ஆண்டு மூன்றுகள் ஓடி மறைந்தது
அத்தனை அவலம் நடந்து முடிந்தது
எத்தனை அழிவுகள் எம்மினம் கண்டது
இன்னும் தான் எனக்கு மறக்கவில்லை
பண்பட்டு நாங்கள் பயணித்தோம்
பார் புகழ நாம் பார்த்திருந்தோம்
பச்சை வயல்களாய் எம் வாழ்வு
பரந்திருந்ததாய்க் கனவு கண்டோம்
பெண்ணின் சுதந்திரப் பெருமை கண்டோம்
போரில் அவர்தம் வீரம் கண்டோம்
எண்ணிலடங்கா எக்களிப்பில்
எதிரி அறியாதிருந்துவிட்டோம்
வண்ணக் கோலம் நாம் போட்டு
வட்டத்துள்ளே நாம் நின்றதனால்
எதிரி போட்ட கோலத்தை
எட்டிப் பார்க்க மறந்துவிட்டோம்
மானம் தானே பெரிதென
மாண்டுவிடும் மாண்புமிக்க
மானர்குலத் தமிழர் நாம்
மாளாதின்னும் இருக்கின்றோம்
எங்கள் நிலத்தை எடுப்பவனை
எங்கள் பெண்ணை வதைப்பவனை
ஏதும் செய்யாத் துணிவோடு
ஏனோ இன்னும் இருக்கின்றோம்
பாலுக்கழும் பாலகனுக்காய்
பிணம் தின்னும் பேய்களுக்குப்
பலியாகும் பெண்களுக்குப்
பார்த்திருக்கும் நீ என்ன செய்தாய்
அங்கம் இழந்து அரைப் பசியோடு
ஆட்கள் ஆயிரம் அங்கிருக்க
ஆடம்பரமாய் இங்கு நீ
ஆட்டம் போட்டுக் களிப்பதென்ன
பேதைமை கொண்ட பேடித் தமிழா
பெண்ணின் அடிமையாய்க் கிடந்தது போதும்
நாடே அற்று நடைப் பிணமாய்
நாங்கள் இன்னும் வாழ்ந்தது போதும்
ஊர் கூடி உலகு கூடி
உணர்வு கொண்டு நம் எழுந்திட்டால்
உலகம் கூட எமைக் கண்டு
ஒழுங்காய்ச் சுற்றத் தொடங்கிவிடும்
No comments:
Post a Comment