Monday 22 April 2013

நாய்க் கவிதை

என்வீட்டில் ஒரு நாய் எந்நேரமும் படுத்திருக்கும்
எங்கே போனாலும் எம் பின்னால் தானும் வரும்
எதை எப்போ கொடுத்தாலும் எதிர்க்காது உண்டுவிடும்
எமக்காக வாலாட்டி தன் நன்றி சொல்லிவிடும்
எதிர் வீட்டு நாயோடும் எமக்காகக் குரைத்துவிடும்
எதிரி எவராயினும் எமக்கதைச் சொல்லிவிடும்.

எப்பொழுதும் அதை நான் எட்டவே வைத்திருந்தேன்.
எட்ட நின்று வாலாட்டத் தட்டிக்களித்திருந்தேன்
எம்மோடு அது வாழ்ந்த அத்தனை காலங்களில்
எப்படி நீ என்று ஒருநாள் கதைத்ததில்லை.

மாலைப் பொழுதின் மங்கிய இருளில்
மனதை மயக்கிய இசையில் மகிழ்ந்து
மோனநிலையில் மெய்மறந்திருக்கையில்
மதில் கடந்து கேட்டது மரண ஓலம்
.
எட்டிக் கால் வைத்து எழுந்து ஓடினேன்
வீதி கண்டதும் விழி பிதுங்க
விறைத்துப் போனது எந்தன் நெஞ்சம்
முதன் முதலாக இழப்புக் கண்டத்தில்

முகத்தில் சக்கரம் ஏறியதில்
முழுப் பற்களும் வெளியே கிடக்க
முக்கல் முனகல் ஏதுமிலாது
முடிந்து போனது நாயின் வாழ்வு.

இருக்கும் வரை நீ என்ன செய்தாய்
இப்போது மட்டும் கலங்கிப் போக
இடித்துக் கேட்டது எள்ளிய நெஞ்சம்
இன்றுவரைக்கும் நேசம் தொடர

No comments:

Post a Comment