Wednesday, 3 June 2015

மாயமான் - கவிதை

 Nivetha Uthayan's photo.

மாயமானின் தோற்றம் கண்டு
மகிழ்வுகொண்டிருந்தேன் நான்

உண்மைக்கும் கற்பனைக்குமான
இடைவெளி புரியாது
இறுமாப்பு மட்டுமே வாழ்வாகி
எல்லாம் மறந்திருந்தேன்


நொண்டிக் குதிரையில் பூட்டிய
வண்டிலில் இழுப்புக்கெல்லாம்
வளைந்தும் நெளிந்தும் கோணலாயும்
செல்லும் வழியெல்லாம்
விபரமற்று மகிழ்ந்திருந்தேன்

வாழ்வு எனக்கு இப்போது வந்ததென
வண்ணக்கனவுகள் நாளும் கண்டு
ஒவ்வொரு கணமும் கற்பனையில்
ஒராயிரம் ஆசைகள் தேங்கிட
காலத்தின் கடைசிவரை கணக்கிட்டு
காயம் கசிந்துருக நேசம் கொண்டேன்

நித்தியமானது நிரந்தரம் அதுவென்று
நர்த்தனம் ஆடும் மனது கொண்டு
நாளும் பொழுதும் நகரும் கணமெல்லாம்
ஓய்ந்துபோகும் காலத்தின்
ஒவ்வா நிலையின் கணக்கெடுப்பில்
அவ்வாழ்வு கண்டு களித்திருந்தேன்

ஆனாலும் ஏன் இப்படியானது
அடிமனத்தின் வேரின் விளிம்புவரை
அசைத்து அசைத்து அறுத்து வேருடன்
ஆலமரத்தின் ஆட்டம் குலைத்து
அற்ப மனதின் ஓசைகள் வெல்ல
ஆணவம் கொண்டே சிரிக்கிறது

வலிந்த விதியின் வண்ணங்கள்
ஏற்கும் மனம் எத்தனைதான்
ஆர்ப்பரித்து அலைகளாய் எழும்
அத்தனையும் அடங்கி ஒடுங்கி
அமைதி எப்போ கொண்டுவிடும்
அந்த நாளின் வரவிற்காய்
ஆறா மனதின் வடுக்கள் சுமந்து
அமைதியற்று அலையும் மனதை
ஆற்றுப்படுத்தப் பார்க்கிறேன்

ஆழ்கடல் மனது

Nivetha Uthayan's photo.

ஆழ்கடலின் அலை அயத்தமானது

அது புரியாது நானும்
அதன் அழகில் மயங்கி
அலையின் சீற்றம் புரியாது
கடலின் ஆழம் தெரியாது
கரையின் ஓரமாய் நின்று
ஆர்ப்பரிக்கும் அலை கண்டு
அகமகிழ்ந்தே காத்திருந்தேன்


அலை உயந்து பின் தணிந்தது
சுழன்ற காற்றின் திசையெங்கும்
சுழற்றி வாரி நீரை இறைத்தது
என்மேல் தெறித்து விழுந்த
நீர்த்துளிகள் மேனி நனைக்க
அலையின் மகிழ்வில் நானும்
ஆர்ப்பரித்து நின்றேன்

எழுந்தது எதிரியாய்ப் பேரலை
என் அங்கம் அத்தனையும் சுருட்டி
ஆத்மாவின் மூச்சை நிறுத்தி
சிந்தனை எல்லாம் அழித்து
சிகரங்கள் எல்லாம் தொட்டவளை
தன்னை நம்பியே நின்றவளை
ஆழ்கடலின் இருண்ட அறையில்
எழுந்திடமுடியாப் பாறைகள் நடுவே
எதிரியாய்த் தள்ளி எக்காளமிட்டது

என்ன செய்வேன் நான்
எழுந்துவர முடியவில்லை
எள்ளளவும் இரக்கமில்லை
எதுபற்றி எழுந்திடவும் எதுவுமில்லை
நம்பிக்கை நகர்ந்துபோக
நானாய் எனக்காய்த் துடித்து
நெஞ்சக் கூண்டில் நீர் நிரம்ப
மூச்சுக் குழல் வெடித்து முகமளுத்த
முடியாத போதினில் வழியின்றி
மூச்சடங்கிப் போகிறேன் முடிவின்றி

ஆட்டம் காணும் அச்சாணி

Nivetha Uthayan's photo.

மனதினில் தோன்றும்
மாயைகள் எல்லாம்
முறியாத முட்களாகி
சிந்தை முழுதும் சிதைத்து
முந்தை வினை முழுதும்
முடிவற்றதாக்கித் தினம்
மதி கொன்று விதி வெல்ல
வேளை பார்த்திருக்கிறது


அன்பென்னும் அச்சாணி
ஆட்டம் கண்டபடி என்றும்
அச்சுறுத்தலைத் தந்து
அகத்தின் அறம் தொலைய
அல்லல் மட்டும் என்றும்
அறிதியிடா நிலமாய்
ஆணவத்தின் ஏணியில்
எப்போதும் அமர்ந்தபடி

எல்லைகள் அற்றதான
எண்ணங்கள் விதையாகி
ஏகமாய் எங்கும் பரவி
எதிர்மறை விருட்சங்களை
எங்கெங்கோ நாட்டி
ஏக்கமுறச் செய்கிறதாய்
எக்காளமிட்டபடி தினம்
எதிர்வலம் வருகின்றன

நீக்கமற நிறைந்திருக்கும்
நிகழ்வுகளில் நிழல்கள்
நாற்ற மனம் துறந்து
நேர்வழி சென்றிடினும்
நூற்பதற்கான நிலையற்று
நகர்வதற்காய்த் தினம்
நிறம் மங்கியதான நிழலில்
நிதமும் காத்திருக்கின்றன

எண்ணக் குவியல்



என் மன  வெளிகளிடையே 
என் நலிந்த நம்பிக்கைகள்
எனைப் பார்த்து ஏளனம் செய்தபடி 
எண்ணிக்கையற்று நகர்கின்றன

யாருமற்ற வனாந்தரத்தில்
நான் மட்டுமே எதிரியுடன்
தனித்திருப்பதான எண்ணம்
எல்லைகளற்று எனை நிரப்பி
என்றுமில்லாததாய் எனை அழுத்த
எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி
ஏதிலியாய் நான் மட்டும்
எண்ணக் குவியலின் நடுவே
எக்குத்தப்பாய் எனை மறந்து
எழுவதர்க்காய் எத்தனிக்கிறேன்

கட்டப்பட்ட கைகளும் கால்களும்
கருத்துகள் இன்றியே சிதைய
காலாவதியாகும் கோபமடக்கி 
கரைகின்ற கைகளின் கனவடக்கி 
கோலங்கள் காணாமற்போகும் நாளின்
கடைசித் துளிகளின் கதவடைக்கும்
கண்ணீரின் கனமடக்கி  நலியும் 
நம்பிக்கைகளில் பின்னிய கூட்டை
நெகிழ்தலின்றி நகர்த்துவதர்க்காய்
நெருப்பின் மேலே நடக்கின்றேன்

Wednesday, 20 May 2015

இடர்கள் கடந்தபின்னும்



இடர்கள் கடந்தபின்னும்
இயலாமை என்னும் விருட்சம்
என் இயல்பை நிறுத்துவதாய்
பிடிப்பற்று மனம் எங்கோ
பேரோசையுடன் அலைகிறது


அத்தனையும் கண்முன்னே ஆயினும்
அருமை தெரியாத அலைபாய்தலில்
அடுத்தவரின் அகவழி அறியார் அறிவிலர்
ஆசைகொண்டு அலைந்திடுவர்
இங்கொன்றும் அங்கொன்றும்
எங்குமாய் எதற்குமாய்
எப்போதும் இருந்ததில்லை

புதியன நாடி புதுமையில் உழன்று
புரையோடிப் போகிறார் புத்தியற்று
எப்படியாயினும் எப்போதோ
என்னிடமும் விடைபெறும்
எல்லா எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்
அப்போது அந்த விடுதலைக்காய்
ஆவலற்றுக் காத்திருக்க
ஆழ்மனம் ஆவல் கொள்கிறது

நினைவழியா நீண்ட காலத்தின் - கவிதை


நினைவழியா நீண்ட காலத்தின்
நெடும் பயணத்தின் வழியே
மீண்டுமொரு முறை ..........

அப்போது நீ எனக்காக இருந்தாய்
என் எண்ணங்களை உனதாக்கி
எப்போதும் நெய்தபடி இருந்தாய்
என் நினைவுக்குள் நீயே நினைவாய்
எண்ணங்களை எல்லாம் சிறைப்பிடித்து
ஏதுமற்றவளாக்கி எனைத் தினம்
ஏக்கம் கொள்ள வைத்தாய்


நான் மரமாக நீ காற்றாகி மனதின்வழி
நாதங்கள் கேட்க வைத்தாய்
நான் நிலமாக நீ நீராகி நிதம் எனை
நெக்குருகியே நெகிழவைத்தாய்
காற்றின் ஒலியாகி கார்கால மழையாகி
காணும் இடமெங்கும் என்மனவீட்டில்
எங்கும் உன் ஒளியாக ஒளிரவைத்தாய்

இன்றும் நான் நானாகவே இருக்கிறேன்
நீயோ ஒலிக்காதவனாய் ஒளியற்றவனாய்
எதிர்வினை காட்டியே எனைவிட்டு
எங்கெங்கோ எட்டாதவனாய் செல்கையில்
ஒளியிழந்த உன்மனதின் அறியமுடியாத
ஆத்மாவின் அழகைக் காணமுடியாது
நீ தூங்கும் நேரங்களிலும் உன் நினைவு சுமந்து
தூங்கமுடியாது நானும் காத்திருக்கிறேன்
கணக்கில் எழுதமுடியாக் குறிப்புக்களோடும்
விழுதுகள் அற்ற ஆலமரத்தின் வேர்களில்
இன்றும் தொங்குவதற்காய் ஆசைகொண்டபடி

Thursday, 7 May 2015

எனக்குப் பிரியமான உன்னிடம் - கவிதை






எனக்குப் பிரியமான உன்னிடம்
எனக்காக எதுவுமே
எப்போதும் இருந்ததில்லை
எல்லைகளற்று என் வெளிகள்
உனக்காகக் காத்திருக்கையிலும்
பற்றேதும் அற்றவனாய்
என்முன்னே நீ

உருவமற்ற சிந்தனைகள்
உள்வெளியெங்கிலும் உன்னுடனே
ஊசலாடும் உறவின் விளிம்புகளில்
ஊமைக்காயங்களுடன் நான்
உன் சிறு பதில்தரும் பசுமைக்காக
உறக்கமிழந்து காத்திருக்கையிலும்
எதுவுமேயற்று எப்போதும் போல் நீ

நீண்டு கிடக்கும் நெடுங்காலங்களின்
நெய்யமுடியாத காலக் கசிவை
நகர்த்தமுடியாத முடிச்சுக்களோடு
நகர்த்தி நிமிர்த்தும் முயற்சியில்
நிரந்தரமாய் நிந்திக்கும் வேளையும்
நேற்றும் இன்றும் நாளையுமாகி
நம்பிக்கைதரும் நியதிகளேயற்று
நகர்ந்துகொண்டிருக்கிறாய் என்னுடன் நீ

விட்டு விலகிடமுடியா முடிவில்
முட்கள் நடுவே நிதம் முட்டியபடி
எனைச் சுற்றிலும் எதிர்வினைகள்
எதிரும் புதிருமாய் சுழன்றாட
கூடு பாயக் காத்திருக்கும் மனம்
குற்றுயிராய் தினம் தினம்
கொடுவனத்தின் குழிநடுவே
கிடப்பதுவாய் காண்கின்றதாய்
அப்போதும் அந்தரித்து உழலும்
அல்லல் உணரா மனத்தினனாய்
அசையா மனதுகொண்டு அசைகிறாய் நீ