Monday, 22 April 2013

மன்னிப்பீர் மாவீரரே

மண்ணுக்காய் மரணித்து
விண்ணுலகு சென்றவரே
எம்மினமாய் உமைப் பெற
என்னதவம் செய்தோம்

மண்மீட்க மனம் கொண்டு
மங்காப் புகழ் கொண்டீர்
மண்ணின்று போயினும்
உமை மறப்போமா

நெருப்பாகி நீராகி
நிர்மலமாகி நீர்
நீள் துயில் கொண்டே
நின்மதி கொள்வீர்

எங்களை எண்ணி
உங்களைத் தந்தீர்
எதுமற்றோறாய் நாம்
இன்னும் இருக்கிறோம்

ஊர் கூடி ஒன்றாய்
தேரிழுப்போமென
நம்பிக்கை கொண்டே
நாடு காத்திட்டீர்
எதிரிகளாகி இன்றும்
எட்டாய்ப் பிரிந்து
எங்கணும் நிற்கிறோம்

பேரிடி ஒன்று
பெரு மழையுடன்
ஊரெங்குமெனக்
காத்திருக்கையில்
மேகமிலா வானமாய்
எம் மனங்கள்
வெறுமையாகிப்
போனதும் ஏன்

உங்கள் கனவுகள்
எங்களுக்கும் தான்
என்றோ ஒருநாள்
எரிதழல் தோன்ற
எம்மவர் மனங்களில்
தமிழர் நாம் என்னும்
தாகம் பிறக்க
அன்றவர் அனைவரும்
ஒன்றாய்க் கூடி
ஓங்கி அடிப்போம்
ஒற்றுமையோடு

அன்றுதான் நீங்கள்
அலைவதை நிறுத்தி
ஆத்மாவோடு
அனைத்தும் துறந்து
ஆனந்தமாய்ப்
பார்த்திருப்பீர்

அன்றுவரை
அற்பப்புழுக்கள்
எங்களை நீர்
ஆவி சோரப்
பார்த்திருப்பீர்
மன்னிப்பீர் மாவீரரே !

No comments:

Post a Comment