Wednesday, 27 August 2014

தொலையும் நின்மதி - கவிதை


தொலையும் நின்மதியே நிரந்தரமாகி
நிற்கதியாக்கி விடுகின்றது

உரிமையற்ற நிலைகளின் ஈடாட்டம் கண்டு
ஏதுமற்றதாக ஆசை கொள்கிறது மனது
மனதில் கூடுகட்டும் குப்பைகளும்
ஆற்றாமைகளில் அழுந்தும் எண்ணங்களுமாய்
எல்லாவற்றையும் எதிரியாய் நோக்க
எந்நேரமும் எதுவுமாகிவிடாதிருக்க
எனக்கே நான் எதிரியாகிறேன்

செய்கைகளும் செயற்கையாய்க்
கோர்க்கப்படும் வார்த்தைகளும்
எந்நேரமும் செயல்களின் பிரதிபலிப்பை
எதிர்மறை எண்ணங்களின் பிரதிநிதியாக்க
பகுக்கப்படும் சிந்தனையின் செயல்களில்
பக்கவிளைவாகின்றன வார்த்தைகள்

உண்மையற்ற புரிதலற்ற அன்பும்
காரணங்களுக்கானதான செயலும்
எங்கோ ஓரிடத்தில் ஏதுமற்றதாகிவிடுகிறது
உண்மை அன்பு எந்தவித எதிர்பார்த்தலுமின்றி
என்றும் வற்றாத நதியாய்
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது

எனக்கானதாக எதுவும் இல்லாததில்
எனக்கானதாய் எண்ணிய பொய்மையில்
உணர்வுகளின் கருக்கூட்டலில்
எதுவுமே புரிந்துகொள்ளப்படாது
அன்னியமாக்கப்படுகின்றது
அதன் வலியை எதிர் கொள்ள முடியாது
எதிர்கொண்டபடியே எப்போதுமானதான
ஏமாற்றத்துடன் எதிர்வினை புரிந்தபடி நான்

Wednesday, 20 August 2014

இதயத்தில் கல் சுமந்து - கவிதை

 
இதயத்தில் கல் சுமந்து பிறந்திடு
மனதின் பாரம் அகன்றுவிடும்
கண்களில் கூர்மையற்று இருந்திடு
குற்றும் வலிகள் அகன்றுவிடும்
சிந்தையில் செயலற்று நின்றிடு
சேதங்கள் உனைவிட்டு அகன்றிடும்
செவிப்புலன் இருந்தும் செவிடராய் இருந்திடில்
சேதாரம் இன்றி வாழ்வு நகர்ந்திடும்
வார்த்தைகள் இன்றி வலிகள் சுமந்திடில்
வழிகள் ஆயிரம் வரிந்தே கண்டிடும்

நட்புக்காய் உறவுக்காய் ஊருக்காய் உலகுக்காய்
உருக்குலைந்து வாழ்ந்தே நாமும்
ஒட்டுண்ணிகளாய் ஓடற்ற விலங்கினமாய்
உள்ளும் புறமும் ஒளியற்ற வாழ்வை
ஏற்றும் ஏற்காது அலைகின்றோம்

எந்திரங்களற்று எதுமற்றவர்களாய்
எமக்காய் வாழ்வது எப்படி ????

சூதுகளற்று வாதுகள் செய்து
சுதந்திரமாய் வாழ்வதெப்படி ????

பாதைகளற்றுப் பறவைகளாக
பறந்து திரிவது எப்படி????

கோதுகளற்று கொடுமைகளற்று
கொள்கை வகுப்பது எப்படி????

கூடுகளற்று காடுகள் எங்கும்
கரைந்து திரிவது எப்படி ????

கோடுகள் கடந்து கொண்டவை துறந்து
கோலங்களாக காலங்கள் கனியக்
காத்திருப்பாயா பெண்ணே நீ ????

மனித மனங்கள் - கவிதை



மனித மனங்களைப் பகுத்தறிய முடியவில்லை
எண்ணங்களை ஏதோவாக்கி
இனம்புரியா அர்த்தங்களை இணைவாக்கி
ஏக்கம் கொள்ள வைக்கின்றனர் மனிதர்

நம்பிக்கைகளை நிரந்தரமற்றதாக்கி
பரிவற்ற பகிர்தலைத் தம்முடையதாக்கி
எண்ணாதனவெல்லாம் எண்ணியபடி
உள்ளம் உறுதியறக் குமைக்கின்றனர்

வேடங்கள் விரும்புதலற்றதாகி
வார்த்தைகள் கபடுகள் கொண்டதாய்
விரும்பாதவற்றிலும் வில்லங்கமாக
வார்த்தைகளால் வஞ்சனை கொள்கின்றனர்

போலியான அன்பை வார்த்தைகளில் விதைத்து
வஞ்சனையை மனமெங்கும் கொண்டு
மற்றவரின் துன்பத்தில் தாம் இன்பம் கொண்டு
தமக்குள்ள தாமே குதூகலம் கொள்கின்றனர்

விதைத்தவர் எவரோ அறுவடை அவருக்கே
ஆண்டுகள் ஆயிரம் உலகின் நியதியாய்
ஆனாலும் நம்பிக்கையின் நாணறுத்து
நயவஞ்சகப் பேய்களாய் நடனம் புரிகின்றனர்

எல்லாமே ஒருநாள் அறுந்திட வேண்டும்தான்
ஆதலால் மனமே அடுத்தவரை எண்ணிக்
கல்மனம் நீக்கிக் கவலை கொள்ளாதே
கயமை கண்டு சோர்ந்துவிடாதே
கொடுமனம் கொண்டு நீயும் அவராகி

மழைத்தூறல் - கவிதை


எறித்த வெய்யிலை ஓரம் கட்டியபடி
எங்கும் எக்களித்தபடி காற்று
திடுமென வானம் திகைத்து நிற்க
கார்மேகக் கூட்டத்தின் கடைபரப்பல்
 

துமித்துத் தூவானத்துடன் தூறலாய்
ஆர்ப்பரித்தபடி மழை அதி வேகத்தோடு
சோவெனச் சோலைகளை நிறைத்து
சொல்லாமல் பெய்கிறது

கோடையில் மழை குதூகலம்தான்
ஆயினும் ............

எரிக்காத வெய்யிலை இரசித்தபடி
ஏகாந்தத்துள் திளைத்திருந்து
சுவாசத்தின் காற்றை சுத்தமாய் நிரப்பியபடி
மெய்மறந்திருந்த என்னை
குளிர்ந்து பட்ட துளி குதூகலம் கலைத்து
கூட்டினுள் கலைத்தது

ஆயினும் வீசும் குளிர் காற்றும்
மூக்கை நிறைக்கும் மழையின் மணமும்
சடசடத்துப் படபடத்து ஆடும்
இல்லை மரக் கொடிகளும்
வாசலில் நின்றெனை வர்ணிக்க வைத்தது

இயற்கை எப்போதும் இரசனைக்குரியதே
ஆனாலும் மாந்தர் நாம்
இரசிப்பை நிறுத்தி மனத்தைக் குறுக்கி
நிரந்தரமற்றவற்றுக்காய் நிதமும்
நிதானமற்று ஓடுகிறோம்

Saturday, 26 July 2014

வேண்டும் - கவிதை




உள்ளத்தில் மேன்மை வேண்டும்
உண்மையைப் பேசிட வேண்டும்
நெஞ்சத்தில் நிமிர்வு வேண்டும்
நேர்மையாய் நடந்திட வேண்டும்

வஞ்சங்கள் அழித்திட வேண்டும்
வாய்மையில் வீரம் வேண்டும்
விளைவுகள் நோக்கிட வேண்டும்
வீரமாய்ப் போரிடவேண்டும்

கொள்கைகள் வகுத்திட வேண்டும்
கொடுமையை மிதித்திட வேண்டும்
கோடுகள் கிழித்திட வேண்டும்
கொண்டதை முடித்திட வேண்டும்

துன்பங்கள் கொன்றிட வேண்டும்
தூணாய் நின்றிட வேண்டும்
துயரங்கள் சுமந்திட வேண்டும்
துச்சமாய் நோக்கிட வேண்டும்

தீயவை தெளிந்திட வேண்டும்
தீண்டாமை ஒழிந்திட வேண்டும்
தேசத்தில் நேசம் வேண்டும்
திடத்துடன் எழவே வேண்டும்

மண்ணிலே பற்று வேண்டும்
மடைமைகள் ஒழிய வேண்டும்
முடிவிலா முயற்சி வேண்டும்
மேன்மையுடன் வாழ வேண்டும்

விண்ணுந்து - கவிதை


 Photo: வானப்பரப்பில் மேகப் பொதிகளின் ஊடே 
இறக்கைகள் விரித்துப் பறக்கிறது 
விண்ணின் பறவை 

ஆயிரம் தூரம் கடந்தும் 
அசையாத நம்பிக்கை கொண்டு 
ஆடி அசைந்து செல்வதாய் எம்முன் காட்டி 
வேகம் கொண்டு செல்கிறது விமானப்பறவை 

எத்தனை பேரைச் சுமந்தும் இறுமாப்புடன்
எழில் கொண்டு பறக்கிறது எல்லைகள் கடந்து 
மேகப்பொதிகளை  ஊடறுத்து மெல்ல மேலேறி 
மாயாயாலம் தான் செய்கிறது மேகப்பறவை

வெண்பஞ்சு மேகங்கள் அள்ளி விளையாட ஆசை காட்ட 
தொடமுடியாத் தூரத்தில் தோகை விரித்தாடி 
திக்கெட்டும் வான்பரப்பு நெஞ்சைக் கொள்ளை கொள்ள
திகட்டாது மனதை மகிழ்வித்துப் பறக்கிறது  

எல்லைகளற்ற வானப்பரப்பு  எதுவுமேயற்று 
நீலங்கள் நிறைந்து நிதர்சனம்று இருக்கின்றது 
பயமும் பயமற்ற நிலையம் மனதை நிறைக்க 
பயணம் தொடர்கிறேன் பல நினைவுகளோடு 

ஆனாலும் வீட்டின் கணவன் பிள்ளைகள் 
காச்சிவச்ச கருவாட்டுக் குழம்பு கண்மணக்க
என்னவானதோ வீடு எனும் ஏக்கமும் கூட 
எப்படியோ எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது 

என்னதான் செய்வது பெண்ணின் நிலை 
எப்போதும் இதுதான் உலகில் மாற்ற முடியாததாய்
காலம் கடந்தென்ன கரைகள் கடந்தென்ன 
குடும்பக் கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும் 
குறுகிய மனம் எப்போதும் உள்ளபடி எம்மோடு
வானப்பரப்பில் மேகப் பொதிகளின் ஊடே
இறக்கைகள் விரித்துப் பறக்கிறது
விண்ணின் பறவை

ஆயிரம் தூரம் கடந்தும்
அசையாத நம்பிக்கை கொண்டு
ஆடி அசைந்து செல்வதாய் எம்முன் காட்டி
வேகம் கொண்டு செல்கிறது விமானப்பறவை

எத்தனை பேரைச் சுமந்தும் இறுமாப்புடன்
எழில் கொண்டு பறக்கிறது எல்லைகள் கடந்து
மேகப்பொதிகளை ஊடறுத்து மெல்ல மேலேறி
மாயாயாலம் தான் செய்கிறது மேகப்பறவை

வெண்பஞ்சு மேகங்கள் அள்ளி விளையாட ஆசை காட்ட
தொடமுடியாத் தூரத்தில் தோகை விரித்தாடி
திக்கெட்டும் வான்பரப்பு நெஞ்சைக் கொள்ளை கொள்ள
திகட்டாது மனதை மகிழ்வித்துப் பறக்கிறது

எல்லைகளற்ற வானப்பரப்பு எதுவுமேயற்று
நீலங்கள் நிறைந்து நிதர்சனம்று இருக்கின்றது
பயமும் பயமற்ற நிலையம் மனதை நிறைக்க
பயணம் தொடர்கிறேன் பல நினைவுகளோடு

ஆனாலும் வீட்டின் கணவன் பிள்ளைகள்
காச்சிவச்ச கருவாட்டுக் குழம்பு கண்மணக்க
என்னவானதோ வீடு எனும் ஏக்கமும் கூட
எப்படியோ எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது

என்னதான் செய்வது பெண்ணின் நிலை
எப்போதும் இதுதான் உலகில் மாற்ற முடியாததாய்
காலம் கடந்தென்ன கரைகள் கடந்தென்ன
குடும்பக் கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும்
குறுகிய மனம் எப்போதும் உள்ளபடி எம்மோடு


எண்ணங்கள் நகர்கின்றன - கவிதை




எண்ணங்கள் நகர்கின்றன
எதிரிகளாய் எப்போதும்
எதையோ எதிர்பார்த்தபடி

எண்ணக் கரு நிறைந்து
அடைகாத்தல் ஏதுமின்றி
அத்தனையும் திசுக்களாகி
எல்லைகளற்று விரிந்துகொண்டே
எங்கும் நிறைகின்றன

இல்லாத வினாக்கள் காணும்
இடைவெளியற்ற விடைகளால்
எப்போதும் மனம் எங்கெங்கோ அலைந்து
எண்ணமுடியாத் தூரங்களை
எப்படியோ கடக்கிறது

மனதின் இசைபிற்கேற்ற
மாற்றமுடியா நம்பிக்கைகளொடு
மகுடியற்ற பாம்பாய்
படம்விரித்தாடிப்
பயம் கொள்ள வைக்கின்றது

எத்தனை நாள் இன்னும்
இருக்கும் வரை என்னும்
எண்ணத் தோன்றல் மீதமிருக்கும்
நம்பிக்கையின் சுவர்களை
நலிவடைய வைக்கின்றது

ஆனாலும் வாழ்வின் வலிந்த இழுப்பில்
வலியற்றிருக்க வேண்டி
வக்கரிக்கும் நினைவுகளை
விழி மூடி வசியம் செய்யப் பார்க்கிறேன்