Tuesday, 23 June 2015

நிலக்குமிழி




அத்தனையும் ஓய்ந்து போனதாக
எதுவுமற்று வெற்றிடமாய்
தெரிகிறது மனம்

மரண வீட்டின் ஒலியடங்கலாக
ஒவ்வொரு மூலையும் எதுவுமற்று
வேறுவழி அற்றதான நிலையில்
வெம்பல் அடங்கி வேதனை அடக்கி
வெற்றிடங்கள் மட்டுமே கொண்டதாய்
மன வீட்டின் ஒவ்வொரு மூலையும்
முடங்கிப்போய் இருக்கிறது

போதும் இப்பிறப்பின் போராட்டம்
வாழ்தலின் வழிகள் இருந்தும்
வேரறுந்து வீழ்ந்த மரமாய் மனம்
வேதனையின் விக்கலடக்கி
விதியின் வலிந்த வீழ்த்தலில்
வழிகள் எல்லாம் அடைபட
மூழ்க ஆரம்பித்திருக்கும்
கடல் சூழ்ந்த தீவின் நடுவே
கதியற்று நிற்கிறேன் நான்

ஓய்ந்துவிட்ட கனவு

 Nivetha Uthayan's photo.

தெருவோரம் வீசிய காற்றில்
தென்னை மர ஓலைகளாய்
மனம் அசைந்தாட
தேங்கிக் கிடக்கும்
பழைய பக்கங்கள் எல்லாம்
ஒவ்வொன்றாய் புரள்கின்றன


பட்டம் விட்ட காலம்
பள்ளிப் பருவ நாட்கள்
பதின்ம வயதின் காதல்
பாலியத்தின் நட்பு
கிளித்தட்டு விளையாட்டு
பார்வையின் பரிமாறல்
பண்படாத நெஞ்சம்
பேருந்துப் பயணம் என
பழையனவெல்லாம் வந்து
படம் காட்டிச் செல்கிறது

மீட்டவே முடியாத அந்த
முடிவாகிப் போன நாட்கள்
மூச்சின் முடிவு மட்டும்
முகம்மோதி அப்பப்போ
முட்டும் காற்றாய் நின்று
முகவரி தொலைத்ததை
முடிவற்ற வலிகளின்
முற்றுப்பெறாத வரிகளாய்
முட்களாய்த் தைத்தபடி

தீரா ஆசை - கவிதை

 


எப்போதும் மழைத் தூறலாய்
மனதெங்கும் உன் நினைவு
அப்பப்போ இடிமின்னல்
சூறைக்காற்றுடன் மழை தான்
ஆனாலும்
நனைவதர்க்கே மனம்
ஆசை கொள்கின்றது


சிரிப்புடன்பேச வந்தால் 
சிறுகற்கள் கொண்டு 
சினத்துடன் எனைத் தாக்கி
சிறகொடிய வைக்கிறாய்
ஆனாலும்  உன் அன்பில் 
சிதறிப்போகவே 
மனம் ஆசை கொள்கிறது 

அடை மழையில் நனைந்து
ஆடை குளிர நான் 
ஆசையாகப்பேச வந்தால்
அப்போதும் கதவடைத்து 
அல்லலுற நீ வைத்தாலும் 
உன் அன்பில் திளைத்து 
திணறவே திண் மனம் 
தீரா ஆசை கொள்கிறது 

மூடனே மனதைப் படிக்கா
மனதற்ற மூர்க்கனே
மனதிருந்து மருவின்றி
உன் நினைவழிக்க மனம்
மட்டிலா ஆசை கொள்கிறது
மறுபடியும் மறுபடியும்
மனவறையின் பக்கமெல்லாம்
மிச்சமின்றி அமர்ந்திருக்கும்
மூச்சுக் காற்று நீயாகி
மெய்மறந்து போகிறது மனது





யாதுமாகி - kavitha


 

நினைவுகளில் எல்லாம்
நிமிடத்தில் தீ மூளும்
நெஞ்சம் படபடத்து
நிலையின்றிக் கனவுகாணும்


மனதடக்க முடியாது
மட்டிலா மகிழ்வுகொண்டு
மிதக்கும் மனது கொண்டு
மேகத்தில் நடமாடும்

காட்டாற்று வெள்ளமாய்
காட்சிகள் சுழன்றாடும்
கவலைகள் சேர்ந்ததனால்
கள்ளம் குடிகொள்ளும்

எட்டாத கோட்டை எல்லாம்
எப்படியோ கட்டவைத்து
எதிர்பார்ப்பை ஏணியாக்கி
எங்கெங்கோஅலையவைக்கும்

பசிமறந்து தூக்கம் கெடும்
பலபாடல் மனமிசைக்கும்
பார்க்காதிருந்தாலே
பயித்தியம் பிடித்துவிடும்

கற்பனைக் குதிரைகளை
கணக்கின்றி அவிழ்த்துவிடும்
கடிவாளம் அற்றதாய்
காததூரம் ஓடவைக்கும்

உறவுகள் கண்மறைக்கும்
உற்றவர் தான் மறக்கும்
பெற்றவர் என்றாலும்
பேரிடராய்த் தோன்றிவிடும்

நித்தம் நினைவிழந்து
பித்தம் தலைக்கேறி
மற்றதெல்லாம் மறக்கவைத்து
சித்தம் கலங்கவைக்கும் காதல்
செத்தொழிந்து போனாலும்
சொத்தழிந்து போனாலும்
சித்தம் நிறைந்து சொர்க்கம் திறந்து
சொக்கவைப்பது காதல்

வானம் வசப்படும் - கவிதை

 

மண்ணில் நாம் வந்து
பிறந்துவிட்டோம்
வாழ்வு எது என்றும்
அறிந்துவிட்டோம்
எண்ணிலாத ஏக்கங்களை
எம்மைச் சூழ ஏற்றிவிடோம்


பொன்னின் ஆசைகள் போதையாகிட
பொருள் மட்டுமே வாழ்வுமாகிட
பேரவா கொண்டு பேதைமை கொண்டு
போட்டிகள் கொண்டிங்கு
போதையிலேயே வாழுகிறார்

மண்ணின் ஆசைகள்
மனதெங்கும் மாய்த்திட
மானமிழந்து மதிகெட்டலைந்து
சுற்றமிழந்து சுறுசுறுப்பிழந்து
சொந்தமிழந்து சொத்துமிழந்து
செக்குமாடுகளாய் வாழுகிறார்

பெண்ணின் ஆசையில்
கண்ணும் குருடாகிட
பேரிடர் பல தாங்கியே நிதம்
பெண்டிர் மறந்து பெருமை மறந்து
பித்தராய்ப் பலர் வாழுகிறார்

உயிர் காக்க உணவே இன்றி
உடல் காக்க உடையும் இன்றி
உறவேதும் உதவிட இன்றி
உணர்வு கொன்று உயிர் காவ
உள்ளம் வென்று உணர்வு காக்கும்
உருக்குலைந்த உண்மை மாந்தர்

இத்தனையும் இதயம் கொண்டு
இன்னுயிரில் இரக்கம் கொண்டு
அறிவு கொண்டு ஆசை வென்று
இறைமை கண்டு இரக்கம் கொண்டு
எளிமை கொண்டு எதுவும் செய்தால்
வானம் என்றும் நம் வசப்படும்

சோதனைச்சாலை - கவிதை



எப்போதும் நான் அப்படியே இருக்கிறேன்

மற்றவரைப் புரியமுடியாது
உற்றவரின் துயரம் அறியாது
கற்பனை வானில் பறந்துகொண்டே
கடிவாளமற்ற சிந்தனையோடு


என்னைக் காயப்படுத்துவோரை
கழற்றி எறிய முடியாதவளாய்
மீண்டும் மீண்டும் மனதில்
விழுப்புண் தாங்கியபடி விழுங்க முடியாதைதை எல்லாம்
எப்படியோ விழுங்கியபடி .........

எப்படி மீண்டு வருவேன் நான்

பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழ
மனம் ஆசை கொள்கின்றது ஆனாலும்
சூழ எரிந்து கொண்டிருக்கும்
நெருப்பின் வீரியத்தில்
கைகொடுக்க யாருமேயற்று
காணும் இடம் எங்கும் தீ நாக்குச் சூழ
செய்வதறியாது தவிக்கிறேன் நான்

கண்ணீரில் கலந்த கல்வாரி - கவிதை

 


உயிரின் ஓலம் ஊரெங்கும் கேட்கின்றது
ஏமாற்றங்கள் சுமந்ததான மனவெளியில்
ஒப்பாரிப் பாடலாய் ஓயாது கேட்கிறது

மீண்டிட முடியாத மரணக் கிடங்கினுள்
தெரிந்தே நான் இறங்கி நிற்கிறேன்
தெளிவற்ற மனதின் தேய்மானத்தில்
தெரிவதெல்லாம் கண்ணில் படாது
தேய்ந்துகொண்டே போகின்றது

விந்தை தெரியாது வீழ்ந்து மாழும்
விட்டில் பூச்சியாய் என் மனம்
வெடித்துச் சிதறும் விதைகளாய்
வில்லங்கமாய் மண் பற்றியபடி
வேறு வழியேயின்றி தினமும்
முளைவிடும் வேர்களை ஊன்றி
எழுவதர்க்காய் எத்தனிக்கின்றது

கலங்கிப் போன காலத்தின் விதியோ
கைகொட்டிச் சிரித்தபடி என் முன்னே
கண்கட்டு வித்தையில் கைதேர்ந்து
காவலிருக்கும் பொழுதுகளை எல்லாம்
கடிவாளமிடாது கண்டுகளிப்பதர்க்காய்
காலநேரம் பார்த்தபடி எப்போதும்
கண் முன்னே காவலிருக்கிறது

என்ன சொல்லி என்ன .... என்றோ
எழுதிவிட்ட விதியின் வலிந்த இழுப்பில்
என்னையறியாது நானும் தான்
வீழ்ந்தே கிடக்கிறேன் எழவே முடியாது
யாரும் மீட்டுவிடவே முடியாத
கற்கள் மூடிய பாறைகள் நடுவே