Monday 22 April 2013

மறக்க முடியுமா ??? உண்மைச் சம்பவம்

அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது. எனது தந்தை ஜெர்மனிக்குப் பயணம் போவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். அவரை வழியனுப்ப நாங்கள் எல்லோரும் கொழும்பு சென்றோம். அப்பாவைத் தவிர ஒருவரும் முன்னர் கொழும்பு சென்றிருக்கவில்லை. எனது சித்தப்பாவும் எம்முடன் வந்திருந்தார். அவர் அப்போது யாழ் பல்கலைக் கழக மாணவர். ஆனாலும் யாழ்ப்பாணம் தாண்டி வேறு எங்கும் செல்லாத பட்டிக்காடு. அப்பா மிகவும் துணிவானவர் என்னைப்போல். ஆனால் சித்தப்பா பயந்தவர். தனிய எங்கும் போகமாட்டார்.எந்த நேரமும்  புத்தகங்களுடன் கிடப்பார். எங்களுடன் வந்து ஏதாவது பம்பலாகக் கதைப்பது  என்று ஒருநாளும் செய்ததில்லை. எனக்கு அவரைப் பார்த்தால் எரிச்சல் தான் வரும்.எங்கள் குடும்பத்தில் இப்படி ஒன்று வந்து பிறந்திருக்கிறதே என்று.

கொழும்பில் கோட்டைப் புகைபுகையிரத நிலையத்துக்கு முன்பாக அஜந்தா ஹோட்டல் என்று ஒன்று. எமது ஊரவர் ஒருவர் அங்கு மனேஜராக வேலை பார்க்கிறார். அதனால் அங்கேயே போய் நாம் தங்கினோம். வேம்படியில் படித்த எனக்கே கொழும்பைப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு நாளும் நான் பாடசாலை பஸ்ஸில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைக்குச் சென்று வருவது எங்கள் ஊரில் கொழும்பு சென்று வருவது போலத்தான். எமது ஊரில் பிறந்து வளர்ந்து இருபது வயதாகியும் யாழ்ப்பாணம் போகாதவர்கள் எத்தனையோ பேர் இருக்க நான் ஒவ்வொரு நாளும் அங்கு போவதும் மாலையில் புதினம் கேட்க அக்கம் பக்கம் இருக்கும் என்வயதை ஒத்த மற்றவர் வருவதும் எனக்கு மூக்கு நிமிர்த்தி நடக்க வைத்த விடயம் அப்போது. இப்ப நினைக்க சிரிப்புத்தான் வருகிறது.

எமக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கு. அப்பாவோ டிக்கெட் அலுவலில் ஓடித்திரிகிறார். அதனால் எம்முடன்  வெளியே வரமுடியாது. ஆனால் இவ்வளவு தூரம் வந்தனாங்கள் ஒண்டும் பாக்காமல் போகவும் ஏலாது அல்ல அல்ல கூடாது. நான் என் வகுப்பு மாணவிகளிடம் ஏற்கனவே தம்பட்டம் அடித்துவிட்டு வந்திருக்கிறேன். பிரசித்திபெற்ற மிருகக் காட்சிச் சாலைக்குக்  கட்டாயம் போவேன் என்று. போகாவிடில் எந்த முகத்துடன் நண்பர்களைப் பார்ப்பது. அதனால் அம்மாவை நச்சரிக்கத் தொடங்கினேன். அம்மாவுக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும். பிறகென்ன பிரச்சனை தம்பியும் நிக்கிறான் தானே. போட்டு வாங்கோ என்று அப்பா சொல்ல எனக்கோ தலை கால் தெரியாத மகிழ்ச்சி.

காலை எழுந்து குளித்து வெளிக்கிட்டு நான் எனக்கு மிகவும் பிடித்த கத்தரிபூ நிற குட்டைப் பாவாடையும் வெள்ளைப் பூப்போட்ட மேற்சட்டையும் அணிந்து தயாராகிவிட்டேன். எனக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கைகளும். நான் மூத்த பிள்ளை. என் பெற்றோர் திருமணமாகி ஆறு வருடங்கள் குழந்தை இல்லாது தவமிருந்து என்னைப் பெற்றதாக அம்மா அடிக்கடி கூறுவது எனக்கும் பெருமையாக இருந்திருக்கிறது. அதனால் நான் கேட்காமலேயே எனக்கு எல்லாம் கிடைத்தும் இருக்கிறது. அத்தனை அன்பு என்னில். நாம்  எல்லோரும்  பஸ் தரிப்பிற்கு வந்ததும் அப்பா எம்மை சரியான பஸ்ஸில் ஏற்றிவிட்டு கெண்டைக்டருக்கும் எம்மை இறக்க வேண்டிய இடம் பற்றிக் கூறிவிட்டார். அதனால் கொஞ்சம் பயமின்றி அக்கம் பக்கத்தை இரசித்தபடி செல்லக் கூடியதாக இருந்தது. சிங்களத்தில் மற்றவர் உரையாடுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு சென்றது இப்பவும் நினைவில் இருக்கிறது.

தரிப்பிடம் வந்ததும் எல்லோரும் இறங்கிவிட்டோம். எல்லோரும் சரியாக இருக்கிறோமோ எண்டு நான் சுற்றிவரப் பாக்கிறேன். என் சின்னத் தம்பி இரண்டு வயதானவன் எப்போதும் அம்மாவின் கையை விட்டு இறங்க மாட்டான். மற்றத் தம்பியும் தங்கைகளும் கூடச் சிறியவர்களாதலால் ஒரு எச்சரிக்கைதான். பக்கத்திலேயே மிருகக் காட்சிச் சாலை. உள்ளே நுழைந்ததுமே அழகிய வண்ணவண்ண மீன்கள். என்னடா இவ எங்களுக்கும் சுத்திக் காட்டப் போறாவோ என நீங்கள் சலிப்படைவது தெரிகிறது. சினிமா என்றாலும் கடைசியில் தானே விருவிறுப்பு. அதனால் கொஞ்சம் பொறுமையுடன் வாசிக்கத்தான் வேணும். அம்புக்குறி காட்டிய படி ஒரு இடமும் விடாமல் எல்லாம் பார்த்தோம். அம்மா நினைத்தாவோ தெரியவில்லை கால் உளைந்தாலும் பரவாயில்லை ஒரு இடமும் விடக்கூடாது என நான் நினைத்தேன். எமக்குக் கிட்டவே மூன்று சிங்களப் பெடியள் சிங்களத்தில் எதோ சொல்லிச் சிரித்தபடி எங்களுக்குக் காவல் போல் வந்துகொண்டிருந்தார்கள். எளிய மூதேவியள் என்று அம்மா திட்டுவது கேட்டது. எதுக்குத் திட்டுறா என்று தெரிந்தாலும் யாருக்கம்மா திட்டுகிறீர்கள் எனக் கேட்டேன். நீ இங்க முன்னால வா பின்னால வாறவங்கள் விசர்க் கதை கதைச்சுக் கொண்டு வாறாங்கள். சின்னப் பெட்டையைப் பாத்து உப்பிடிக் கதைக்கிறாங்கள் என்று சித்தப்பாவிடம் தன் எரிச்சலைக் கொட்டினா. அவங்கள் ஒண்டும் பெரிசாச் சொல்லவில்லை இரட்டைப் பின்னலும் ஆளும் குட்டி வடிவாய் இருக்கு என்று சொன்னதாக அம்மா சித்தப்பாவிடம் குசுகுசுத்தது முன்னால் போய்க்கொண்டிருந்த என் காதுகளுக்கு கேட்டது. பிடிக்குதோ பிடிக்கவில்லையோ அது வேற விஷயம். என்னை சயிட் அடிக்கிறாங்கள் என்றது அந்த வயதிலும் பெரிய விடயம் தானே. நான் அம்மாவிடம் திரும்பி எதோ கேட்பதுபோல் கேட்டுக்கொண்டே அம்மாவுக்குத் தெரியாமல் அவர்களைப் பார்த்தது கூட இன்னும் மறக்கவில்லை.

ஒரு மாதிரி இரு இடமும் விடாமல் பாத்தாச்சு. நண்பிகள் என்ன கேட்டாலும் பதில் சொல்லலாம் என எண்ணிக் கொண்டே அம்மா நாளை கடற்கரைக்குப் போவமோ என்கிறேன் நான். அது நாளை அடுத்தபாடு. இப்ப கால் சரியா உளையிது வீட்டை போவம் என்கிறார். உள்ளேயே இருந்த உணவகத்துக்குப் போய் சிற்றுண்டி வகைகளும் தேநீரும் அருந்திக் களைப்பாறிவிட்டு  தரிப்பிடத்துக்குப் போகிறோம். எல்லோருக்கும் அப்போதுதான் நடந்த களைப்புத் தெரிகிறது. பஸ்சிலும் எல்லோருக்கும் இடம் கிடைக்கிறது. நான் அம்மாவுக்குப் பக்கத்தில் யன்னலோரம் அமர்கிறேன். எமக்கு முன்னால் இரு சகோதரிகளும் அதற்கும் முன்னால் தம்பியும் சித்தப்பாவும் அமர்கின்றனர். சின்னத் தம்பியை அம்மா மடியில் வைத்திருக்கிறார். எனக்கோ களைப்பினால் தூக்கம் வருகிறது. முன் கம்பியைப் பிடித்தபடி கைகளில் தலைவைத்துப் படுக்கிறேன். பஸ் குலுக்கக் குலுக்க எரிச்சல் வந்தாலும் அதையும் மீறி களைப்பினால் தூங்கிவிடுகிறேன்.

பஸ் குலுங்கியபடி எங்கோ நிற்கத் திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். பக்கத்தில் பார்த்தால் அம்மாவைக் காணவில்லை.
முன்னுக்குப் பார்கிறேன். தம்பி தங்கைகள் சித்தப்பா ஒருவரையுமே காணவில்லை.

தொடரும்..........


 கண் விழிச்சுப் பாத்த எனக்கு அதிர்ச்சி. எல்லாரும் என்னை விட்டுவிட்டு இறங்கிவிட்டார்கள் என்று தெரியுது. அனா அடுத்து என்ன செய்யிறது எண்டு தெரியவில்லை. முன்னுக்குப் பின்னுக்குப் பாத்து அம்மா எண்டு கூப்பிட்டுக் கொண்டு எட்டிஎட்டிப் பாக்கிறன்.ஆறாவது தமிழ் தெரிஞ்ச சனங்கள் என்னோட கதைக்க மாட்டினமோ ஏண்ட ஒரு நப்பாசையும் சேர்ந்துகொள்ள இன்னும் மூன்று நாலு முறை கூபிடுறன். ஒரு சத்தமும் இல்லை. கடகடவென பஸ்சை  விட்டு இறங்கிறன். சுற்றவரப் பாக்கிறன்.ஒண்டும் விளங்கேல்லை. இரண்டு மூன்று பேர் இறங்கிய ஆட்கள் தங்களுக்குள் சிங்களத்தில் கதைக்கினம் அதுக்கும் விளங்கேல்லை. நான் அழுதுகொண்டு அம்மா எண்டு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு நிக்கிறன். கீழ நிண்ட ஒருவர் பஸ்சைப் பார்த்து கெண்டைக்ரருடன் கதைக்கிறார். பஸ்சும் தண்ட பாட்டில வெளிக்கிட்டுப் போட்டுது. எனக்கு என்ன செய்யிறதெண்டு ஒண்டும் தெரியாமல் முழிசிக்கொண்டு நிக்கிறான்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒருவர் ஒரு முப்பது முப்பத்தைந்து இருக்கும் என்னருகில் வருகிறார். don't  cry, I  will help you என்கிறார். அவரைப் பார்க்கிறேன். எனக்கு பழகிய முகம் போல் எதோ அவரில் நம்பிக்கை வருகிறது. எனக்கு அவர் கதைத்த ஆங்கிலம் விளங்கியதே தவிர எனக்குக் கதைக்கத் தெரியவில்லை. என்ன பெயர் என்று கேட்கிறார். நான் எனது பெயரைக் கூறுகிறேன். கவலைப் படாதே சிஸ்டர், நான் உன்னைக் கவனமாக உன் பெற்றோரிடம் விடுகிறேன் என்கிறார் தொடர்ந்து. பதில் சொல்லத் தெரியாததால் தலையை மட்டும் ஆட்டுகிறேன். எங்கே தங்கி இருக்கிறாய் என்கிறார். அஜந்தா ஹோட்டல் என்கிறேன். அவருக்கு அந்த ஹோட்டல் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவரின் முகக் குறிப்பிலிருந்து தெரிகிறது. நாம் இருவரும் ஒரு இடத்தில் நின்று கதைக்காது பெரிய வீதியோரமாக நடந்தபடியே கதைத்துக்கொண்டு போகிறோம். அப்படிச் சொல்ல சிரிப்பாக இருக்கிறது. ஏனெனில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு எனது பதில் ஒருசொல்லே. அவருக்கு ஹோட்டல் பற்றி விளங்கப் படுத்த front of கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மட்டும்தான் முழு நீள விடை. இடையில் ஒரு சிறிய பாலம் போல்தான் எனக்கு நினைவில் உள்ளது. அங்கெ ஒரு போலீஸ் காரர் கதிரையில் இருக்கிறார். போலிஸ் காரர் எண்டதும் எல்லாருக்குமொரு பயம் வரும். ஆனால் எனக்கு என்னைக் கூட்டி வந்தவர் எதோ என் உறவினர் போலவும் அவருடன் சாதாரணமாக வீதியில் நடந்துபோவது போலவுமே நான் உணர்கின்றேன். போலீசிடம் நின்று என்னைக் காட்டி எதோ சொல்கிறார். இருந்த போலிஸ் எழுந்து நின்று எதோ சொல்கிறது. இவர் தலையாட்டி மறுத்துவிட்டு கம் சிஸ்டர் என்று எனக்குச் சொல்லிவிட்டு நடக்க நானும் சேர்ந்து நடக்கிறேன். சுற்றுமுற்றும் பார்வையைச் சுளற் றியவாறு ஏதாவது தெரிகிறதா எனப் பார்க்கிறேன். எல்லாமே புதிதாய் இருக்கிறது. மீண்டும் இரண்டு மூன்று நிமிடம் நடந்திருப்போம். பச்சை நிறமான ஹோட்டல் என் கண்களுக்குத் தூரத்தில் தெரிகிறது. அவரைப் பார்த்து அங்கே அங்கே  என்று சொல்லியபடி கை காட்டுகிறேன். முதல் நாள் தான் வந்திருந்தாலும் கூட இப்ப எனக்கு விளங்கிவிட்டுது. ஹோட்டலைப் பார்த்தபடி விரைந்து நடக்க இப்ப அவர் எனக்குப் பின்னால் வருகிறார். ஹோட்டல் கண்ணுக்கெட்டும் தூரம் வந்ததும் பார்க்கிறேன் வாசலில் நிறையப் பேர் நிற்கிறார்கள். அதற்குள் அப்பா நிற்ப்பதும் தெரிகிறது.  தூரத்திலேயே அப்பா என்னைக் கண்டுவிட்டார். என்னை நோக்கி ஓடி வருகிறார். ஆனால் நான் ஓடவில்லை. அப்பா ஓடிவந்து என்னை அனைத்து முத்தமிடுகிறார். அவரின் கண்கள் கலங்கியிருப்பதைக் காண்கிறேன். எனக்கும் கண் கலங்குகிறது. ஆனால் பெரிதாக அளவில்லை.


அம்மா அழுதுகொண்டிருக்கிறா முதல்ல மேல போங்கோ என்று அப்பா என்னை அனுப்புகிறார். நான் படிகளில் ஈறி மேலே செல்லும்போது என்னைப் பலர் சிரிப்புடன் பார்த்து நீக்களா  துலைஞ்சு போன பிள்ளை என்று கேட்க எனக்கு கூச்சமாக இருக்கிறது.  விரைந்து படிகளில் ஏறுகிறேன். அறியத் தட்ட எனது தம்பிதான் கதவைத் திறக்கிறான். அவன் முகத்திலும் சந்தோசம் . கட்டிலில் பளுதுகொண்டு படுத்திருந்த அம்மா உடனே எழும்பி என்னிடம் வந்து என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு பெரிதாக அழுகிறா. அம்மா அழுவதைப் பார்த்த தம்பி தங்கைகள் எல்லோரும் சேர்ந்து அழுகின்றனர். அவர்கள் அழ நானும் அழுகிறேன். சித்தப்பா பின்னால் வந்து அதுதான் வந்துவிட்டாளே  எல்லாரும் ஏன் ஒப்பாரி வைக்கிறியள் என்கிறார். உனக்கெங்க விளங்கப் போகுது ஏதும் நடந்திருந்தா ஐயோ நினைக்கவே நெஞ்சு பதறுது என்கிறார் அம்மா. அதன்பின்தான் எப்பிடி வந்தனீங்கள் என்று என்னைக் கேட்கிறார். நான் முதலிலிருந்து எல்லாம் கூறுகிறேன். கேட்டுவிட்டு கூட்டிக் கொண்டு வந்தவர் எங்கே என்று அம்மா கேட்க, அண்ணா அவரை  உணவகத்துள் கூட்டிக்கொண்டு போய் உபசரிக்கிறார் என்று கூறிவிட்டு வெளியே போகிறார்.

அதன்பின் நான் அம்மாவிடம் அவர்கள் என்ன செய்தார்கள் என்று விசாரிக்கிறேன். பஸ்ஸை விட்டு இறங்கியதும் தான் அம்மா எல்லோரும் சரியா இருக்கிறமோ என்று பார்த்திருக்கிறார். கடைசித் தம்பி அவரின் மடியில் தூங்கிவிட்டபடியால் அவனைத் தூக்கித் தொழில் போடும் வேலையாள் அம்மா என்னைக் கவனிக்க மறந்துவிட்டதாகச் சொன்னா. சித்தப்பாவை தரிப்பிடம் தங்கும் விடுதிக்குப் பக்கத்திலேயே இருந்ததால் அம்மா உடனே அங்கு போய் சொன்னவுடன் அங்கு வேலை செய்த ஆட்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கமும் போற பஸ்சுக்குப் பின்னால் ஓடினார்கள் என்றும் என் சித்தப்பா நாம் வந்த பஸ்சின் பின்னால் ஓடிவிட்டு பஸ் எந்தப்பக்கம் போனதெண்டு தெரியவில்லை என்று திரும்பி வந்துவிட்டர் என்றும் கூறினார். அப்பா அவரை அனுப்பிவிட்டு மேலே வந்தார். அம்மா அவரைப் பற்றி அப்பாவிடம் விசாரித்தார். அவர்  ஒரு நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்ப்பவர் என்றும் தனக்கு ஒரு தங்கை என்வயதில் இருப்பதாகவும்  அதனால்த் தான் தான் என்னைக் கவனமாகக் கொண்டுவந்து சேர்க்க எண்ணியதாகவும் கூறியதாக தந்தை சொன்னார். அவருக்கு என்ன பெயர் என்று நான் கேட்டேன். ஓ அதைக் கேக்க மறந்துவிட்டேன் என்றார் அப்பா. அன்று முழுவதும் யாருமே வெளியே செல்லவில்லை. மாலையில் அம்மா நாளை கடற்கரைக்குப் போவமோ என்று நான்கேட்க அப்பாவை அனுப்பிப் போட்டு நேர யாழ்ப்பாணம் தான் என்றார் அம்மா.

. :)

No comments:

Post a Comment