Monday 22 April 2013

இப்படியும் ஒருதாய்

எனது சிறு வயது முதலே நண்பி மாலினி. அவளுக்கு ஒரு அக்கா அண்ணா தம்பி.  இவளின் பெற்றோர் ஆசிரியர்கள். எக்கச்சக்கமான காணிகள் சொத்துக்களாக. ஆனாலும் தாயும் தந்தையும் கஞ்சப் பிசினாரிகள். பிள்ளைகளை சுதந்திரமாகத் திரியவும் விடமாட்டார்கள். ஒழுங்கான உடைகளை வாங்கியும் கொடுக்க மாட்டார்கள். எனது பெற்றோரும் ஆசிரியர்களானதாலும் அவளது தாய் என்தாயாருடன் கற்பித்ததாலும் எனக்கு அவர்கள் வீட்டில் எந்நேரமும் போய் வர அவள் என்னுடனும் திரிய அனுமதி கிடைத்தது. நாகரிகாமான உடை எதையும் அவள் வாங்கிப் போட்டதாக எனக்கு நினைவில்லை. ஏன் பயப்பிடுகிறாய் உன் அம்மாவை எண்டாலும் கேள் வாங்கித் தரும்படி என்று கூறினாலும் சிரித்துச்  சமாளித்துவிடுவாள்.

யாராவது வெளிநாடு போபவர்களைப் பார்த்து தந்தை ஏசுவார் என என்னிடம் கூறியிருக்கிறாள். பின்னர் தமக்கைக்கு மாப்பிளை பார்த்து ஒன்றும் சரிவரவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் தமக்கைக்கு வெளிநாட்டு மாப்பிளை   பார்த்தார்கள். பொருத்தம் சரிவரவில்லை என்று அதே மாப்பிளையை இவளுக்கும் பார்த்தனர். இவளுக்கு நல்ல பொருத்தம். அதன்பின் இவள் கொலன்ட்  வந்துவிட்டாள். சிறிது காலத்தில் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். தமையனும் மாற்றியக்கத்தில் எதோ பிரச்சனை என அவரும் ஹொலண்ட் வந்துவிட்டார். பின் தம்பியாரையும் அங்கு இவள் கூப்பிட்டு விட்டால். தாயும் தமக்கையுமே அங்கு.
தமக்கை பாமசிஸ்ற்றுக்குப் படித்தவர் வேலை கிடைக்கவில்லை. வருமானம் இருவருக்கும் போதுமென்பதால் பெரிதாக வேலை தேடவும் முயலவில்லை என்றே கூறவேண்டும். மாலினி ஹொலண்ட் வந்து இரு பிள்ளைகளுக்கும் தாயாகி பிள்ளைகளுக்கும் 12 வயதாகிவிட்டது. மூத்த சகோதரனும் தந்தை இல்லாத துணிவில் தான் ஒரு பெண்ணை விரும்பி திருமணமும் செத்துவிட்டார். இரண்டு வருடம் கழிய தம்பியும் ஒரு பெண்ணைத் தன்பாட்டில் திருமணம் செய்ய  தமக்கை பற்றிக் கவனிப்பார் யாருமில்லை. நான் தொலைபேசியில் கதைக்கும் போதெல்லாம் என்னடி இன்னும் நீங்கள் அக்காவுக்கு ஒன்றும் பார்க்கவில்லையா என்று கேட்பேன். அம்மாவும் எத்தனையோ பார்த்துவிட்டார். ஒன்றும் பொருந்தவில்லையாம் என்று கூறுவாள்.
இரு மாதங்களின் முன் என்னிடம் குடும்பமாக வந்திருந்தனர். அப்போதுதான் தமக்கையின் விடயமாக கிண்டிக் கிளறிக் கேட்டேன். நான் என்னடி செய்வது அம்மாதான் பார்க்கிறாவே பிறகு நானென்ன செய்வது என்று அலுப்புடன் கூறினாள். நீங்கள் மூவரும் குழந்தை குட்டிகளுடன் வாழ்கிறீர்கள். அக்கா உன்னிடம் சொல்ல முடியுமா? நீ உன்னை அக்காவின் நிலையில் இருந்து பார் என்றேன்.  சில நேரம் உன் அம்மா  தான் தடையாக இருக்கிறாவோ என்றவுடன் அவளுக்கு வந்ததே கோபம். எந்தத் தாயாவது மகளுக்கு இப்பிடிச் செய்வார்களோ உனக்கு விசரடி என்றாள். எனது சிறிய தாயார் என்னுடன் கதைக்கும் பொது ஒருமுறை கூறினார். மாலினியின் தாய்தான் தான் தனித்துவிடுவேன் என எண்ணி தமக்கைக்கு வரும் மாப்பிளைகளை எல்லாம் தட்டிக் கழிப்பதாக. அதையும் அவளிடம் கூறியும் அவள் நம்பவில்லை.
இதற்குமேல் நான் கதைத்தும் பயனில்லை என எண்ணி விட்டுவிட்டேன்.

கடந்த வாரம் அவளின் தொலைபேசி வந்தது. எடுத்தவுடன் அக்காவுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றாள். எனக்கு ஆச்சரியம் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று கேட்டேன். நீ சொன்னது சரிதான் என்றாள் . எனக்கே நான் சொன்னது எது என்று விளங்காததால் என்ன கூறினேன் என்று திரும்பக் கேட்டேன். அம்மாதான் இத்தனை நாட்கள் அக்காவின் திருமணத்துக்குத் தடையாக இருந்திருக்கிறா என்றாள். எப்படிக் கண்டுபிடித்தாய் என்றேன். ஹொலண்டில் இருக்கும் ஒருவர் தமக்கைக்காக ஒரு சாதகம் கொண்டுவந்தாராம். அதை தாயிடமும் அனுப்பிவிட்டு  இருந்துவிட்டாள். தாய் சாதகம் பொருந்தவில்லை என வழமைபோல் கூற நான் கூறியது நினைவில் வர இவள் தானும் ஹொலண்டில் ஒரு சாத்திரியிடம் கொடுத்து பொருத்தம் பார்த்திருக்கிறாள். பத்துக்கு ஒன்பது பொருத்தம் என்று சாத்திரி இவளுக்குக் கூற இவளுக்கு அதிர்ச்சி. அதன்பின் இன்னும் ஒருவரிடம் கொடுத்துப் பார்க்க அவரும் ஒன்பது பொருத்தம் என்றிருக்கிறார். அதன்பின் இவள் மாப்பிளை வீட்டுடன்  தொலைபேசியில் கதைத்து நாளும் குறித்துவிட்டு தாயிடமும் தமக்கையிடமும் திருமணம் முற்றாக்கியதையும் கூறிவிட்டாள். திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதம் இருந்ததால் பயணச்சீட்டும்  பதிவுசெய்து இருக்கையில் தமக்கைக்கு வேலையும் கிடைத்துவிட்டது. தமக்கைக்கு இனி நல்லகாலம் தான் என எண்ணி மகிழ்ந்திருக்கையில் ஒரு வாரம் கழித்து தமக்கையிடம் இருந்து போன். 

மாலினி எனக்கு கலியாணம் வேண்டாமடி என்ற தமக்கையை என்னக்கா மாப்பிளையைப் பிடிக்கவில்லையோ என்று இவள் கேட்க இல்லை உனக்கு வேலை கிடைத்துவிட்டது தானே. இந்த வயதில்  கலியாணம் கட்டி என்ன செய்யப் போகிறாய் என தாய் கேட்டதாகவும் அம்மாவுக்கு விருப்பமில்லாமல் தான் திருமணம் செய்து என்ன செய்யப் போகிறேன் என்று தமக்கை கூறி அழ, இவளுக்கு வந்த கோவத்தில் நீங்கள் அம்மாவுடன் ஒன்றுமே கதைக்க வேண்டாம் அக்கா. குறித்த நாளில் கட்டாயம் திருமணம் நடக்கும் எனக் கூறி தமக்கையைச் சமாதானப் படுத்திவிட்டு ஒருகிழமை முன்னுக்கே பயணச்சீட்டை  மாற்றிப் போட்டு இவள் ஊருக்குப் போய் இறங்கியவுடனே தாய்க்கு நல்ல திட்டும் கொடுத்ததாகக் கூறினாள். தமக்கையும் கணவரும் தாயுடனேயே இருப்பதாகவும் கூறி முடிக்க எனக்கு ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

தாயை தெய்வமாகக், கோயிலாக வேறு ஏதோவாகவெல்லாம் போற்றும் போது இப்படியானவர்கள் பலரும் இருக்கின்றனர்  என்பதறிய எப்படி இவர்களால் தான் பெற்ற பிள்ளையின் வாழ்வை நாசப்படுத்த முடிகிறது என எவ்வளவுதான் யோசித்தாலும் விளங்கவே இல்லை.  பருவத்தே பயிர்செய்  என மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை தன்வீட்டில் பருவம் கடந்தும் பயிர் செய்ய மறந்தது தான் சோகம்.



No comments:

Post a Comment