் பெண்கள் எதோ ஒருவகையில் புறம் தள்ளப்படுகின்றனர். அதாவது ஆண் சார்ந்து நிர்ப்பவரை புகழ்வதும் எதிர்ப்பவரை இகழ்வதும் இன்றுவரை தொடர்கிறது. சமையலறை என்னும் சுரங்க அறையிலிருந்து மீண்டுவர முடியாதபடி குழந்தைகள், கணவன் என்னும் வட்டத்துள் வீழ்ந்து கிடப்பதுடன் நின்றுவிடாது பேரக்குழந்தைகள் என்றும் தற்போதைய இடம்பெயர்ந்த சமூகம் பெற்றதாயை அடிமையாக்கி மகிழ்கிறது. தான் நினைத்த நேரம் தூங்கி எழுந்து, தனக்கு விரும்பியதை சமைத்துண்டு, தனக்கு ஏற்படும் சிறிய சிறிய ஆசைகளை தன் கணவன் பிள்ளைகளிடம் கேட்காமல் நிறைவேற்ற முடிகிற பெண்ணே சுதந்திரமான பெண் என்பேன்.  இந்த சுதந்திர நிலை புலம்பெயர்ந்த பெண்கள் சிலருக்கு இருக்கின்றபோதும் பல பெண்கள் ( வெள்ளை இனப் பெண்கள் உட்பட ) இன்னும் கணவனுக்குப், பிள்ளைகளுக்கு, சமூகத்துக்குப் பயந்து அடிமைத்தனத்துடன் உலகம் முழுவதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
கேள்வி (18) கற்பு என்பது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?.
கற்பு என்பது மனம் சார்ந்ததுதான். அதை தம்வசதிக்காக உடல் சார்ந்ததாக ஆண்களும் இச்சமூகமும் கட்டமைத்து வைத்துள்ளது. ஒருவர் தனக்குத்தானே நேர்மையுடன் இருக்கவேண்டும். தான் வாழும் சமூகம் உறவுகள்,குடும்பம் எல்லாவற்றையும் நேர்மையுடன் அனுசரித்து, அவர்களுக்கு எதிர்மறையான விடயங்களை, தன் குடும்பத்துக்கேனும் தீங்கு நேராத உண்மைத் தன்மையுடன் வாழ்தலே கற்பு என்பேன் நான்.
-பெண்களுக்கு மட்டுந்தான் கற்புநெறி தேவை ஆண்களுக்குத் தேவையில்லை என்று சொல்வது சரியா?
இருபாலாருக்கும் பொதுவானதுதான் கற்பு ஆயினும் உடலியல் ரீதியாக அந்தக்காலத்தில் பெண்ணை அடக்கவும் தன் உடல் இச்சைகளைத் தீர்க்கவும் தன்னை விட்டுப் பெண் வேறு ஆணை நாடாதிருக்கும் பொருட்டு ஆணால் உருவாக்கப்பட்ட சொல்லே கற்பு. கணவனை விடுத்து ஒரு பெண் இடையில் வேறு ஆணை நாடிச் செல்லும்போது அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் அது அப்பிள்ளைகளின் வாழ்வில் பலமான அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதற்காகவும் இருக்கலாம். அத்தோடு இவள் பெண் . என்னை இவள் விட்டு வேறொருவனை நாடுவதா என்னும் இறுமாப்பில் கூட ஆண்கள் பெண்ணுக்கு மட்டும் கற்பு என்று கூறியிருக்கலாம். அது ஒரு குடும்ப உறவுக்கு, சமூகத்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்னும் நல்ல எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் பின்னாளில் ஆண்களின் தவறுகள் பெண்கள்மேல் திணிக்கப்பட்டு, பெண்கள் மட்டுமே தண்டைக்குரியவர்களாகக் கருதப்பட்டனர். ஆண்கள் தப்பித்துக்கொண்டனர். பெண்கள், ஆண்கள் கற்பிழப்பதனால் எத்தனையோ குடும்பங்கள் சிதைந்துபோயுள்ளன. ஆகவே ஆணும் பெண்ணும் கற்போடிருத்தலே சிறந்தது.
கேள்வி (19) உங்களிடம் கேட்கப்பட்ட ஆறாவது கேள்விக்கான  பதிலில் சாதரணர் அல்லாதவர்களுக்கு  அவர்களுக்கு விளங்குபடி எழுத வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தீர்கள். சாதாரண மனிதர் நிலையிலிருந்துதான்  சாதாரண அல்லாத நிலைக்கு வந்தவர்களாதலால் சாதாரண மனிதர்கள் வாசித்து விளங்கிக் கொள்ளும் கதைகளை  சாதாரண அல்லாதவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்களா?
நான் கூறியது சாதாரணர் அல்லாதோருக்கு அவர்களுக்கு ஏற்றாற்போல் எழுதவேண்டும் என்றேன்.அவர்களால் சாதாரண கதைகளையும் வாசித்து விளங்க முடியும். எல்லோராலும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. அதற்காக ஒரேமாதிரியான கதைகளையும் எல்லோரும் எழுத முடியாது. அவரவர் அறிவின் தரத்துக்கேற்பவே எழுத முடியும். இலக்கியம் என்றால் எல்லாமும்தான் அடக்கும். சாதாரண மக்களும் ஒளவை கூறிய ஆத்திசூடியைப் புரிந்துகொண்ட அளவு திருக்குறளையோ அன்றி தொல்காப்பியத்தையோ புரிந்துகொள்ள முடியுமா?  அதுபோன்றதுதான் கதைகளும்.
கேள்வி (20) உங்களிடம் கேட்கப்பட்ட எட்டாவது கேள்விக்கான பதிலில் "பொன்னியின் செல்வன் " ஒரு இலக்கிய நாவல் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மன்னர் காலத்து அரசுகளின் நிர்வாக கட்டமைப்பும் அரசியல் சார்ந்ததுதான் - அது மன்னர் காலத்து அரசியலாகும். எனவே  அரசியல் சார்ந்ததுதான் என்பதை மறுக்கிறீர்களா?
நிட்சமாக மறுக்கிறேன். அந்நூலை எழுதிய கல்கி  அவர்கள் சோழர் காலத்தில் வாழ்ந்தாரா? அல்லது அவர் எழுதியபோதுகூட சோழர் ஆட்சி இருந்ததா? அது ஒரு சிறந்த வரலாற்றுப் புனைவு. அவர் எழுதியவற்றில் 50 வீதம் கூட அக்காலத்தில் நடந்திருக்காமல் இருந்திருக்கலாம் அல்லது நடந்திருக்கலாம். அனால் அந்நாவல் அவர் எழுதியபின் அந்நாட்டு அரசியலில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தியதா அல்லது அந்நாட்டு மக்களுக்கு அரசியல்த் தெளிவை ஏற்படுத்தியதா? அன்றி அரசியல் மாற்றமேலும் ஏற்பட்டதா ? எதுவுமே இல்லையே. பாரதியார் கவிதைகள்  சுதந்திரப்போரில் பல மனங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி விடுதலைப்போரில் மக்களை இணைய வைத்தன. ஈழத்தில் எழுதப்பட்ட இக்கியங்கள் மக்களிடமும் அரசியலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவைதான் அரசியல் சார்ந்த இலக்கியம் எனலாமேயன்றி பொன்னியின் செல்வன் சாதாரண ஒரு வரலாற்றைப்பற்றிப் புனையப்படட சிறந்த இலக்கியம். அவ்வளவே.
கேள்வி (21) ஒரு சாதாரண குடிமகனே தனது மனைவி பலபேருக்கு  முன்னாள் அவமானப்படும்  போது உயிரைத் துச்சமென நினைத்து வெகுண்டெழுவான்.ஆனால் பலபேர் முன்னிலையில் தங்களுடைய மனைவியான பாஞ்சாலி துகிலுரியப்பட்ட போது வாழவிருந்த பஞ்சபாண்டவர்கள் கோழைகள்தானே?. உங்கள் பார்வை என்ன?
இது ஒரு உண்மைச் சம்பவமா அல்லது புனைவா என்னும் தர்க்கம் நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பஞ்சபாண்டவர்கள் எந்த இனத்தவர்? போருக்குத் துணிவுடன் தன் மகனை அனுப்பிய தாய் தொடங்கி புறநானூற்றுப் பாடல்களில் எல்லாம் தமிழர்கள் வீரம் செறிந்து கிடக்கிறது. மானத்தைப் பெரிதாகத் தமிழர்கள் மதித்து வாழ்ந்தார்கள் என்பதை பல கதைகள், பாடல்களினூடாக நாம் அறிந்துள்ளோம். மனித இனம் நாகரீகம் அடைந்த காலம் தொட்டு மனிதன் தன் இருப்பைத் தங்கவைத்துக்கொல்வதில் பாரிய முனைப்புக் காட்டியுள்ளான். அப்படி இருக்க அரசாண்ட மன்னர்கள் எதுவித சிந்தனையும் இன்றி அனைத்தையும் இழப்பதும் கட்டிய மனைவியையும்  வைத்தே சூது விளையாடினார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் முடியவில்லை. அப்படியாயினும் ஒரு பெண்ணை மற்றவர் துயிலுரியும்போது எதுவும் செய்யாது பார்த்துக்கொண்டிருப்பது கோழைத்தனத்தின் உச்சம் மட்டுமல்ல அவர்கள் ஆண்கள் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. சிலவேளைகளில் வேற்று இனத்தவர்களிடையே நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்து ஒரு சிறந்த எழுத்தாளரான வியாசரின் கற்பனையில் வடிவமைக்கப்பட்ட சம்ஸ்கிருத நூலைப்பற்றி நாம் கவலை கொள்ளத் தேவை இல்லை.
கேள்வி (22) சீதையை நம்பாமல் அவளின் கற்பை பரிசோதிக்க நெருப்பினுள் இறங்கச் செய்த இராமனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இதுவும் வாலமீகி என்பவரால் எழுதப்பட்ட வடமொழி நூல்தான். இந்நூலிலும் பல இடைச் சொருகல்கள் ஏற்பட்டிருக்கும். அதில் ஒன்றுதான் சீதை தீக்குளிப்பு என்பதும் என நான் எண்ணுகிறேன். ஆனாலும் ஆண்களை பொறுத்தவரை பெண்களில் சந்தேகம் கொள்வது அன்றுதொட்டு நடைபெற்று வருகிறதுதான். இச் சம்பவத்தின் மூலம் கடவுளாக இவர்கள் சித்தரித்த இராமன் என்பவன் சாதாரண மனிதன்தான் என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளாமலாமா???
கேள்வி (23) நீங்கள் பெற்ற விருதுகள் எத்தனை?.எங்கெங்கு அவற்றைப் பெற்றீர்கள்?.
நான் இதுவரை விருதுகள் எவற்றையும் பெறவில்லை. என் நூல்கள் விருதுகளுக்குத் தகுதியானவையா என்பதுக்குமப்பால் நான்குபேரின் முடியில் ஒருவரின் எழுத்துத் தங்கியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அத்தோடு அந்த நான்குபேரின் பரிந்துரைப்பில் எனக்கு விருது கிடைக்கவேண்டும் என்று நான் எண்ணுவதும் இல்லை. அதற்காக உள்ள இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் விருது வழங்குநர்களுக்கும் என் கதைகளை அனுப்பிக்கொண்டிருப்பதும் இல்லை. நான் யாழ் இணையத்தில் என் கதைகளை பகிர்ந்துகொள்வதுடன் திருப்தியடைகிறேன். சிலர் கேட்டால் மட்டும் சில தளங்களுக்கு என்கதையை அனுப்பிவைப்பது. மற்றப்படி தகுதியே இல்லாத சிலரின் எழுத்துக்கு அவரின் முகத்துக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ கிடைத்திருக்கும் விருதுகளை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.
 

தண்டனை




இன்றுடன் அவள் இங்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. எட்டு மாதப் பிள்ளை அங்கு  என்ன செய்கின்றதோ என்பதே எந்நாளும் இவள் கவலையாக இருக்கிறது. எத்தனை கெஞ்சியும் பிள்ளையைக் கண்ணில்க் காட்டுகிறார்களே இல்லை. அதுவும் முதல் பிள்ளை. எனக்குத் தெரியாமல் அவனுக்குப் பிள்ளையைக் காட்டுவார்களோ என்று எண்ணும்போதோ மனம் பதட்டப்படத் தொடங்கிவிட்டது  தாரணிக்கு.
நீ தேவையில்லாமல் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதை. இன்னும் கொஞ்ச நாள்த்தான். பொறுமையாய் இரு.”
நீ எண்டாலும் தருணை ஒருக்காய் போய்ப் பாரனடா. இரவிலை என்னால நித்திரையே கொள்ள ஏலாமல் இருக்கடா
நான் இண்டைக்கே போய்க் கதைக்கிறன். நீ நின்மதியாய் இரு அக்கா
விடைபெற்றுச்  செல்லும் தம்பியைக்கூட அவளால் முற்றிலுமாக நம்பமுடியாவிட்டாலும் இப்ப அவனை விட்டாலும் யாருமில்லை அவளுக்கு என்னும் உண்மை உறைக்க, தம்பியார் கண்ணில் மறைந்தபின்னரும் கூட திரும்ப அவர்களுடன் சென்று தன் அறையை அடைந்து கட்டிலில் அமர்கிறாள்.
அவளுக்கு வேறு வழியே இல்லாமல்  அமர்வது அல்லது படுப்பதும் இருப்பதுமாகவே வாழ்வு சென்றுகொண்டிருக்கிறது. உணவுகூட நேரத்துக்கு வந்தாலும் எல்லாவற்றையும் உண்ணவும் முடியாது, கொட்டுவதும் அழுவதும் தனக்குள்ளேயே பிதற்றுவதுமாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. கணவன் பலமுறை அவளை பார்க்க வந்தும் அவள் மறுத்துவிட்டாள்.
அத்தானில என்ன அக்கா பிழை? நீ ஏன் அவரில் கோவிக்கிறாய் என்று தம்பியார் பலதடவை கேட்டும் அவள் எந்தப் பதிலும் கூறவேயில்லை. என்ர  பிள்ளையை சொந்த அப்பப்பாவோட தானே விட்டுட்டு வேலைக்குப் போனனான். வேற யாரோடையும் எண்டால் தான் என்னிலை பிழை சொல்லவேணும். ஆரையெண்டாலும் நம்பி என்ர சின்னப் பிள்ளையை விட்டுவிட்டு நான் வேலைக்குப் போனது என் பிழை தானே என்று தனக்குத்தானே தவறைப் பலமுறை ஒப்புக்கொண்டாலும், நான் செய்தது தப்பே இல்லை என்று ஆணித்தரமாக மனம் சொல்ல, பின்னால் உள்ள சுவரில் சாய்ந்து அழவாரம்பிக்கிறாள் தாரணி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
நாளைக்கு காலை தயாராய் இருக்க வேணும். கோட்ஸ்சுக்கு அழைத்துப் போவோம் என்றபடி அவளின் ஆடைகளை அந்தப் பெண் கொண்டுவந்து கொடுக்க, தலையை ஆட்டி அதை ஆமோதித்தவண்ணம் என்னென்ன கேட்பார்களோ? என்ன சொல்வார்களோ? என்று யோசனை ஓட, நன்றாய்ப் போய்க்கொண்டிருந்த அவளின் திருமண வாழ்க்கை மனதின் முன்னே வருகிறது.
இலங்கையிலிருந்து திருமணமாகி கணவன்  இவளை தாங்காத குறையாக இங்கு அழைத்து வந்ததுமுதல் நூற்றைம்பது பேருக்குச் சொல்லித் திருமண வரவேற்பு வைத்ததுவரை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இவள் கேட்காமலே நகை நட்டு வாங்கிக் கொடுப்பது, விதவிதமாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பது என்று இவளுக்கும் மனமெல்லாம் நிறைஞ்சு போனதுதான். போகப்போகத்தான் கணவனின் பொறுப்பற்ற செலவுகளும் கடனும் இவளுக்குத் தெரியவந்தது. இனி என்ன திரும்பப் போகவா முடியும்?  முதலில் அவனுக்கு வரும் கடிதங்களை இவள் திறந்தும் பார்ப்பதில்லை. ஒருநாள் தற்செயலாக ஒன்றைத் திறந்து பார்க்க கிரெடிட் காட்டில் இவன் பெரிய தொகை எடுத்திருப்பது தெரிய துணிந்து கேட்டுவிட்டாள்.
உம்மை ஸ்பொன்சறில் கூப்பிட்டது எண்டவுடனே எல்லாம் பிரீ எண்டு நினைச்சீரே? எல்லாத்துக்கும் இங்க காசுதான். டிக்கட், நகைநட்டு, கலியாணச் செலவு எல்லாம் நான்தானே. உமக்கு வீடு மட்டும் தானே. நான் சீதனமா காசு ஒண்டும் கேட்கேல்லையே என்பவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் தாரணி.
விடுமுறைக்கு இலங்கை வந்தவன், தன்னுடன் கூடப் படித்த நண்பனையும் தேடி வந்தான். நண்பனுடன் கதைத்துக்கொண்டு இருந்தவனை தேநீரும் கடையில் வாங்கிய ரோள்சும் குடுத்து தாயார் உபசரித்துக்கொண்டிருக்க, வேலைக்குப் போய்விட்டு ஸ்கூட்டியில் வந்து இறங்கிய இவளைப் பார்த்துவிட்டு யாரடா இது எண்டு கேட்டவன், தமையன் இவளை பற்றிக் கூறியதும் இவளை பார்த்து எப்பிடி இருக்கிறியள் என்று இயல்பாக்கினான். இவள் உடனேயே சிரித்துவிட்டு அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.  
அன்றிலிருந்து ஒரு வாரம் மிதுன் இவள் வரும் நேரங்களில் தமையனுடன் கதைத்துக்கொண்டிருந்தான். அதன் பின் தான்  தமையன் தாயாரையும் இவளையும் கூப்பிட்டு மிதுன் இவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். இவளுக்கும் சம்மதம் என்றால் செய்து வைப்பம் என்றான். தாய்க்கோ சரியான மகிழ்ச்சி. வெளிநாட்டில் இருந்து வந்தவன் தன்னை விரும்பிக் கிடக்கிறான் என்றால் இவளுக்கும் கசக்குமா என்ன? பார்ப்பதற்கும் நன்றாகத்தானே இருக்கிறான் என்று இவளும் சம்மதம் சொல்ல எல்லாம் விரைவாக நடந்தேற, ஒரு ஆண்டு முடியும் முன்னரே இவள் லண்டன் வந்துவிட்டாள்.
அதன் பின் தான் அவனின் கடன் விபரங்கள் தெரியவர, தானும் எங்காவது வேலைக்குச் செல்லலாம் என முடிவெடுத்து கணவனிடம் சொல்ல, அவனும் தன்  நண்பனின் கடையில் வேலையும் எடுத்துக்கொடுக்க, இவளுக்கு வேலை கடினமாக இருந்தாலும் கணவனின் கடன் குறைகின்றதே என்று மனம் நின்மதியானது.
ஆறு மாதங்கள் வேலை செய்தபின் இவள் கர்ப்பம் தரிக்க, தொடர்ந்து வேலைக்குப் போவதா விடுவதா என்று இவள் மனம் குழம்பிய வேளை, “முதல் பிள்ளை தானே. எட்டு மாதங்கள் வரை வேலை செய்யலாம் என்று கடையில் வேலை செய்த நண்பி சொல்ல, இவளும் தொடர்ந்து போய்க்கொண்டுதான் இருந்தாள். எட்டாம் மாதம் இவளுக்கே அசதியாக இருக்க வீட்டில் இருக்கவாரம்பித்தாள்.
தமக்கையுடன் இருந்த மாமியார் இவளுக்குக் காவலாக வீட்டில் இருந்தார் தான். ஆனாலும் இருவருக்கும் பெரிதாக ஒட்டவேயில்லை. எதோ கடமைக்கு இருவரும் கதைப்பது போலவே இவளுக்கு இருக்கும். சீதனம் ஒண்டும் கொடுக்காமல் மகனை மருட்டிவிட்டாள் என்று இவளில் கோபம்.
குழந்தை கஷ்டப்படுத்தாமல் பிறந்துவிட்டான். மாமியாருக்கும் மிதுனுக்கும் கூட ஆண்பிள்ளையாய்ப் பிறந்தது மகிழ்ச்சி. இவனின் சகோதரி, நண்பர்கள் என்று சிலர்தான் குழந்தையைப் பார்க்க வந்தார்கள். கனடாவில் மிதுனின் மூத்த சகோதரியுடன் வாழும் இவனின் தந்தையும் இவனின் திருமண வரவேற்பிற்கு வந்து போனதோடு சரி. இப்ப பேரனைப் பார்க்க வந்து இவர்களுடனேதான் தங்கப்போகிறாராம் என்ற தகவலை இவன் கூறியதிலிருந்து இவளுக்கு ஏற்பட்ட எரிச்சலை இவள் வெளியே காண்பிக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள்.
என்ன இருந்தாலும் மிதுனின் தந்தையை எப்படி இவர்களுடன் வந்து நிற்கவேண்டாம் என்று சொல்வது? இங்கிருக்கும் தமக்கை வீட்டில் இருக்கும் சிறிய அறையில் தான் தாயார் தங்குவது. அங்கு தந்தையும் வந்திருக்க முடியாதபடி சிறிய வீடு. இவர்கள் வசிக்கும் அபார்ட்மென்ட் ஒரு பெரிய படுக்கை அறையும் ஒரு சிறிய அறையும் கொண்டதனால் மாமனார் இங்கு வருவதைத் தடுக்கமுடியவும் இல்லை.
மருமகளே மருமகளே என்று இவளுடன் நல்ல வாரப்பாட்டுடன் தான் மாமனார் இருந்தார். இந்த நாடுகளில் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க முடியாதுதானே. குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் லீவெடுத்துவிட்டு மிதுன் சமைத்துக்கொடுத்து ஒத்தாசையாகத்தான் இருந்தான். அதன்பின் அவனாலும் லீவெடுக்க முடியவில்லை. பிள்ளையின் அலுவல்கள் முடிய பெரும் எடுப்பு எடுக்காமல் இரண்டுபேருக்கும் இவளேதான் சமைக்கவேண்டியதுமாயிற்று. மாமனார் வந்த பிறகு அவரே சாமான்கள் வாங்கக் கடைக்குப் போவது, மரக்கறி இறைச்சிகள் வெட்டித் தருவது, சில நேரம் தானே சமைப்பது என்று இவளுக்கும் மாமனார் தம்முடன் இருப்பதும் உதவி போலத்தான் இருந்தது.
இவளும் குழந்தை கிடைத்து ஐந்து மாதங்களாகிவிட்டபடியாலும் தாய்ப்பால் சுரப்பதும் நின்று போத்தல் பால் பிள்ளை பழக, மாமனாரிடம் விட்டுவிட்டு திரும்பவும் வேலைக்குப் போனால் என்ன என்ற ஆசை எட்டிப் பார்க்க, கணவனிடம் கேட்க முதலே மகிழ்வாக அவன் தலையாட்டினான்.
ஏற்கனவே அங்கு வேறொருவர் வேலைக்குச் சேர்ந்துவிட இவளுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேர வேலையே அங்கு கிடைத்தது. அதுவும் நல்லதுதான். போவதும் வருவதும் தெரியாது என்று எண்ணி மகிழ்ந்தவளாய் பிள்ளைக்கு குளிக்கவார்த்து, சமையல்முடித்து, பிள்ளையின் போத்தல் சாப்பாட்டைத் தீத்தி தூங்கவைத்துவிட்டு தானும் சமையலை முடித்து மாமனாருக்கும் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு குளித்து வெளிக்கிட்டு ஒண்டுக்கு இறங்கினால் 1.30 – 4.30  வரை வேலை. ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவாள்.  போகும்போதே மாமனுக்குக் கஸ்டம் கொடுக்காமல் பிள்ளைக்குப் மாப்பாலைக் கரைத்து வோமரில் மூடிவைத்து விட்டுப் போனால் பிள்ளை மூன்று மூன்றரைக்கு எழும்பிப் பாலைக் குடிப்பான். பிறகு இவள் ஐந்துக்கு வந்து இரவுச் சாப்பாட்டைச் செய்து பிள்ளைக்குக் கொடுப்பாள். இடையில் பிள்ளை அழுதால் மாமனார் பிள்ளைக்குரிய தேநீரைக்  கரைத்து ஆற்றிக் கொடுப்பார். அதனால் இவளுக்குப் பெரிதாகப் பிரச்சனை இல்லை.
ரிங் ரிங் ரிங் ........என்னும் மணியோசையில் இவளின் நினைவுகள் கலைய, அது இரவு உணவுக்கான மணி என்பதை உணர்ந்து அவர்களுக்காகக் காத்திருக்கவாரம்பித்தாள்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
இது இரண்டாவது தடவை இவள் கோட்டுக்கு வருவது. என்ன நடந்தாலும் ஒன்றுதான் என்ற மனநிலை இவளுக்கு வந்திருந்தாலும் மகனைப் பார்க்கவாவது அனுமதி கேட்கவேண்டும் என்று முடிவெடுத்தவளாகக்  காத்திருந்தாள். இவளின் முறை வந்ததும் இவளின் வக்கீல் இவளை உள்ளே கூட்டிக்கொண்டு போக, இவளுக்கான ஒரு மொழிபெயர்ப்பாளரும் எதோ தீண்டாத தகாத பொருளைப் பார்ப்பதுபோன்று இவளைப் பார்க்கப் பிடிக்காது தலையை வேறு புறம் திருப்பிக்கொண்டு வர, இவளுக்குச் சிரிப்பு வருகிறது. சரி பிழைக்களுக்கும் அப்பால் ஒரு மனிதரை மதிக்கத் தெரியாதவனை எப்படி இந்தத் தொழிலில் அனுமதித்தார்கள் என்ற எண்ணமும் எழுந்தது.
இவள் பற்றிய வழக்கு ஆரம்பமாகியதில் கூண்டில் சாட்சியாய் ஏறி நிற்கவேண்டிய நிலை. ஆனாலும் அதுகூட அவளை பாதிக்கவேயில்லை. ஏறி நின்றபின் பார்த்தால் தன் தம்பி ஒருபுறமும் கணவன் ஒருபுறமும் இருக்க சுருக்கென்று கோபம் தலைக்கேறியது. திரைப்படங்களில் வருவதுபோல் இரு வக்கீல்களும் அதிக நேரம் வாதாடவேண்டிய தேவை இன்றி இவள் திட்டமிட்டு இந்தத் தவறைச் செய்யவில்லை என்பது நிரூபணமாகியதால் இவருக்கு விடுதலை கொடுக்கிறோம் என்னும் தீர்ப்பு இவளை திக்குமுக்காடச் செய்ய, என்ர பிள்ளையை என்னட்டைத் தாங்கோ என்றாள் கத்தி அழுதபடி.
அழாதேங்கோ. பிள்ளையைத் தருவார்கள் என்று வக்கீல் சொன்னதை மொழிபெயர்ப்பாளர் சொல்ல, என் கணவனும் என் பிள்ளையைப் பார்க்கக் கூடாது என்று சொல்லுங்கோ என்றாள். அந்தப் பிரச்சனை வேறு ஒரு நாள் தான் கதைக்கலாம். இப்ப வாங்கோ போவம் என்ற வக்கீலிடம் நன்றி கூறியபடி தம்பியார் வருகின்றானா  என்று பார்த்தபடி வாசலுக்கு வருகிறாள்.
அக்கா அத்தான் உன்னோடே கதைக்கவேணுமாம்
நான் ஒருத்தரோடையும் கதைக்கமாட்டன். முதல்ல பிள்ளையை எங்க வச்சிருக்கிறாங்கள் எண்டு கேளடா
தமக்கையின் கோபம் புரிய, சரி வா கேட்பம் என்றபடி முன்னால் நடக்கிறான் தம்பி.
எத்தனையோ பத்திங்களில் கையொப்பமிட்டு, பல மனநல மருத்துவத் துறையினரின் பரிசோதனைகளின் பின்னர் இவளின் பிள்ளையை இவளிடம் ஒப்படைக்கவே ஒரு மாதமாக, பிள்ளையை வாங்கியவள் நெஞ்சோடு ஆசைதீர அணைத்துக்கொள்கிறாள்.
அம்மா இனிமேல் பிள்ளையை யாரிட்டையும் விடமாட்டன். என்ர செல்லம். அம்மா வந்திட்டன் என்று புலம்பியபடி ஆசைதீரப் பிள்ளையைப் பார்க்கிறாள்.
வா அக்கா வீட்டை போவம் என்றபடி தம்பியார் காரில் ஏற, தாரணியும் காரில் ஏறி பின் இருக்கையில் பிள்ளையை நெஞ்சுடன் அணைத்தபடி இருந்தவள் மனம் வாகனத்தின் சத்தத்தையும் மீறி எங்கெங்கோ அலைந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்ததை நடுக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறது. 
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
மாமனாரிடம் குழந்தையை விட்டுவிட்டு போவதற்கு மனம் இல்லைத்தான் என்றாலும், யாரும் ஏதும் சொல்லிவிடுவினமோ எண்ட பயமும்கூடவே எழ, கடை நண்பியிடம் கூறுகிறாள்.
உமக்குப் பிரச்சனையைத் தீர்க்க மற்றவையோ காசு தரப்போயினம். நாள் முழுக்கவே வேலை செய்யிறீர். நாலு மணித்தியாலம் தானே. ஒன்றுக்கும் யோசிக்காதையும் நண்பி கூற மனம் நின்மதி பெறுகிறது.
மீண்டும் வேலைக்குப் போய் ஒருமாதம் முடிந்த நிலையில், இரண்டு மூன்று நாட்களாக இவள் கரைத்து வைத்த பால் சிறிது பருக்கியபடியும் அரைவாசிகூடக் குடிக்காமலும்  மிகுதி பருக்கப்படாமல் அப்படியே இருக்க, “மாமா இவனுக்குப் பால் பருக்கேல்லையோ என்கிறாள் ஆதங்கத்துடன். பருக்கின்னான். குடிக்கமாட்டன் எண்டிட்டான்”. என்றபடி அவர் தொலைக்காட்சியைப் பார்க்க தாரணிக்கு எரிச்சல் தான் வருகிறது.
இவள் பிள்ளையைத் தூக்கப் பிள்ளை  எடுத்த சத்தி இவளின் முகத்திலும் ஆடைகளிலும் தெறிக்கிறது.
என்னப்பன்? என்ன செய்யுது?. ஏன் பாலைக் குடிக்கேல்லை என்றபடி முகத்தை இளஞ்சூட்டு நீரில் நனைத்த துணியால் துடைத்து சமாதானமாக மார்புடன் அணைத்துத் தூங்கச் செய்கிறாள். தொடர்ந்தும் அன்று இரு தடவைகள் பிள்ளை வாந்தியெடுத்து ஒரே சோர்வாக இருக்க, அடுத்தநாள் பிள்ளையை வைத்தியரிடம் கணவனும் மனைவியுமாகக் கொண்டு  போகிறார்கள். வைத்தியர் பார்த்துவிட்டு என்ன என்று புரியவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பார்த்துவிட்டுக் கொண்டுவாருங்கள் என்று சொல்லி அனுப்ப, சிறிது மன நின்மதியுடன் இரண்டு நாட்கள் வேலையில் லீவு சொல்லிவிட்டு பிள்ளையுடனேயே இருக்கிறாள். இவள் அணைப்பில் பிள்ளை குணமானதுபோல் தெரிய, மூன்றாம் நாள் பிள்ளையை விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள்.  
மாமா தருணைக் கொஞ்சம் கவனமாய் பாருங்கோ என்றபடி வேலைக்கு கிளம்பியவளுக்கு மனம் எதோ சஞ்சலமாகவே இருக்க, மனதைச் சமாதானப்படுத்தியபடியே வேலைக்குச் செல்கிறாள். அன்றைக்கென்று பார்த்து நீர்  இண்டைக்கு வாறன் எண்டு சொல்லாததால நானே வேலைக்கு வந்திட்டன் என்று மற்ற வேலைசெய்யும் பெண் கூற, தான் இன்று வேலைக்கு வருவதுபற்றி இவர்களுக்கு கூற மறந்தது இப்பதான் நினைவு வர, “சரி அப்ப நீங்களே செய்யுங்கோ. நான் நாளைக்கு வாறன் என்றபடி தாரணி தொடருந்துத் தரிப்புக்கு வருகிறாள்.
பத்து நிமிடங்களில் பேருந்து வர ஒருவித நின்மதியில் இருக்கையில் சாய்கிறாள். வீணாக வெளிக்கிட்டு வந்தது. ஒரு மணிநேரம் வீண் என்று  எண்ணியபடி முப்பது நிமிடப் பயணத்தில் வீடு வந்தவள், கதவை மெதுவாகத் திறந்தபடி கைப்பையை  கொழுவிவிட்டு படுக்கை அறைக்குள் நுளைகிறாள். பிள்ளைக்கு நப்பீஸ் மாற்றுவதற்காக போடப்பட்டிருந்த மேசையின் அருகில் மாமனார் தெரிய, நான் வடிவா எல்லாம் மாற்றிவிட்டுத்தானே சென்றேன் என்று எண்ணியபடி என்ன மாமா? கக்கா இருந்திட்டானே திரும்ப என்றவள் குரல் கேட்டு அதிர்ச்சியுடன்  மாமனார் திரும்ப முன்னரே மாமனாரின் அரை நிர்வாண நிலை இவளின் நெஞ்சைப் பதறவைக்க, பிள்ளையின் வாயிலிருந்து ஒழுகும் திரவமும் கண்ணில்பட, புரிந்தும் புரியாமலுமான அடுத்தநொடி டேய் .....என்றபடி பாய்ந்து சென்று மாமனாரை இழுத்து கீழே தள்ள, இவளைத் தள்ளிவிட்டு மாமனார் கதவை நோக்கி ஓடுகிறார். இவள் பாய்ந்து சென்று மீண்டும் ஆவேசத்துடன் கீழே விழுத்தி அருகில் இருந்த கதிரையை எடுத்து தன் பலம்கொண்டமட்டும் தாறுமாறாகத் தாக்குகிறாள்.
டேய் என்று தமக்கை கத்திய சத்ததில் என்னவோ எதோ என்று காரை பிரேக் பிடித்து நிறுத்திய தம்பி, அக்கா ஓக்கேயா?? என்று கேட்கத்தான் இவளுக்கு நிகழ் காலம் கண்ணில் தெரிகிறது.
யாரை மன்னித்தாலும் தன் கணவனை மன்னிக்கவே முடியாது. அன்றைக்கு அவள் போன் செய்து கணவன் வர அவனிடம் எல்லாம் சொன்னதும், கணவன் அவள் காலில் விழுந்து கெஞ்சியதும் காதுகளில் நாராசமாக இன்றும் கேட்கிறது.
"பிளீஸ் தாரணி. அப்பா செய்ததை வெளியில சொல்லிப்போடாதையும். எங்கட குடும்ப மானமே போயிடும். வேற ஏதும் சாட்டுச் சொல்லுவம்".
சீ என்று அவனை அன்று உதறியவள் தான்.