மண்ணுக்காய் மரணித்த மாவீரரே
மண்டியிடுகின்றோம் உங்கள் முன்
மரணத்தை மகிழ்வாய் ஏற்று
மார்பில் குண்டேந்தி மாவீரரானீர்
தேசம் என்னும் தேனடைக்காய்
தெருவெங்கும் நீர் தேரிழுத்தீர்
பால்ப் பருவம் மாறாத பதினாறு வயதிலும்
பட்டினி கிடந்து பதமாய் ஆனீர்
பகைவர் கோட்டைகள் பாங்குடன் தகர்த்து
பாரினில் எம்மக்கோர் பாதையானீர்
பள்ளிசெல்லும் பருவத்தில்
பட்டு மெத்தை சுகம் துறந்து
பெண்ணும் ஆணும் சரிநிகராய்
பெருமை கொள்ளச் செய்திட்டீர்
பெற்றவள் முகம் மறந்து
உற்றவர் தனைத் துறந்து
உம் தேசம் காப்பதற்காய்
உயிர் தந்த உத்தமரே உம்மை
நாம் எப்படி வணங்கிடுவோம்
பேதைமை கொண்டவர்கள்
பேர் வாங்கப் பணம் கொடுப்பார்
பொன் கொடுப்பார் பொருள் கொடுப்பார்
தம்முயிரை உம்மைப்போல் யார்கொடுப்பார்
தரணியில் ஒருவரை நீ கூறு
பாசறைகள் பல கடந்து
பிணம் தின்னும் பேய் கடந்து
புறங் கண்டு ஓடாது போர்புரிந்தீர்
புண்ணிய பூமிதனில் யாருளர்
உம்மையன்றி நாம் போற்றி வணங்கிட
மூவேளை உணவின்றி
முகிழ்ந்திடும் ஆசையின்றி
மூச்செல்லாம் மண்மீதாய்
முழுதும் கொடுத்தவரே
உம் மேன்மைகள் சொல்லிட
மேதினியில் மொழியில்லை
ஒன்றல்ல இரண்டல்ல மூன்றுமல்ல
ஆயிரம் ஆயிரம் நாமிழந்தோம்
அத்தனை நாடுகள் எம்மை அழிக்கையில்
எத்தனை பேர் நாம் பாத்திருந்தோம்
எள்ளி நகையாடி எட்டப்பர் சிரிக்கையில்
ஏனென்று கேட்காமல் நாமிருந்தோம்
பெண்கள் குழந்தைகள் பெரியவர் என்று
பேதமின்றி கொன்று குவிக்கையில்
பேடிகள் போல் நாம் காத்திருந்தோம்
அங்கம் இழந்தவர் அங்கு துடிக்கையில்
அந்நியராய் நாம் பார்த்திருந்தோம்
தேசம் அழிந்தது மானம் அழிந்தது
மண்டியிட நாம் காத்திருந்தோம்
மண்ணையும் பெண்ணையும்
மாற்றானிடம் கொடுத்தும்
மானம் இன்றிப் பாத்திருந்தோம்
மன்னிக்க முடியா குற்றங்கள் எமது
மாவீரரே நீர் காத்தருள்வீர்.
உம்மை அன்றி வேறொருவர்
என்றும் எம்மிடை வரமாட்டார்
மறுபிறப்பொன்றில் மண்மீட்க
மீண்டும் ஒருமுறை பிறந்து வந்து
மீட்டிடுவீர் எம் தேசமதை
No comments:
Post a Comment